Monday, November 28, 2011

தனுசின் கொலைவெறியில் சிக்கிய தமிழ்

தனுசின் கொலைவெறி பாடல் தமிழ்திரையில் தமிழின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் அமைந்திருப்பதை தமிழ் ஆர்வலர் பலர் கண்டித்திருந்தனர். இதற்கு தனுசின் பதிலைப் பாருங்களேன்!

"நான் பொழுதுபோக்குத் துறையில் தொழில்புரிபவன். மக்கள் நேசிக்கும், மக்களைச் சென்றடையும் விதத்தில் பொழுதுபோக்கான அம்சங்களைக் கொடுக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

மொழியை வளர்ப்பதற்கு ஏராளமானோர் இருக்கிறார்கள். நான் அந்தத்துறையில் ஈடுபடவில்லை. மக்களின் ரசனைக்கு ஏற்ப காலத்துக்குத் தகுந்த வகையில் பாடலைக் கொடுத்திருக்கிறேன். தமிழாக இருக்கலாம், தெலுங்கு, ஹிந்தியாக இருந்தாலும் மக்கள் ரசனைக்கு ஏற்றவாறு இருந்தால் எப்போதும் வரவேற்பு கிடைக்கும். நான் அரசியலில் ஈடுபடுபவனும் அல்லன். ஆதலால் ஒருபாடல் அரசியலில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் கிடையாது"


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் பாடலைப் பார்த்தாரா? என்னும் கேள்விக்கு
"ஆமாம். இந்தப்பாடலை உருவாக்கிக்கொண்டிருக்கும்போது அவருடன் நிறைய நேரங்களைக் கழித்தேன். கொலவெறி பாடல் நிச்சயமாக வெற்றியடையும் என அவர் எனக்குக் கூறினார். சினிமாத் துறையின் ஜாம்பவான் என்ற வகையில் அவரது ஊகம் சரியாகத்தான் இருக்கிறது" என்று செருக்கோடு பதிலளித்துள்ளார்.


ரம் தறிக்கும் வியாபார நிறுவனங்களுக்கு மரநடுகையில் ஈடுபட்டு பசுமைப்புரட்சிக்கு பாடுபடும் தொண்டர்களின் பணியின் அருமை எப்படி புரியும்?

மது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களின் வலி திரையில் குடித்து புக்கு புக்கு என்று புகைதள்ளும் நடிகர்களுக்கு புரியுமா?

தமிழ்மொழிக்காக உழைக்கின்ற பேராசிரியர்கள்,தமிழ் ஆர்வலர்கள்,மொழிப் பற்றாளர்களின் களப்பணியின் சிரமம் குளிரூட்டிக்குள் இருந்து கொண்டு பாட்டெழுத்தி பாடுகின்ற இந்த திரைக்காரர்களுக்கு புரியவா போகிறது?

கமலை தமிழர் தலையில் தூக்கி தமிழ்மகன் என்று கொண்டாடுவர்! அவரது மகளுக்கு தமிழ் கொச்சையாகத்தான் வரும்! ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு 'தமிழ்' என்ற சொல்லை எழுதத் தெரியுமா கடவுளுக்குத்தான் வெளிச்சம்! தனுசின் சமூக அக்கறையை அவரது பேட்டி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது! இப்படியொரு கூட்டணி இருந்து பாட்டெழுதினால் பாட்டு தமிழுக்கு வளமாகும் என்று எந்த மூடனும் எதிர்பார்க்க மாட்டான்!

எத்தனையோ பாட்டுகள் தமிழை சிதைக்கும் வண்ணம் வந்து மலையாக குவித்து தமிழ்திரையுலகில் காணப்பட இந்தப்பாட்டுக்கு எழுத வேண்டிய தேவையென்ன?
தனுசின் பேட்டிதான்!

