Saturday, December 25, 2010

மட்டுமாநகர் தந்த ஈழத்துப் பூராடனார்

கடற்கன்னிகள் தமிழ்பாடும் மட்டுமாநகர் தந்த இலக்கியமணி ஈழத்துப் பூராடனார்கனடாவில் 20ம் திகதி காலமானார்.1965ஆம் ஆண்டு யாரிந்த வேடர் என்ற தலைப்பில் எழுதிய நூலுக்காக பேரினவாதத்தால் நீதிமன்றத்தில் நிற்கவேண்டிய இக்கட்டான சூழலை பெற்றபோதும் தளர்வுறாது தமிழ்ப்பணியில் ஈடுபட்ட பெருமைக்குரியவர்.

குற்றம் ஆனால் குற்றமில்லை என்ற தலைப்பில் தமிழ்முரசு இணையவலைப்பூவில் தமிழறிஞர் அ.முத்துலிங்கம் இந்நிகழ்வை பதிவுசெய்துள்ளார்.
"அவர் அப்படி என்ன புத்தகத்தில் எழுதியிருந்தார். மகாவம்சம் சொன்னதைத்தான் அவரும் சொல்லியிருந்தார். வனத்தில் வாழ்ந்த ஒரு சிங்கத்தின் வழித்தோன்றலாகிய விஜயன் 700 பேருடன் கப்பலில் வந்து இலங்கையில் இறங்கியபோது அங்கே யட்சர்களும் யட்சணிகளும் இருந்தார்கள். விஜயன் குவேனி என்ற யட்சணியை மணமுடித்து அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். சிறிது காலத்தில் அவன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் காட்டுக்கு துரத்திவிட்டு இந்தியாவிலிருந்து வருவித்த பாண்டிய ராசகுமாரியை மணமுடித்தான். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. 38 ஆண்டுகள் ராச்சியத்தை ஆண்டபின் இறந்துபோனான். அவனுடைய சகோதரன் இந்தியாவிலிருந்து வந்து ராச்சியத்தை தன் சொந்தமாக்கி ஆண்டான். அவன் மூலம் சந்ததி உண்டாகியது. இலங்கையின் ஆதிபிதா விஜயன் அல்ல; அவன் வரும்போது ஏற்கனவே அங்கே இருந்த யட்சர்கள்தான் ஆதிகுடிகள். அவர்கள் நாகரிகமானவர்கள். விஜயன் குவேனியை சந்தித்தபோது அவள் தாமரைத் தண்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். அவர்கள்தான் நாட்டுக்கு உண்மையான சொந்தக்காரர்கள்.

ஈழத்துப் பூராடனார் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கு மூன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அவருடைய வழக்கறிஞர் சுந்தரலிங்கம் இடது கையில் மகாவம்சத்தையும், வலது கையில் பூராடனார் எழுதிய 'யாரிந்த வேடர்' புத்தகத்தையும் வைத்துக்கொண்டு வாதாடினார். 'கனம் நீதிபதி அவர்களே, மகாவம்சம் சொன்னதையே என் கட்சிக்காரரும் சொன்னார். அவர் தேசத்துரோகி என்றால் மகாவம்சத்தை எழுதிய வண. மகாநாம மஹாதேரோவும் ஒரு தேசத்துரோகியே.' நீதிபதிகள் ஆசிரியரில் குற்றமில்லை என்று தீர்ப்புக்கூறி அவரை விடுதலை செய்தார்கள். ஆனால் அவர் எழுதிய நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் குற்றம் செய்யவில்லை என்றால் அவர் எழுதிய புத்தகங்களை ஏன் பறித்தார்கள். 'குற்றம், ஆனால் குற்றமில்லை."

முதல் கணினித் தமிழுருவை உருவாக்கி அதில் அச்சடித்து கணினி அச்சுருவில் முதன்முதலில் நூலை வெளியிட்டவர் இவராவர். இலக்கியமணியுடைய இத்தகு அருமையை அ.முத்துலிங்கம் தமிழறிஞரின் எழுத்து பூரிக்கவைக்கின்றது.

"தமிழில் கணினியில் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் 'பெத்தலேகம் கலம்பகம்'. அது வெளிவந்த வருடம் 1986. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை உருவாக்கியது கூட அவர் முயற்சியில்தான் நடந்தது. இதுதவிர முதன்முதல் மின்கணினி அமைப்பில் 'நிழல்' என்ற மாதப் பத்திரிகையை 1987ல் இருந்து தொடர்ந்து வெளியிட்டதும் அவர்தான். இன்று நூற்றுக்கணக்கான புது எழுத்துருக்கள் தமிழில் தோன்றிவிட்டாலும் அவர் தான் உருவாக்கிய எழுத்துருவையே இன்றைக்கும் பயன்படுத்துகிறார். அந்த எழுத்துருவிலேயே அவர் புத்தகங்கள் அச்சாகின்றன. அவருடைய எழுத்துருவுக்கு என்ன பெயர் என்று கேட்டேன். அவர் பெயர் வைக்கவில்லை என்றார். பத்தாவதாகவோ, இருபதாவதாகவோ அவருடைய எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு பெயர் வைத்திருப்பார். அது முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டது அதனால் ஒரு பெயரும் சூட்டவில்லை. உலகத்தில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட கணினி தமிழ் எழுத்துருவை இன்று பயன்படுத்துவது ஒரேயொருவர். அது அவர்தான்"

க.தா.செல்வராசகோபால் என்னும் இயற்பெயருடைய ஐயாவின் பெயர் மங்காப் புகழுடன் தமிழுலகால் என்றுமே போற்றப்படும் என்பது திண்ணம்.

ஐயாவின் இழப்பு தமிழ்த்தாய்க்கு பேரிழப்பு என்பதை அவருடைய பணிகளை அறிவோர் உணர்ந்ததொன்று. ஐயாவுக்கு எளியேனின் மரியாதையை வழங்கும்பொருட்டு இப்பதிவை சமர்ப்பணம் செய்கின்றேன்.

Tuesday, December 21, 2010

தமிழ்ப்பார் இழந்துவிட்ட தமிழ்மறைக் காவலர்

தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் தனது 96 அகவையில் நேற்று (20ம் திகதி) கொழும்பில் காலமானார்.

1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.1965இல் தமிழரசுக் கட்சியில் கிளிநொச்சியில் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

திருக்குறளை தமிழ்மறை என்று தமிழ்முழக்கம் செய்து; தமிழ்மறைக் கழகத்தை அமைத்து; திருக்குறள் மாநாடுகளை நடத்தி தமிழ்ப்பாரை வளப்படுத்திய பேரறிஞர். அரசியலினூடாக தமிழை செம்மைப்படுத்த அயராது உழைத்த அருமையுடையவர். கிளிநொச்சி மண்ணில் பாடசாலைகள் மலர ஏதுவாக இருந்து அங்கு கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்மறம் படைத்தவர்.

திரு.கா.பொ.இரத்தினம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இவர்; தமிழ்மறைக் காவலர் என்று அறிஞர்களால் போற்றப்பட்டார்.மேலும் திருக்குறள் செல்வர்', 'குறள் ஆய்வுச் செம்மல்', 'செந்தமிழ்க் கலைமணி', 'உலகத் தமிழர் செம்மல்'
போன்ற பட்டங்களுக்கு பொருளாக விளங்கினார்.

"உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தோடு பல ஆண்டு காலமாக நெருக்கமான தொடர்புகளைப் பேணியதோடு மட்டுமல்லாது அதன் வளர்ச்சியிலும் வளத்திலும் மிகுந்த அக்கறை கொண்டு இயங்கி வந்த திரு கா. பொ. இரத்தினம் அவர்கள் நமது உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் 08-01-1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப விழாவில் வாழ்த்துரை வழங்கி அதன் தோற்றத்தை அப்படியே ஆசிர்வதித்து வாழ்த்தியவர்.அதோடு மட்டுமல்லாது தொடர்ச்சியாக நமது இயக்கத்தின் வளர்ச்சியிலே கண்ணும் கருத்துமாக இருந்தவர்" என்று உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த இப்பெரியாரின் இழப்பை உலகத் தமிழரின் பேரிழப்பாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பதிவுசெய்துள்ளது அருமை மகன் இழந்த துயரிலுள்ள தமிழ்த்தாய்க்கு ஆறுதலை அளித்திருக்கும் என்பது திண்ணமாகும்.

