Saturday, December 25, 2010

மட்டுமாநகர் தந்த ஈழத்துப் பூராடனார்

கடற்கன்னிகள் தமிழ்பாடும் மட்டுமாநகர் தந்த இலக்கியமணி ஈழத்துப் பூராடனார்கனடாவில் 20ம் திகதி காலமானார்.1965ஆம் ஆண்டு யாரிந்த வேடர் என்ற தலைப்பில் எழுதிய நூலுக்காக பேரினவாதத்தால் நீதிமன்றத்தில் நிற்கவேண்டிய இக்கட்டான சூழலை பெற்றபோதும் தளர்வுறாது தமிழ்ப்பணியில் ஈடுபட்ட பெருமைக்குரியவர்.

குற்றம் ஆனால் குற்றமில்லை என்ற தலைப்பில் தமிழ்முரசு இணையவலைப்பூவில் தமிழறிஞர் அ.முத்துலிங்கம் இந்நிகழ்வை பதிவுசெய்துள்ளார்.
"அவர் அப்படி என்ன புத்தகத்தில் எழுதியிருந்தார். மகாவம்சம் சொன்னதைத்தான் அவரும் சொல்லியிருந்தார். வனத்தில் வாழ்ந்த ஒரு சிங்கத்தின் வழித்தோன்றலாகிய விஜயன் 700 பேருடன் கப்பலில் வந்து இலங்கையில் இறங்கியபோது அங்கே யட்சர்களும் யட்சணிகளும் இருந்தார்கள். விஜயன் குவேனி என்ற யட்சணியை மணமுடித்து அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். சிறிது காலத்தில் அவன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் காட்டுக்கு துரத்திவிட்டு இந்தியாவிலிருந்து வருவித்த பாண்டிய ராசகுமாரியை மணமுடித்தான். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. 38 ஆண்டுகள் ராச்சியத்தை ஆண்டபின் இறந்துபோனான். அவனுடைய சகோதரன் இந்தியாவிலிருந்து வந்து ராச்சியத்தை தன் சொந்தமாக்கி ஆண்டான். அவன் மூலம் சந்ததி உண்டாகியது. இலங்கையின் ஆதிபிதா விஜயன் அல்ல; அவன் வரும்போது ஏற்கனவே அங்கே இருந்த யட்சர்கள்தான் ஆதிகுடிகள். அவர்கள் நாகரிகமானவர்கள். விஜயன் குவேனியை சந்தித்தபோது அவள் தாமரைத் தண்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். அவர்கள்தான் நாட்டுக்கு உண்மையான சொந்தக்காரர்கள்.

ஈழத்துப் பூராடனார் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கு மூன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அவருடைய வழக்கறிஞர் சுந்தரலிங்கம் இடது கையில் மகாவம்சத்தையும், வலது கையில் பூராடனார் எழுதிய 'யாரிந்த வேடர்' புத்தகத்தையும் வைத்துக்கொண்டு வாதாடினார். 'கனம் நீதிபதி அவர்களே, மகாவம்சம் சொன்னதையே என் கட்சிக்காரரும் சொன்னார். அவர் தேசத்துரோகி என்றால் மகாவம்சத்தை எழுதிய வண. மகாநாம மஹாதேரோவும் ஒரு தேசத்துரோகியே.' நீதிபதிகள் ஆசிரியரில் குற்றமில்லை என்று தீர்ப்புக்கூறி அவரை விடுதலை செய்தார்கள். ஆனால் அவர் எழுதிய நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் குற்றம் செய்யவில்லை என்றால் அவர் எழுதிய புத்தகங்களை ஏன் பறித்தார்கள். 'குற்றம், ஆனால் குற்றமில்லை."

முதல் கணினித் தமிழுருவை உருவாக்கி அதில் அச்சடித்து கணினி அச்சுருவில் முதன்முதலில் நூலை வெளியிட்டவர் இவராவர். இலக்கியமணியுடைய இத்தகு அருமையை அ.முத்துலிங்கம் தமிழறிஞரின் எழுத்து பூரிக்கவைக்கின்றது.

