Sunday, December 27, 2009

Helen Kellerஉம் நத்தார் நன்னாளும்

அமெரிக்கா எழுத்தாளராகவும் அரசியல் மாற்றத்துக்காய் குரல் கொடுத்தவரும் விரிவுரையாளராகவும் யுத்தத்துக்கு எதிராக குரல் கொடுத்தவரும் , பெண்ணுரிமை, தொழிலாளர் உரிமை போன்றவற்றுக்காய் அமெரிக்காவில் உழைத்தவருமாகிய Helen Adams Keller (June 27, 1880 – June 1, 1968) என்னும் பெண்மணி பத்தொன்பது மாதக் குழந்தையாக இருந்தபோதே நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையையும் செவிப்புலத்தையும் இழந்திருந்தார். இவர் தனது விடாமுயற்சினாலேயே இத்தகு உயர்நிலையை அடையக்கூடியதாக இருந்தது.
இவர் "The only real blind person at Christmas-time is he who has not Christmas in his heart.”என்று நத்தார் பண்டிகையைக் குறிப்பிடுகின்றார்.

நத்தார் நன்னாள்பற்றிய வாசகம் அற்புதமானது. மதங்கள் கடந்து அனைவரும் பண்டிகைகள் கொண்டாடும்போது உள்ளத்தில் நினைவில் நிறுத்த வேண்டிய வாசகமாய் இவரது நத்தார் நன்னாள் பற்றிய கருத்து விளக்குகின்றது என்றால் மிகையில்லை.

இயேசுநாதரின் பிறந்தநாளாக கிருஷ்தவர்கள் இந்நாளைக் கருதிக் கொண்டாடுவர். இயேசுநாதர் அன்புகுடி கொண்டிருந்த ஏழைத் தாயாகிய கன்னி மேரியிடம் வந்து பிறந்தாரே தவிர பணக்கார அன்பற்ற மன்னர் அரண்மனையில் வந்து பிறக்கவில்லை. எனவே நத்தார் நன்னாளில் இயேசுநாதரை உள்ளத்தில் காண வேண்டுமானால் உள்ளத்தை அன்பால் அலங்கரித்து வைத்திருக்க வேண்டும்.அப்போதுதான் இயேசுநாதர் அன்புகுடி கொண்டிருக்கும் அவ்வுள்ளத்தில் வந்து ஆசீர்வதிப்பார். அன்பால் அலங்கரிக்காது வெறும் பணத்தால் வாங்கிய பொருட்கள் கொண்டு எவ்வளவு அலங்கரித்தும் பிரயோசனமில்லை. எந்தப் பெரிய தேவாலயத்திற்குச் சென்று இயேசுநாதரை கண்ணால் கண்டும் அன்பு நெஞ்சில் குடிகொண்டிருக்காவிட்டால் பிரயோசனமில்லை.எனவே, உண்மையான குருடர் என்பவர் உள்ளத்தில் அன்பில்லாது நத்தார் நன்னாளைக் (நத்தார் நன்னாளை உள்ளத்தில் உணராது) கொண்டாடுகின்றவரே.இதுதான் பார்வையற்ற காதுகேளாத எழுத்தாளரான அமெரிக்க அறிஞரின் வாசகத்துள் பொதிந்துள்ள பொருள். அருமையான பொருள்!

இதை நமது; இரண்டாயிரத்து நாற்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் யாத்த தமிழ்மறையில் "மலர்மிசை ஏகினான்" என்று அழகுத் தமிழில் குறிப்பிட்டுள்ளார். உள்ளம் அன்புமயமாகும்போது மலர்போல் மென்மையாகவும் நறுமணம் கொண்டதாகவும் அது மலரும். அந்தகைய உள்ளத்தில் இறைவன் எழுந்தருளியிருப்பான். வள்ளுவன் இவ்வண்ணம் பொருள்பட யாத்த மலர்மிசை ஏகினானை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்,

"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது "

என்று சித்திரமாக்கியுள்ளார்.

இறைவனை அன்புகுடி கொண்டிருக்கும் இடத்தில் எழுந்தருளும் இயல்பு கொண்டவன் என்று வள்ளுவர் கண்டிருக்க, திருமூலர் திருமந்திரத்தில் "அன்பே சிவம்" என்று இறைவன்தான் அன்பு என்கிறார்.

ஆகா; அன்புக்கு அருமையான இலக்கணத்தை தென்னாடு ஏனைய நாடுகளுக்கு முன்னர் பதிவு செய்துள்ளது என்றால் மிகையில்லை.தென்னாட்டில் இல்லாதது எந்நாட்டில் உண்டு என்று வியக்கத் தோன்றுகின்றது.

எனவே எந்தப் பண்டிகையாயினும் எச்சமயத்துக்கு உரியதாயினும், உள்ளத்தில் அன்பில்லாதவர்களுக்கு அது பயனற்ற ஒன்றே! Helen Kellerஇன் வாசகமும் பயனற்ற ஒன்றே!!!

Sunday, December 13, 2009

எமது கல்லூரிக்கு புதுவிதி எழுதுவோம்!!!

கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை என்னும் பொழுது தேன் வந்து பாயுது எம் காதினிலே என்று பாடினால் அது மிகையில்லை.சைவ சாம்ராச்சியமாய் இரத்மலானை மண்ணில் வீற்றிருக்கும் எங்கள் கல்லூரியை நினைத்த பொழுதில் இன்பத் தேன் ஒழுகி உடம்பெல்லாம் புல்லரிக்கும்.

இராவண மன்னன் சிவப்பு மலர்கள் கொண்டு சிவபெருமானை பூசித்த பயனால் இன்றும் செந்தமிழ்ச் சைவ வாசம் இரத்மலானை மண்ணில் வீசும் அருமை நிலவுகின்றது. இராவணன் பூசித்த பயனால் திருநந்தீஸ்வரமாகவும் கொழும்பு இந்துக் கல்லூரியாகவும் கற்பக விநாயகர் ஆலயமாகவும் இரத்மலானை மண்ணில் சைவநெறியும் தமிழர் பண்பாடும் இன்றும் பேணப்படுவது கண்கூடு.

சைவநெறிக் கொடியாக நந்திக் கொடி விடைக்கொடிச் செல்வர் தனபாலா ஐயாவால் மீள அறிமுகப்படுத்தப்பட்டு (ஏலவே நந்திக் கொடி சைவக் கொடியாக இருந்து கால ஓட்டத்தில் பயன்பாட்டில் இல்லாது மறைந்து இருந்தது. எனினும் கொடிவாரம் என்றெல்லாம் நந்திக் கொடிபற்றி விழிப்புணர்வை யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்புகள் ஏற்படுத்தி வந்தனர்.) முதன்முதலில் எமது கல்லூரி வளாகத்திலேயே ஏற்றிவைக்கப்பட்ட பெருமையை உடையது எமது கல்லூரி.

நந்திக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட அருமையால் நந்தி(சிவன்) மகனுக்கு ஆலயம் உருவாயிற்று.கற்பக விநாயகர் என்ற திருப்பெயருடன் மாண்வர்களுக்கு அருள்பாலிக்கும் பிள்ளையாரின் பெருமையை எழுத இக்கட்டுரை போதாது.

கற்பக விநாயகர் குடிகொண்ட அருமையால் காலந்தால் முந்திய சிதிலமடைந்து கிடந்த திருநந்தீஸ்வரம் மெல்ல மெல்ல எழுச்சி கண்டு இன்று சைவமக்களின் பயன்பாட்டிற்கு உகந்தவகையில் உருவாகியுள்ளது.
இலங்கையிலேயே, நந்திக் கொடி பறந்து கொண்டிருக்கும் பெருமை எமது கல்லூரிக்கே உரித்தானது. வானத்திலே பறந்து கொண்டிருக்கும் நந்திக் கொடியால் சிவானந்தக் காற்று மாணவர்களின் உள்ளத்துக்குள் பெருக்கெடுத்து வளமான மாணவர் சந்ததி கல்லூரியில் இருந்து உருவாகுவது கண்கூடு.
முதியோர் இல்லம்,சக்தி இல்லம், மாணவர் விடுதி என பலநல்ல சமூகசேவைகளில் இலங்கை இந்து மாமன்றத்துடன் இணைந்து கல்லூரி ஆற்றும் பணி சைவ சமூகத்தின் குணத்தை குறிக்கும் குறீயீடு என்க.


இத்தகு பெருமைகளை கல்லூரி சூடிக் கொள்ள எமது கல்லூரியின் முதல்வர், ஆசிரியர் குழாம், பெற்றோர் குழாம், பழைய மாணவர் குழாம்,மாணவர் குழாம், சமூக ஆர்வலர் குழாம் எனப் பலதரப்பட்டவர்களின் உழைப்பே காரணம். பிரதானமாக கல்லூரி முதல்வரின் ஆளுமையை சுட்டியே ஆகவேண்டும்.

இவ்வண்ணம் பெருமையுடைய கல்லூரியில் ஒருசில குறைபாடுகள் இருப்பது வருந்தத்துக்கு உரியதே! அதை அகற்ற வேண்டியதும் நாம்தானே???

ஒரு கல்லூரியின் முதுகெலும்பாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தையே சுட்டுவர். ஆனால் எமது கல்லூரிக்கு காலத்துக்கு காலம் ஒரு இரு வருட இடைவெளிகளில் புதுப்புது பழைய மாணவர் சங்கங்கள் தோன்றுவதும், பின்னர் அச்சங்கங்கள் தானாகவே மறைந்துவிடுவதும் பலரை சலிப்படையச் செய்ய விடயமாகும். இதுவரை தோன்றி மறைந்துபோன பழைய மாணவர் சங்கங்கள் விட்ட குறைகள் என்ன? அச்சங்கங்கள் மறைந்துபோகக் காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து கொள்வது தற்போது வீரியமாக எழுந்துவருகிற பழைய மாணவர் சங்கத்துக்கு உரமளிக்கும் என நம்புகிறேன்.


பழைய மாணவர் என்பவர் கல்லூரியால் உருவாக்கப்பட்ட சமூகத்துக்குரிய வளங்கள் எனலாம். சமூகத்தின் வளங்களைக் கொண்டு எழுப்பப்பட்ட கல்லூரி எப்பகை வரினும் அப்பகை வெல்லும் என்பது திண்ணம்! எனவே முதல்வரின் ஆளுமையில் பெருவளர்ச்சி காணும் எமது கல்லூரியிற்கு தற்போது அவசியமானது உறுதியான அத்திவாரம் கொண்ட பழைய மாணவர் சங்கம்.முதல்வரின் சுமையை குறைக்க பழைய மாணவர் சங்கத்தின் எழுச்சி அவசியம்.
இதுவரை பூத்து வாடிய பழைய மாணவர் சங்கங்களையும் தற்போது நறுமணத்துடன் பூத்து செழிப்புறுகின்ற பழைய மாணவர் சங்கத்தையும் ஒப்பிடும்போது தற்போது வீறுகொண்டு எழுந்துவருகிற பழைய மாணவர் சங்கம் வாடமலராக விளங்கும் என்பது திண்ணம். எனவேதான் ஒரு எழுத்தாளனாக மட்டுமல்லாது, கல்லூரியை நேசிக்கும் கல்லூரியின் மைந்தனாக இக்கட்டுரையை எழுதவிளைகிறேன்.


ஒரு சங்கம் அல்லது கழகம் காலத்தால் அழியாது வாழவேண்டுமாயின் முதலில் யாப்பு உருவாக்கப்படுதல் அவசியம். யாப்பு என்பது எவர் விருப்பத்துக்கும் உருவாக்கப்படல் தவிர்க்கப்படல் வேண்டும். சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் ஏனைய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கங்களின் யாப்பை ஒத்த ஒரு யாப்பை உருவாக்குதல் தலையாய கடமையாகும். இதற்கு வெளிநாடுகளில் உள்ள எமது பழைய மாணவர் சங்கங்களின் உதவியை நாடுதல் எமது தேவையை இலகுவாக்கும். அவுஸ்ரேலியாவில் எமது கல்லூரிக்கும் எமது சகோதரக் கல்லூரியான பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் பொதுவான பழைய மாணவர் சங்கம் உள்ளதை இணையம் மூலம் அறிந்துகொண்டேன். இலண்டனில் கூட எமது பழைய மாணவர் சங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். எனவே இவர்களின் உதவியை நாடுதல் முதன்மையானது. யாப்பையும் இவர்களிடம் இருந்தே கேட்டு பெறலாம். இல்லாவிட்டால் யாப்பு உருவாக்கத்தில் பெரும்பிழைகள் உருவாகவாய்ப்புண்டு. ஏனெனில் தற்சமயம் பழைய மாணவர் சங்கத்தை வழிநடத்தும் தோழர்களாகிய நாமனைவரும் கழகங்களின் அமைப்புகள் பற்றிய கற்கையை முடித்தவர்கள் அல்ல. பெரும் நிதி வளத்துடன் இருப்பர்களும் அல்ல.

யாப்பு உருவாக்கத்துக்குப் பின்னர்,
பொருளாளரின் கட்டுப்பாட்டில், தலைவரின் மேற்பார்வையில் ஒரு கழக நியதிக்கு உட்பட்ட வகையில் யாப்பு அமைப்புக்கு ஏற்ப வங்கியில் கணக்கு சங்கத்தின் பெயரின் உருவாக்கப்படல் வேண்டும். இது வெளிநாட்டில் உள்ள எமது பழைய மாணவர் சங்கத்தின் பணவுதவிகளைப் பெற வழிவகுக்கும். கழக பொருளாளர் மற்றும் தலைவர், செயலாளரின் மேற்பார்வையைவிட ஏனையவர்களின் தலையீட்டுக்கு இடமில்லாத வகையில் கணக்கை பேணுதல் அவசியம். மாதாந்தக் கூட்டத்திலும், ஆண்டுக் கூட்டத்திலும் வரவு-செலவை பொருளாளர் அறியப்படுத்தல் வேண்டும். இவையாவும் சங்கத்தின்மேலான நம்பிக்கையை சமூகத்தில் வளர்க்கும்.