பேரிழப்பில் வாடிநிற்கும் தமிழுலகின் வேண்டுதல் யாதாயின் ஐயாவின் வழியில் அரசியலில் உள்ளோர் தமிழ்மொழியை ஆய்ந்தறிந்து தமிழ்ப்பணிக்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதேயாகும்.

Saturday, September 4, 2010

சென்னை மாநகரின் வானும்(படமும்)ஒரு பாடமும்

சென்னை மாநகரின் வானை வானிலிருந்து பார்த்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று எண்ணினேன். விமானநிலையத்தில் இருக்கையை உறுதிப்படுத்துபவரிடம் சாளரம் அருகே இருக்கை வேண்டுமெனக் கேட்டேன். சாளரத்துக்கு அருகாமையில் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டமையினால் எனது அலைபேசியின் உதவியுடன் சென்னை மாநகரின் வானைப் படம் பிடித்துக் கொண்டேன்.












பயணிகளின் அலைபேசிகள் சமிஞ்ஞை பயன்பாட்டில் இருந்தால் விமானிகள் கட்டுப்பாட்டு அறையுடன் பேணுகின்ற தொலைத்தொடர்ப்பு அலைவரிசைகளில் இடைஞ்சல்களை ஏற்படுத்தும் என்பதால் சமிஞ்ஞைப் பயன்பாட்டிலிருந்து அலைபேசியைத் துண்டித்திருந்தேன்.

இப்படித்தான், ஒருமுறை சத்திரசிகிச்சை அறையினுள் சத்திரசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சமிஞ்ஞை அலைகளால் இயங்கும் கருவியொன்று எவரோ ஒருவர் அலைபேசி பயன்படுத்தியதன் காரணமாக நின்றுவிட்டது. எவ்வளவு முயன்றும் அலைபேசியை பாவிப்பவரைக் கண்டுகொள்ள முடியாமல் போனதால், சமிஞ்ஞை அலைகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இடைஞ்சல் காரணமாக சத்திரசிகிச்சைக் கருவியை மீண்டும் இயக்கமுடியவில்லை. சத்திரசிகிச்சையும் பரிதாபகரமாக தோல்வியில் முடிந்து நோயாளரின் உயிரைக் காவுகொண்டது.

எனவே; சென்னை மாநகரின் வான் காட்சியைக் கண்டு இன்புற்ற உறவுகளே, மருத்துவமனைகளுக்குள் நுழையும்போது உங்கள் அலைபேசியை(கைபேசியை) சமிஞ்ஞை தொடர்பிலிருந்து துண்டித்துவிடுங்கள். நோயாளர்களின் உயிருக்கு தீங்குவிளைவித்துவிடாதீர்.
அதுபோல் விமானத்திலும் சமிஞ்ஞை தொடர்பிலிருந்து அலைபேசிகளைத் துண்டிப்பது உங்களின் உயிரையும் உங்களுடன் பயணிக்கும் சகபயணிகளின் உயிரையும் பாதுகாக்கும் என்பதில் நினைவில் கொள்க.

சென்னை மாநகரின் வானும்(படமும்) ஒரு பாடமும் என்ற தலைப்பு மெத்தச் சரிதானே?

Tuesday, August 17, 2010

அறிஞர் அண்ணா கொல்லப்பட்டாரா?

பயப்படாதீர்கள்.....அறிஞர் அண்ணா இயற்கை எய்தியது இயற்கையாகத்தான். ஆனால் அவரது கொள்கைகள் உயிரோடுள்ளவரை அவரும் உயிரோடு இருப்பார் என்பது பொதுசனங்களின் நம்பிக்கை. ஆனால் பொதுசனங்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார்கள் அண்ணாவின் வாரிசுகளே! அது அண்ணாவைக் கொன்றதுபோல்தானே?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதுபோல் அண்ணாவின் கொள்கைகளை கொன்றமைக்கு ஒரு எளிய உதாரணத்தை இங்கு பார்ப்போம்!

அறிஞர் அண்ணா, ஒருமுறை பழைய மன்னர்கட்டிய கோயிலை பார்க்க வேண்டியிருந்தது. அப்போது தன்னுடன் உடனிருந்தவரிடம் "இந்தக் கோயிலைக் கட்டிய மன்னன் யார்?" என்று வினாவினார். விழிபிதுங்கிப் போய்விட்டார் உடனிருந்தவர்! "தெரியவில்லை.......இங்கு எங்கையும் கட்டிய மன்னரின் பெயரை எழுதிவைக்கவில்லை...எழுதியிருந்தால் பார்த்துச் சொல்லலாம்" என்றார் உடனிருந்தவர்.
பலமாக சிரித்த அறிஞர் அண்ணா; "இத்துணூண்டு டியூப் லைட்டை (புளோர் ஒளிர்வுக்குழாய்) கொடுத்தவன் தனது பெயரை கொட்டை எழுத்தில் எழுதியுள்ளான் பாரு! இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டிய மன்னன் தனது பெயரை பதிவுசெய்ய தவறியுள்ளபோது, இவனோ கொட்டை எழுத்தில் தனது பெயரை ஒராண்டுக்கும் தாக்குப்பிடிக்காத இந்த டியூப்லைட்டில் எழுதியுள்ளானே...!" என்று சிரித்துவிட்டுச் சென்றார்.

சென்னைப் புறநகர் வளாக அமைப்புக்கு அடிக்கல் நாட்டியது.....துவக்கப்பட்டது என்று போட்டிபோட்டு கல்வெட்டு தீட்டியுள்ளன அண்ணாவின் வாரிசுகளைப் பாருங்களேன்...!!! ஒன்று அண்ணாவின் அருமை கருணாநிதியரின் விளையாட்டு...மற்றையது அண்ணா என்ற பெயரைச் சுமந்த கட்சியின் தலைவியின் விளையாட்டு!!!




டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிய தாம்பரம் பேருந்து நிலையத்தில் அவரது கூத்தைப் பாருங்களேன்.....! ஏதோ அவர் சொந்தப்பணத்தில் கட்டியதுபோல் தனது பெயரை விளப்பரப்படுத்தியுள்ளார்.



அரசு பணம் என்பது மக்கள் பணமே ஒழிய முதலமைச்சரினதோ அன்றி அமைச்சர்களினுடையதோ அன்றி சட்டசபை உறுப்பினர்களுடையதோ அல்ல!!! எனவே அரசு பணத்தில் கட்டிய கட்டிடங்களுக்கு கட்டியவர்கள் வைக்கும் தமது பெயர் பலகைகள்,கல்வெட்டுகளைப் பார்க்கும்போது கடவுளே......மன்னராட்சியா நடைபெறுகின்றது என்று எண்ணத் தோன்றியுள்ளது!!!
கல்வெட்டுகளை செதுக்கி இவ்வளவு மிரமாண்டமாக நிறுவுவதற்கு செலவாகும் மக்கள் பணத்துக்கு நீதி கேட்டு எங்குபோய் போராடுவது?

புளோர் ஒளிர்வுக் குழாயை தனது சொந்தப்பணத்தில் ஆலயத்துக்கு கொடுத்தவன் தனது பெயரை கொட்டெழுத்தில் எழுதியிருந்ததைப் பார்த்து சிரித்த அண்ணா, மக்கள் பணத்தில் அரசுப் பணியில் அமைக்கப்படும் கட்டிடத்தொகுதிகளுக்கு தமது பெயரை "பெரும் செலவீனத்தில்" பொறிக்கும் அண்ணாவின் வாரிசுக்களை, அண்ணா "மேலுலகில் இருந்து" காண்பாராயின் எவ்வளவு வேதனைப்படுவார் ஐயகோ!!!


தமிழகத்தில் ஓடுகின்ற பேருந்துக்களில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் படத்தைப் பாருங்களேன், இதில் "நீ நான் என்றால் உதடு ஒட்டாது என்றும் நாம் என்றாலேயே உதடுகள் ஒட்டுகின்றன " என்று தத்துவம் பேசியுள்ளார். காலங்காலமாக தமிழில் புழக்கத்தில் உள்ள இந்த தத்துவவரிக்கு "கலைஞர்" என்று பெயர்கொடுத்து மெதுவாக அவரையும் திருவள்ளுவர் தானத்துக்கு உயர்த்திவிட்டுள்ளார்கள் திருத்த முடியாத கழுதையர்கள்.ஈழநாட்டுத் தமிழர் வேறு நான் வேறு என்று வெட்டிவிட்டவரின் தத்துவப்பேச்சைப் பாருங்களேன்!!!

