Friday, January 9, 2015

மைத்திரி தமிழுக்கு மதுரமா?

இலங்கை சனாதிபதித் தேர்தல் முடிந்தாயிற்று! மக்களின் பார்வைக்கு மைத்திரிபால சிறிசேனா வென்றாயிற்று! வன்னியில்ச் செய்த அட்டூழியங்களுக்கு தண்டனை கொடுத்தாயிற்று என்ற சந்தோசத்தில் முகநூலில் நம்தமிழர் நாட்டின் தேசியகீதத்தில் பற்றுவந்துவிட்டதென்றும் இலங்கையன் என்று பெருமைவந்துவிட்டதென்றும் புளகாங்கிதம் அடையத் தொடங்கியாயிற்று!  இலங்கைக்கு இனி நல்ல காலம்தான்!!!

ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்ல காலத்தை விரும்பிய நம்மவர்களுக்கு பிறக்க இருக்கின்ற "நல்ல " இலங்கை எங்கனம் அமையும் என்பதை நம்மவர்கள் சிந்திக்கின்றார்களா என்றால் ஐயமே!!!


இந்த சனாதிபதித் தேர்தலில் உண்மையில் வென்றது ரணில்தான்!!! அரசியல் சாணக்கியத்தை அவரிடம்தான் சர்வதேசம் கேட்டுப்படிக்க வேண்டும். தனக்கான வெற்றிவாய்ப்புக் குறைவு என்பதை உய்த்துணர்ந்து சந்திரிக்காவைத் தன்னோடு சேர்த்து மைத்திரியை தெரிவுசெய்து வெற்றிபெறவைத்து, தன்னைப் பிரதமராக்கியுள்ளாரே.....ரணில் உண்மையிலேயே அரசியலில் கிருஷ்ணன் தான்!!! அதுசரி, விடுதலைப் புலிகளை சமாதான காலத்தினூடாக சர்வதேசத்திலும் உட்கட்டமைப்பிலும் வலுவிழக்கச்செய்த அரசியல் வித்தகர்தானே ரணில்!!!  மனிதாபிமானமற்ற யுத்தத்தை மேற்கொண்டு ரணிலால் பல்லுப்பிடுங்கப்பட்ட பாம்பை கொன்று, தமிழ்மக்களின் வெறுப்பை சம்பாதித்த முட்டாள்தானே மகிந்த!!!
சரி, மைத்திரியின் பொற்காலம் நமக்கு எப்படி அமையப்போகின்றது????


1.வடகிழக்கை இணைப்பாரா?
2.மீள்குடியேற்றம் செய்வாரா?
3.பாதுகாப்பு வலயங்களை நீக்குவாரா?
4.அரசியல்த் தீர்வு அளிப்பாரா?


மகிந்த என்கின்ற ஒருவரையே இலங்கையின் சிறுபான்மை மக்களின் நலவிரோதியாகப்  பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் அரங்கேறியது!!! சர்வதேசத்தின் கழுகுப்பார்வையில் இருந்து மீட்டு, சிங்கள பௌத்த தேசியவாதத்தை நகர்த்த மகிந்த இப்போது இடைஞ்சலாகவே சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு விளங்கினார். எனவேதான் அவரை சனாதிபதியில் இருந்து அகற்ற வேண்டுமென்ற உணர்வு  சிங்கள மக்களுக்கு ஊட்டப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த தேசியவாத யானையின் பாகனாக இதுவரை இருந்த மகிந்தவுக்குப் பதிலாக மைத்திரிபால நியமிக்கப்பட்டுள்ளார். இதை முகநூல் அரசியல்ஞானிகள் உணர்ந்தால் நன்றாக இருக்கும்!!!


சுனாமி வந்தபோது இலங்கையில் இன ஐக்கியம் வந்ததுபோல்த்தான் தோன்றியது!!! இப்போதும் அப்படித்தான் தோன்றுகின்றது!!!!  இந்தத் தோற்றம் உண்மையாக இருந்தால் எவ்வளவு நல்லாய் இருக்கும்! மைத்திரியேனும் தமிழுக்கு மதுரமாக அமையுமாயின் முகநூலில் நம்மவர்கள் சந்தோசத்தில் குதுகலிப்பதுபோல் எனக்கும் சந்தோசம்தானே!