Saturday, July 11, 2009

மாமல்லபுரம் என்னும் சிற்பக்கலைக் கருவூலம்

மாமல்லபுரம் ஓர் கலைக் சிற்பக் களஞ்சியம் என்று எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்வர். எனது எண்ணங்கள் மாமல்லபுரத்தை நோக்கி எப்போதும் ஓடிய வண்ணமேயிருந்தது.அப்படி என்ன அழகுக் களஞ்சியம் அங்குண்டு என்று ஆராய ஆவலுடன் இருந்தேன். தமிழகம் வந்ததும் என் நண்பன் காந்தனிடம் "போவோமா?" என்று கேட்ட முதல் சுற்றுலா மாமல்லபுரத்துக்குத்தான்.

சிற்பங்களை இரசித்து சுவைக்கும் பழக்கமேதும் எனக்கு இருந்ததில்லை. கோயில்களுக்குச் சென்றால் கடவுளாகக் கண்டு வணங்குவதுடன் சரி. சிற்பங்களின் சிறப்புகளை ஆராய மனம் உந்துவதில்லை. கடவுளாகக் கண்டபின் கல்லாக எண்ணி சிற்பத்தை இரசிக்கும் மன இயல்பு ஏற்படுவது கடினம்தானே!!!!! அதேவேளையில், கடவுளாக மட்டும் காட்சியளிக்கும் வண்ணம் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது சிற்பிகளின் திறன் என்றால் மிகையில்லை.

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்"
என்றொரு பழமொழி உண்டு. கல்லில் செதுக்கப்பட்டுள்ள நாயை நாயாகக் கண்டு கொண்டவருக்கு அது கல் என்பதை உணரமுடியவில்லை. அட கல்லு என்று கருதியவருக்கு அந்தக் கல்லால் உருவாக்கப்பட்டிருந்த நாயை இரசிக்கமுடியவில்லை. இதுதான் இப்பழமொழியின் உண்மையான பொருள். இதைத்தான் தசாவதாரம் படத்தில் "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லுத் தெரியாது" என்று பாட்டாக்கினர்.

அடடா அழகு நாராயணன்....அடடா அழகு அனந்த சயனம்.......அடடா அழகு சிவபெருமான்...........அடடா அழகு மாதொருபாகன்,,,,,,,,,,,,அடடா அழகு முருகன் இப்படி கடவுளை இரசித்தபோது சிற்பத்தை இரசிக்கிறேன் என்ற எண்ணமே பூக்காததால் சிற்பங்களை இரசிக்கும் உணர்வு ஞானம் என்னிடம் இல்லை என்று கருதினேன். ஆனால் மாமல்லபுரம் எனக்கு உளவியல்ரீதியில் ஒரு மாற்றத்தை ஊட்டியேவிட்டது. சிற்பங்களை காதலிக்கும் உணர்வையூட்டிவிட்டது. சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளை வியக்க வைத்துவிட்டது.என்னையோர் சிற்பக்கலை இரசிகனாக்கிவிட்டது.

கோயிலாகக் காட்சியளிக்காத காரணமே என்னை மாதிரி சிற்பங்கலை ஞானசூனியங்களுக்கு இந்த மாமல்லபுரம் ஞானத்தை பருக்கிவிடுகின்றது. அந்தவகையில் சிதைந்துபோன இக்கோயில்கள் நன்மையாக விளைந்துள்ளது எனலாம்.

மாமல்லபுரக் கடலுக்கு அடியிலும் ஏராளமான சிற்பங்கள் இருப்பதாகவும் அங்கு ஆராய்வுகள் நடப்பதாகவும் அறிந்தபோது எமது ஈழவள நாட்டுத் திருக்கோணேசுவரத் தலம் நினைவுக்கு வந்தது.

தஞ்சையில் வசிக்கிற எனது பல்கலைக்கழகத்தில் படிக்கிற மூத்த மாணவரான அருண் எனும் அண்ணா என்னை அங்கு வரும்படி அன்புக் கட்டளையிட்டுள்ளார். தஞ்சைப் பெரிய கோயிலைத் தரிசனஞ் செய்யும் பேறை சிவனருள் கூட்டுமானால், நிச்சயமாக அங்குள்ள சிற்பங்கள் என்னை ஆட்கொள்ளும் என்றே எண்ணுகிறேன். அப்படிச் செல்லும் பட்சத்தில் நிச்சயமாக அவற்றைப்பற்றியும் பதிவிடுகிறேன். தஞ்சை என்பது தமிழர் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலத்தின் அடையாளம். நினைவுச் சின்னம்.