கடவுளே, எல்லாம் தமிழினம் செய்த ஊழ்வினையோ? உன்னைத்தவிர வேறுயாராலும் தமிழரைக் காப்பாற்றமுடியாது!!!

Wednesday, August 4, 2010

யாழ்.போதனா வைத்தியசாலையும் தலைகுனியவேண்டிய தர்மவான்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயிற்சியின் நிமித்தம் பத்துநாட்கள் போயிற்று வந்தேன். மருத்துவ மாணவனாக என் வாழ்நாளில் மகிழ்வோடு பணியாற்றி அனுபவக் கல்வியை அதிகளவு நுகரும் பேறுபெற்ற நாட்கள் என்று இந்தப் பத்துநாட்களையும் சொல்லலாம். சத்திரசிகிச்சைப் பிரிவில் பயிற்சிக்கு நின்றமையால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவை ஆதாரமாகக்கொண்டு இங்கு என் கட்டுரை வைத்தியசாலையை ஆய்ந்து செல்கின்றது.

மருத்துவர் திரு.ரவிராஜ் ஐயாவின் சத்திரசிகிச்சை நோயாளர் படுக்கைத்தொகுதி ஓரளவுக்கு சிறப்பாகப் பேணப்படுகின்றது.புதிதாக கட்டி,திருத்தி அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி என்பதை பார்க்கும்போது புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.ஆனால் ஏனைய சத்திரசிகிச்சைக்குரிய பிரிவு நோயாளர் படுக்கைத் தொகுதிகள் தரத்தில் "சாதரணம்" என்றுகூட முத்திரை குத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஒருசில படுக்கைத்தொகுதிகள் புதிதாக நுழைபவர்களை மயக்கிவிடும் துர்மணத்துடன் விளங்குகின்றன! இவற்றின் மணங்குணங்களுக்கு இசைவாக்கமடைய இருநாட்கள் பிடித்துவிட்டது எனக்கு! ஒருசில நோயாளர் படுக்கைத்தொகுதிகள் நோயளர்களின் மலசலகழிவு கூடத்துடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. அவை உரியமுறையில் கழுவப்படுகின்றன என்றால் சரியான விடையில்லை!

சிஸ்டோஸ்கோப்பி(cystoscopy) என்ற மூத்திரப்பையை ஒளியியற்கருவி கொண்டு காணொளியில் அவதானிக்கும் மருத்துவப்பரிசோதனையை பொதுவாக அதில் நிபுணத்துவமுடைய மருத்துவரே பார்ப்பது முறை! இதில் நிபுணத்துவமுள்ள மருத்துவரை யூரோலோஜிஸ்ட்(urologist) எனப்படுவர். ஆனால் அங்கு பொதுசத்திரசிகிச்சை மருத்துவரே இந்தமருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுகின்றார். காரணம் வினாவியபோது யூரோலோஜிஸ்ட் இல்லையாம்! ஒரு பேச்சுவாக்கில் செவிவழியாகப் பெற்றுக் கொண்ட செய்தி மருத்துவர்களுக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றதாம்! ஆனால் பாராட்டப்பட வேண்டிய விடயம் யாதெனில் குறைந்த வளங்களைக் கொண்டு சிறந்தமுறையில் உச்ச பயனை நோயாளர்களுக்கு வழங்கும் வைத்தியசாலை நிர்வாகத்தைத்தான்! தற்போது பணியாற்றும் சத்திரசிகிச்சை மருத்துவர்களை பார்த்தபோது அவர்கள் படுகின்ற வேலைப்பளுவையும் அதற்கு மத்தியில் சேவைநோக்கில் செயற்படும் அவர்களின் உழைப்பையும் யாழ்சமூகம் மெய்ச்சிப் பாராட்ட வேண்டும்.
மருத்துவ மாணவர்களுக்கு போதிக்கவேண்டிய கடமையுணர்வையும் பெரும்பாலும் அனைத்து வைத்தியர்களிடமும் காணக்கூடியதாக இருந்தது. யாழ் மண்ணில் கல்வியின் வளம் மங்காமைக்கு இந்த சேவைநோக்கம் எல்லா ஆசிரியரிடமும் பொதுவாக இயல்பில் குடிகொண்டிருப்பதால் என்றே எண்ணத்தோன்றியது! உண்மையும் தான்!

காட்டுபிராண்டித்தனமாக வெறிபிடித்து கைகளில் இருந்த துப்பாக்கிகள் கொண்டு மருத்துவனை வைத்தியர்களையும் தாதியர்களையும் சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவத்தினரின் பாவத்தைப் போக்குவதற்கு காசியில் போய் மூழ்காது இந்திய அரசு CT SCAN இயந்திரத்தை நன்கொடையாக அளித்துள்ளது. காசியில் போய் மூழ்கினாலும் போகமுடியாத பாவம் என்பதை உணர்ந்ததால்த்தானோ இந்த நன்கொடை என்ற எண்ணத்தை ஊட்டுகின்றது CT SCAN அறைக்கு அருகாமையிலிருக்கும் கொல்லப்பட்ட மருத்துவப் பணியாளர்களின் உருவப்படங்கள்! சரி இந்தப் பாவத்துக்கு பரிகாரம் தேடியாயிற்று! சில ஆண்டுகளுக்கு முன் செய்த பாவங்களுக்கு...........உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
நான் யாழ் போதனா வைத்தியசாலை மட்டுமல்ல,சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை,களுபோவில வைத்தியசாலை என்பவற்றையும் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஏனைய இரு வைத்தியசாலைகளையும் வைத்தியசாலைகள் என்றே அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கு சிறப்பான கட்டிடத்தொகுதி, நோயாளர் படுக்கைத்தொகுதிகள்,மருத்துகள் என்று சிறப்பாகப் பேணப்படுகின்றன!

ஆனால் யாழ்.போதனா வைத்தியசாலையின் தொண்ணூறு வீதமான பகுதிகள் பாழடைந்த வீட்டையே நினைவுபடுத்துகின்றன! ஒரு கட்டிடத்தொகுதி இப்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. மருந்துகளுக்குப் பெருந்தட்டுப்பாடு! வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைதருகின்ற நோயாளர்களுக்கு "வெளியில் வாங்குங்கள்" என்பது மருத்துவர்கள் மனமில்லாது சொல்லுகின்ற வார்த்தை! பல நோயாளிகள் படுத்திருப்பதற்கு கட்டில்கள் பற்றாக்குறையால் நடைபாதையில் பாய்விரித்துவிட்டு படுக்கவைக்கப்பட்டுள்ளனர்!
ஒரு மருத்துவர் மருந்தொன்றை எழுதி வைத்தியசாலை மருந்தகத்தில் வாங்குப்படி பணித்தார். பதினைந்து நிமிடங்கள் கழித்து அதே நோயாளி மீட்டும் வந்து "ஐயா இந்த மருந்து வைத்தியசாலை மருந்தகத்தில் இல்லையாம்" என்றார். மருந்துவருக்கு வந்தது கோபம்! "இந்த மருந்துகூட இல்லாவிட்டால் பிறகு எதுக்கு வைத்தியசாலையை நடத்த வேண்டும்" என்று சினந்து கொண்டார். வெளியில் வாங்கும்படி பணித்தார். இதுதான் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருந்தகத்தின் நிலை!
*மருந்துகள் பற்றாக்குறை!
*நோயாளர் படுக்கைத்தொகுதிகளில் உள்ள கட்டில்கள் பற்றாக்குறை!
*மருத்துவர் பற்றாக்குறை!
*கட்டிடத்தொகுதிகள் பாழடைந்த வீடுகள்போல் உள்ளன
இதுதான் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நிலை!

என்னோடு பயிற்சிகளில் ஈடுபட்ட மாணவர் "தான் சிறுவயதில் இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது.இப்போதும் இப்படித்தான் உள்ளது" என்று என்னிடம் கூறினார் நான் மனம் வெந்தபோது!