நான் கல்விகற்ற காலத்திலேயே பலமுறை, கல்லூரியின் இந்து மாணவர் சங்கம், தமிழ்ச் சங்கம், விஞ்ஞானபீட மாணவர் மன்றம், வர்த்தபீட மாணவர் மன்றம் போன்ற பல மாணவர் மன்றங்கள் வருடத்துக்கு வருடம் மன்றச் சின்னங்களை மாற்றுவதும், மன்றத்தின் உத்தியோகபூர்வ வாசகங்களை மாற்றுவதும் இயல்பான தொன்றாக இருந்தது. காரணம் பொறுப்பாசிரியர்கள் மாணவர்கள் உருவாக்கும் சின்னங்களைத் தவரவிடுவதே காரணமாகும். கடந்தமுறை கல்லூரிக்கு சென்றிருந்தபோது ஒரு ஆசிரியர் இப்படி இதைக் குறிப்பிட்டார். "2003இல் வழங்கிய சான்றிதழில் இச்சங்க சின்னமாக இதுவுள்ளது.இந்தமுறை வழங்கியுள்ள சான்றிதழ்களில் இந்தப் புதுச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த இரு வெவ்வேறான சின்னங்களையுடைய சான்றிதழ்களுடன் ஒருவேலைத்தளதின் நேர்முகப் பரீட்சைக்கு இரு மாணவர்கள் பங்குபற்றின் வேலைத்தள நிர்வாகம் "ஒரே கல்லூரியின் ஒரே சங்கத்துக்கு எங்கனம் இரண்டு சின்னங்கள்?" என்று ஐயம் கொண்டு ஏமாற்று சான்றிதழ் என கருத இடமுண்டு" என்றார். உண்மைதான்!!!!


ஒரு கழகம்/சங்கத்தின் சின்னம் பொருள் பொதிந்ததாக உருவாக்கப்படல் அவசியம். கல்லூரியின் பண்பாட்டை எடுத்தியம்பும் வகையில் இருத்தல் அவசியம். அறிவுடையார் எல்லாம் உடையார் என்ற அற்புத வாசகத்துடன் சைவப் பண்பாட்டை சொல்லும் கோபுரச் சின்னத்துடன் எமது கல்லூரி விளங்குகின்றது. கோபுரச் சின்னத்துள் உள்ள தாமரைக்கு கலைவாணி வீற்றிருக்கும் இடமெனவும், ஏடுகளுக்கு கல்வி போதிக்கும் இடமெனவும், குத்துவிளக்குக்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றும் இடமெனவும் பொருள் உரைக்கலாம். கல்லூரியின் கோப்புகளில் சரியான பொருள் இருக்க வாய்ப்புண்டு.(சிலசமயங்களில் 83கலவரத்தில் எரியூட்டப்பட்ட போது அழிந்துபோன நூலகம் மற்றும் கல்லூரி உடமைகளுள் சின்னத்துக்குரிய விளக்கக் கோப்பும் அழிந்துபோயிருக்கலாம்.) நான் கல்லூரியில் உள்ளபோது சரியான விளக்கத்தை தமிழாசிரியர் உட்பட எவரும் வழங்கிலர். தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி,கொக்குவில் இந்துக் கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி, சைவ மங்கையர் கழக கல்லூரி என பலதரப்பட்ட கல்லூரிகளின் சின்னங்களைப் பார்த்தபோது சைவ மணத்துடன் கூடிய தமிழ்ப் பண்பாடு கல்லூரிச் சின்னங்களிலும் சரி, அக்கல்லூரிகளின் கழகச் சின்னங்களிலும் சரி காணக்கூடியதாக இருக்கும். ஆங்கிலமோகத்தை எந்தவொரு தமிழ்க் கல்லூரிச் சின்னங்களிலும் நான் இதுவரை கண்டதில்லை. மேலைத்தேயத்தவர் உருவாக்கிய கல்லூரிகளில் ஆங்கிலச் சாயல் அப்பட்டமாய் இருப்பது இயல்பு. ஆனால் அவர்களிடம் இருந்து எமது பண்பாட்டைக் காக்க எமது முன்னோர்கள் கட்டிய எந்தக் கல்லூரியின் சின்னங்களிலும் ஆங்கிலச் சாயல் இருந்ததில்லை.அதேநேரத்தில் ஆங்கில அறிவில் அவர்கள் பின் தங்கியிருந்ததும் இல்லை.


ஆங்கிலம் என்பது அறிவு.மேலைத்தேயப் பண்பாடென்பது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றே! ஆனால் மேலைத்தேய மோகத்துள் வீழ்ந்து எமது பண்பாட்டைத் தொலைப்பதாக இருக்கும்போது "நாம் வீழ்கின்றோம்" என்ற செய்தி பொறிக்கப்பட்டுவிட்டதென்க!

எனவே, எமது பழைய மாணவர் சங்கச் சின்னம்;
தமிழில் வாசகத்தை கொண்டிருத்தல் அவசியம். சின்ன உருவாக்கத்தில் உள்ள ஒவ்வொரு அம்சத்திற்கும் ( கல்லூரிச் சின்னத்துக்கு யான் அறிந்த வகையில் விளக்கியுள்ளவாறு) எமது பண்பாட்டுடன் இணைத்து விளக்கம் கூறக்கூடிய சின்னமாக அது இருத்தல் அவசியம். தற்போது பேஸ்புக் குழுமத்தில் இணைக்கப்பட்டுள்ள சின்னத்தில் உள்ள பிரித்தானிய இராணியின் முடி-கிஞ்சித்தும் ஏற்க முடியாதவொன்று.
கோபுரத்தைவிட உயரமாக எதையும் கட்டக்கூடாது என்ற பண்பாடு எமது சமூகத்தில் இருந்த மரபு. கால ஓட்டத்தில் அதுமறைந்துவிட்டது. (தூர உள்ளபோதுகூட கோபுரம் காணின் ஆன்மீக உள்ளம் ஏற்படும்.எனவே கடவுள் உள்ளார் என்ற சிந்தையில் தவறுசெய்ய மக்கள் முற்படமாட்டார்கள் என்பதன் நிமித்தமே!) ஆனால் எமது கல்லூரியின் கோபுரச் சின்னத்திற்குமேல் பிரித்தானிய இராணியின் முடியைச் சூட்டியிருப்பது நாம் அவர்களின் அடிமை என்ற பொருளையே கொடுக்கும். ஏன் நமது மன்னர்களின் முடிகூட உகந்ததில்லை. காரணம் 'நாமார்க்கும் குடி அல்லோம்' என்று வாழ்ந்த நாயன்மார்கள் ஒழுகிய சைவநெறியின் இறைவன் எந்த மன்னனுக்கும் குடியாக மாட்டான்.அவனுக்குத்தான் நாம் குடி. எனவே இறைதத்துவத்தை உணர்த்தும் கோபுரத்துக்கு மன்னரின் முடியைச் சுட்டுவது எமது சமயத்தை நாமே இழிவுபடுத்தும் ஒன்றாகிவிடும்!
மேலும் ஐ.நா போன்ற அமைப்புகளில் பயன்படுத்தும் ஒலீவ் இலை எமது பண்பாட்டுக்கு எந்தவகையில் பொருந்தும் என்று புரியவில்லை.
சின்னமானது கவர்ச்சியாக இருக்க வேண்டிய அதேசமயம் அர்த்தம் பொதிந்ததாக பண்பாட்டை சொல்வதாக இருத்தல் வேண்டும். ஏதேனும் ஆங்கிலேயர் உருவாக்கிய கல்லூரிக்கு ஒலீவ் இலையைப் பயன்படுத்துவது தவறில்லை. எமது தமிழ்ப் பண்பாட்டு கல்லூரிக்கு ஒலீவ் இலை உகந்ததில்லை.


பொறுப்பில் உள்ளவர்கள் இணைய உலகம், மேலைத்தேயப் பாலம் என்று சொல்லி தமிங்கிலத்தையோ அல்லது ஆங்கிலப் பண்பாட்டு மோகத்தையோ எமது சமூகத்துக்கு ஊட்டக்கூடாது. ஆங்கில அறிவு மட்டுமல்லாது, பிரான்ஸ், டொச் எனப் பலதரப்பட்ட மொழிகளில் எம்மவர்கள் ஆளுமைபெற்றவர்களாக வளர்க்கப்பட வேண்டுமே ஒழிய ஆங்கிலேயர்களாகவோ அன்றி டொச்காரர்களாகவோ வளர்க்கப்படக்கூடாது.
எனவே, தாழ்மையுடன் வேண்டுவது யாதாயின்; உருவாக்கப்பட்ட சின்னத்தை மீளாய்வு செய்க.

அடுத்த பிரதானமான விடயம்; சங்கத்துக்கென தனியான கோப்புகளை பேணுதல் வேண்டும். பற்றுச்சீட்டு உருவாக்குதல் வேண்டும். கல்லூரி நிர்வாகத்துக்கு பணமளிக்கும் போது பற்றுச்சீட்டைப் பெறவேண்டும். கல்லூரியில் பணம் பயன்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்தல் வேண்டும்.

அடுத்த பிரதானமான சங்கத்துக்கு வலுவூட்டும் அம்சம் யாதாயின்; இன்று பொறுப்புள்ள பதவிகளிலும், வர்த்தகர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக,சட்டத்தரணிகளாக,பொறியியலாளர்களாக,தொழிலதிபர்களாக இலங்கையில் வாழும் எமது பழைய மாணவர்களை காப்பாளர்களாக இணைத்தல் வேண்டும். தற்போது உள்ள சங்கப் பொறுப்புகளில் இளைஞர்களே இருப்பதால்; அவர்களது தலைமையில் சமூகத்தின் பிரதிநிதிகளை அடக்குதல் நாகரீகம் அன்று. எனவே அவர்களை கௌரவிக்கும் காப்பாளர்களாக நியமித்தல் நல்லது.

இவையாவும் எமது கல்லூரியின் எழுச்சிபெறும் பழைய மாணவர் சங்கத்தின் ஆணிவேரைப் பலப்படுத்த உதவும் விடயங்களாகும். எனவே இவற்றை கருத்தில் எடுத்து செயற்படுத்த தாழ்மையுடன் வேண்டுகிறேன். தற்சமயம் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவமுடியாது கல்விக்காய் புலம்பெயர்ந்து உதவும் பேறை இழந்து தவிக்கிறேன். ஆதலாலேயே இத்தக்கட்டுரையை பாலம் சமைக்க இராமனுக்கு உதவிய அணில்போல் கல்லூரி வளாகத்துள் நின்று சங்கத்துக்காய் உழைக்கும் தோழர்களுக்கு உதவும்பொருட்டு இக்கட்டுரையை எழுதி பிரசுரிக்கிறேன்.

எமது கல்லூரியின் தற்போதைய முதல்வரின் காலத்தில் நாம் உறுதியான பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கும் பேறை தற்போது பெற்றிருக்கின்றோம். முதல்வருக்கு தோள் கொடுக்க பழைய மாணவர் சங்கம் உதவ வேண்டுமாயின் வலுவுடைய சங்கம் உருவாதல் வேண்டும். எனவே தனிப்பட்ட நன்மை தீமைகளை கருத்தில் எடுக்காது; சமூகத்தின் நன்மையை கருத்தில் எடுத்து பழைய மாணவர் சங்கத்தை செயற்படுத்த வேண்டுகிறேன்.பல ஒதுங்கியுள்ள பழைய மாணவர்கள் மேலே யான் சுட்டியுள்ள கருத்துகளை செயற்படுத்தும்போது தாமாகவே முன்வந்து இணைவர். ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு? எனவே ஒன்றுபடுத்துவோம்!!!கல்லூரி மைந்தர்களின் வரவேற்கப்படுகின்றன.

எம் கல்லூரியின் வளர்ச்சிக்காய் வீறுகொண்டு எழுவோம்.
நன்றி

Thursday, November 12, 2009

பாரதியார் ஒரு பேதை-தமிழ்ச் சாதியின் நன்றிக்கடன்!!!!

மெல்லத் தமிழினிச் சாகும் என்றந்தப் பேதை உரைத்தான் ??????
ஓ பாரதி தானே?

இன்று பரவலாக தமிழுக்காய் கூடுகின்ற கூட்டங்கள் தொட்டு பட்டிமன்றங்கள்,கட்டுரைகள்,கவிதைகள் என எங்குமே "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகக் கருத்துப் பதியப்படுகின்றது.

எவ்வளவு பெரிய அறியாமை!
பாரதியின் புகழுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கும் அறியாமையே இது!!!!

"புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை – அவைசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லைமெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் "

"புதிய தொழில்நுட்பக் கலைகள் எவையும் தமிழ்மொழியில் இல்லை.அவையெல்லாம் மேற்குநாட்டிலேயே உண்டு. இக்கலைகளை தமிழில் மொழிபெயர்க்க எவரும் முன்வருவதில்லை.மொழிபெயர்த்தாலும் முனைப்புடன் சந்ததியர் பயன்படுத்தார். மொழிபெயர்த்தாலும் அத்தொழில்நுட்ப கல்வியை முழுமையாகத் தமிழால் விளக்கப்படுத்த முடியாது.எனவே தமிழ்மொழி மெல்ல மெல்ல அழிந்துபோகும்" என்று எவனோ ஒருவன் பேசியதைக் கேட்ட பாரதியின் நெஞ்சம் கொதித்தது.

இங்கு அவன் சொன்னதில் என்ன பிழை? கவலையில் பரிமாறிய கருத்தாக இருக்கலாம் தானே?
பாரதி கொதித்துப்போகக் காரணம் யாதாக இருக்கலாம்?

தமிழ்மொழிக்கு திறன் இல்லை என்று சொன்னானே-அதுதான் காரணம்!!!
திறன் இல்லை என்று சொல்ல இவன் யார்? சில சமயம் கருணையில்லா நிதியாக இருந்திருக்கலாம்!!!!

எனவேதான்;

"மெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!இந்தவசையெனக் கெய்திட லாமோ?"

என்று பாடுகிறார்.

"என்றெந்தப் பேதை யுரைத்தான்?" என்று மெல்லத் தமிழினிச் சாகும் என்று சொன்னவனை பேதை என்று வசைபாடியுள்ளார் தனது பாடலில்.
அதேநேரத்தில்;சொன்னவன் தொழில்நுட்ப மற்றும் ஏனைய புதிய கண்டுபிடிப்புக்கள் தமிழில் இல்லை என்று சொன்ன கருத்தை ஏற்று, அவற்றை ஈடுசெய்ய,
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் " என்கிறார்.


