Saturday, February 14, 2009

தோல்விகளில் துவழுகிறீர்களா தோழர்களே.........நீங்கள் வெற்றியின் சீமான்கள்!

தோல்வி என்பது வாழ்க்கையில் வந்துபோகும் சாதரணமான ஒன்றே! தோல்வியில் துவழுதல் வெற்றியை நிராகரிக்கும் செயல் என்றே கூறவேண்டும்.தோல்வியை வெற்றிக்காய் வரையப்படுகின்ற அழைப்பிதழ் எனலாம். எடுத்த எடுப்பிலேயே வெற்றி என்பதை எதிர்பார்ப்பது ஏமாற்றத்திற்கே சில சமயங்களில் வழிவகுக்கும். உழைக்காமல் அதிஷ்டவசத்தால் மலருகின்ற வெற்றிகள் நிலையற்றவை. கைவிரலைவிட அளவில் பெரிய மோதிரங்களை நூல்சுற்றி சிலர் அணிவதை கண்டிருப்பீர்கள். அதுபோன்றதுவே இவ்வகையான வெற்றிகள். விரைவில் தொலைந்துவிடக்கூடியவை.
வெற்றியை எதிர்பார்க்காமல் செயலில் விளையும்போது, செயல்மீது பற்றுவராமல் போய்விடும் என சிலருக்கு சந்தேகம் மலர்வது நியாயமானதே!"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என கீதையில் கண்ணன் சொல்வது இங்கு பொருந்துகிறது பாருங்கள்!பற்றோடு உழைக்கவேண்டும். வெற்றியா, தோல்வியா என பலனை எதிர்பாராது இருக்கவேண்டும். வெற்றியாயின் உழைப்புக்கேற்ற ஊதியம் என மகிழும் அதேசமயம் தோல்வியாயின் அதை கடவுள் தந்த வரம் என நினைக்க வேண்டும்.தோல்வியை வரமா கருதலாமா என கேள்விக்கணைகளை வில்லின் நாணேற்றி அனுப்ப தயாராவது புரிகிறது!ஏலவே சொன்னதுபோல்,வெற்றிகளில் மிகப்பெரிய வெற்றி தோல்விதான். ஆதலால்; உழைப்பை விஞ்சிய ஊதியத்தை வரம் என்றுதானே சொல்லவேண்டும்.

தோல்விகளால் வரையப்படுகிற வெற்றியானது காலத்தால் அழியாது வாழும் இயல்புடையது.வாழ்க்கையில் சாதரண எழைகளாய் பிறந்து உலகாளும் செல்வந்தர்களாய் மலர்ந்த ஏராளமானவர்கள் இந்தரகத்தை சார்ந்தோர்தான். தோமஸ் அல்வா எடிசன் ஏராளமான மின்குமிழ் மாதிரிகளைத் தயார் செய்து எல்லா பரிசோதனைகளிலும் தோல்வியையே கண்டார். ஆயினும் தனது முயற்சியைக் கைவிடாது பற்றோடு தனது பரிசோதனைகளைத் தொடர்ந்தார். இன்று நாம் எல்லோரும் மின்குமிழின் வருகையால் இரவையும் பகலாக்கி பயனடைகிறோம். அவரது தளராத முயற்சிக்கு இறைவனால் வழங்கப்பட்ட மகுடமாய் மின்குமிழ் பிறந்தது.
சிலர் "இது அவரது முயற்சி, இதில் இறைவனின் பங்கு என்ன உண்டு" என நாத்தீகம் கதைப்பர். நான் சிவனருளாலே சிவன் தாள் வணங்கி என சிந்தை மகிழும் ரகம். எனவே எங்கும் சிவன் செயல் என இறைவனைப் புகுத்திவிடுவேன். இது என் பழக்கம். நாத்தீகத்திற்கு பதிலுரைப்பது என் எழுத்துக்குரிய தலைப்பைத் தாண்டியதாய் அமைந்துவிடும்! ஆதலாம் சூ!

சிலர் தோல்வி வருமோ என அஞ்சியே பல நல்ல முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சமணரோடு வாதம் செய்ய முயன்றவேளை, அப்பர் அறிவுரைகள் பலகூறி சமணர் சூழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, தடுக்க முனைகிறார். நாளும் கோளும் சிவனடியாருக்கு தீங்கில்லை என, துணிவுடன் அஞ்சாது அனல் வாதம்,புனல் வாதம் என எல்லாவற்றிலும் சமணரை வென்று தமிழர்நெறியை தமிழில் மீண்டும் தழைக்க வைத்தார்..வ.வே.சு ஐயர் "ஓலைகளை எங்குபோய்த் தேடுவது" என நினைத்திருந்தாராயின் தமிழ் இன்று செம்மொழியாய் அங்கீகாரம் பெறுவது இயலாத கதையாய் முடிந்திருக்கும்.அஞ்சி ஓடி ஒழிந்தவர்கள் எல்லாம் இன்று ஈழத்தமிழரிடம் தலைவர் எனும் பட்டத்தை இழந்து அரசியல் வாழ்க்கையையே இருட்டறையாய் மாற்றினர் என்பது காலம் காட்டும் செய்தி!

யுத்தத்தில் புறமுதுகு காட்டாது மரிக்கவேண்டும் என்பதுவே தமிழர் பண்பாடாக இருக்க, அச்சம் தமிழர் சமூகத்தில் மலரக்கூடாத ஒன்று!