இது இப்படியிருக்க நல்லூர் கோயில்,இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம் உட்பட ஒருசில ஆலயங்களுக்கு செல்லும் பேறுகிட்டியது. நல்லூர் ஆலயத்தில் ஒருபக்கம் கோபுரம் கட்டி திருத்த வேலைகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. இணுவில் பரராசசேகரப்பிள்ளையாருக்கு சென்றபோது பணவளமுள்ள ஆலயம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.நான் சென்ற ஏனைய ஆலயங்களில் பெரும்பாலானவை புதிய கோபுரங்கள் எழுப்பப்பட்டவையாகவோ அல்லது இடித்துக் கட்டப்பட்டவையாகவோ அல்லது புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டவையாகவோ காணப்பட்டன! எல்லாம் வெளிநாட்டுப் பணம் என்பதை விசாரித்தபோது விளங்கியது! அந்த வெளிநாட்டுப் பணத்தில் ஒருசிறு பங்கையேனும் யாழ்.போதனா வைத்தியசாலையை வளப்படுத்த செலவழித்தால் எவ்வளவு நன்மை பயற்கும்! ஏழைகள் தமக்குரிய மருத்துகளை வைத்தியசாலையிலையே பெற்றுக் கொள்வர். வைத்தியசாலையும் சிறந்தமுறையில் தனது பணியை சமூகத்துக்கு செய்யக்கூடியதாக இருக்கும்!

அரசாங்கம் செய்யவேண்டியது என்று ஒருசிலர் சொல்வர்! இப்போது கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள ஒருசில கட்டிடத்தொகுதிகள் நெதர்லாந்து நாட்டு அரசாங்கக்கொடையால் விளைந்தவை! எனவே நெதலாந்து நாடே உதவிக்கரம் நீட்டியுள்ளபோது........எம்மவர்கள் ஏன் உதவக்கூடாது? அரசாங்கம் உதவ வேண்டுமென்று யாழில் உள்ள எம்முறவுகளை கவனிப்பாரற்று கைவிடுவது முறையா? இந்து கலாச்சாரத் திணைக்களம் / அமைச்சு ( சைவப் பண்பாட்டு அமைச்சு / திணைக்களம் என்பதே சரியான பெயரீடு) பார்க்கவேண்டிய வேலையை வெளிநாட்டில் இருந்து நம்மவர்கள் பணம் அனுப்பி பார்க்கும்போது சுகாதார அமைச்சு பார்க்கவேண்டிய வேலையை ஏன் பார்க்கக்கூடாது?
பயனடையப்போவது யாழில் உள்ள ஏழைமக்களே!தமிழ் அரசியல்வாதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையை வளப்படுத்த உரியமுறையில் செயற்படுவார்கள் என்றால் ஏழை நோயாளர்கள் செய்த புண்ணியம் என்றே சொல்லலாம்!

யாழில் உள்ள பணங்கொழுத்துப் போயுள்ள ஆலயங்கள்கூட இந்தப் பணியில் ஈடுபடலாம்! இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் பணத்தில் வளர அருகில் உள்ள செகராசசேகரப் பிள்ளையார் ஏழ்மையில் வாடுகிறார். செகராசசேகருக்கு பண உதவிசெய்து வளர்த்துவிட்டால் பிறகு பரராசசேகரப் பிள்ளையாருக்கு மதிப்புக் குறைந்துவிடுமே என்ற ஏக்கவுணர்வில் அவரை ஏழையாகவே கைவிட்டுள்ளனர் பரராசசேகரரின் பக்தர்கள்! இது இப்படியிருக்கையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உதவமுன் வாருங்கள் என்று கேட்பது கொஞ்சம் "தினாவெட்டாகத்தான்" உள்ளது!!!!

தெகிவளை ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு பரல் பலராலாக ஊற்றிய பாலால் தெகிவளை கழிவுநீர் வெண்ணிறமாய் காட்சியளித்தது என்று அன்பர்கள் சிலர் நவின்றனர். வெளிநாடுகளில் இருந்து பரல் பரலாக நேர்த்திக்கடனைத் தீர்க்க பால் ஊற்றும்படி கட்டளையாம்! உள்ளூர்வாசிகளும் தாம் சளைத்தவர்களில்லை என்பதை இந்தப்பால் ஊற்றலில் காட்டுவார்களாம்! நான் இறைவனுக்கு பால் ஊற்றி அபிடேகம் செய்வதை எதிர்க்கும் அறிவற்ற நாத்தீகவாதியல்ல! பகுத்தறிவுள்ள இறைநம்பிக்கையாளன். இறைவனுக்கு அபிடேகத்தின்போது ஒருகுடமோ அன்றி மூன்று குடமோ அல்லது ஒன்பது குடமோ பால் ஊற்றுவதில் தவறில்லை! ஆனால் "பரல் பரலாக" பால் ஊற்றி ஒரு பிரதேசத்தின் கழிவுநீரையே வெண்ணிறமாக்கும் விசயத்தில் உடன்பாடில்லை! ஏழைச் சைவர்களுக்கு உதவ முன்வந்தால் அதுவே மிகச்சிறந்த சைவப்பணி! இறைவனை மகிழ்விக்கும் பணி!

சிவபூமி அறக்கட்டளை நிதியம் புற்றுநோயளர் பிரிவில் பூங்கா அமைத்து கொடுத்துள்ளது. அந்தப் பூங்கா புற்றுநோயாளர்களுக்கு மட்டுமன்றி வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளில் உள்ள நோயாளர்களும் பயன்படுத்தும் இடமாக திகழ்கின்றது. சிவபூமி அறக்கட்டளை நிதியம் தன்னால் இயன்றுள்ள அளவுக்கு உதவியிருக்கையில்.....வெளிநாட்டில் இருந்து குடும்ப பணபலத்தை நிறுபிக்க பெருவிழா ஆலயங்களில் எடுக்கும் செல்வந்தர்கள் சிந்தித்தால்.......தமிழுணர்வுள்ளோர் முயன்றால் யாழ்.போதனா வைத்தியசாலையை மருத்துவமனைகளுக்கு முன்னுதாரணமான மருத்துவமனையாக மாற்றியமைக்க முடியது. அதுமட்டுமல்ல ஏனைய தமிழ் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளையும் வளப்படுத்த புலம்பெயர்ந்தோர் முன்வருவார்களா?

யாழ் போதனா வைத்தியசாலையின் தரத்தைவிட தாழ்வான தரத்திலேயே ஏனைய தமிழ் மாவட்ட பொது மருத்துவமனைகள் இருக்கும் என்பதை எவரும் உய்த்துணரலாம். எனவே தமிழ் மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை உரியமுறையில் வளப்படுத்த தமிழ்ச் சமூகம் முன்வருமா?தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழியுண்டு! MRI போன்ற நவீனவசதிகள் கொண்ட பொது மருத்துவமனைகளை எமது மாவட்டங்களில் எம்மவர்கள் ஏற்படுத்துவார்களா?இதற்கென ஒரு நிதியத்தை தமிழுணர்வாளர்கள் செயற்படுத்துவார்களா? மருத்துவப் பணி இறைபணிகளில் சிறந்த பணி என்பதை அன்பர்கள் உணர்ந்து கொள்வார்களா?

Thursday, June 24, 2010

செம்மொழி மாநாடும் கலைஞரின் தமிழ்ப்பணியும்

கல்விச் சுமையால் வலையில் அதிக கவனம் செலுத்தமுடியவில்லை. இதுவே ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்றென்று பதிவு எழுதிய வண்ணம் இருக்கக் காரணம்! இது இப்படியிருக்க; "செம்மொழி மாநாடு நடக்கும் போது ஒருபதிவேனும் பதியாட்டி தமிழன் என்று பெருமை சொல்லமுடியுமா? " என்று கடுந்தொனியில் கலைஞர் கனவில் வந்து கேட்டுத் தொலைத்துவிட்டார். அதுதான் ஒருபதிவு! எனக்கும் கலைஞருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கலைஞரை எனக்கு நல்லாத் தெரியும்.{அவர் குணத்தை நல்லாத் தெரியும் என்கிறேன்.........வேறுமாதிரி எதுவும் யோசிக்க வேண்டாம்:-) }ஆனால் அவருக்கு என்னை மட்டுமல்ல உண்மையான தமிழ்ப்பற்று என்றால் என்ன என்றுகூடத் தெரியாது!

