Monday, August 24, 2009

சேரனுக்கு தமிழ்த் திமிருங்கோ!!!!!!

வார இதழ்களில் வெளியான திரைவிமர்சனங்களில் "நீளும் கடிதங்கள் தூக்க மாத்திரைகள்" என பொருள்பட ஒருசிலவற்றிலும் தரமான இயக்குனர் சேரன் என சேரனின் புகழை ஏனைய சிலவற்றிலுமாக பொக்கிசம் தீட்டப்பட்டிருக்க;
திரையில் பார்க்க இரவு நேரக் காட்சிக்கு சென்றிருந்தேன். கந்தசாமி பார்க்கும் ஆவலைவிட பொக்கிசம் பார்க்கும் ஆவலே மேலிட்டிருந்தது. காரணம் சேரனின் திறமைகள்!


உண்மையிலேயே ஒரு இலக்கியம்-பொக்கிசம். படம் முடிந்தபோது திரையரங்கை சுற்றிப் பார்த்தேன்.படம் பார்க்க வந்திருந்த கூட்டம் ஐம்பதைத் தாண்டாது. நித்திரையில் ஆழ்ந்த மூஞ்சிகள் ஒருசில இருக்கத்தான் செய்தன.

தமிழ்த் தேன் வடிகின்ற கடிதங்களை நாயகனும் நாயகியும் பரிமாற்றுவதை திரையில் கொண்டுவரும்போது "இனிய தமிழ்" தூக்கத்தை ஊட்டினால், கம்பனும் இளங்கோவும் பாடிய தமிழை திரையாக்கினால் ஒருநாள்கூட படம் ஓடாது என்பது உறுதி!

நல்ல முயற்சி;ஆனால் இரசிகர்களின் இரசனை இன்று இலக்கியத்தில் இல்லை. எக்ஸ் மச்சி வை மச்சி என்றும் எக்ஸ் கியூஸ் மி மிஸ்டர் கந்தசாமி ஒரு கோபி குடிப்போம் கம் வித் மி கோட்ட கூளா நீயே தொட்டுப்பாரு" பாடினால்தான் படம் ஓடும் என்கிற காலத்தில் இலக்கியங்களை அரங்கேற்றுவேன் என துடிக்கும் சேரன் தமிழ்த் திமிர் கொண்டவர்தானே? பின்ன என்னங்க தமிழ் திரையுலகை இலக்கியத்தால் நிரப்ப முயல்கிறார் என்றால் "தமிழ்த் திமிர்" தானே சேரனுக்கு?

Wednesday, August 19, 2009

அருள்மழை பொழியும் நல்லூரான் தேர்

முருகன் என்றால் அழகன் ஆகும். அழகன் என்பதற்கு பொருள் நல்லூர் முருகன்.யாழை மட்டுமல்ல ஈழ வளநாட்டை அருள்மழையால் ஈர்த்து நல்லருள் பாலிக்கின்ற முருகப்பெருமானின் தேர்த்திருவிழா இன்று இனிதே நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ அரோகரா ஒலிகள் விண்ணை முட்ட தந்தைக்கே பிரணவப் பொருளை போதித்த முருகப் பெருமான் தேரேறி நல்லூர் ஆலய வீதியில் வலம்வந்த காட்சியை நேரில் காணும் பேறு கிட்டாதவர்களுக்காய் (என்னையும் சேர்த்து)
நிழற்படங்களை பதிவேற்றுகிறேன். இப்படங்கள் இணையங்களில் இருந்து பெற்றவையாகும்.










Friday, August 14, 2009

தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும்

எங்கள் இன்பத்தை சிதைத்த இந்தியத் தாயே, உனது இன்பநாள் இன்று! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும் ஆனால் நீதி?

வள்ளுவன் சிலைகேட்டானா? மானம் கேட்டானா?

சுமுக நிலை
வந்ததென்ற பாவியே
வள்ளுவன் சிலைகேட்டானா?
மானம் கேட்டானா?

பண்டப் பரிமாற்றமாய்
சிலைதிறப்பு
மானங்கெட்டவனே ஒக்கேனக்கல்
எந்தப் பரிமாற்றமாகும்?
வாடும் காவேரி
வருத்தவில்லையா?

குளிரூட்டிய தனமிகு
"தான" வீட்டில்
சக்கரவண்டியில் சொகுசு
மெத்தையில் நேரத்துக்கு
சாப்பாடென வாழும்
உனக்கு
எங்கள் நாட்டில்
சுமுகநிலை எங்கனம்
வந்ததறிந்தாய்?

கோமாளி கூட்டமென்று
கூத்தாடி சொன்னபோது
மானங்கெட்டு அமைதியாய்
இருந்த இழியவன்
நீ!

சீ உன்னை
நம்பி அலையும்
தமிழ் தலைகள்
வெட்கமில்லா அடிமை
சாசனங்கள்!

Thursday, August 13, 2009

அரங்கன் சன்னிதியில் தமிழுக்காய் கண்ணீர்மல்கி

அரங்கனின் ஆலயத்தில்
இத்திங்கள் 12ம் நாள்
நான் கேட்ட
கேள்விகள் வரங்கள்
எக்காலம் ஆழ்வார்
நாவில் தவண்ட
தமிழுக்கு விடை
சொல்லும்?