ஏனைய மொழிகளில் உள்ள புத்தம் புதிய கலைகளை மொழிபெயர்ப்பு செய்யும் வேளை முழுமையாய் தமிழால் பொருளுணர்த்த முடியும்.அத்தகு திறனை எட்டுத் திக்குகளிலும் இருந்து கலைச் செல்வங்களை தமிழுக்கு கொண்டுவரும் போதே இத்தகு பேதைகள் உணர்ந்து கொள்வர்.எனவே இவ்வழி ஒன்றே இப்பேதையின் கருத்து தொடராது இருக்க வழிவகுக்கும்.ஆதலால் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற ஔவையின் குரலுக்கு அமைவாக; எட்டுத் திக்குகளுக்கும் சென்று எல்லா மொழிகளிலும் உள்ள அறிவுச் செல்வங்களை மொழிபெயர்ப்புச் செய்து தமிழன்னைக்கு மாலையாக்கி சூட்டுங்கள் என தமிழ்ச் சமூகத்தை வேண்டுகிறார்.

ஆனால் ஈற்றில் பாரதியே "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று சொல்லிவிட்டதாக செவிவழியாக எல்லோர் நெஞ்சிலும் பதிந்துவிட்டது. பேதை பாரதியானான்!!!

தமிழ்ச் சாதி பாரதிக்குச் செய்த நன்றிக் கடனைப் பார்த்தால் தமிழென்று சொல்லும்போது "தலைகுனிந்து' நிற்கவேண்டியுள்ளது. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்ற திருக்குறள் தமிழ் சமூகத்தைப் பார்த்து சிரிக்கிறது?
பேதை பாரதியாகலாமா?
தமிழ் நன்றிகெட்ட இனமாகலாமா?
சொல்லுங்கள்.
இதோ பாரதியின் பாடல்:-
புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை – அவைசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லைமெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!இந்தவசையெனக் கெய்திட லாமோ?சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

என்றந்தப் பேதை உரைத்தான் என்பதற்கு முன்னர் உள்ள வரிகள் இன்னொருவரின் வார்த்தைகளாகவே பாரதி கையாண்டுள்ளதை முழுப்பாடலையும் படிக்கும்போது விளங்கிக் கொள்ளலாம்.

எனவே மெல்லத் தமிழினிச் சாகும் என சொன்னது யார்?
பாரதி அல்ல!!!!!!!!!
பாரதி அல்ல!!!!!!!!!
பாரதி அல்ல!!!!!!!!!


Monday, September 14, 2009

பாரதிராஜா என்னும் தமிழ்மறவன் வாழ்க பல்லாண்டே!

இலங்கைத் தமிழருக்காக குரல்கொடுத்து சிறை சென்ற இயக்குனர் அமீர் தயாரித்து நடிக்கும் யோகி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சேரன் அங்கு வருகை தந்திருந்த இயக்குனர் சிங்கம் பாரதிராஜா ஐயாவை "தலை வணங்குகிறேன்" என கூறி தனது தமிழ்பற்றை அழகுபடுத்தியுள்ளார்.

மேடையில் சேரன் பேசும்போது தனது தமிழ்ப்பற்றை பறைசாற்றியதோடு இலங்கைத் தமிழருக்காக மேடை ஏறாது மௌனமாய் இருக்கும் பாரதிராஜாவின் விரதத்தையும் கௌரவப்படுத்தியுள்ளார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் பேசும்போது கூறியதாவது:-
"எங்களை போன்ற இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனரான பாரதிராஜா, இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருக்கிறார். அவர் சமீப காலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மெளனம் காத்து வருகிறார். அவருக்கு ஏன் இந்த கோபம்? அவர் திரையுலகில் சாதிக்க வில்லையா? பிறகு ஏன் இந்த கோபம்? உண்மையில் அவருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் விரதம்போல மெளனம் காத்து வருகிறார். தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது கண்டும், தமிழர்கள் ரோஷம் இல்லாமல் இருப்பதாலும் மெளனம் காக்கிறார். அவரது சாதனைகளுக்கு தலை வணங்கியது போல அவருடைய மெளனத்திற்கும் தலை வணங்குகிறேன். இலங்கையில் வாடும் இலட்சக்கணகக்கான தமிழர்கள் வாழ்வுக்காக இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும் போது பாரதிராஜாவின் மெளனம் கலையும். "
பாரதிராஜாவை திரையுலக பீஷ்மர் எனலாம்.அவரது மௌனம் வேடதாரிகளுக்கு திரையுலகில் கிடைத்த வரமாகிவிடக்கூடாது.இலங்கைத் தமிழருக்காக அவர் கொண்டுள்ள விரதம் தமிழ்த் தாய்க்கு "சான்றோன் எனக் கேட்ட தாய்" என்னும் பெருமையை கொடுக்கின்றது எனலாம்.
வாழ்க பாரதிராஜா ஐயா!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமையே பலம், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என ஏராளமான பழமொழிகள் தமிழில் உண்டு. தமிழரில் ஒற்றுமையுணர்வு குற்றியிருந்ததால் என்னவோ இத்தனை பழமொழிகள் தோன்ற வேண்டியாயிற்று.ஆனால் பலன்?
பாரதிராஜாவின் விரதத்துக்கு பலன் கிட்டுமானால் இப்பழமொழிகள் தோன்றியதற்கான பலன் ஏற்படும். எனவே;
விரைவில் அவர் விரதத்துக்கு பலனாக தமிழ்நாட்டில் தமிழ்த்தாயின் மக்கள் யாவரும் ஒன்றுபட்டு நிற்க இறைவனை வேண்டுகிறேன்.

Monday, August 24, 2009

சேரனுக்கு தமிழ்த் திமிருங்கோ!!!!!!

வார இதழ்களில் வெளியான திரைவிமர்சனங்களில் "நீளும் கடிதங்கள் தூக்க மாத்திரைகள்" என பொருள்பட ஒருசிலவற்றிலும் தரமான இயக்குனர் சேரன் என சேரனின் புகழை ஏனைய சிலவற்றிலுமாக பொக்கிசம் தீட்டப்பட்டிருக்க;
திரையில் பார்க்க இரவு நேரக் காட்சிக்கு சென்றிருந்தேன். கந்தசாமி பார்க்கும் ஆவலைவிட பொக்கிசம் பார்க்கும் ஆவலே மேலிட்டிருந்தது. காரணம் சேரனின் திறமைகள்!


உண்மையிலேயே ஒரு இலக்கியம்-பொக்கிசம். படம் முடிந்தபோது திரையரங்கை சுற்றிப் பார்த்தேன்.படம் பார்க்க வந்திருந்த கூட்டம் ஐம்பதைத் தாண்டாது. நித்திரையில் ஆழ்ந்த மூஞ்சிகள் ஒருசில இருக்கத்தான் செய்தன.

தமிழ்த் தேன் வடிகின்ற கடிதங்களை நாயகனும் நாயகியும் பரிமாற்றுவதை திரையில் கொண்டுவரும்போது "இனிய தமிழ்" தூக்கத்தை ஊட்டினால், கம்பனும் இளங்கோவும் பாடிய தமிழை திரையாக்கினால் ஒருநாள்கூட படம் ஓடாது என்பது உறுதி!

நல்ல முயற்சி;ஆனால் இரசிகர்களின் இரசனை இன்று இலக்கியத்தில் இல்லை. எக்ஸ் மச்சி வை மச்சி என்றும் எக்ஸ் கியூஸ் மி மிஸ்டர் கந்தசாமி ஒரு கோபி குடிப்போம் கம் வித் மி கோட்ட கூளா நீயே தொட்டுப்பாரு" பாடினால்தான் படம் ஓடும் என்கிற காலத்தில் இலக்கியங்களை அரங்கேற்றுவேன் என துடிக்கும் சேரன் தமிழ்த் திமிர் கொண்டவர்தானே? பின்ன என்னங்க தமிழ் திரையுலகை இலக்கியத்தால் நிரப்ப முயல்கிறார் என்றால் "தமிழ்த் திமிர்" தானே சேரனுக்கு?

Wednesday, August 19, 2009

அருள்மழை பொழியும் நல்லூரான் தேர்

முருகன் என்றால் அழகன் ஆகும். அழகன் என்பதற்கு பொருள் நல்லூர் முருகன்.யாழை மட்டுமல்ல ஈழ வளநாட்டை அருள்மழையால் ஈர்த்து நல்லருள் பாலிக்கின்ற முருகப்பெருமானின் தேர்த்திருவிழா இன்று இனிதே நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ அரோகரா ஒலிகள் விண்ணை முட்ட தந்தைக்கே பிரணவப் பொருளை போதித்த முருகப் பெருமான் தேரேறி நல்லூர் ஆலய வீதியில் வலம்வந்த காட்சியை நேரில் காணும் பேறு கிட்டாதவர்களுக்காய் (என்னையும் சேர்த்து)
நிழற்படங்களை பதிவேற்றுகிறேன். இப்படங்கள் இணையங்களில் இருந்து பெற்றவையாகும்.










Friday, August 14, 2009

தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும்

எங்கள் இன்பத்தை சிதைத்த இந்தியத் தாயே, உனது இன்பநாள் இன்று! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும் ஆனால் நீதி?

வள்ளுவன் சிலைகேட்டானா? மானம் கேட்டானா?

சுமுக நிலை
வந்ததென்ற பாவியே
வள்ளுவன் சிலைகேட்டானா?
மானம் கேட்டானா?

பண்டப் பரிமாற்றமாய்
சிலைதிறப்பு
மானங்கெட்டவனே ஒக்கேனக்கல்
எந்தப் பரிமாற்றமாகும்?
வாடும் காவேரி
வருத்தவில்லையா?

குளிரூட்டிய தனமிகு
"தான" வீட்டில்
சக்கரவண்டியில் சொகுசு
மெத்தையில் நேரத்துக்கு
சாப்பாடென வாழும்
உனக்கு
எங்கள் நாட்டில்
சுமுகநிலை எங்கனம்
வந்ததறிந்தாய்?

கோமாளி கூட்டமென்று
கூத்தாடி சொன்னபோது
மானங்கெட்டு அமைதியாய்
இருந்த இழியவன்
நீ!

சீ உன்னை
நம்பி அலையும்
தமிழ் தலைகள்
வெட்கமில்லா அடிமை
சாசனங்கள்!

Thursday, August 13, 2009

அரங்கன் சன்னிதியில் தமிழுக்காய் கண்ணீர்மல்கி

அரங்கனின் ஆலயத்தில்
இத்திங்கள் 12ம் நாள்
நான் கேட்ட
கேள்விகள் வரங்கள்
எக்காலம் ஆழ்வார்
நாவில் தவண்ட
தமிழுக்கு விடை
சொல்லும்?




"குட திசை முடியை வைத்துக்
குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித்
தென் திசை இலங்கை நோக்கி"
அரங்கன் நீர்
இருந்து என்ன
பயன்?

ஐயனே,
காத்தற் கடவுளே,
விபூடணிடம் நீர்
கொடுத்த வாக்கைத்
தொலைத்ததேன்?

மாண்டு போன
இனம் கதறியபோது
மந்திர ஒலியில்
மயங்கி இருந்தமை
நீதியா கண்ணா?

இலங்கையைக் காப்பேன்
என்றது தமிழுக்கு
கொடுத்த வாக்கில்லையா?



திருமாலே,
அரங்கா,
நாராயணா,
எழுப்பிய கோபுரம்
கண்களை மறைத்ததோ?

பாண்டவரைக் காத்த
அழகு நாராயணா,

வாடுகிற தமிழுக்கு
அநாதையாய் நிற்கும்
தமிழுக்கு கண்ணனாய்
வருவாய்!
தேரோட்டியாய் வருவாய்!

அரங்கா,
பல்லாண்டு பல்லாண்டு
பாடுகிறேன்
தேனிலும் இனிய
தமிழைக் காப்பாய்!


காண்டம் புதிரும் புனிதமும் கொண்டதா?

காண்டம்! முழுக் காண்டமும் கேட்டேன்.சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவனானாலும் காண்டம் சொன்ன விதம், சொல்ல முன்னர் தொடுத்த கேள்விகள் நம்பிக்கையை பெரிதும் ஏற்படுத்தவில்லை.அவநம்பிக்கையையும் சேர்த்தே ஏற்படுத்திற்று. ஆனாலும்?

நம்பிக்கைக்கு அவ
நம்பிக்கை ஒன்றுக்கு
ஒன்றென்ற விகிதம்!

நம்பிக்கையா அவ
நம்பிக்கையா
மேலோங்கும் என்பது
காலம் உணர்த்தும்!

சென்ற பிறவி
கூடல் மாநகர்
மதுரை திருமண்ணில்
பிராமணன்!

செய்த பாவம்
பிராமண தொண்டை
மறந்தமை!

பெற்ற பேறு
ஈற்றில் பெற்ற
புத்தி!
ஆதலால் மறுபிறவி
மீண்டும் அரிய
மனிதப் பேறு!

தூய்மையற்ற பிராமணரே,

உருத்திராக்கத்துடன் தங்கம்
ஜொலிக்க ஆபரணம்
பூண்டு
முப்புரிநூலில் சாவிகளையும்
சாமான்களையும் முடிஞ்சு
சனத் ஜெயசூரிய
வந்ததும் செய்யும்
பூசையை கைவிட்டு
விழுந்தோடிச் சென்று
இராசி நட்சத்திரம்
கேட்கும் பாழப்போன
பழக்கம்

பணத்தைக் கொட்ட
மாலைகளை சூட்டும்
புழக்கம்

சிவாச்சாரியார் பட்டம்
பெற்று சிவாகமம்
மீறும் சொகுசு

ஏனோ தானோ
என்னும் மந்திர
உச்சாடனம்
கருவறைக்குள் நின்று
"ஏன்டா வாடா
எடுடா" என்று கத்தும்
கதறல்கள்

பணம் இருந்தால்
சிறப்புத் தரிசனம்

சாதி
தீண்டாமை
இத்தனையும் வளர்க்கும்
ஆச்சாரியம்

ஐயகோ,
நீவிர் எடுக்கும்
அடுத்தபிறவி கொடூரமே!
மோட்சம் என்பது
இல்லையே!

Saturday, August 1, 2009

வீணை வாழ்க

வீணை ஆசிரியராகவும் கனடாவில் வீணாலய நிறுவுனராகவும் விளங்கி இசைப் பணியாற்றும் திருமதி.ஜெயந்தி இரத்தினகுமார் அவர்கட்கு
ஒரு இசை இரசிகனாக இக்கவியை சமர்ப்பணம் செய்கிறேன்.