செம்மொழி மாநாட்டு கண்காட்சிக்காய் ஒராண்டு காலமாய் சுடுமண்ணில் திருக்குறள்களைப் பதிந்து கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஆக்கிய திருக்குறள் சுடுமண் ஆக்கங்கள் வீணாகிவிட்டனவே என்ற விரக்தியோடு மரத்திலே தூங்கிலிட்டு மரணித்த மாணவன்பற்றி கலைஞர் அறிந்தே இருக்கமாட்டார்! அவர் எழுதிய கடிதத்தில் ஈழத்தமிழ் மக்களைப்பற்றியும் மரநடுகை பற்றியும் குறிப்பிட்டுள்ளதை கலைஞர் எப்படித் தெரிந்துகொள்வார்?

யாவரும் கேளிர் என்றால் அனைவரும் உறவினரே என்று பொருள்படும். கேளீர் என்றால் கேளுங்களேன் என்று அழுத்திச் சொல்வது! ரகுமான் கேளீர் என்றே செம்மொழி மாநாட்டுப் பாடலில் உச்சரிக்கின்றார். பாவம் அவர் தமிழாசிரியர் இல்லைத்தானே! எனவே அவரை வம்புக்கு இழுக்கக்கூடாது!!!! ஆனால் முத்தமிழ் கலைஞர்? ஐயகோ.......... வயது போனதால் காது கேளாமல் போயிருக்கும்! எனவே அவரை குறைசொல்லவும் கூடாது! அப்ப.......யாரைத்தான் நொந்துகொள்வது?

" போரைப் புறந்தள்ளி" என்று செம்மொழிப் பாடலில் கலைஞர் சுட்டுகிறார். அவரெழுதிய பாடலாயிற்றே!!! இந்தி எதிர்ப்பு "போரா"ட்டத்தில் வருகின்ற "போர்" எந்தப் போர்? இராச இராச மன்னன் தொடுத்த போர் கேவலமானதா என்ன? புறனானூறு முழுக்க போரின் புகழ்பாடப்பட்டுள்ளதே? அப்படியானால் "போரைப் புறந்தள்ளி" யாருக்கு வைத்த உள்குத்து?
கலைஞர் தும்மினால் இருமினால் விக்கினால் தமிழ்த்தாயே கலங்கிவிடும்..........அவர் எழுதிய கவிதையில் குறைபிடிக்கலாமா? கூடவே கூடாது!!! இப்படித்தான் இருந்துள்ளார்கள் படித்து பட்டம்பெற்ற பேராசிரியர்கள் யாவரும்! எனவே பொதுசனங்களாகிய எங்களுக்கு என்னத்துக்கு வம்பு? "கூடவே கூடாது" என்பதை நாமும் ஆமோதிப்போம்!

மாநாட்டு தொடக்க நிகழ்வில் பிறமொழியாளர்களின் ஆங்கில உரைகளுக்கு தமிழ்மொழி பெயர்ப்பு வழங்கப்படவில்லையாம்!அதாவது ஆங்கிலம் படித்து அவர்கள் என்ன உரையாற்றினார்கள் எனத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆங்கிலத் திணிப்பு நடந்துள்ளது மறைமுகமாக!!!! தமிழறிஞர்கள் ஆற்றிய உரைகளில் ஆங்கிலமோகம் கலந்திருந்ததாக ஆங்கிலப் படிப்பறிவு இல்லாத தமிழ்ச்சனங்கள் நொந்துகொண்டனர்!!!! அதுசரி ஆங்கிலமோகம் இந்தச்சனங்களுக்கு இல்லாதது "ஆங்கிலப்படிப்பறிவு' இல்லாததாலேயே என்று தட்டிக்கழித்துவிட்டர் தமிழறிஞர்கள்!!!!
என்ன செய்ய, விழாபற்றிய அறிக்கைகள் ஆங்கிலத்திலேயே அனுப்பப்பட்டதாக பல ஊடகங்கள் சாடியுள்ளதை அறிந்தபோது இந்த சின்னச் சின்ன தவறுகளை வலையில் சுட்டுவது முறையாகுமா? இதை ஒருவிசயமாக கருதலாமா? கூடவே கூடாது!!!



சரி, இதுபோகட்டும்! முக்கியமான விசயம் என்னென்றா........ஈழத்தில் வடகிழக்குப் பகுதியில் ஈழத்தமிழர்கள் வசிக்கின்றார்கள். மத்தியநாட்டில் தமிழகத் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.இவர்கள் பிரித்தானியர் காலத்தில் இலங்கைக்கு தொழிலாளிகளாக அழைத்துவரப்பட்டவர்கள். மாநாட்டில் பங்குபற்ற யாழ்ப்பாணத்து பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.மத்தியநாட்டில் வாழும் வாழ்வாதரத்தில் பின் தங்கிய கூலித்தொழிலாளிகளாக வாழும் தமிழகத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை! இலங்கை தமிழ் முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படும் வகையிலும் எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை! இலங்கையில் மத்தியநாட்டுத் தமிழர்கள் வாழ்வியல்,அரசியல்ரீதியில் தனித்துவமான பிரச்சினைகளை முகங்கொடுக்கும் தனித்துவமான தமிழ்ச்சமூகம் என்பதை கருணாநிதி அறிந்திருக்கவில்லையா? இலங்கை தமிழ்முஸ்லீம் சமூகம் தமிழரல்லாதவர்களாக இலங்கை அரசியலால் பிரித்தாளப்படும் நிலையை முத்தமிழறிஞர் கேள்விப்படவில்லையா? ஈழத்தமிழ் முஸ்லீம் சமூகத்தில் தமிழறிஞர்கள் பலருண்டு! எனவே அவர்களைப் பிரதிநிதிப்படுத்தும்வகையில் அழைப்புவிடப்பட்டிருந்தால் "பிரித்தாளப்படும்" தந்திரத்துக்கு ஆப்புவைக்க ஏதுவான காரணிகளை உருவாக்கியிருக்குமே!!!! அதை நலுவவிட்டார் உலகத்தமிழ்த் தலைவர்!!!!

இந்த மாநாடு வெறும் மொழிக்கா? அல்லது மொழியை பேசும் மக்களுக்காகவா? மக்கள் வாழ்ந்தாலே மொழி வாழும்! எனவே இந்தமாநாட்டில் ஈழத்தின் மத்தியநாட்டின் தமிழகத் தமிழர்கள் பிரச்சினைகளை உரையாட, எடுத்துரைக்க எவரும் இல்லையே?

கரூமம்....கரூமம்.......இது அரசியல் மாநாட்டில்லை! மொழி மாநாடு! இங்கு தமிழ்மொழி வளர்ச்சிபற்றியே உரையாடுவோம்! அதனாலேயே கலைஞர் ஐயா தமிழ் கூட்டமைப்பு அரசியல் தலைவர்களுக்கோ அல்லது மத்தியநாட்டு தமிழ் அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பிதழை வழங்கவில்லை!!! இப்படி நியாயம் சொல்கின்றனர் உலகத்தமிழ்த் தலைவரின் திருத்த முடியாத ழுதைகள்!!!

அப்படியானால் ஏன் பிரதீபாபட்டீலுக்கு அழைப்பிதழ்? ஏன் ஆளுநர் பெர்னாலாவுக்கு அழைப்பிதழ்? ஸ்டாலினுக்கு ஏன் அழைப்பிதழ் வழங்கப்பட்டது?
இவர்கள் அரசியல் தலைவர்கள் ஆயிற்றே!!! {முத்தமிழறிஞர் கலைஞர் பங்குபற்றாமல் விழா நடந்தால் அது விழாவுக்கே அழகில்லை!!! கனிமொழி கவிஞர்! அதனால் அரசியல் தலைவர்கள் என்று அவர்களைக் கருதுவது மாபெரும் தவறு!! }

இந்தியாவின் முதல்குடிமகனாக இருந்த தமிழன், இந்தியாவை அணுசக்தி வலுவுடைய நாடாகமாற்றிய விஞ்ஞானி,தமிழைச் செம்மொழியாக அறிவித்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கே தொடக்கவிழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கவில்லை! மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டதாக எவரும் வாய்திறக்கவில்லை! இது இப்படியிருக்கையில் இலங்கையில் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கவில்லை என்பது சர்வசாதாரணமே!!!!