"குட திசை முடியை வைத்துக்
குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித்
தென் திசை இலங்கை நோக்கி"
அரங்கன் நீர்
இருந்து என்ன
பயன்?

ஐயனே,
காத்தற் கடவுளே,
விபூடணிடம் நீர்
கொடுத்த வாக்கைத்
தொலைத்ததேன்?

மாண்டு போன
இனம் கதறியபோது
மந்திர ஒலியில்
மயங்கி இருந்தமை
நீதியா கண்ணா?

இலங்கையைக் காப்பேன்
என்றது தமிழுக்கு
கொடுத்த வாக்கில்லையா?



திருமாலே,
அரங்கா,
நாராயணா,
எழுப்பிய கோபுரம்
கண்களை மறைத்ததோ?

பாண்டவரைக் காத்த
அழகு நாராயணா,

வாடுகிற தமிழுக்கு
அநாதையாய் நிற்கும்
தமிழுக்கு கண்ணனாய்
வருவாய்!
தேரோட்டியாய் வருவாய்!

அரங்கா,
பல்லாண்டு பல்லாண்டு
பாடுகிறேன்
தேனிலும் இனிய
தமிழைக் காப்பாய்!


காண்டம் புதிரும் புனிதமும் கொண்டதா?

காண்டம்! முழுக் காண்டமும் கேட்டேன்.சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவனானாலும் காண்டம் சொன்ன விதம், சொல்ல முன்னர் தொடுத்த கேள்விகள் நம்பிக்கையை பெரிதும் ஏற்படுத்தவில்லை.அவநம்பிக்கையையும் சேர்த்தே ஏற்படுத்திற்று. ஆனாலும்?

நம்பிக்கைக்கு அவ
நம்பிக்கை ஒன்றுக்கு
ஒன்றென்ற விகிதம்!

நம்பிக்கையா அவ
நம்பிக்கையா
மேலோங்கும் என்பது
காலம் உணர்த்தும்!

சென்ற பிறவி
கூடல் மாநகர்
மதுரை திருமண்ணில்
பிராமணன்!

செய்த பாவம்
பிராமண தொண்டை
மறந்தமை!

பெற்ற பேறு
ஈற்றில் பெற்ற
புத்தி!
ஆதலால் மறுபிறவி
மீண்டும் அரிய
மனிதப் பேறு!

தூய்மையற்ற பிராமணரே,

உருத்திராக்கத்துடன் தங்கம்
ஜொலிக்க ஆபரணம்
பூண்டு
முப்புரிநூலில் சாவிகளையும்
சாமான்களையும் முடிஞ்சு
சனத் ஜெயசூரிய
வந்ததும் செய்யும்
பூசையை கைவிட்டு
விழுந்தோடிச் சென்று
இராசி நட்சத்திரம்
கேட்கும் பாழப்போன
பழக்கம்

பணத்தைக் கொட்ட
மாலைகளை சூட்டும்
புழக்கம்

சிவாச்சாரியார் பட்டம்
பெற்று சிவாகமம்
மீறும் சொகுசு

ஏனோ தானோ
என்னும் மந்திர
உச்சாடனம்
கருவறைக்குள் நின்று
"ஏன்டா வாடா
எடுடா" என்று கத்தும்
கதறல்கள்

பணம் இருந்தால்
சிறப்புத் தரிசனம்

சாதி
தீண்டாமை
இத்தனையும் வளர்க்கும்
ஆச்சாரியம்

ஐயகோ,
நீவிர் எடுக்கும்
அடுத்தபிறவி கொடூரமே!
மோட்சம் என்பது
இல்லையே!

Saturday, August 1, 2009

வீணை வாழ்க

வீணை ஆசிரியராகவும் கனடாவில் வீணாலய நிறுவுனராகவும் விளங்கி இசைப் பணியாற்றும் திருமதி.ஜெயந்தி இரத்தினகுமார் அவர்கட்கு
ஒரு இசை இரசிகனாக இக்கவியை சமர்ப்பணம் செய்கிறேன்.

வீணாலயத்தின் இணைய முகவரிக்கு சென்று வீணாலயத்தின் பணிகளை அறிக :- வீணாலயம் (வீணாலயம் என்பதன்மேல் சொடுக்குக)


கலைவாணி அருள்
வாழும் வீணை
வாழ்க

தமிழ்நாதம் கனடாவில்
என்றும் உயிர்வாழ
இசைப் பணியாற்றும்
வீணை வாழ்க

சிவனருள் கூடி
சிவநாதம் ஓதும்
வீணை வாழ்க

தங்கள் கைகளில்
தவழும் தமிழ்மற
இராவணன் சிவனார்க்கு
அர்பணித்த வீணை
வாழ்க

தமிழிசை வாழ்க
வீணாலயம் வாழ்க
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாயிரம்
ஆண்டு வீணை
வாழ்க
வீணையில் தங்கள்
புகழ் வாழ்க
இசைப் பணி
தமிழ்ப் பணி
சிவப் பணி
வீணையின் நரம்புகளாக
வாழ்க

இசையுலகம் வீணாலயத்தில்
சரணாகி வாழ்க