வீணாலயத்தின் இணைய முகவரிக்கு சென்று வீணாலயத்தின் பணிகளை அறிக :- வீணாலயம் (வீணாலயம் என்பதன்மேல் சொடுக்குக)


கலைவாணி அருள்
வாழும் வீணை
வாழ்க

தமிழ்நாதம் கனடாவில்
என்றும் உயிர்வாழ
இசைப் பணியாற்றும்
வீணை வாழ்க

சிவனருள் கூடி
சிவநாதம் ஓதும்
வீணை வாழ்க

தங்கள் கைகளில்
தவழும் தமிழ்மற
இராவணன் சிவனார்க்கு
அர்பணித்த வீணை
வாழ்க

தமிழிசை வாழ்க
வீணாலயம் வாழ்க
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாயிரம்
ஆண்டு வீணை
வாழ்க
வீணையில் தங்கள்
புகழ் வாழ்க
இசைப் பணி
தமிழ்ப் பணி
சிவப் பணி
வீணையின் நரம்புகளாக
வாழ்க

இசையுலகம் வீணாலயத்தில்
சரணாகி வாழ்க

Saturday, July 11, 2009

மாமல்லபுரம் என்னும் சிற்பக்கலைக் கருவூலம்

மாமல்லபுரம் ஓர் கலைக் சிற்பக் களஞ்சியம் என்று எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்வர். எனது எண்ணங்கள் மாமல்லபுரத்தை நோக்கி எப்போதும் ஓடிய வண்ணமேயிருந்தது.அப்படி என்ன அழகுக் களஞ்சியம் அங்குண்டு என்று ஆராய ஆவலுடன் இருந்தேன். தமிழகம் வந்ததும் என் நண்பன் காந்தனிடம் "போவோமா?" என்று கேட்ட முதல் சுற்றுலா மாமல்லபுரத்துக்குத்தான்.

சிற்பங்களை இரசித்து சுவைக்கும் பழக்கமேதும் எனக்கு இருந்ததில்லை. கோயில்களுக்குச் சென்றால் கடவுளாகக் கண்டு வணங்குவதுடன் சரி. சிற்பங்களின் சிறப்புகளை ஆராய மனம் உந்துவதில்லை. கடவுளாகக் கண்டபின் கல்லாக எண்ணி சிற்பத்தை இரசிக்கும் மன இயல்பு ஏற்படுவது கடினம்தானே!!!!! அதேவேளையில், கடவுளாக மட்டும் காட்சியளிக்கும் வண்ணம் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது சிற்பிகளின் திறன் என்றால் மிகையில்லை.

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்"
என்றொரு பழமொழி உண்டு. கல்லில் செதுக்கப்பட்டுள்ள நாயை நாயாகக் கண்டு கொண்டவருக்கு அது கல் என்பதை உணரமுடியவில்லை. அட கல்லு என்று கருதியவருக்கு அந்தக் கல்லால் உருவாக்கப்பட்டிருந்த நாயை இரசிக்கமுடியவில்லை. இதுதான் இப்பழமொழியின் உண்மையான பொருள். இதைத்தான் தசாவதாரம் படத்தில் "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லுத் தெரியாது" என்று பாட்டாக்கினர்.

அடடா அழகு நாராயணன்....அடடா அழகு அனந்த சயனம்.......அடடா அழகு சிவபெருமான்...........அடடா அழகு மாதொருபாகன்,,,,,,,,,,,,அடடா அழகு முருகன் இப்படி கடவுளை இரசித்தபோது சிற்பத்தை இரசிக்கிறேன் என்ற எண்ணமே பூக்காததால் சிற்பங்களை இரசிக்கும் உணர்வு ஞானம் என்னிடம் இல்லை என்று கருதினேன். ஆனால் மாமல்லபுரம் எனக்கு உளவியல்ரீதியில் ஒரு மாற்றத்தை ஊட்டியேவிட்டது. சிற்பங்களை காதலிக்கும் உணர்வையூட்டிவிட்டது. சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளை வியக்க வைத்துவிட்டது.என்னையோர் சிற்பக்கலை இரசிகனாக்கிவிட்டது.

கோயிலாகக் காட்சியளிக்காத காரணமே என்னை மாதிரி சிற்பங்கலை ஞானசூனியங்களுக்கு இந்த மாமல்லபுரம் ஞானத்தை பருக்கிவிடுகின்றது. அந்தவகையில் சிதைந்துபோன இக்கோயில்கள் நன்மையாக விளைந்துள்ளது எனலாம்.

மாமல்லபுரக் கடலுக்கு அடியிலும் ஏராளமான சிற்பங்கள் இருப்பதாகவும் அங்கு ஆராய்வுகள் நடப்பதாகவும் அறிந்தபோது எமது ஈழவள நாட்டுத் திருக்கோணேசுவரத் தலம் நினைவுக்கு வந்தது.

தஞ்சையில் வசிக்கிற எனது பல்கலைக்கழகத்தில் படிக்கிற மூத்த மாணவரான அருண் எனும் அண்ணா என்னை அங்கு வரும்படி அன்புக் கட்டளையிட்டுள்ளார். தஞ்சைப் பெரிய கோயிலைத் தரிசனஞ் செய்யும் பேறை சிவனருள் கூட்டுமானால், நிச்சயமாக அங்குள்ள சிற்பங்கள் என்னை ஆட்கொள்ளும் என்றே எண்ணுகிறேன். அப்படிச் செல்லும் பட்சத்தில் நிச்சயமாக அவற்றைப்பற்றியும் பதிவிடுகிறேன். தஞ்சை என்பது தமிழர் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலத்தின் அடையாளம். நினைவுச் சின்னம்.

மேலைத்தேயத்தவர் ஈழவள நாட்டிற்கு வந்திராவிட்டால், திருவரங்கம்,தஞ்சை போல் பொன்னாலையும் திருக்கோணேசுவரமும்,திருக்கேதீசுவரமும் மற்றைய ஏனைய திருத்தலங்களும் விளங்கியிருக்கும் என நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது.

கஜீராககோ சிற்பங்கள் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். பிரிதொரு காலம் செல்லலாம் என நினைக்கிறேன்.

Friday, July 3, 2009

இந்தி தெரியாதுங்கோ

தமிழகப் பயணம்
பெலரசில் இருந்து மதியம் 2.20 மணியளவில் புறப்பட்ட எதியாட் விமானம் மூலம் அபுதாபியை சென்றடைந்து அங்கிருந்து பின்னர் இன்னோர் எதியாட் விமானம் மூலம் டெல்லியை அதிகாலை 4 மணியளவில் அடைந்தேன். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வர உள்ளூர் விமான நிலையத்துக்கு வாடகை மகிழூந்து (taxi car) மூலம் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு காலை 10.00 மணியளவில் வந்து சேர்ந்தேன் உருப்படியாக!!!!!!

புதுவித அனுபவம் டெல்லியில்
டெல்லி இந்திய நாட்டின் தலைநகரம் என்ற கோதாவை நினைவில் கொண்டிருந்ததால் சரளமாக ஆங்கிலத்தில் எல்லோரும் கதைப்பர் என தவறாகக் கணித்துவிட்டேன். குடிவரவு அதிகாரிகளுக்குக்கூட அதிகம் ஆங்கிலம் தெரியாது அல்லது மெட்ராசி என நினைத்து "இவங்களோடு என்ன ஆங்கிலம் கேட்குது.....இந்தியை எதிர்த்து குரல்கொடுத்த இவங்களுக்கு இந்தியின் அருமையை புகட்ட வேண்டும்" என நினைத்தார்களோ தெரியாது. ஆனாலும் இலங்கைக் கடவுச்சீட்டைப் பார்த்த பின்னர்கூட இவர்களில் உரையாடல்களில் மாற்றமில்லை.

அங்கு நின்ற பணியாட்கள் தொட்டு பயணிகள் வரை யாரைக் கேட்டாலும் விடை இந்தியில்தான் வரும்.பெலரசு நாட்டின் குடியகல்வு அதிகாரிகள் சரளமாக ஆங்கிலம் கதைக்க எமக்கு ஆச்சரியம். "அடடா........எங்களுக்காக ஆங்கிலம் தெரிஞ்சவங்களப் போட்டுட்டாங்கப்பா இரசியர்களுக்குள்,,,,,, இப்படி ஒரு மாற்றமா?" என்று உவகையடைந்தோம்.
ஆனால் வல்லரசு என்று கதையளக்கும் இந்தியக் குடியரசு நாட்டின் அதிகாரிகள் இவ்வளவு இந்தி விசுவாசிகளாக இருப்பர் என்பதை கனவிலும் கருதவில்லை.

உலகம் முழுக்க இருக்கும் தமிழுக்கு ஒரு அங்குலம்கூட உரிமையில்லை. இவங்களுக்கு திமிர் இருக்கும்தானே மெட்ராசி இந்தி கதைக்காட்டி! சக பயணி என்னை மெட்ராசி என்று கருதி "ஏன் இந்தி தெரியாது?" என்று கேட்டார். இலங்கையன் என்றேன். ஏன் இலங்கையில் இந்தி இல்லையா என்று கேட்டார்.சிரித்துவிட்டு இல்லை என்றேன்.

இந்தி தெரியாவிட்டால் இப்படித்தான் மரியாதை கொடுப்பார்கள் என்று உணர்ந்தபோது "தமிழே தெரியாத தமிழரை மதிக்கும் எமது அறியாமையையும் தமிழகத்தில் தமிழைக் கட்டாயபாடமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் சென்ற தமிழக கல்வி நிறுவன நிலையங்களின் இழிநிலையையும் எண்ணியபோது "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதியிடம் சொன்னவனின் அருமை புரிந்தது.
கடவுளே..............,தமிழனுக்கு தன்மானத்தைக் கொடு!

அது சரி இந்தியா எப்படியுள்ளது?

இந்தியா......................என் சொந்தங்கள் போட்ட சாபத்தில் அழகிழந்து நிற்கிறாள்

Saturday, June 20, 2009

எனக்குத் தென்பில்லைத் தாயே


சுவையானது -எங்கள்
செம்மொழித் தமிழ்

அழகானது- எங்கள்
திராவிடத் தமிழ்

திருவருள் கொண்டது
எங்கள் சிவத்தமிழ்

புல்லரிக்க வைப்பது
எங்கள் முத்தமிழ்

நறுமணமானது எங்கள்
ஈழத் தமிழ்

தாயே,

உயிரிலும் இனிய
தமிழ் வாடுகையில்
வாழ்த்துகள் நவிலத்
தென்பில்லைத் தாயே!

தங்கள் பிறந்தநாள்
இனிய தமிழின்
இன்பத்தோடு கூடுகையில்;

எட்டுத் திக்கும்
முரசு கொட்டுகிறேன் -அம்மா
தங்கள் பிறந்தநாளை
வாழ்த்தி!

இவ்வண்ணம் என்னை
வளர்த்த என்
இனிய தாயே,

மங்காத தமிழ்
பொங்க,
தமிழ்ப் பாருக்கு
நல்ல செய்தி
கூட,

இறைவனைத் தொழுங்கள்!
தங்கள் வேண்டுதல்கள்
பலிக்காது போனதில்லை!

Wednesday, June 3, 2009

அமித்தாப்பச்சனும் கலைஞரும்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகம் வழங்கவிருந்த
கௌரவ கலாநிதி (டாக்டர் பட்டம்) பட்டத்தை ஏற்க வேண்டாம் என என் மனம் கூறியது. அதனாலேயே அதனை நான் அமைதியாக மறுத்து விட்டேன் என்று இந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.


எனது நாட்டு மக்களுக்கு அவமானம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்
நான் அந்தப் பட்டத்தை ஏற்கும் மன நிலையில் இல்லை.


இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து முழுமையான அறிக்கை வருவதற்கு முன்பே நீங்கள் எடுத்த முடிவா எனக் கேட்டதற்கு, எனக்கு அதற்கான காரணம் தெரியாது. ஆனால் எனது இதயம் சொன்னதை நான் கேட்டேன்’’ என்றார்.
எனது நாட்டு மக்கள் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச தி
ரைப்பட விழாவில் தான் பங்கேற்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


அட.........ஏன் இப்போது அமித்தாப்பச்சன் புகழ் பாடுகிறேன் என்று கேட்கிறீர்களா???????????? எல்லாம் எம் உறவுகளுக்கு உணர்வூட்டத்தான்!!!!!!!

இலங்கையில் ஒரு பிடி சோற்றுக்கு வாடிவதங்கையில்................யுத்தத்தால் ஊனப்பட்டு, உள வாட்டம் பெற்று நிற்கின்ற இத்தருணத்தில் .......பார் முழுதும் பரந்துள்ள தமிழர்கள் யாவரும் ஒருமித்து ஓர்குடையில் ஈழத்தமிழ் மக்களுக்காய் குரல்கொடுக்கும் வேளையில்................"எக்கேடு கெட்டால் எமக்கென்ன?" என்று கைவிட்ட திமுகவையும் ஈழத்தமிழ் மக்களின் கனவுகளை நாசஞ்செய்த சூத்திரதாரியான காங்கிரசையும் தெரிவுசெய்த என் உறவுகளை நினைத்தபோது அபித்தாப்பச்சனை இவ்முடிவு எடுக்கத் தூண்டிய இரசிகர்கள்........அடடா எவ்வளவு அருமையானவர்கள்!!!!!! (மன்னிக்க:- இலங்கையில் வாடுகின்ற மக்களின் வாட்டத்தை எண்ணி எண்ணி வாடுகின்ற என் இனிய உறவுகள் "குறித்த ஒப்பீட்டுக்கு" மன்னிக்க வேண்டும்.)




பாவம்..............சீமானும் நெடுமாறனும் பெரியார் திராவிடக் கழகத்தாரும் இன்னும் பலரும் எவ்வளவு கத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாது போய்விட்டதே!!!!! சன்னும் ஜெயாவும் கலைஞரும் கடமையைச் செய்யாவிட்டால் எப்படி பொதுசனம் அறிவர்????????


அவுஸ்ரேலியாவில் இந்தியருக்கு ஏற்படுகின்ற நிறவெறித் தாக்குதலுக்கு முகம்சுழித்து பட்டத்தை வேண்டாம் என்ற அமித்தாப்பச்சனுடன் ஒப்பிடும்போது மரண ஓலத்தில் உறவுகள வாடியபோது.............. வெற்றிக்களிப்பில் டில்லிக்கு சுற்றுலா சென்ற "தமிழினத் தலைவர்" கலைஞர் ?????????? பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் தேர்வுசெய்த குடிகள் மகிழட்டும்! இறந்த அந்தியட்டிக் கிரியைகளைக் கூடச் செய்யமுடியாது புழுகுகின்ற இலங்கைத் தமிழர் துயரில் வாடட்டும்! வாழ்க தமிழினம்! வளர்க தமிழ்!