கலைஞர் காலைச் சாப்பாட்டுக்கும் மதியச்சாப்பாட்டுக்கும் இடையில் இருந்த உண்ணாநோன்பைப் பாராட்டி தமிழ்க்காவலர் என்று பட்டம்சூட்ட திராவிடர் கழக வீரமணியர்( தமிழர் தலைவர் என்று இவருக்கு பட்டம் வேறு!!!), சு.பா.வீரபாண்டியர் என்று அல்லக்கை நொள்ளக்கை இருக்கையில் கலைஞரை தவறாகப் பேசக்கூடாது!!!! கூடவே கூடாது!
தமிழக வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியில் வழக்காட உண்ணாநோன்பு இருந்தபோது அவர்களை காவல்த்துறையை ஏவிவிட்டு கைதுசெய்த கையோடு மாநாட்டுக்கு பங்குபற்ற வந்த கலைஞர் ஐயா, எவ்வளவு நல்லவர் தெரியுமா? இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைசென்ற அவர், சிறை சென்றாலே தமிழுக்கு மரியாதை என்று கருதி உண்ணாநோன்பு இருந்தவர்களை சிறைக்கு அனுப்பிய தமிழ்க் காவலர் அவர்! அவரைப் போய் குறைஞ்சு மதிப்பிட்டாச்சே!!! சீ...சீ...தப்பு!!!

மொத்தத்தில் கலைஞர் ஐயாவுக்கு இருக்கும் தமிழறிவை நினைக்கும்போது........ஐயகோ புல்லரிக்கிறது!
அப்பாடியோ.......! கலைஞர் ஐயா கனவிலே வந்து கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, ஒருமாதிரி ஒருபதிவை செம்மொழி மாநாட்டுக்கு காணிக்கை ஆக்கும்வகையில் எழுதியாயிற்று!!!! இதை வாசித்தவர்கள் தேர்தல் வரும்போது மறக்காமல் கலைஞருக்கு வாக்கைப்( அதுதான் ஓட்டை) போட்டுடுங்கோ!!!!



Wednesday, May 12, 2010

பெரியாரை அசிங்கப்படுத்திய விடுதலை பத்திரிக்கை

பெரியார் கடவுள் இல்லை என்று நாத்தீகம் பேசியதில் எந்தவிதமான உடன்பாடும் எனக்கில்லை. சாதி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கிய பெரியாரின் மேல் மரியாதை என்றும் உண்டு. பெரியார் சொன்னதெல்லாம் சரியானது என்ற கருத்து இருக்குமென்றால் "எங்களை அறியாமலே பெரியாரைக் கடவுளாய் ஏற்று பெரியார் மதம்" என்று மதநம்பிக்கைக்கு உரியவராகிவிடுகிறோம் !பெரியாரும் மனிதரே என்று கருதி, அவரிடம் பிழையான கருத்துகள் இருந்தன என்பதை பெருந்தன்மையுடன் ஏற்று, அவர் காட்டியவற்றில் நல்லவற்றை எடுத்து நல்லவழியில் நடப்பர் மேன்மக்கள்!

சரி விசயத்துக்கு வருவோம்;
பெரியாரின் புகழ்பரப்பும் பெரியாரின் கட்சியால் நடத்தப்படும் விடுதலை பத்திரிக்கையில் மயிலாடன் என்பவரின் எழுத்தில் "தந்தை பெரியாரின் சீடர் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் இருப்பதால், இந்த அசிங்கமான தமிழ் வருடப் பிறப்புக்குக் கல்தா கொடுத்து, தைமுதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அறிவித்து.....(12-5-2010) " என்று கருணையில்லா நிதியின் புகழ்பாடப்பட்டிருப்பது பெரியாருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தும் விடயமல்லவா?

விடுதலை பத்திரிக்கை கருணையில்லா நிதியை பெரியாரின் சீடர் என்று புகழ்கின்றது.

இலங்கையில் தமிழன்னை இரத்தம் சிந்தி வாடி வதங்கி அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தபோது, "காலைக்கும் மதியத்துக்கும்" இடையில் உண்ணாவிரதம் இருந்து பொய்யுரைத்து இன அழிவை வேடிக்கை பார்த்து அதற்கு ஒத்தாசையும் வழங்கிய கருணையில்லா நிதியும் அவரது வால் வீரமணியரும் தமிழர் தலைவர்கள் என்றோ.........பெரியாரின் சீடர்கள் என்றோ சொல்வதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்!!!!!!

விடுதலை தமிழரை விழிப்படையச் செய்யவில்லை! தமிழரைக் குருட்டாக்கி வீரமணியரையும் கருணையில்லா நிதியையும் புகழச் செய்கின்றது!!!! இப்படித்தான் சுயநலத்திற்காய் நாத்தீகத்தையும் பரப்புகிறார்கள் எஎன்பதை தமிழர்கள் உணரட்டும்!

Monday, April 26, 2010

பார்வதி அம்மையாரை அவமானப்படுத்திய வீரமணியரும் தமிழ் ஓவியாவும்

பார்வதி தாய் கருணையில்லா நிதியின் உதவியைப் பெற்று தமிழகம் வரவேண்டுமா? தமிழ் ஒவியாவின் கேவலம்!


தமிழ் ஒவியா அவர்களே,

"தாயார் பார்வதி அம்மையாரை கலைஞர் உதவியுடன் வாழ வைப்போம்" என்பது உங்கள் (வீரமணியரின்)கருத்தென அறிந்து தமிழரின் நிலையென்னி சிரிப்பாய் சிரிக்க வேண்டியதாயிற்று!

அவர் வைகோ, நெடுமாறனின் உதவியுடன் வாழக்கூடாது என்றா கலைஞர் திருப்பி அனுப்பிவைத்தார்? யாருக்கும் சொல்லாதது வேறுவிடயம்! தமிழக காவல்த்துறைக்கு தெரிந்தது, காவற்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வருக்கும் தெரியாது என்றால் யாரின் காதில் யார் பூச்சுற்றுவது?

கலைஞருக்கு வைகோ, நெடுமாறன் நல்ல பெயர் எடுப்பது பிடிக்கவில்லை. அவர்களுக்கு திருமாவளவன் போல் இலங்கைபோகும் "பாதுகாப்பு" இருக்கவில்லை. எனவே; இலங்கை வந்து உல்டா விட்ட திருமாவளவனை சேர்ப்பதில் உடன்பாடில்லை. முடிவில், கலைஞருக்கு ஜெயலலிதாவின் கடிதம் உதவியது. திருமாவளவனுக்கு "யாருக்கும் சொல்லவில்லையே?" என்ற கேள்வி உதவியது! பழ.நெடுமாறனுக்கும் வைக்கோவுக்கும் ஏமாற்றம்! பாவம்........வயதுபோன பாட்டிக்கு உபத்திரவம்!!!!!!!


இப்ப மட்டும் பெரியார் இருந்திருந்தால், கலைஞரையும் ஜெயலலிதாவின் முந்தானைக்குள் இருந்துவிட்டு, கலைஞரின் சால்வைக்குள் ஒழிந்து கொண்ட வீரமணியரையும் துரத்தித்துரத்தி அடித்திருப்பார் அவரது பொல்லைக் கொண்டு!!!!

தமிழக காவற்துறைக்கு தெரிந்தது தமிழக முதல்வருக்கு தெரியாவிட்டால், அடா அப்படியொரு முதல்வர் தமிழ்நாட்டுக்கு இருக்கத்தான் வேண்டுமா? வெட்கம்! வெட்கம்!வெட்கம்!

உங்கட தலைவர் (அதுதான் வீரமணி) தமிழர் தலைவர் என்றால் எவருக்கும் சோரம் போகாமல் வாழ்ந்து இராஜ இராஜ சோழனை அறியாத உலகத்தாருக்கு, இப்படித்தான் சோழன் வாழ்ந்தான் என்றும், இதுதான் சோழ சாம்ராச்சியத்தின் மாண்பு என்றும், அறிவித்த ஈழத்துச் சோழனை என்னென்று சொல்லுவீர்?