அரசியலில் எத்தகைய தாக்கம் வருமென்று கவலைப்பட மாட்டாராம்!
அப்படியானால், மக்களுக்கு கலைஞரின் ஆட்சி பிடிக்காமல் போயுள்ளது தெளிவாகியுள்ளது. கலைஞரைத் திட்டி நாலுவரி எழுதி பாட வேண்டியதுதானே? அதுதான் மக்களின் விருப்பம் ஆயிற்றே!!!!
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்புகளை மக்கள் விரும்புகின்றமையும் வெள்ளிடை மலையே! எனவே அதுபற்றியும் பாட்டெழுத வேண்டியதுதானே!!!! பொடா பாயும் என்று நடுக்கமாக்கும்!!!!!
அதுதான் தனக்கு வந்தால்த்தான் காய்ச்சலும் தலையிடியும் நோயாகத் தெரியும் என்பர்!

மக்கள் இரசனைக்கு ஏற்ப காலத்துக்கு தகுத்தபடி பாடல் கொடுப்பாராம்!
நமிதா அவிட்டுப்போட்டு ஆடினா மக்கள் ரசிக்காமலா இருக்கப்போகிறார்கள்? நமிதாவோடு அப்படியொரு ஆட்டத்தை போட்டு திரையிட வேண்டியதுதானே? இரசிகர்களின் அமோக வரவேற்பு இல்லாமலா போகும்!!!!!

என்ன மடத்தனமாக ஆணவத்தோடு பதில் கொடுத்திருக்கிறார் தனுஸ்! இதை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை!!! ரஜினி ஆதரவு கொடுத்ததாக ஒரு சில்லறைத்தனமான பதில் கொடுத்துள்ளாரே! ரஜினி தமிழ் காவலரா என்ன? அவர் சரி என்று சொன்னால் தமிழுலகம் தலையாட்ட வேண்டுமென்று எவனையா பட்டையம் எழுதிக் கொடுத்தான்?

சொகுசு வர்க்கத்துக்கு சமூக ஆர்வலர்களின் சிந்தனை என்றைக்கு இனித்திருக்கிறது...?

பிற்குறிப்பு 1:- அன்புள்ள தனுசுக்கு,
தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்பட்டுள்ளதைய்யா! தொல்காப்பியர்,வள்ளுவர் என்று பல தமிழ் புலவர் பாடுபட்டு உழைத்ததால் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்ததா? இல்லை! அவர்களின் ஏடுகளை வீடு வீடாக மடம் மடமாகத் தேடித்திரிந்து அலைக்கழிந்து பாடுபட்டு கண்டுபிடித்த சாமிநாதையர்,சி.வை.தாமோதரம்பிள்ளை போன்ற சான்றோரின் வியர்வையால் கிடைத்தது! அந்த தமிழில் மோகத்தை ஏற்படுத்தும்படி பாட்டெழுதி பாட யாரும் தங்களைக் கேட்கவில்லை! ஆனால் தமிழுக்காக உழைத்த சான்றோரின் வியர்வைத்துளிகளை வீணாக்கும் வகையில் பாட்டெழுத முனையாதீர்!!!! சமூக அக்கறை அற்றவன் கலைஞன் என்று கூறத்தகுதி அற்றவன்! நினைவில் கொள்க!

பிற்குறிப்பு 2:-


சரி; ஈழத்தமிழரின் படைப்பொன்றை இணைத்திருக்கின்றேன்! என்ன அருமையான பாடல்! தனுசின் கொலைவெறி கேட்டு இதயம் கல்லாக்கிப் போனவர்களின் இதயத்துக்கு இதமாக இந்தப்பாடல் உதவும் என்று நம்புகின்றேன். தயவுசெய்து யாரேனும் தனுசுக்கு இந்தப்பாட்டை காட்டுங்களேன்! கொலைவெறியின் இழிநிலையை அவர் அப்போதுதான் புரிந்து கொள்வார்!

3 comments:

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். "சொகுசு வர்க்கத்துக்கு சமூக ஆர்வலர்களின் சிந்தனை என்றைக்கு இனித்திருக்கிறது...?" அருமையான கருத்துரை.தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"