சிலரிடம் திறமைகள் பல ஒழிந்திருக்கும். இனங்காணத் தெரியாதவர்களாய் இருப்பர். இந்த ரகத்தில் ஒருகாலத்தில் அகப்பட்டு இருந்தவன் நான் என்பதால் இதுபற்றி அலசும் உரித்தும் எனக்கே அதிகமாய் விட்டது. எனக்குள் இருந்த திறமைகளை எனக்கு அறிவித்தது என் அப்பனாகிய சிவபெருமான் ஒருவனே!

உங்களுக்குள் மறைந்துள்ள திறமைகள் பல வழிகளில் உங்களாலேயே உணரக்கூடியதாய் இருக்கும். சிலர் உணராது வாய்ப்பை இழந்துவிடுவர்.உதாரணமாய் காதலையே எடுத்துக் கொள்ளலாம். தோல்வியில் முடியும் காதல்கள் நல்ல கவிஞர்களை உருவாக்குகிறது. காதல் மட்டுமல்ல.......அடக்கப்படும்போதும் கவிஞர்களாய் பலர் பூத்து மக்களை

விழிப்புக்குள்ளாக்குவர்.கணிதத்தில் நூறுபுள்ளியா? கணித மேதையாகும் திறன் உங்களிடம் உண்டு!விஞ்ஞானத்தில் நூறுபுள்ளியா? விஞ்ஞானி,பௌதீகவியலாளர்,மருத்துவர்,விஞ்ஞான ஆசிரியர் என பலதுறைகளில் நுழையக்கூடிய திறமை உங்களிடம் உண்டு!நூறு புள்ளி என நான் இங்கு சொல்வது சும்மா ஒரு கதைக்குத்தான்!அறுபது புள்ளி எடுக்கும் மாணவன் எண்பது புள்ளியாய் அதை உயர்த்துவது இயலாத ஒன்றல்ல. எண்பது புள்ளி என்பது புலமையை கிட்டத்தட்ட தொட்டுக்காட்டும் புள்ளிதான்!தமிழில் கவி எழுத முடிகிறதா? கொஞ்ச பழந்தமிழ்ச் சொற்களை நாப்பழக்கத்தில் வைத்துள்ளீர்களா? வைரமுத்து உங்கள் கைகளுக்குள் வந்துவிடுவார். முயலுங்கள்!வைரமுத்து கவிப்பேரரசு என்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை! நான் கவிகளின் ரசிகன். அந்த உரிமையில் சொல்லும் கருத்துத்தான் இது. ஆனால் இது என்னுடைய கருத்து!நல்ல கவிஞர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு!அதுபோல்த்தான் என்பார்வையில் ஏனைய திரைகவிஞர்கள்!

இதேபோல்த்தான் திரை நடிகர்களுக்கு இளைய தளபதி, புரட்சி கலைஞர் என பட்டங்கள் சூட்டுவது தமிழரை மடையராக்கும் செயல்!விஜயை இளைய தளபதி என்றால்....... இவர் நாட்டின் காவலரா? தமிழருக்கு தளபதியாய் வரவுள்ளவரா? இளைய தளபதி இவர் என்றால் தளபதி யார்? ரஜினியா? அப்படியானால் வன்னியில் சாகும் தோழர்களை இழிவுபடுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது.உங்களுக்கு எப்படி? அரிவாளை கண்டால் கட்டிலுக்கு கீழே ஒழிந்துவிடும் இவர்களை தளபதி என்றும் புரட்சி என்றும் பட்டம் சூட்டி தமிழர் தமிழருக்கு வீசும் சேறு இது என்பேன்! இது என் சுயகருத்து!

புலமைகளில் புலமை தமிழ்ப் புலமை என்பது யான் உணர்ந்தது. தமிழ் படிக்கப் படிக்க இனிக்கும் மொழி. அந்த மொழியின் தோற்றம், அந்த மொழியின் வரலாறு என ஆய்ந்து நிறுவுகின்ற தமிழ்ப் பேராசிரியர்களை கைகூப்பி வணங்கி, அவர்களை எல்லாம் ஆசானாக மனதிலே இருத்தி வாழுகின்ற பல்லாயிரம் தமிழ் தாயின் அடியவர்களில் எளியேன் ஒருவன் என இருமாப்புடன் கூறுவதுடன்" தமிழ் படியுங்கள் இளைஞர்களே" என வேண்டுகிறேன்.டோச்,ஆங்கிலம்,பிரான்சு என வெவ்வேறு மொழிகளில் தேர்ச்சியுள்ளவர்கள், தமிழிலும் புலமை அடையும்போது தமிழ் பார் முழுவதும் பரவும் களம் உருவாகும்.

அன்று அந்நியனிடன் பீரங்கி இருந்தது. வந்தான்; வென்றான்; கோயில்களை நிர்மூலமாக்கினான். எமது பண்பாட்டை நாம் பேணத் தடைவேறு விதித்தான். இன்று நாம் உலகம் பூராகவும் உள்ளோம். எமது பண்பாடு அவர்கள் மொழியில் மலரும்போது அவர்கள் எமது பண்பாட்டை நேசிக்கும் சூழல் உருவாகும் தோழர்களே!அவர்கள் திணித்தார்கள். நாம் வாரி வழங்குவோம்!

இளைஞர்களே! தோழர்களே!தோல்வி என்பது வெற்றியின் வாசல் ஆதலால் துணிவுடன் பற்றுடன் செயலில் ஈடுபடுவோம். செயலில்த்தான் பற்று வேண்டும். செயலின் விளைவில் அல்ல. சகோதர சகோதரிகளே,
வெற்றி எமது வீட்டுக் கதவுகளைத் தானே வந்து தட்டும்!