அமித்தாப்பின் செருப்பை அறிவாலயத்தில் கொண்டுவந்து பூசிக்கச் சொல்லுங்கள் என் இனிய உறவுகளே......சிலசமயம் இனமானம் அறிவாலயத்தில் வந்து குடிகொள்ள வாய்ப்புண்டு.
அதுசரி; ஒக்கேனக்கல் என்ன மாதிரியுள்ளது???? இலங்கைத் தமிழரை தொப்புள் கொடியுறவாக பார்க்கத் தவறியவர்களுக்கு "ஒக்கேனக்கல்" நினைவிருந்தால் சரி!

Saturday, May 16, 2009

தமிழே,புதுவிதி எழுது!!!!!!!!!!!!

விதி எழுதியபிரம்மனே,
தமிழின் விதியென்ன
சொல்வாயா?
ஈழ வளநாட்டில்
வாடும் தமிழுக்கு
விடை சொல்வாயா?

பக்தி மொழி
பாழடைவது அழகாகுமா?
பரமனின் மொழி
பரதேசியாகலாமா?

பிரம்மனே!
கலைமகள் வீணையில்
தவழுவது தமிழில்லையா?
திருமகள் வாசம்
தமிழுக்கு இல்லையா?
மலைமகள் மறம்
தமிழைவிட்டு நீங்கிடுமோ?

விதி எழுதிய
பிரம்மனே,
என்தமிழின் விதி
என்ன?

விதியை மதியால்
வெல்லும் திறம்
தமிழுக்கு உண்டு!!!!!!
மூவேந்தரை பெற்றெடுத்த
மறத் தமிழுக்குண்டு!!!!!!!!

இறை நம்பிக்கையில்
உலகில் உள்ள
கடவுள்கள் யாவும்
வாழுகின்ற மொழியென்ற
ஓர் நம்பிக்கையில்
என் தமிழின்
விதியை உம்மிடம்
கேட்க வந்தேன்!

என் தமிழை
காக்க வரம்
வேண்டுகின்றேன்!

பிரம்மனே,
முடிந்தால் உதவும்!!!!!
ஆரியத்து பூசையில்
மகிழ்ந்தால் கலைவாணியின்
வீணையை தூக்கி
எறிந்துவிடும்!

மணி வாசகரின்
திருப்பள்ளி யெழுச்சிக்கு
பார்ப்பான் இட்ட
தடையால்,
தூங்கிக் கொண்டே
இருக்கின்றார் தமிழ்ப்பெருமான்!!!

"எம்மைக் காப்பேன்"என்ற
திருவரங்கன்,
வைகுண்டத்தில் ஆழ்வார்
தமிழைக் கேட்காததால்
தமிழுணர்வு இழந்து
தமிழன் என
மறந்து ஆரியனாகி
கரே ராமாவாய்ப்
போய்விட்டார்!!!!

தமிழ்க் கடவுள்
நல்லூரான் சமசுகிரதபாசையால்
தமிழை நீசமாகக்
கருதிவிட்டாரோ?
கோட்டையின் வாரிசு
கட்டிய கோயில்
என நன்றிக்கடன்
செய்கிறாரோ??????
சூரன்போர் இனி
நடந்தென்ன? விட்டென்ன?

தமிழ் பெற்றெடுத்த
கடவுள்களே கைவிட்டால்??????

தமிழே,உன் விதியை
நீயே எழுது!!!!!
மதி கொண்டு
புதுவிதி எழுது!!!!!!!!!!!!

Wednesday, May 13, 2009

தமிழினத்தை கூட்டிக்கொடுத்த கருணை இல்லா நிதி

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் தமிழினப் பற்றாளராக எழுந்த சூரியன் இன்று ஈழத்தமிழால் அஸ்தமனமாவது கண்கூடு! அன்று பெரியார் திடலில் பல்லாயிரம் தமிழ்த் தொண்டர்கள் எழுந்தபோது, அவர்களுடன் இணைந்து எழுந்த கருணாநிதி, அறிஞர் அண்ணாவை தனது சுயபிரபல்யத்துக்குப் பயன்படுத்தி, தனது புத்திசாதூர்யத்தைப் பயன்படுத்தி தமிழ்ப்பற்றாளராக தன்னை வெளிக்காட்டி திமுக தலைமையாகி "தமிழர் தலைவர்" என்ற மகுடத்தை தனக்குத்தானே சூட்டிக் கொண்டார்.

எம்ஜியாரின் ஆயுட்காலம்வரை தமிழக முதல்வராக வரமுடியாது தவித்தவர். இனி எக்காலமும் வரமுடியாது செய்ய, தமிழகமே விழித்தெழுவாயாக!!!!

அரசியலில் கைவந்த நடிகரான கருணாநிதி, தமிழை தனது குடும்பத்தை வளர்க்கப் பயன்படுத்தினார் என்பது வெள்ளிடைமலை.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
என்பது வள்ளுவன் வாக்கு.

கருணாநிதியின் குடும்பம் சூரியகுடும்பமாக வளர்வதற்கு தமிழ்த்தாய்தான் காரணம். ஆனால், அவள் ஈழத்தில் கண்ணீரும் கம்பலையுமாக நிற்க, இரத்தத்துள் வாடி வதங்க, எக்கவலையும் இல்லாது ஆரியக்கூட்டுக்கு தமிழைக் கூட்டிக்கொடுத்து, இத்தாலிச் சனியாளிடம் தமிழ்த்தாயின் சேலையை விற்றுவிட்டார்.

தமிழ்த்தாய் மன்னிக்குமா? மன்னிக்கலாமா? தமிழகமே, விடை சொல்லு? பின்னூட்டமாகவில்லை. வாக்குச்சீட்டு வாயிலாக!!!!!!!!

நன்றி மறந்த கருணை இல்லா கருணாநிதியை தமிழகமே, வீறுகொண்டு எழுந்து தமிழகத்தை விட்டே விரட்டுவாயாக!!!!!!கன்னடத்திடம் ஒக்கேனக்கல் பிரச்சினையில் தமிழரை இழிச்சவாயனாக்கிய கெட்டிக்காரன். கச்சதீவைத் தாரைவார்த்த நயவஞ்சகன். பாலாறு பிரச்சினையைத் தீர்க்காது தமிழரை ஏமாளிகளாக்கிய ஆரியத்திடம் "மாமா" வேலை செய்த இழியவன். தெலுங்கு நாட்டோடு எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்காது "தமிழரின்" எல்லைகள் பறிபோவது தெரியாது இருக்கும் கைவந்த நடிகன். கருணாநிதியின் குடும்பத்தையே தமிழகத்தைவிட்டு ஒதுக்கிவையுங்கள் என் இனிய உறவுகளே!!!!!!

Thursday, May 7, 2009

தாய்த் திராவிடமே,உங்களின் கைகளுக்கு கிட்டிய எம்மைக் காக்கும் கடைசி ஆயுதம்

என் இனிய திராவிடமே,

வாக்கெனும் வேல்
கொண்டு காங்கிரசை
வீழ்த்து!

ஈழத்தில் தமிழழிய
கூட்டிக் கொடுத்த
திமுகவிற்கு நல்லதொரு
பாடம் புகட்டு!

சூழ்கலி நீங்கத்
தமிழ்மொழி ஓங்க;
உன் வாக்குச் சீட்டைப்
பயன்படுத்து!!

என் ஆருயிர்த்
தமிழகமே,

உன் கையில்
ஈழத் தமிழின்
எதிர்காலம்!
வாக்கும் உன்கையில்த்தான்!
சிந்தித்து செயலாற்று!

கட்சிகள் கடந்து
தலைவர்களைத் தொலைத்து
தமிழ்த்தாய்க்கு வெற்றிகொடு!

என் தாய்த்
தமிழகமே,

வீழ்வது காங்கிரசு
ஆகட்டும்!
சூடுகண்ட பூனையாய்
திமுக திருந்தட்டும்!
வாக்கெனும் வேலால்
நீ வெல்கவே!
வெல்கவே!

Thursday, April 30, 2009

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அன்புள்ளம் கொண்டோரே ஓடோடி வாருங்கள். உதவிகள் செய்யுங்கள்.

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை மன ஆறுதலை ஊட்டுகின்றது. 30ம்திகதி வரையே முதற்கட்ட பொருட்சேகரிப்பு நடைபெறும் என இவ்விளப்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்களே, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்கலாம்.

Principal Name : Thambipillai Muthukumarasamy
Address : Hindu college, colombo - 04
Telephone Number :+94112586169

சிறுதுளி பெருவெள்ளம்

Thursday, April 9, 2009

பாரதிதாசனின் இராவணன்

பாரதிதாசனின் அருமையான பாடல் ஒன்று இலங்கை வேந்தன் இராவணனைப் போற்றிப்பாடுவது கண்டு மகிழ்வுற்றேன். என் ஆனந்தத்தை உங்களுடன் பகிர்வதற்காய் இங்கு அப்பாடலைப் பதிவிடுகிறேன். இராவணன் மேலது நீறு என திருஞானசம்பந்தர் ஏற்றிபோற்றிய சைவக்கொழுந்து இராவண மாமன்னன்.திராவிட ஆரிய யுத்தம் தமிழ்வீரனாகிய இராவணனை சீதையைத் திருடிய பாதகனாய் சித்தரித்துள்ளது என்பதே என் கருத்து.என்ன நீங்கள் சொல்கிறீர்கள்?


தென்றிசையைப் பார்க்கின்றேன்;
என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம்
பூரிக்குதடா!அன்றந்த லங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை
வைத்தோன்! குன்றெடுக்கும் பெருந்தோளான்
கொடைகொடுக்கும் கையான்!குள்ளநரிச்
செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை!
என்தமிழர் பெருமான்இராவணன்காண்!
அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று
தன்னைவையத்தார் சொல்லுமொரு
மாபழிக்கே அஞ்சும்நெஞ்சகனை, நல்யாழின்
நரம்புதனைத் தடவிநிறையஇசைச்
செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும்
சூழ்ச்சிவிரும்பாத பெருந்தகையைத்
தமிழ்மறைகள் நான்கும்சஞ்சரிக்கும்
நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச்
சழக்கரெனச் சொல்வேன்!வீழ்ச்சியுறு
தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை
தன்னைத்தொகையாக எதிர்நிறுத்தித்
தூள்தூ ளாக்கும்காழ்ச்சிந்தை, மறச்செயல்கள்
மிகவும் வேண்டும்!கடல்போலச்
செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்!
ராவ ணன்தன்கீர்த்திசொல்லி
அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!


பாரதிதாசன் இருந்திருந்தால் இப்போது யாரைப்பற்றி பாடல் பாடியிருப்பார் என சிந்திக்கையில் நெஞ்செல்லாம் புல்லரிக்கிறது. பாரதிதாசன்; பாட்டொன்று........கலைஞரின் தமிழ்ப்பிழையையும் சரியென கவிபடிக்கும் புலமையொன்று என வாழும் தமிழ்வேடதாரி கவிப்பேரரசுவா என்ன?

Monday, April 6, 2009

கருணாநிதியை நம்பி ஏமாந்த எம்மை காப்பாற்றும் கடவுளே!!!!!!!!

ஐயனே சிவனே,

வாடுகின்ற பயிரால்
வாடுவர் சைவர்
எம்பெருமானே தாங்கள்
சைவர் தானே?

கருகிப்போகும் நிலையில்
நாம் வாடும்
வேளை கயிலையில்
உமக்கென்ன வேலை?

சிவபூமி உதிரத்தால்
சிவப்பாய் இருப்பது
சிவனே உமக்கு
இழுக்கல்லவா?

பிரம்மாஸ்திரத்திடம் இருந்து
அர்சுனனைக் காத்த
ஆயர்குலக் கண்ணா,
கருக்கும் நச்சு
ஆஸ்தீரத்திடம் இருந்து
காக்காது தமிழரைக்
கைவிட்டது ஏன்
தானோ?
அதர்மம் ஓங்கிறதே............
நீர் எங்கே?

சிலுவை ஏற்ற
பிரானே,
உம்மிலும் எம்முறவுகள்
துயர் ஏற்றுவிட்டனர்!
இனியும் இரங்காதது
நீதியோ தேவனே?

உமறுப் புலவன்
பாடிய தமிழால்
மகிழ்ந்த அல்லாவே
ஈழத் தமிழ்
மறைவது முறையாகுமா?

புத்தரே,
அன்புக்கு திருவுருவம்
அளித்த வள்ளலே,
உமது திருப்பெயரால்
தமிழ் அழியுதையா!!!
இப்போதும் தியானத்தில்
இருப்பது முறையோ?

நாத்தீகம் நவின்ற
கருணை இல்லாக்
கருணாநிதியை கடவுளாய்
நம்பியதுதான் குற்றமோ!
ஏமாந்துவிட்டோம் இறையே
ஏமாத்திவிடாதீர்!!!!

Saturday, February 14, 2009

தோல்விகளில் துவழுகிறீர்களா தோழர்களே.........நீங்கள் வெற்றியின் சீமான்கள்!

தோல்வி என்பது வாழ்க்கையில் வந்துபோகும் சாதரணமான ஒன்றே! தோல்வியில் துவழுதல் வெற்றியை நிராகரிக்கும் செயல் என்றே கூறவேண்டும்.தோல்வியை வெற்றிக்காய் வரையப்படுகின்ற அழைப்பிதழ் எனலாம். எடுத்த எடுப்பிலேயே வெற்றி என்பதை எதிர்பார்ப்பது ஏமாற்றத்திற்கே சில சமயங்களில் வழிவகுக்கும். உழைக்காமல் அதிஷ்டவசத்தால் மலருகின்ற வெற்றிகள் நிலையற்றவை. கைவிரலைவிட அளவில் பெரிய மோதிரங்களை நூல்சுற்றி சிலர் அணிவதை கண்டிருப்பீர்கள். அதுபோன்றதுவே இவ்வகையான வெற்றிகள். விரைவில் தொலைந்துவிடக்கூடியவை.
வெற்றியை எதிர்பார்க்காமல் செயலில் விளையும்போது, செயல்மீது பற்றுவராமல் போய்விடும் என சிலருக்கு சந்தேகம் மலர்வது நியாயமானதே!"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என கீதையில் கண்ணன் சொல்வது இங்கு பொருந்துகிறது பாருங்கள்!பற்றோடு உழைக்கவேண்டும். வெற்றியா, தோல்வியா என பலனை எதிர்பாராது இருக்கவேண்டும். வெற்றியாயின் உழைப்புக்கேற்ற ஊதியம் என மகிழும் அதேசமயம் தோல்வியாயின் அதை கடவுள் தந்த வரம் என நினைக்க வேண்டும்.தோல்வியை வரமா கருதலாமா என கேள்விக்கணைகளை வில்லின் நாணேற்றி அனுப்ப தயாராவது புரிகிறது!ஏலவே சொன்னதுபோல்,வெற்றிகளில் மிகப்பெரிய வெற்றி தோல்விதான். ஆதலால்; உழைப்பை விஞ்சிய ஊதியத்தை வரம் என்றுதானே சொல்லவேண்டும்.