மேலைத்தேயத்தவர் ஈழவள நாட்டிற்கு வந்திராவிட்டால், திருவரங்கம்,தஞ்சை போல் பொன்னாலையும் திருக்கோணேசுவரமும்,திருக்கேதீசுவரமும் மற்றைய ஏனைய திருத்தலங்களும் விளங்கியிருக்கும் என நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது.

கஜீராககோ சிற்பங்கள் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். பிரிதொரு காலம் செல்லலாம் என நினைக்கிறேன்.

Friday, July 3, 2009

இந்தி தெரியாதுங்கோ

தமிழகப் பயணம்
பெலரசில் இருந்து மதியம் 2.20 மணியளவில் புறப்பட்ட எதியாட் விமானம் மூலம் அபுதாபியை சென்றடைந்து அங்கிருந்து பின்னர் இன்னோர் எதியாட் விமானம் மூலம் டெல்லியை அதிகாலை 4 மணியளவில் அடைந்தேன். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வர உள்ளூர் விமான நிலையத்துக்கு வாடகை மகிழூந்து (taxi car) மூலம் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு காலை 10.00 மணியளவில் வந்து சேர்ந்தேன் உருப்படியாக!!!!!!

புதுவித அனுபவம் டெல்லியில்
டெல்லி இந்திய நாட்டின் தலைநகரம் என்ற கோதாவை நினைவில் கொண்டிருந்ததால் சரளமாக ஆங்கிலத்தில் எல்லோரும் கதைப்பர் என தவறாகக் கணித்துவிட்டேன். குடிவரவு அதிகாரிகளுக்குக்கூட அதிகம் ஆங்கிலம் தெரியாது அல்லது மெட்ராசி என நினைத்து "இவங்களோடு என்ன ஆங்கிலம் கேட்குது.....இந்தியை எதிர்த்து குரல்கொடுத்த இவங்களுக்கு இந்தியின் அருமையை புகட்ட வேண்டும்" என நினைத்தார்களோ தெரியாது. ஆனாலும் இலங்கைக் கடவுச்சீட்டைப் பார்த்த பின்னர்கூட இவர்களில் உரையாடல்களில் மாற்றமில்லை.

அங்கு நின்ற பணியாட்கள் தொட்டு பயணிகள் வரை யாரைக் கேட்டாலும் விடை இந்தியில்தான் வரும்.பெலரசு நாட்டின் குடியகல்வு அதிகாரிகள் சரளமாக ஆங்கிலம் கதைக்க எமக்கு ஆச்சரியம். "அடடா........எங்களுக்காக ஆங்கிலம் தெரிஞ்சவங்களப் போட்டுட்டாங்கப்பா இரசியர்களுக்குள்,,,,,, இப்படி ஒரு மாற்றமா?" என்று உவகையடைந்தோம்.
ஆனால் வல்லரசு என்று கதையளக்கும் இந்தியக் குடியரசு நாட்டின் அதிகாரிகள் இவ்வளவு இந்தி விசுவாசிகளாக இருப்பர் என்பதை கனவிலும் கருதவில்லை.

உலகம் முழுக்க இருக்கும் தமிழுக்கு ஒரு அங்குலம்கூட உரிமையில்லை. இவங்களுக்கு திமிர் இருக்கும்தானே மெட்ராசி இந்தி கதைக்காட்டி! சக பயணி என்னை மெட்ராசி என்று கருதி "ஏன் இந்தி தெரியாது?" என்று கேட்டார். இலங்கையன் என்றேன். ஏன் இலங்கையில் இந்தி இல்லையா என்று கேட்டார்.சிரித்துவிட்டு இல்லை என்றேன்.

இந்தி தெரியாவிட்டால் இப்படித்தான் மரியாதை கொடுப்பார்கள் என்று உணர்ந்தபோது "தமிழே தெரியாத தமிழரை மதிக்கும் எமது அறியாமையையும் தமிழகத்தில் தமிழைக் கட்டாயபாடமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் சென்ற தமிழக கல்வி நிறுவன நிலையங்களின் இழிநிலையையும் எண்ணியபோது "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதியிடம் சொன்னவனின் அருமை புரிந்தது.
கடவுளே..............,தமிழனுக்கு தன்மானத்தைக் கொடு!

அது சரி இந்தியா எப்படியுள்ளது?

இந்தியா......................என் சொந்தங்கள் போட்ட சாபத்தில் அழகிழந்து நிற்கிறாள்