"தமிழில் கணினியில் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் 'பெத்தலேகம் கலம்பகம்'. அது வெளிவந்த வருடம் 1986. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை உருவாக்கியது கூட அவர் முயற்சியில்தான் நடந்தது. இதுதவிர முதன்முதல் மின்கணினி அமைப்பில் 'நிழல்' என்ற மாதப் பத்திரிகையை 1987ல் இருந்து தொடர்ந்து வெளியிட்டதும் அவர்தான். இன்று நூற்றுக்கணக்கான புது எழுத்துருக்கள் தமிழில் தோன்றிவிட்டாலும் அவர் தான் உருவாக்கிய எழுத்துருவையே இன்றைக்கும் பயன்படுத்துகிறார். அந்த எழுத்துருவிலேயே அவர் புத்தகங்கள் அச்சாகின்றன. அவருடைய எழுத்துருவுக்கு என்ன பெயர் என்று கேட்டேன். அவர் பெயர் வைக்கவில்லை என்றார். பத்தாவதாகவோ, இருபதாவதாகவோ அவருடைய எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு பெயர் வைத்திருப்பார். அது முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டது அதனால் ஒரு பெயரும் சூட்டவில்லை. உலகத்தில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட கணினி தமிழ் எழுத்துருவை இன்று பயன்படுத்துவது ஒரேயொருவர். அது அவர்தான்"

க.தா.செல்வராசகோபால் என்னும் இயற்பெயருடைய ஐயாவின் பெயர் மங்காப் புகழுடன் தமிழுலகால் என்றுமே போற்றப்படும் என்பது திண்ணம்.

ஐயாவின் இழப்பு தமிழ்த்தாய்க்கு பேரிழப்பு என்பதை அவருடைய பணிகளை அறிவோர் உணர்ந்ததொன்று. ஐயாவுக்கு எளியேனின் மரியாதையை வழங்கும்பொருட்டு இப்பதிவை சமர்ப்பணம் செய்கின்றேன்.

Tuesday, December 21, 2010

தமிழ்ப்பார் இழந்துவிட்ட தமிழ்மறைக் காவலர்

தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் தனது 96 அகவையில் நேற்று (20ம் திகதி) கொழும்பில் காலமானார்.

1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.1965இல் தமிழரசுக் கட்சியில் கிளிநொச்சியில் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

திருக்குறளை தமிழ்மறை என்று தமிழ்முழக்கம் செய்து; தமிழ்மறைக் கழகத்தை அமைத்து; திருக்குறள் மாநாடுகளை நடத்தி தமிழ்ப்பாரை வளப்படுத்திய பேரறிஞர். அரசியலினூடாக தமிழை செம்மைப்படுத்த அயராது உழைத்த அருமையுடையவர். கிளிநொச்சி மண்ணில் பாடசாலைகள் மலர ஏதுவாக இருந்து அங்கு கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்மறம் படைத்தவர்.

திரு.கா.பொ.இரத்தினம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இவர்; தமிழ்மறைக் காவலர் என்று அறிஞர்களால் போற்றப்பட்டார்.மேலும் திருக்குறள் செல்வர்', 'குறள் ஆய்வுச் செம்மல்', 'செந்தமிழ்க் கலைமணி', 'உலகத் தமிழர் செம்மல்'
போன்ற பட்டங்களுக்கு பொருளாக விளங்கினார்.

"உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தோடு பல ஆண்டு காலமாக நெருக்கமான தொடர்புகளைப் பேணியதோடு மட்டுமல்லாது அதன் வளர்ச்சியிலும் வளத்திலும் மிகுந்த அக்கறை கொண்டு இயங்கி வந்த திரு கா. பொ. இரத்தினம் அவர்கள் நமது உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் 08-01-1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப விழாவில் வாழ்த்துரை வழங்கி அதன் தோற்றத்தை அப்படியே ஆசிர்வதித்து வாழ்த்தியவர்.அதோடு மட்டுமல்லாது தொடர்ச்சியாக நமது இயக்கத்தின் வளர்ச்சியிலே கண்ணும் கருத்துமாக இருந்தவர்" என்று உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த இப்பெரியாரின் இழப்பை உலகத் தமிழரின் பேரிழப்பாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பதிவுசெய்துள்ளது அருமை மகன் இழந்த துயரிலுள்ள தமிழ்த்தாய்க்கு ஆறுதலை அளித்திருக்கும் என்பது திண்ணமாகும்.

பேரிழப்பில் வாடிநிற்கும் தமிழுலகின் வேண்டுதல் யாதாயின் ஐயாவின் வழியில் அரசியலில் உள்ளோர் தமிழ்மொழியை ஆய்ந்தறிந்து தமிழ்ப்பணிக்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதேயாகும்.