தோல்விகளால் வரையப்படுகிற வெற்றியானது காலத்தால் அழியாது வாழும் இயல்புடையது.வாழ்க்கையில் சாதரண எழைகளாய் பிறந்து உலகாளும் செல்வந்தர்களாய் மலர்ந்த ஏராளமானவர்கள் இந்தரகத்தை சார்ந்தோர்தான். தோமஸ் அல்வா எடிசன் ஏராளமான மின்குமிழ் மாதிரிகளைத் தயார் செய்து எல்லா பரிசோதனைகளிலும் தோல்வியையே கண்டார். ஆயினும் தனது முயற்சியைக் கைவிடாது பற்றோடு தனது பரிசோதனைகளைத் தொடர்ந்தார். இன்று நாம் எல்லோரும் மின்குமிழின் வருகையால் இரவையும் பகலாக்கி பயனடைகிறோம். அவரது தளராத முயற்சிக்கு இறைவனால் வழங்கப்பட்ட மகுடமாய் மின்குமிழ் பிறந்தது.
சிலர் "இது அவரது முயற்சி, இதில் இறைவனின் பங்கு என்ன உண்டு" என நாத்தீகம் கதைப்பர். நான் சிவனருளாலே சிவன் தாள் வணங்கி என சிந்தை மகிழும் ரகம். எனவே எங்கும் சிவன் செயல் என இறைவனைப் புகுத்திவிடுவேன். இது என் பழக்கம். நாத்தீகத்திற்கு பதிலுரைப்பது என் எழுத்துக்குரிய தலைப்பைத் தாண்டியதாய் அமைந்துவிடும்! ஆதலாம் சூ!

சிலர் தோல்வி வருமோ என அஞ்சியே பல நல்ல முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சமணரோடு வாதம் செய்ய முயன்றவேளை, அப்பர் அறிவுரைகள் பலகூறி சமணர் சூழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, தடுக்க முனைகிறார். நாளும் கோளும் சிவனடியாருக்கு தீங்கில்லை என, துணிவுடன் அஞ்சாது அனல் வாதம்,புனல் வாதம் என எல்லாவற்றிலும் சமணரை வென்று தமிழர்நெறியை தமிழில் மீண்டும் தழைக்க வைத்தார்..வ.வே.சு ஐயர் "ஓலைகளை எங்குபோய்த் தேடுவது" என நினைத்திருந்தாராயின் தமிழ் இன்று செம்மொழியாய் அங்கீகாரம் பெறுவது இயலாத கதையாய் முடிந்திருக்கும்.அஞ்சி ஓடி ஒழிந்தவர்கள் எல்லாம் இன்று ஈழத்தமிழரிடம் தலைவர் எனும் பட்டத்தை இழந்து அரசியல் வாழ்க்கையையே இருட்டறையாய் மாற்றினர் என்பது காலம் காட்டும் செய்தி!

யுத்தத்தில் புறமுதுகு காட்டாது மரிக்கவேண்டும் என்பதுவே தமிழர் பண்பாடாக இருக்க, அச்சம் தமிழர் சமூகத்தில் மலரக்கூடாத ஒன்று!

சிலரிடம் திறமைகள் பல ஒழிந்திருக்கும். இனங்காணத் தெரியாதவர்களாய் இருப்பர். இந்த ரகத்தில் ஒருகாலத்தில் அகப்பட்டு இருந்தவன் நான் என்பதால் இதுபற்றி அலசும் உரித்தும் எனக்கே அதிகமாய் விட்டது. எனக்குள் இருந்த திறமைகளை எனக்கு அறிவித்தது என் அப்பனாகிய சிவபெருமான் ஒருவனே!

உங்களுக்குள் மறைந்துள்ள திறமைகள் பல வழிகளில் உங்களாலேயே உணரக்கூடியதாய் இருக்கும். சிலர் உணராது வாய்ப்பை இழந்துவிடுவர்.உதாரணமாய் காதலையே எடுத்துக் கொள்ளலாம். தோல்வியில் முடியும் காதல்கள் நல்ல கவிஞர்களை உருவாக்குகிறது. காதல் மட்டுமல்ல.......அடக்கப்படும்போதும் கவிஞர்களாய் பலர் பூத்து மக்களை

விழிப்புக்குள்ளாக்குவர்.கணிதத்தில் நூறுபுள்ளியா? கணித மேதையாகும் திறன் உங்களிடம் உண்டு!விஞ்ஞானத்தில் நூறுபுள்ளியா? விஞ்ஞானி,பௌதீகவியலாளர்,மருத்துவர்,விஞ்ஞான ஆசிரியர் என பலதுறைகளில் நுழையக்கூடிய திறமை உங்களிடம் உண்டு!நூறு புள்ளி என நான் இங்கு சொல்வது சும்மா ஒரு கதைக்குத்தான்!அறுபது புள்ளி எடுக்கும் மாணவன் எண்பது புள்ளியாய் அதை உயர்த்துவது இயலாத ஒன்றல்ல. எண்பது புள்ளி என்பது புலமையை கிட்டத்தட்ட தொட்டுக்காட்டும் புள்ளிதான்!தமிழில் கவி எழுத முடிகிறதா? கொஞ்ச பழந்தமிழ்ச் சொற்களை நாப்பழக்கத்தில் வைத்துள்ளீர்களா? வைரமுத்து உங்கள் கைகளுக்குள் வந்துவிடுவார். முயலுங்கள்!வைரமுத்து கவிப்பேரரசு என்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை! நான் கவிகளின் ரசிகன். அந்த உரிமையில் சொல்லும் கருத்துத்தான் இது. ஆனால் இது என்னுடைய கருத்து!நல்ல கவிஞர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு!அதுபோல்த்தான் என்பார்வையில் ஏனைய திரைகவிஞர்கள்!

இதேபோல்த்தான் திரை நடிகர்களுக்கு இளைய தளபதி, புரட்சி கலைஞர் என பட்டங்கள் சூட்டுவது தமிழரை மடையராக்கும் செயல்!விஜயை இளைய தளபதி என்றால்....... இவர் நாட்டின் காவலரா? தமிழருக்கு தளபதியாய் வரவுள்ளவரா? இளைய தளபதி இவர் என்றால் தளபதி யார்? ரஜினியா? அப்படியானால் வன்னியில் சாகும் தோழர்களை இழிவுபடுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது.உங்களுக்கு எப்படி? அரிவாளை கண்டால் கட்டிலுக்கு கீழே ஒழிந்துவிடும் இவர்களை தளபதி என்றும் புரட்சி என்றும் பட்டம் சூட்டி தமிழர் தமிழருக்கு வீசும் சேறு இது என்பேன்! இது என் சுயகருத்து!

புலமைகளில் புலமை தமிழ்ப் புலமை என்பது யான் உணர்ந்தது. தமிழ் படிக்கப் படிக்க இனிக்கும் மொழி. அந்த மொழியின் தோற்றம், அந்த மொழியின் வரலாறு என ஆய்ந்து நிறுவுகின்ற தமிழ்ப் பேராசிரியர்களை கைகூப்பி வணங்கி, அவர்களை எல்லாம் ஆசானாக மனதிலே இருத்தி வாழுகின்ற பல்லாயிரம் தமிழ் தாயின் அடியவர்களில் எளியேன் ஒருவன் என இருமாப்புடன் கூறுவதுடன்" தமிழ் படியுங்கள் இளைஞர்களே" என வேண்டுகிறேன்.டோச்,ஆங்கிலம்,பிரான்சு என வெவ்வேறு மொழிகளில் தேர்ச்சியுள்ளவர்கள், தமிழிலும் புலமை அடையும்போது தமிழ் பார் முழுவதும் பரவும் களம் உருவாகும்.

அன்று அந்நியனிடன் பீரங்கி இருந்தது. வந்தான்; வென்றான்; கோயில்களை நிர்மூலமாக்கினான். எமது பண்பாட்டை நாம் பேணத் தடைவேறு விதித்தான். இன்று நாம் உலகம் பூராகவும் உள்ளோம். எமது பண்பாடு அவர்கள் மொழியில் மலரும்போது அவர்கள் எமது பண்பாட்டை நேசிக்கும் சூழல் உருவாகும் தோழர்களே!அவர்கள் திணித்தார்கள். நாம் வாரி வழங்குவோம்!

இளைஞர்களே! தோழர்களே!தோல்வி என்பது வெற்றியின் வாசல் ஆதலால் துணிவுடன் பற்றுடன் செயலில் ஈடுபடுவோம். செயலில்த்தான் பற்று வேண்டும். செயலின் விளைவில் அல்ல. சகோதர சகோதரிகளே,
வெற்றி எமது வீட்டுக் கதவுகளைத் தானே வந்து தட்டும்!

Monday, January 26, 2009

என்னுணர்வோடு கலந்த கொழும்பு சைவ சாம்ராச்சியம்

தாயில் உள்ள பற்று இயல்பாக தாய்மண்ணிலும் மலரும் என்பது யதார்த்தமானது. அதுபோல் கல்வி புகட்டிய கல்லூரியில் பற்று இருப்பதும் தாய்க்கு நிகராய் போற்றுவதும் மாணக்கர் உள்ளங்களில் கல்லூரியானது கோயிலாய்க் காட்சியளிப்பதும் யதார்த்தமானதே.

இவ்வகையில் நோக்கின் எனது பாலர் பாடசாலையின் பெயர்கூட எனக்கு நினைவுக்கு மீட்டமுடியவில்லை. நினைவில் பசுமையாக இன்றும் எனது வாழ்வியலில் தீட்டப்பட்ட அழகான கோலங்களாக எனது பாலர் பாடசாலை காட்சியளித்தாலும் நாட்டில் நிலவுகின்ற யுத்தசூழலில் 1995களில் எனது அழகிய கிராமத்தைவிட்டு நீங்கிய காரணத்தால் பாலர் பாடசாலை எங்கு இருந்தது எப்படி இருந்தது என்ற எனது கேள்விகளுக்கு எனதுள்ளம் விடையளிக்க முடியாது மௌனியாகி நிற்கின்றது.

பாலர் பாடசாலையை முடித்து விக்னேசுவரா வித்தியாலயத்தில் ஒரு சில வருடங்கள் படித்து பின்னர் "யாழ்ற்றன்" கல்லூரியில் ஒருசில வருடங்கள் என; எனது மூன்றாம் ஆண்டின் இடைநிலைப் பருவம் வரை யாழ் கல்வியைச் சுவாசித்த எனக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குகான புலம்பெயர்வுடன் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை கல்விப் புகலிடத்தை அளிக்கின்றது.


பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் ஏதும் இல்லாது கற்க கல்விக்கூடம் செல்லமுடியாத துர்ச்சூழலில் கொழும்பில் தவித்தவேளை அன்றைய சமூகப் பிரச்சினையை உணர்ந்திருந்த அதிபர் சான்றிதழ்கள் ஏதுமில்லாது இருந்தபோதும் கற்க அனுமதியளித்தார்.

கொழும்பின் பம்பலப்பிட்டியில் பிரசித்தமாய் விளங்குகின்ற இந்துக் கல்லூரியில் மாணவர் தொகை அதிகமாய் இருந்தமை, அங்கு அனுமதி பெறுவதற்கு சான்றிதழ் அவசியம் எனும் மந்திரத்தை உருவாக்கியதால் பம்பலப்பிட்டிக்கு அருகில் வெள்ளவத்தையில் வதிவிடத்தைக் கொண்டிருந்தும் அனுமதியைப் அங்கு பெறமுடியாதுபோகவே, இரத்மலானையில் உள்ள இந்துக் கல்லூரியில் மாணவர் தொகை சொற்பமாய் இருந்த தன்மை சான்றிதழ் அவசியம் எனும் மந்திரத்தை புறக்கணித்து அனுமதியளித்து கல்விச் சுடரை என்னுள் மீண்டும் ஏற்றியது.
மாணவர் தொகை சொற்பமாய் இருந்த தன்மையே சான்றிதழ் அவசியம் எனும் மந்திரத்தை புறக்கணித்தது என்று கருதுவது சாலப் பொருந்தாது என்பது அதிபருடன் உறவாடும் மாணக்கருக்கு தெரியும். அதிபரின் இளகிய உள்ளத்தில் சான்றிதழ் இன்றி அனுமதி வழங்கும் கல்விப்பணிக்கு மாணவர் தொகை சொற்பமாய் இருந்தது தூண்டற்காரணியாய் அமைந்தது என்பதே பொருத்தம் என்பேன். ஒருசில வருடங்களின் பின்னரே சான்றிதழ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்து அதிபரிடம் கையளிக்கப்பட்டது.அதுவரை சான்றிதழ்கள் இல்லை என்ற வசனம் அதிபரிடம் இருந்து வந்ததே இல்லை என்பதை இங்கு நினைவுகூர விரும்புகின்றேன்.

