Thursday, December 18, 2008

தமிழ் திரைப்படங்களும் சமூகமும்-என் பார்வையில்

இலக்கியத்தின் ஒரு முகம்தான் திரைப்படங்கள். திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் ஆழமானது. இன்றைய ஊடகங்களில் மக்களுக்கு இலகுவாக செய்தியைக் காவக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகமாக திரைப்படங்கள் விளங்குகின்றன. மக்கள் திலகம் எம்ஜியாரை முதலமைச்சராக வந்து அசைக்க முடியாத ஆட்சியின் மூலம் தமிழகத்தை அழகுபடுத்த வைத்ததும் திரைப்பட ஊடகம்தான் என்பது வெள்ளிடைமலை. தமிழ்ப் பற்று இல்லாத ஜெயலலிதாவிடம் அவர் கட்சியினரும் அவரை முதலமைச்சராக்கி அழகுபார்த்த மக்களையும் சரணடையச் செய்திருப்பதும் திரைப்பட ஊடகம் செய்த மாயையே. ஏன் தமிழக முதலமைச்சராக இன்றுள்ள பலதடவைகள் முதலமைச்சர் பதவியை நுகர்ந்த திரு.மு.கருணாநிதியும் அழகான ஆட்சியை அமைத்த அண்ணாவும் திரைப்பட கதாசிரியர்களாக இருந்துள்ளமையை நினைவுபடுத்துவது சாலப்பொருத்தமாகும். எனவே திரைப்படங்கள் மக்களை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்த நாட்டின் ஆட்சியையே தீர்மானிக்கும் வலிமையுடைய ஊடகம் என்றால் மிகையாகாது.சமூகத்தோடு ஒன்றிவிட்ட திரைப்படங்கள் பற்றி எழுதவேண்டும் என்ற நான் பலநாளாக சிந்தித்த வண்ணமேயிருந்தேன். இன்று நாளும் கோளும் அதற்கு வழிசமைத்த்விட்டது.ஆதலால் திரைப்படங்கள் எனக்குள் வரைந்துள்ள சித்திரங்களை பகிரவிளைகின்றேன்.

நான் முதன்முதலில் பார்த்த திரைப்படம் முத்து. அன்று தொட்டு ரஜனி படங்களில் ஒருவித ஆதீதபற்று. தாயைப் போற்றும் வசனங்கள், கருத்துகள் என்பன ரஜனி படங்கள் கவரக் காரணமாயின. ஆனால் திரைப்படங்கள் என்றால் என்ன? அதன் தாக்கம் என்ன? திரையுலக வாழ்கை எப்படிப்பட்டது? எனபன விளங்கத்தொடங்க, சிறுவட்டத்துக்குள் திரைப்படங்களை இரசித்த நான், சமூகப் பார்வையோடு திரைப்படங்களை நோக்கமும் பக்குவத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.

திரைப்பட வரலாற்றின் ஆரம்ப காலகட்டத்தில் கர்ணன், இராஜ இராஜ சோழன், வீரபாண்டிய கட்டப் பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கந்தன் கருணை, திருவிளையாடல், திருமால் பெருமை போன்ற சமூகத்தலைவர்கள், பண்டைய மன்னர்கள், புராண இதிகாச நாயகர்கள்,தமிழுணர்வாளர்கள் ஆகியோரின் வாழ்கையையும் வரலாறுகளையும் படமாக்கிய தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் பாராட்டவேண்டியது சமூகத்தின் கடமை.

சமூக நோக்கத்தோடு திரையை அளக்கத்தொடங்கிய நாள் தொட்டு, தமிழ் திரைவரலாற்றின் ஆரம்ப காலப்பகுதியில் உருவான சமூக விழிப்புணர்ச்சிப் படங்கள், சமூக நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட படங்கள் போன்று இன்றைய காலத்திலும் வரமாட்டாதா என்ற ஆதங்கத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கினேன். பாரதி என் காத்திருந்த தாகத்துக்கு கிடைத்த ஓர் நல்ல விருந்து. பாளையத்து அம்மன் பட வெற்றியால் பல அம்மன் கதைப்படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் பாளையத்து அம்மன் படமாயினும் சரி, ஏனைய அதனைத் தழுவி உருவாகிய சமயக் கதைப்படங்களாயினும் சரி வியாபாரமாக்கப்பட்ட ஆன்மீக அறியாமையையே எனக்கு சுட்டிக்காட்டியது.