பெரியாரும் சாதியை ஒழிக்கிறேன் என்று சமயத்தை ஒழிக்கப்போய் திராவிட ஆதீக்கமுடைய சைவத்தையும் தென்கலை வைணவத்தையும் புறக்கணித்து இன்று வட ஆதீக்கமுடைய சுமார்த்தத்தை இந்து என்ற பெயரில் தமிழகத்தில் காலூன்ற வழிசமைத்த பிழையான வழிநடத்தல், பிறப்புச் சான்றிதழில் சாதியைப் பதியும் இழிவான நிலையை உருவாக்கி, காலத்தால் மறைக்க முடியாது சாதியை உருவாக்கிவிட்டமை ஆகிய பல பிழைகள் விட்டார்! அதை நீவிர் ஏற்கமாட்டீர்!

வேதநெறியருக்கு வேதம்போல் ,கிருத்தவருக்கு பைபிள்போல், இஸ்லாமியருக்கு குரான்போல், உங்களுக்கு பெரியார்! அவர்கள் அவரவர் மதத்து நூல்களில் இருக்கும் பிழைகளை ஏற்கார்! நீவிரும் ஏற்கீர்! கிருத்தவருக்கு யேசுநாதர்போல் இஸ்லாமியருக்கு நபிபோல், வேதநெறியருக்கு பல்வேறு மகான்கள்போல், உங்களுக்குப் பெரியார்! எனவே பெரியார் மதம் என்று உங்களை அடையாளப்படுத்துவதில் தவறில்லைத்தானே?

பெரியாரை விமர்சனங்களுக்கு அப்பால் திராவிடத்துக்காய் உழைத்த போராளி என்று ஏற்றுக் கொள்கிறேன். எனவே, தமிழர் தலைவர் என்று வீரமணியையும், கலைஞரையும் அழைத்து அந்தப் போராளியைக் கேவலப்படுத்தாதீர்!

சமய பாடம் ( ஒவ்வொருவரும் அவரவர் சமயத்தை கற்ற முடியும் பௌத்த சமய நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையில்) புகட்டாமல் விட்டதால் இன்று தென்னாட்டில் தமிழ்மொழியில் 14 ஆதார நூல்களைக் கொண்டு எழுந்த சைவ சித்தாந்த சைவநெறியையும், வைணவ தென்கலையையும் தமிழர் அறியாதுபோகவே, குமுதம் பக்தி, ஆனந்தவிகடனின் சக்தி, ஆன்மீகம், திரிசக்தி என்று சுமார்த்த வைதீக கொள்கையை இந்துமதமாகப் போதிக்கும் சமய ஊடகங்கள் விருட்சமாகி அவற்றின் கொள்கைகளை தமிழகத்தில் ஊடுருவ வழிசமைத்துவிட்டத்தை இன்றல்ல என்றுமே நீவிர் ஒப்புக்கொள்ளமாட்டீர்!!!!

தமிழில் உருவாகிய திருமுறைகளையோ, திருப்பாசுரங்களையோ அறியாத "சமஸ்கிருத மந்திரங்களை மட்டுமே அறிந்து கொண்ட" சமுதாயத்தை தமிழகத்தில் தோற்றுவித்தது தங்களது பிழையான வழிநடத்தல்களே என்பதையும் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்!!!!

ஆனால் ஒன்று, மதசார்பின்மை என்பது ஒரு மதத்தை எதிர்ப்பது அல்ல! எல்லா மதங்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது!!!!

ஐயா, வீபூதி பூசி சைவவிழாக்களில் கலந்துகொள்ளமாட்டீர்! ஆனால், தொப்பி அணிந்து இஸ்லாமிய விழாக்களில் கலந்துகொள்வார் உங்களுடைய தமிழர் தலைவர்கள்!!!! வரலாற்று ஆசிரியர்கள், கத்தோலிக்க உயர்பீடங்கள் தோமஸ் இந்தியாவுக்கு வந்ததை ஏற்றுக் கொள்ளாது இருக்கும்போது; தமிழகத்தில் அவர் வந்தார், திருவள்ளுவரை சந்தித்தார் என்று கதையடிக்கும் கூட்டத்து விழாவில் கலந்து சிறப்புரையாற்றி வாக்குக்காய் வரலாற்றை மாற்றியெழுதும் கேவலமுடைய கருணையில்லா நிதி மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்!!!! சிரிப்பொலி தாங்கமுடியவில்லை :-D

ஈழத்து சோழன் இப்படி, சொல் ஒன்று செயல் ஒன்றாக இருப்பதில்லை!!! ஒரு மதத்துக்கு எதிர் இன்னொரு மதத்துக்கு பூமாலை என்று வாழ்ந்ததில்லை! அவர் மதசார்பின்மையின் உண்மையான வடிவம்!

தமிழருக்கு உண்மையாய் வாழ்ந்தவரின் தாயார் உங்கள் கேவலங்கெட்ட கருணாநிதியிடம் மருத்துவ மடிப்பிச்சை கேட்கவேண்டிய கேவலத்தை உருவாக்காதீர்! அதைக் கண்டு இரசிக்காதீர்!!!

உடனே, ஜெயலலிதா ஆதரவாளன் என்று எங்கையும் என் கருத்தை திரிவுபடுத்தாதீர்! காலைச் சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையில் இருக்கும் கள்ளத்தனமான உண்ணாவிரதத்தை அரங்கேற்றி ஊரைப் பேக்காட்டும் உங்கள் கலைஞருக்கும் அவருக்கு வால் பிடிக்கும் தமிழர் தலைவர் :- ) வீரமணியருக்கும் ஜெயலலிதாவுக்கு தமிழ் உணர்வில்லை என்று சொல்லத் தகுதியில்லை! ஜெயலலிதாவிடன் தமிழ் உணர்வை எதிர்பார்ப்பது தவறு!!! தமிழச்சி அல்லாதவளிடம் தமிழ் உணர்வு இருக்குமா என்ன?

ஆனால் தமிழ்.....தமிழ் என்று ஊரைப் பேக்காட்டும் ("ஏமாற்றும்" என்பதற்கு நம்ம ஊர் பேச்சு வழக்கில் இப்படி சொல்லுவர்.........:-) ) உங்கள் மாண்புமிகு கலைஞரும் அவரது வால்பிடியான வீரமணியரும் கேவலம்........அசிங்கம்.........அவமானம்.......போன்ற தமிழின் வடிவங்கள்!!!!

கலைஞருக்கு தனது வேலையைச் செய்ய ஜெயலலிதா ஒரு சாட்டு!!! இதை அனைத்து தமிழரும் அறிவர்! உங்களின் தமிழர் தலைவர் வீரமணியர் அறியாவிடின், அவர் தமிழர் தலைவர் என்ற பட்டத்தை கனவிலும் நினைக்கமுடியாத கேவலமே!!!!

Tuesday, April 6, 2010

வாக்குச்சீட்டு என்னும் அத்திவாரத்தால் வலுவான வீட்டை எழுப்புகவே!

உய்யும் வழி ஏதுமின்றி
தாயகத்தில் நாம்வாடினும்- ஒரு
வீடேனும் ஆறுதலுக்கு
வேண்டுமல்லவா?
வீட்டின் இருப்பு
எமக்கு உறுதியை
தருமல்லவா?
வாழிய எங்கள்
வீடு!
வளர்க்க எங்கள்
வீடு!
தடம் புரளாது
தரணியில் தமிழுக்காய்
வீடு நடைபோட
வேண்டும்!
தமிழின் சால்பை
என்றுமே பேண
வேண்டும்!

வாக்கெனும் அத்திவாரத்தால்
வலுவான வீட்டை
எழுப்புகவே!
தமிழே,
எழுப்புகவே!

நித்தியானந்தரும் பாதிரிகளும் ஐரோப்பா-தமிழக ஊடகங்களும்!!!

வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தமிழை சிதைக்கவே (தமிங்கிலத்தை வளர்த்து) உருவாகி உழைக்கின்ற சண் போன்ற தமிழக தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை சிவகாசிக்காரன் என்னும் வலைப்பதிவு எழுத்தாளர், பாதிரிகள்-நித்தியானந்தர் விடயத்தை வைத்து அருமையாக ஒப்பிட்டுள்ளார் .