தரம் பத்துவரை கல்லூரியில் இனப்புரியாத ஒரு பற்று மலர்வதை உணரவேயில்லை. பத்தாம் ஆண்டின் பிற்பகுதியில் கல்லூரியில் தாய்மீது கொண்டுள்ள பற்று மலர்ந்திருப்பதை மெல்ல மெல்ல உணர தொடங்கினேன். கல்லூரியின் பொன்விழா மலருக்கு கல்லூரி வரலாற்றை வரைய முயன்றவேளை, கல்லூரியின் வெள்ளிவிழா நூலைப் புரட்டவேண்டிய தேவை ஏற்பட்டது.அப்போதுதான் இலங்கையில் கொழும்பு மாநகரில் புகழ்பூத்த கல்லூரியாய், இலங்கையிலேயே தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாய், கொழும்புத் தமிழ்ச் சமூதாயத்தின் சைவச் சொத்தாய் விளங்கிய வரலாறு புலனாகியது. திரைப்படங்களில் கதாநாயகனுக்கு ஒரு இறந்தகாலம் மிகச்சிறப்பாக இருந்ததாகக் காட்டுவர்.அவ்வாறுதான் இரத்மலானையில் கொழும்பு இந்துக் கல்லூரி எனும் பெயரில் கொழும்பு சைவ சாம்ராச்சியமாக இன்று மீண்டும் புகழ் பூத்து எழுச்சி கண்டு வருகின்ற என் கல்லூரிக்கும் வரலாற்றால் அழிக்கமுடியாத சோகத்தில் நிறைவுற்ற இறந்த காலம் உண்டு.

இலங்கை சுதந்திரம் அடையமுன்னர் இரத்மலானையில் இந்திய வம்சாவளி தமிழ்மக்கள் செறிவாகவும் இலங்கைத் தமிழர் ஓரளவாகவும் இருந்த காரணத்தால் இரத்மலானையின் தமிழ்மணம் கொழும்பையே தமிழ்சுகந்தத்தால் ஆட்கொண்டிருந்தது. அன்றைய காலத்தில் விளங்கிய ஆங்கிலேயக் கல்லூரிகள்( ஏன் இன்றும் கூட) திருநீறு தொட்டு சைவசின்னங்களுடம் மாணவர் வருவது தடைசெய்திருந்த காரணத்தால் தமிழர் பண்பாட்டை கொழும்புத் தமிழர் சந்ததிக்கு அழியாது காத்து வழங்க ஓர் கல்லூரி வேண்டும் என்பதை தமிழ்த் தலைவர்கள் தூரநோக்கு சிந்தையோடு கருதி "இந்து சதுக்கம்" எனும் பெயரில் பாரிய நிலப்பரப்பை இரத்மலானையில் வாங்கி கல்லூரி அமைக்க கால்கோள் இட்டனர்.

இங்கு தமிழருக்கு தமிழரின் கல்லூரியே அவசியம் என்பதை ஆழமாக பதிய ஓர் செய்தியை பகிர விரும்புகிறேன்.
திராவிட பண்பாடு,சைவ சித்தாந்தம்,திருக்குறள்,ஆத்திசூடி என்பனவெல்லாம் கிருத்தவ சமயத்தின் நூல்கள் எனவும் தமிழர் பண்பாடு கிருத்தவப் பண்பாடு எனவும் தோமா(சேன்.தோமஸ்) நிறுவிய பண்பாடே தமிழர் பண்பாடு எனவும் மூடத்தனமாக இயற்றிய பொய்யான வரலாற்றை உத்தியோகபூர்வமற்றமுறையில் தமிழகத்தின் சில ஆங்கிலேய கிருத்தவக் கல்லூரிகளில் புகட்டப்படுவது பலர் அறியாத ஒன்றாகும். சென்.தோமஸ் தமிழகம் வந்ததாக திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட இருப்பதாக கிருத்தவ அமைப்புகள் கூறியிருந்தன. கலைஞர் கருணாநிதிகூட தோமாவின் விழாவில் பங்குபற்றி வாக்குக்காக தமிழர் வரலாற்றையே திரித்துக்கூறும் சதிக்கு சால்வையைப் போட்டுவிட்டு வந்தார்.இவர்களின் மூடத்தனமான பிரச்சாரத்தை வரலாற்று அறிஞரும், செல்வி ஜெயலலிதா கொண்டுவந்த கட்டாய மதமாற்றுத் தடைச்சட்டத்தை வலுவாக எதிர்த்தவருமான தமிழறிஞர் ஒருவர், தோமா வந்ததென்பது வெறும் மதநம்பிக்கை என (மூட நம்பிக்கையை எதிர்க்கும் கருணாநிதி வெறும் தமிழ்ப்பித்தலாட்டக்காரர் என உணர்க) விளக்கியிருந்தமையையும் சைவசித்தாந்தம் தொட்டு ஆத்திசூடிவரை கிருத்தவ மதநூல்கள் என புகட்டுவது கேலிக்குரியது என பொருள்பட விளக்கியிருந்ததும்
படித்தபோது தமிழருக்கு தமிழரின் கல்லூரிகளே அவசியமானது என உறைத்தது.

இந்துவித்தியாவிருத்தி சங்கத்தை தோற்றுவித்த தமிழ்ச் சான்றோர்கள், அச்சங்கத்தின் குழந்தைகளாக பம்பலப்பிட்டியில் பிள்ளையார் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பநிலைப் பாடசாலையையும் பின்னர் இரத்மலானையில் உயர்நிலைக் கல்லூரியாக கொழும்பு இந்துக் கல்லூரி எனும் பெயரில் சைவ சாம்ராச்சியத்தையும் நிறுவினர்.
மிகப் பெரிய நிலப்பரப்புடன் மிகப்பெரிய கல்லூரியாகக் கட்டும் திட்டத்துடன் மலர்ந்த கல்லூரி சைவ சாம்ராச்சியத்தின் கட்டிட நிர்மாண வளர்ச்சியை அரசியற் காரண்ங்களுக்காக கைவிடவேண்டிய சூழல் உருவாகியது. மொறட்டுவவில் பல்கலைக்கழகம் கட்ட இடம்தேடிய அரசுக்கு சைவ சாம்ராச்சிய கட்டிட வரைபடமும் பாரிய நிலப்பரப்பும் கண்ணை உருத்தத்தொடங்கியது புலப்படவே, தமிழ்த் தலைவர்கள் கட்டிட நிர்மாண வளர்ச்சியை அரசியற் தந்திரோபாயத்திற்காய் கைவிடவேண்டியதாயிற்று.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் உருவாகிய பிரசாவுரிமைச் சட்டத்தின் கோரத்தாண்டவத்தால் இலங்கைப் பிரசைகள் எனும் முகவரியிழந்து தமிழகத்திற்கு இந்தியத் தமிழர்கள் திருப்பியனுப்பப்பட்டதனால் தமிழர் செறிவு குறைவாகவே, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் இலங்கைத் தமிழரும் இரத்மலானையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத்தொடங்கினர். எழுபதுகளில் உருவாகிய கல்விச்சட்டங்களின் நிமித்தம் கல்லூரி அரசுடமையானபோது இந்துவித்தியாவிருத்திச் சங்கத்திடம் இருந்து பிரியவேண்டிய சூழல் உருவாகியது.இதன்போது ஆரம்பநிலைக் கல்லூரியாக விளங்கிய பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரியும் தனியான ஒருகல்லூரியாக உருவாக வேண்டியதாயிற்று.

83களில் தமிழர் வாழ்வில் கரியநாட்கள் வந்துசூழ்ந்தபோது சைவசாம்ராச்சியமாக இரத்மலானையில் பூத்திருந்த சைவச் சொத்தும் தீயுள் கருகி தனது சொத்துக்களை இழந்து, சோபை இழந்து இராணுவ முகாமாக உருமாறியது. கல்லூரியின் நூலகம்,ஆவணக் காப்பகம் யாவும் தீக்கிரையானதால் கல்லூரியில் படித்த மாணவர்கள், பல்கலைக்கழகம் சென்ற மாணவர் விபரங்கள்,கல்லூரிச் சொத்துவிபரங்கள் என யாவும் இழந்து வாடி நின்ற கல்லூரி, அன்றைய மாணவர்களில் ஒருவரான இன்றைய அதிபருமாகிய திரு.ந.மன்மதராஜன் உட்பட பல சைவச் சான்றோர்களின் அயராத உழைப்பால் மீண்டும் 90களின் பின்னர் மலரத் தொடங்கியது.

கொழும்பின் சைவச் சாம்ராச்சியமாக விளங்கிய எமது கல்லூரி 83களின் கோரத்தாண்டவத்தின் தீயில் வீழ்ந்து கார்புகையாய் மாறிய பின்னர், சைவ சாம்ராச்சியத்தின் ஆரம்ப நிலைப் பள்ளிக்கூடமாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கல்லூரிகள் அரசாங்க உடமையாக்கப்பட்டபோது தனிக்கல்லூரியாக மலர்ந்த பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கொழும்பின் சைவ சாம்ராச்சியம் எனும் உயர்பதவியை.......உயர்சேவையை தனதாக்கியது எனலாம்.

ஏலவே 1990களின் பின்னர் கொழும்பின் சைவ சாம்ராச்சியமாக மலர்ந்திருந்த பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஆதீத வளர்ச்சி, மீண்டும் பூத்த இரத்மலானை இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கு கொழும்புத் தமிழ்ப் பெற்றோரிடம் வரவேற்பை வழங்க மறுத்திருந்த காலகட்டத்தில்த்தான் யாழில் இருந்து பெருமளவு தமிழர்கள் கொழும்புக்கு புலம்பெயர்ந்தபோது எமது கல்லூரி தன்னை ஒரு கல்விப்புகலிடமாக மாற்றி மாணவர் தொகை பெருக சூழலை ஏற்படுத்தியது.

சொய்சாப்புர தொடர்மாடிகளில் குடிகொண்ட தமிழ்ப் பெற்றோர் சமுதாயத்திடமும் கல்கீசை, தெகிவளை தமிழ்ப் பெற்றோர் சமுதாயத்திடமும் அதிக வரவேற்பை அமைவிடம் காரணமாக பெற்ற அதேவேளை, வெள்ளவத்தை சமூகத்திடம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியே முதல்த்தெரிவாக இருந்தது.
சொய்சாப்புர தமிழ்ப் பெற்றோரும் தரம் ஐந்துவரை தமது பிள்ளைக்ளுக்கு கல்விபுகட்டும் தெரிவாகவே இரத்மலானை இந்துக் கல்லூரியைப் பயன்படுத்தும் வழக்கத்தால் சைவ சாம்ராச்சிய வளர்ச்சி அதிக சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தரம் ஐந்தில் சிறப்பு சித்தியை தமது பிள்ளைகள் பெற்றதும் வேறு கல்லூரிகளுக்கு மாற்றும் நன்றியற்ற சமூக அக்கறையற்ற சுயநலப் போக்கு தமிழர் சொத்தான சைவ சாம்ராச்சிய வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கியது எனலாம்.
இங்கு எனது கருத்தாக ஒருசில உண்மைகளைப் பதியவிரும்புகின்றேன். என்னோடு படித்து அதிசிறந்த புள்ளிகளைப் பெற்று வேறு பிரபல கல்லூரிகளுக்கு இடம்மாறிச் சென்ற சக மாணவ்ர்களை உயர்தரத்தில் சந்தித்தவேளை சாதரணதரப் பரீட்சையில் சாதரண புள்ளிகளை பெற்றிருந்த தன்மையை அறியக்கண்டேன். ஏன் அன்று என்னைவிட கல்வியில் மேம்பட்டிருந்த அம்மாணவ சொத்துக்களை பெற்றோர் சுயநலபோக்கினால் வேறு பள்ளிக்கூடங்களில் சேர்க்கவே, அங்கு ஐயாயிரம் மாணவ்ர்களில் ஐயாயிரத்தியொன்றாய் கவனிப்பாரன்றி கைவிடப்பட்ட நிலையினால் சாதாரண தரப்பரீட்சையிலும் பிரகாசிக்காது உயர்தரப் பரீட்சைவிலும் பிரகாசிக்காது போகும் துர்ச்சூழல் உருவானது.

தரம் ஐந்தில் சிறந்த புள்ளிகள் பெறக்காரணமாய் விளங்கிய கல்லூரியால் சாதரண தரத்திலும் உயர்தரத்திலும் சிறந்த புள்ளிகளை பெறச் செய்யமுடியாது என்ற மூடத்தனமான முடிவு பெரிய பிரசித்தமான ஆங்கிலப் பெயருடன் விளங்கும் கல்லூரிகளில் கொண்டிருந்த மோகத்தால் பெற்றோருக்குள் உருவாகியது துரதிட்டமே.

இதுமட்டுமல்லாது, பல அரசியற் பிரச்சினைகளும் கல்லூரிக்கு அடிக்கடி வந்து இடைஞ்சல் செய்வது நான் கண்ணால் கண்டு உணர்ந்ததே. எனினும் அதிபரின் திடமான தளராத உறுதி அவற்றையும் தவிடுபொடியாக்கி சைவ சாம்ராச்சியமாக மீளப்பிரதிட்டை பண்ண ஏதுவானது.
கல்லூரி கட்டிடத்தைச் சூழ உள்ள காடுகள் வெட்டப்பட்டு மைதானங்கள் பூத்தன. தமிழ் ஏழைக் குழந்தைகளுக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் அகில இலங்கை இந்துமாமன்றத்தால் விடுதிகள் உருவாக்கப்பட்டு அம்மாணவர்களின் கல்விச் சொத்தாக கல்லூரி புதியவடிவம் பூண்டது. மாணவ்ர் தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது.

இப்படி வளர்ந்து வந்த எமது கல்லூரி சைவ சாம்ராச்சியமாய் கொழும்பில் மிளிர ஏதுவாய் அமைந்தது கற்பக விநாயக ஆலய தோற்றமாகும். 1998களில் சைவக் கொடியாக நத்திக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டு முதன்முதல் "விடைக்கொடிச் செல்வர்" தனபாலா ஐயாவினால் கல்லூரியில் ஏற்றுவிக்கப்பட்டதனால் உருவாகிய சிவஞானப்பெருக்கின் விளைவால் அதிபரின் அயராத முயற்சியினால் கற்பகவிநாயகர் ஆலயம் 1999களில் இரத்மலானையை அலங்கரித்தது.

