அமெரிக்கா எழுத்தாளராகவும் அரசியல் மாற்றத்துக்காய் குரல் கொடுத்தவரும் விரிவுரையாளராகவும் யுத்தத்துக்கு எதிராக குரல் கொடுத்தவரும் , பெண்ணுரிமை, தொழிலாளர் உரிமை போன்றவற்றுக்காய் அமெரிக்காவில் உழைத்தவருமாகிய Helen Adams Keller (June 27, 1880 – June 1, 1968) என்னும் பெண்மணி பத்தொன்பது மாதக் குழந்தையாக இருந்தபோதே நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையையும் செவிப்புலத்தையும் இழந்திருந்தார். இவர் தனது விடாமுயற்சினாலேயே இத்தகு உயர்நிலையை அடையக்கூடியதாக இருந்தது.
இவர் "The only real blind person at Christmas-time is he who has not Christmas in his heart.”என்று நத்தார் பண்டிகையைக் குறிப்பிடுகின்றார்.
நத்தார் நன்னாள்பற்றிய வாசகம் அற்புதமானது. மதங்கள் கடந்து அனைவரும் பண்டிகைகள் கொண்டாடும்போது உள்ளத்தில் நினைவில் நிறுத்த வேண்டிய வாசகமாய் இவரது நத்தார் நன்னாள் பற்றிய கருத்து விளக்குகின்றது என்றால் மிகையில்லை.
இயேசுநாதரின் பிறந்தநாளாக கிருஷ்தவர்கள் இந்நாளைக் கருதிக் கொண்டாடுவர். இயேசுநாதர் அன்புகுடி கொண்டிருந்த ஏழைத் தாயாகிய கன்னி மேரியிடம் வந்து பிறந்தாரே தவிர பணக்கார அன்பற்ற மன்னர் அரண்மனையில் வந்து பிறக்கவில்லை. எனவே நத்தார் நன்னாளில் இயேசுநாதரை உள்ளத்தில் காண வேண்டுமானால் உள்ளத்தை அன்பால் அலங்கரித்து வைத்திருக்க வேண்டும்.அப்போதுதான் இயேசுநாதர் அன்புகுடி கொண்டிருக்கும் அவ்வுள்ளத்தில் வந்து ஆசீர்வதிப்பார். அன்பால் அலங்கரிக்காது வெறும் பணத்தால் வாங்கிய பொருட்கள் கொண்டு எவ்வளவு அலங்கரித்தும் பிரயோசனமில்லை. எந்தப் பெரிய தேவாலயத்திற்குச் சென்று இயேசுநாதரை கண்ணால் கண்டும் அன்பு நெஞ்சில் குடிகொண்டிருக்காவிட்டால் பிரயோசனமில்லை.எனவே, உண்மையான குருடர் என்பவர் உள்ளத்தில் அன்பில்லாது நத்தார் நன்னாளைக் (நத்தார் நன்னாளை உள்ளத்தில் உணராது) கொண்டாடுகின்றவரே.இதுதான் பார்வையற்ற காதுகேளாத எழுத்தாளரான அமெரிக்க அறிஞரின் வாசகத்துள் பொதிந்துள்ள பொருள். அருமையான பொருள்!
இதை நமது; இரண்டாயிரத்து நாற்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் யாத்த தமிழ்மறையில் "மலர்மிசை ஏகினான்" என்று அழகுத் தமிழில் குறிப்பிட்டுள்ளார். உள்ளம் அன்புமயமாகும்போது மலர்போல் மென்மையாகவும் நறுமணம் கொண்டதாகவும் அது மலரும். அந்தகைய உள்ளத்தில் இறைவன் எழுந்தருளியிருப்பான். வள்ளுவன் இவ்வண்ணம் பொருள்பட யாத்த மலர்மிசை ஏகினானை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்,
"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது "
என்று சித்திரமாக்கியுள்ளார்.
இறைவனை அன்புகுடி கொண்டிருக்கும் இடத்தில் எழுந்தருளும் இயல்பு கொண்டவன் என்று வள்ளுவர் கண்டிருக்க, திருமூலர் திருமந்திரத்தில் "அன்பே சிவம்" என்று இறைவன்தான் அன்பு என்கிறார்.
ஆகா; அன்புக்கு அருமையான இலக்கணத்தை தென்னாடு ஏனைய நாடுகளுக்கு முன்னர் பதிவு செய்துள்ளது என்றால் மிகையில்லை.தென்னாட்டில் இல்லாதது எந்நாட்டில் உண்டு என்று வியக்கத் தோன்றுகின்றது.
எனவே எந்தப் பண்டிகையாயினும் எச்சமயத்துக்கு உரியதாயினும், உள்ளத்தில் அன்பில்லாதவர்களுக்கு அது பயனற்ற ஒன்றே! Helen Kellerஇன் வாசகமும் பயனற்ற ஒன்றே!!!
0 comments:
Post a Comment