நித்தியானந்தர் விடயத்தில் அவருடைய முன்னைய பதிவொன்றில் சமூகத்தை அருமையான கேள்விகள் கொண்டும் ஆராய்ந்துள்ளார். வலையுலகில் அதிகம் பயணிப்பதில்லை. போதியநேரம் இருப்பதில்லை. பயணிக்கும் சந்தர்ப்பத்தில் இவரது இவ்விரு பதிவுகளையும் வாசித்தபோது, இவரது இப்பதிவுகளை யாவருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் "நித்தியானந்தர்" விடயத்தை பலர் ஒரு கோணத்தில் பார்க்க, இவரோ இன்னொரு கோணத்தில் பார்த்திருக்கின்றார். சிவகாசிக்காரன் வலைப்பூ எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

சிவகாசிக்காரன் வலைப்பூ எழுத்தாளரின் குறித்த பதிவுகளைப் படிக்க, கீழ் உள்ள அவரது பதிவுத் தலைப்புகள் மேல் சொடுக்குக!
பரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...

நித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா?

Tuesday, March 30, 2010

தமிழகமே, அகதியை வல்லுறவு செய்தது நியாயமா?

ஈழநாட்டில் வாழமுடியாது அகதியாக தாய்வீடு வந்த திருமணமான பெண்ணை காவற்துறையினர் கற்பழித்த கொடூரம்.......கேவலம்........தமிழக மாண்புக்கே நேர்ந்த அவமானம் பற்றி தமிழகம் அமைதியாய் இருப்பது அழகாகுமா?

தன்வீட்டில் வாழமுடியாது தாய்வீட்டுக்கு வந்த திருமணமான ஏதிலிப் பெண்ணை வல்லுறவு செய்ய எங்கனம் மனம் வந்தது?

நெஞ்சை வாட்டி உருக்கி உருக்குலைய வைத்த செய்தியை இங்கு கீழே பதிவு செய்கிறேன்.
"தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

பொலிஸ்நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டுக் கொன்று விடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்துள்ளார்"




காமத்தை நெறியாய் ஒழுக, பாரததேசத்தில் படைக்கப்பட்ட காமசூத்திராவில்கூட "அடைக்கலம் புகுந்த பெண்ணிடம் உடலுறவு வைத்துக்கொள்ளுதல் கூடாது" என்று புத்திமதி உரைத்திருந்து என்ன பயன்?

ஏதிலித் தமிழ்ப் பெண்ணின் உயிரையே குடிக்கும் காமத்தை எங்கிருந்து பெற்றனர் காவல்த்துறை அதிகாரிகள்? தமிழகம் வந்ததிலும் பார்க்க, ஈழநாட்டிலேயே வாழ்ந்திருக்கலாம் என்றே அப்பெண்ணின் உறவுகளின் மனநிலை இன்று!!!!
கொடியவர்களிடம் இருந்து பாதுகாப்புத்தேடி தமிழகம் வந்தால், தமிழகத்தில் சட்டத்தைக் காக்கும் காவலர்களே கொடியவர்களாக இருப்பது கொடுமையோ கொடுமை!!!

இதுதான் கருணையில்லா நிதியின் சட்ட ஒழுங்கு?? அல்லது ஈழத்தமிழ் அகதிகளுக்குமேல் மட்டும் அவிட்டுவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனம் இதுவோ? தமிழகமும் பாதுகாப்பில்லை என்று ஈழத்தில் உள்ள ஏனையோருக்கு தோற்றத்தை உருவாக்கி, அகதிகளின் வருகையைக் குறைக்க செய்த சதியோ இது? அதுபோல் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை கற்புக்கு பாதுகாப்பில்லை என்று உணர்த்தி தமிழகத்தை விட்டு வெளியேற்ற மேற்கொண்ட தந்திரோபாயமோ இது?

யார் கண்டது கருணையில்லா நிதி இதுவும் செய்யும்..........இன்னமும் செய்யும்!!!!!!!

வாழ்க கருணையில்லா நிதியின் ஆட்சி!!!!! தொடரட்டும் ஆட்சி...........வீழ்ந்து நொருங்கட்டும் தமிழ் மாண்பு! தமிழ் மறம்!! தமிழ் குலம் !!!

Friday, February 12, 2010

வன்னியில் சிதைந்த தமிழ்ப் பிள்ளையின் வாழ்க்கையில் ஒளியேற்ற ஒரு வாய்ப்பு-உதவ முன்வாருங்கள்!!!!

கீழே உள்ள தொடுப்பை அழுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் கரங்களால் வன்னியில் சிதைந்துபோன ஒரு தமிழ் பிள்ளையின் வாழ்வில் ஒளியேற்ற ஒரு வாய்ப்பு:-

17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை: அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?

Sunday, January 24, 2010

புலம்பெயர்ந்த உறவுகளே, ஒருகணம் சிந்தியுங்கள்...........இவை உங்களுக்குத் தேவைதானா சொல்லுங்கள்?

கலைஞரும் தமிழுணர்வும் மானாட மயிலாடவும்...


மேல் உள்ள வலைப்பூ பதிவை ஒருகணம் படியுங்கள் என் இனிய உறவுகளே!

கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி இவையெல்லாம் எமக்குத் தேவைதான சொல்லுங்கள்? புலம்பெயர்ந்த உங்கள் நிதியில் பெருத்த இந்த நிறுவனங்கள் தமிழை சீர்குலைப்பதை அறியீரோ? உங்கள் பணத்தில் பெருத்து உங்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதித்த இந்நிறுவன தொலைக்காட்சிகளை கண்டுகளிப்பது மடமையல்லவா?
மடமையில் மூழ்கியிருப்பது எம்குலப் பெருமையாகுமா?

புலம்பெயர் தேசத்தில் உள்ள தோழர்களுடன் உரையாடியபோது சீர்குலையும் எம் இளையோரின் பண்பாட்டை எடுத்துரைத்தனர்.மனம் வெந்தது. பெற்றோரே, நீங்கள் இந்த தொலைக்காட்சிகளை அரவணைப்பது உங்கள் பிள்ளைகளின் பண்பாட்டை சீர்குலைக்க வழிசமைக்க ஏதுவாக்கும். மறவாதீர்!!!!!!!

Wednesday, January 13, 2010

குறள்கொண்டு விதி எழுது

தை பிறந்தால்
வழி பிறக்கும்;
தைதோறும் நம்பிக்கைக்கு
குறைவில்லை இவ்வண்ணம்!
ஆனால்;
இனிய தமிழே,
நம்பிக்கையை தளரவிடாதே!

ஊக்கம் முடியெனின்
வெற்றி குடியாகும்!
இனிய தமிழே,
வெற்றி குடியாகும்!
ஆக்கம் அதர்வினாய்ச்
செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
என்னும் வள்ளுவன்
குறளை மனதில்
பேணு!

இனிய தமிழே,
ஆக்கத்தை இழந்தது
ஒரு விசயமே
இல்லை ஊக்கம்
உள்ளவரை!
ஆக்கம் இழந்தேமென்று
அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
என்னும் வள்ளுவன்
மறையை மறந்திடாதே!

இனிய தமிழே,
நன்மையே அறுவடையாயின்
எத்துன்பம் வரினும்
வாடாது நட்ட
நாற்றை அறுவடை
செய்வாய்!
துன்பம் உறவரினும்
செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும்
வினை என்னும்
பொய்யா மொழியை
உரமாக்கிக் கொள்கவே!

தமிழே,
ஆருயிரே,
தெய்வப் புலவரின்
குறளை வைத்து
மதிகொண்டு நல்ல
விதி எழுது!



உறவுகளே,
பொங்கல் பொங்கட்டும்!
எங்கள் மங்காத
தமிழுக்கு சூழ்ந்தகலி
நீங்கட்டும்!
எங்கள் மொழி
ஓங்கட்டும்!
வையகம் எங்கும்
செழிக்கட்டும்!

வாழ்க வாழ்க
எம் இனிய
தமிழ் வாழ்க

வாழ்க வாழ்க
மூவேந்தர் மண்
வாழ்க

வாழ்க வாழ்க
வளமுற்ற வையகம்
வாழ்க