"ஒருக்காலும் திருக்கோயில் சூழாராகில்
அவை எல்லாம் ஊரல்ல அடவி காடே" என்றார் அப்பர் சுவாமிகள்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கலாகாது என்பதும் இதனாலேயே. தெகிவளை,கல்கீசை,இரத்மலானை,சொய்சாப்புர,மொறட்டுவ,பாணந்துறை சைவத்தமிழ்ச் சமுதாயம் ஆலயம் இன்றி தவித்த சூழலை அதிபர் நன்கு உணர்ந்து பாடசாலையில் ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உணர்விக்கும் ஞானமுதல்வனாகிய பிள்ளையாருக்கு ஆலயம் அமைக்கவேண்டும் எனும் சித்தம்பூண்டு 1999களில் செயல்வடிவாக்கி கொழும்புத் தமிழர் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிக்கவேண்டிய ஆலய கும்பாவிடேகத்தை நிறைவேற்றி தமிழ்கூறும் நல்லுலகத்தை சிவஞானத் திருவருளால் குதுகலத்தில் ஆழ்த்தினார். மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,சைவ நலன்விரும்பிகள்,சைவச் சான்றோர்கள்,தமிழ்த் தலைவர்களின் உதவியோடு அதிபர் அன்று எழுப்பிய ஆலயம் இன்று இரத்மலானை மக்களுக்கும் அதனைச் சூழ உள்ள மக்களுக்கும் கொடையாய் விளங்குவது கண்கூடு.

உலக இந்து மாநாட்டுச் செயற்பாடுகளிலும் சேக்கிழார் மாநாட்டுச் செயற்பாடுகளிலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தோடு நின்று உதவியதோடு, பொன் விழா,முத்தமிழ் விழா ஆகியவற்றை கொழும்பு மாநகரே வியப்பில் மூழ்கும்வண்ணம் அரங்கேற்றி இலக்கிய வளமுடைய கல்லூரி என்பதை நிறுவனம் செய்து சைவ சாம்ராச்சியமாக தன்னை அறிவித்தது என்றால் மிகையில்லை.

1995களின் இறுதிப்பகுதியில் இருந்து 2006இன் ஆகஸ்ட் மாதம்வரையுமான எனது கொழும்பு வாழ்வியற்காலப்பகுதியில் சாம்ராச்சிய வளர்ச்சியை நேரடியாகக் கண்ணால் கண்டு உணரக் கூடியதாக இருந்தது.இவ்வளர்ச்சி மெல்ல மெல்ல செதுக்கப்பட்ட ஓர் சிற்பத்தை ஒத்தது எனலாம். ஒப்பீட்டளவில் வளர்ச்சிவீதம் குறைவானதாகத் தோன்றினாலும் சுற்றுச்சூழல்,அகப் புறக்காரணிகளைக் கருதும்போது இவ்வளர்ச்சிவீதமானது வியப்புக்குரியதே!

ஒருகல்லூரி எத்தனை மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது என்பது கல்லூரியின் கல்விபுகட்டும் தகமையை காட்டும் என்பர் ஒருசிலர். ஆனால் இவ் அளவுகோல் நம்பகத்தன்மையற்றது என்பதை கல்லூரியில் வாழ்ந்து உணர்ந்தவன் நான் என்பதை ஆழமாகப் பதிய விரும்புகின்றேன்.
தரம் ஐந்தில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்றதும் புத்துசாலிகளாக கல்லூரியால் செதுக்கப்பட்ட அரைவாசி மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு பெற்றோரின் பிற்போக்குத்தனத்தால் மாற்றப்படுகின்றனர். சாதரணதரப் பரீட்சையில் சிறந்தபுள்ளிகளைப் பெற்றதும் அடுத்த கால்பங்கு புத்திசாலிகளாக கல்லூரியால் செதுக்கப்பட்ட மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாறுகின்றனர். எஞ்சிய கால்ப்பங்கு புத்திசாலி மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவானது. அவர்களில் ஒருசிலர்
துரதிட்டத்தால் பல்கலைக்கழக வாய்ப்புக்களை இழக்க,ஏனைய ஒருசிலர் பல்கலைக்கழகம் செல்லுகின்றனர்.இங்கு பல்கலைக்கழகம் செல்வோரின் எண்ணிக்கை ஐந்து ,ஆறு என்று வரையறுக்கப்படுகின்றது. ஐயாயிரம் மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் ஐந்நூறு மாணவர் பரீட்சை எழுதி, இருபது மாணவர் பல்கலைக்கழகம் செல்வதும் அறுபது என்ற எண்ணைத் தாண்டாத உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவ்ர்களில் ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதும் ஒன்றுதானே? சிந்தியுங்கள் பெற்றோர் குழாமே!

இங்கு இன்னொரு விடயத்தை ஆழமாகப் பதியவேண்டும்.ஏனைய கல்லூரிகளில் சாதரணதரப் பரீட்சையில் கணிதத்தில் சித்தியடையாக் காரணத்தால் படிக்கும் தகுதியை இழந்த மாணவர்களுக்கு உயர்தர அனுமதி வழங்கி,அவர்களுக்கு கணிதபாடத்தை மேலதிகமாகப் புகட்டி, அடுத்த வருட சாதரணதரப் பரீட்சையில் சித்தியடையச் செய்து கல்லூரியில் தொடர்ந்து படிக்க வழிசமைத்து, கல்வித் சுடரை மாணவர்களின் உள்ளங்களில் இருந்து அணையவிடாது பேணுவதில் பெருமளவு வெற்றிகண்ட கல்லூரி எமது சைவ சாம்ராச்சியம் என்பது தமிழ் சமூகம் நன்றியோடு நினைவுபடுத்த வேண்டியதொன்றாகும்.
இவை கல்லூரியின் கல்வி புகட்டும் உன்னதத்தன்மைக்கு தக்க சான்று என்பதை யாவரும் மனதில் உணர்த்தின் நலமாகும்.


இன்று எமது கல்லூரி சைவ சாம்ராச்சியம் அதிபர்,ஆசிரியர்,பெற்றோர்,மாணவர்,பழைய மாணவர், சைவச் சான்றோர்கள்,தமிழ் சமூக நலன்விரும்பிகளாகியோரின் உழைப்பின் பலனாக மீண்டும் கட்டிட புனர்நிர்மாணம் செய்யப்பட்ட ஆலயம் கும்பாவிடேகம் காண உள்ளமையும் கல்லூரியில் புதிய கட்டிடத்தொகுதி மலர்ந்து வருவதும், ஏலவே ஓர் சாம்ராச்சியத் தோற்றத்தைத் தருகின்ற கட்டிடத் தொகுதி பூச்சு,புத்தாக்கத்திற்கு உள்ளாக இருப்பதும் கண்டு கொழும்புத் தமிழர் சமூகம் மட்டுமல்லாது, தமிழர் சமுதாயமே மகிழ்வடையும் செய்தியாய் உள்ளது.

இன்று கொழும்பு மாநகரை இரண்டு சைவசாம்ராச்சியங்கள் பம்பலப்பிட்டி, இரத்மலானையாகிய பிரதேசங்களில் அமைவிடமாய் கொண்டு ஆளுகின்றன என்றால் மிகையில்லை.


"சிவனெனும் ஓசையல்ல தறையோ உலகில்
திருநின்ற செம்மை உளதே" என்கின்றது அப்பர் திருத்தமிழ்.
அதாவது சிவன் எனும் ஓசையோடு கூடிய தவிர்ந்த ஏனையவற்றுக்கு செம்மை இல்லை.சபதம் பிடிக்கத்தயார் என்கின்றார்.
சைவம் சிவனோடு சம்பந்தம் ஆனது என்கின்றது திருமந்திரம். சிவம் எனும் ஓசையோடுகூடியது என்பது வெள்ளிடைமலை.

சுவாமி விவேகானந்தரினது அமெரிக்கா சொற்பொழிவின் புகழின் நிமித்தம் இந்து எனும் சொல்லை சைவத்தைக் குறிக்க அன்று பிரபல்யமாகப் பயன்படுத்தியிருந்த அன்றைய சைவத் தலைவர்கள் சிவாகமத்துடனேயே சைவக்குழந்தைகளை வளரும்வகையில் சூழலை அமைத்திருந்தனர். ஆனால் இன்று, தமிழர்தேசியத்தை சிதைக்கும் வடக்கின் பண்பாட்டுப் படையெடுப்பு இந்து எனும் சொல்லினூடாக நமது நாட்டில் ஊடுருவியிருப்பதனால்,இன்றைய தமிழ் ஆர்வலர்கள்,தமிழறிஞர்கள்,சைவத் தலைவர்கள் ஒன்றுகூடி ஒருமித்தமாய் கொழும்பு சைவக் கல்லூரி,இரத்மலானை எனப் பெயர்மாற்றம் செய்து சைவ விழிப்புணர்வுக்கு வழிசமைக்க வேண்டும் என்பது எளியேனின் அவா.
சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் ஏலவே யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்திற்கு எடுத்துவிளக்கி சைவ வாலிபர் சங்கமாகப் பெயர்மாற்றம் செய்தார் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் வேறு ஏதோ காரணத்திற்காக மலையகப் பாடசாலை ஒன்று பெயர்மாற்றம் செய்த செய்தி பத்திரிக்கையில் படித்த நினைவுண்டு. எனவே முடியாதது ஒன்றும் இல்லை. தமிழ்ப் பண்பாடு பேணவே கல்லூரி உருவாக்கப்பட்டது என்பதை கருத்திற் கொண்டு, சைவக் கல்லூரியாக திருப்பெயர் சூட்டப்படவேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

"தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில்"
என்கின்றது திருமந்திரம்.

உயர்தரத்தில் யான் கல்விபயின்றபோது தமிழர் பண்பாட்டை சிதைக்கும் வடநாட்டின் மறைமுக யுத்தத்தை பெரிதும் உணராத காலத்திலேயே ஆலயத்தில் வடநாட்டின் சைவத்திற்கு தொடர்பில்லா பூசை முறைகள் சில இடையிடையே அரங்கேறியதை இன்று நினைவில் மீட்டும்போது உணரக் கூடியதாகவுள்ளது. எனவே, குறித்த தவறுகளை இனங்கண்டு தவிர்க்க வேண்டியது அதிபரின் தலையாய கடமையாய் விளங்குகின்றது.

எனக்கு தமிழை உணர்வித்த எல்லாம் வல்ல சிவனருள், கற்பக விநாயகன் மூலமே கல்லூரி சைவ சாம்ராச்சியத்திற்கு அறியப்படுத்தியது என்பதை நன்றியோடு இங்கு பகிரவிளைகின்றேன்.உயர்தரம்வரை எனக்குள்ளே இருந்த தமிழை நானே உணராது இருந்தபோது, சிவஞானத் திருவருள் தமிழை எனக்கு உணர்வித்தது. எனினும் கல்லூரியில் சிவகாமி அரங்கில் ஏறமுடியாது...ஏறும்வழி தெரியாது நின்ற எளியேனுக்கு கற்பக விநாயகன் மூலம் திருவருட் சம்மதம் களம் அமைத்து, எளியேன் தமிழை செப்பனிட்டது.
கல்லூரியில் கற்பக விநாயகர் சன்னதியில் எளியேனை மாணிக்கவாசகரின் குருபூசையை முன்னிட்டு மாணவர் உரைக்கு இந்து மன்ற ஆசிரியர்கள் தூண்டவே, யானும் உரையாற்றினேன். சிவன் அவன் அருளாலே சிவன் தாள் வணங்கி மாணிக்கவாசகப் பெருமானுக்கு எளியேன் கோர்த்த தமிழுரையாலாகிய மாலையே, சிவகாமி அரங்கிற்கு ஏறும் பாதையை ஏற்படுத்தித்தந்து என்னை பேச்சாளனாக மலரும் அடிப்படைத் தகுதிகளை எனக்குள் உருவாக்கியது.
பிள்ளையாரிடம் "சங்கத் தமிழ் மூன்றும் தா"
என ஔவையார் வேண்டியது எமக்காகவும் தானே!


என் உணர்வுகளுடன் கலந்துள்ள, இரத்மலானை பதியில் அரண்மனை கொண்டு விளங்கும் கொழும்பு சைவ சாம்ராச்சியம் இன்று புதுப்பொலிவுடன் புதுவடிவம் பெற்றுவருவது மனமகிழ்வை ஊட்டுகின்றது.

வாழ்க என் இனிய
சைவ சாம்ராச்சியமே!
சிவபூமி தமிழரசு
இராவணன் செந்நிறமலர்களால்
சிவ வழிபாடியற்றிய
திருமண்ணில் எழுந்து
தமிழ்மணம் பரப்பும்
இணையில்லா கல்லூரி
சாம்ராச்சியமே,
நீ வாழ்க!
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாயிரமாண்டு
வாழ்கவே!

இங்கு இணைக்கப்பட்டுள்ள படங்கள் சிலவற்றை நண்பன் கஜந்தனிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். நன்றி நண்பன் கஜந்தனுக்கு.ஏனைய சிலவற்றை சில இணையத்தளங்களில் இருந்து பெற்றுக் கொண்டேன். உரியவர்களுக்கு நன்றிகள்.

எல்லாம் திருவருட் சம்மதம்.

Monday, January 12, 2009

கிழக்கு ஈழவளநாடு

கடற்கன்னிகள் தமிழ்பாடும்
வளமான மட்டக்களப்பு
காதல் ஊட்டும்
இயற்கை வனப்பு;
எங்கள் சிவத்தமிழ்
வேந்தன் தொழுத
திருவருள் வாழும்
திருகோணமலை
திரு ஞானசம்பந்தன்
தமிழால் திருவருள்
பொழியும் திருகோணமலை
என்னுள் சிவஞானமூட்டும்
தென்கயிலாயம்;
அம்பாறை-இது
மட்டுநகர் ஈன்றெடுத்த
இன்னோர் மட்டுநகர்
என் நெஞ்சுக்குள்
சிறகுபூட்டும் கொள்ளை
அழகு நகர்
வாழிய தமிழ்
வாழ்க கிழக்கு
ஈழ நாடே!



facebookஇல் கிழங்கிலங்கையின் புகழ்கூட்டும் குழுமத்தில் அபிமானமுள்ளவனாக இணைந்தபின் (Batticaloa எனும் pageஇல் fanஆக இணைந்து)அங்கு யான் பொறித்த தமிழை இங்கு மறுபடி பொறிக்கின்றேன்.

பொதுவாக மீன்பாடும் தேனாடு என்பர்.ஆங்கிலேயருக்கு முன், கடற்கன்னிகள் தமிழ்பாடுவதாகவே கவிகளில் பயன்படுத்தப்பட்டதாகவும் பின்னர் அது மீன்பாடுகின்றதாக மருவிவிட்டதாகவும் படித்த நினைவு உண்டு. அதன் நம்பகத்தன்மையை அறியேன்.ஆனால் கடற்கன்னிகளாயினும் சரி,மீன்னாயினும் சரி மட்டுநகரின் சிறப்பு சிறப்பாகத் தீட்டப்படுவதே முதன்மையானது.