சமூக நோக்கத்தோடு திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருந்தபோதும் நல்ல கதையம்சத்தோடு உருவாகும் திரைப்படங்களையும் இரசிக்கும் ஆர்வம் இன்றும் என்னுள் உண்டு.அப்படி நான் இரசித்த திரைப்படங்களை பட்டியல் இட்டால் அது பொதுவாக எல்லோராலும் இரசிக்கப்பட்ட திரைப்படங்களாகவே இருக்கும்.

தம்பி நான் காலம் தாழ்த்தி பார்த்த படம். என் நெஞ்சுக்குள் ஆழமாக தாக்கத்தை உண்டுபண்ணிய படம். பிரசாந்தின் ஏதோ ஒரு படத்தைப் பார்த்து காதலர்களான நண்பர்களை திருமணம் செய்து வைக்கும் பிரசாந்தின் நிழற்படத்தை ஞாயிறு வீரகேசரியின் சினிமாப் பக்கத்தில் பார்த்த ஞாபகம் இன்றும் உண்டு. தம்பி படம் பார்த்து திருந்திய அடாவடிக்காரர்கள் பற்றிய செய்தியை நான் பார்க்கவேயில்லை. அல்லது ஒருவேளை தம்பி படத்தை பார்க்காமல் விட்டதுபோல் தம்பி படம் பார்த்து திருந்தியவர்கள் பற்றிய செய்தியையும் பார்க்கத் தவறிவிட்டேனோ தெரியவில்லை. தம்பி படத்தின் அருமையை உணராது தவறவிட்ட என்னைப் போல் பலர் இருக்கலாம். அவர்களிடம் நான் வேண்டுவது ஒரு முறையேனும் பாருங்கள் என்பதைத்தான். இதே பொருளை மையமாக வைத்து பிரகாஷ்ராஜ் நாயகனாக நடித்த தாயா திரைப்படம் என் நெஞ்சை பார்த்தபோது ஈரமாக்கியது.

தூய தமிழில் உருவாக்கப்பட்ட வாழ்த்துகள் படம் நன்றாக ஓடவில்லை என்று அறிந்ததுமே ஒரு இனம்புரியாத வேதனை என்னை சூழ்ந்து கொண்டது.சீமானின் தமிழ்பற்றுக்கு தலைவணங்காமல் இருக்கமுடியவில்லை. சீமானைப் போன்ற தமிழ் உணர்வாளர்கள் திரையுலகத்திற்கு இன்னும் அதிக எண்ணிக்கையில் ஊடுருவ வேண்டும்.
தமிழ் M.A படம் சிறந்த படம் என்று நான் சான்றிதழ் வழங்கவேண்டியதில்லை. ஆனால் தமிழ் படிக்க ஆசை கொள்ளும் மாணவர்களிடம் பயத்தை உருவாக்கிவிட்டதோ என்ற ஐயம் எழமாலும் இல்லை.

தசாவதாரம் எல்லோராலும் மெச்சப்பட்ட படம். ஆனால் கமலின் திறமைதான் அங்கு உண்டேயொழிய வேறு எதுவுமேயில்லை.தசாவதாரத்தில் கமலுக்கு ஏன் தான் தேவையில்லாத சைவ-வைணவ பிரச்சினைகளை எழுப்பும் கதை தேவைப்பட்டதோ தெரியவில்லை. அவரால் கிருத்தவ-இசுலாமிய சண்டைகளை படமாக்க முடியுமா?
கிருத்தவ இசுலாமிய மதமாற்றத்திற்காய் அரங்கேற்றப்பட்ட சைவ வைணவ ஆலயங்களை அழித்த வரலாறுகளை திரைக்கு கொண்டுவரும் திறன் உண்டா? இவை நான் அவரிடம் தொடுக்கின்ற கேள்விகள். அவ்வாறு அரங்கேற்றின் அது சமூகப்பிரச்சினைகளை உருவாக்கும் என்பது யதார்த்தமானது. சிலவேளைகளில் வேத நெறி பண்பாட்டு மக்களிடம் அதிக சகிப்புத்தன்மை இருப்பது அவருக்கு சாதகத்தை உண்டுபண்ணிவிட்டதோ தெரியவில்லை. மற்றம்படி நான் அவரின் திறன்களை இரசிக்கத் தவறியதில்லை. அன்பே சிவம் அழகான தமிழ்ப் படங்களில் அழியா அழகுடையது என்றால் மாற்றுக் கருத்து இருக்குமா என்ன சொல்லுங்கோ?

நல்ல கதையம்சத்தோடு கூடிய காதல்ப் படங்கள், குடும்பப் படங்கள் என்று ஏராளம் என் நெஞ்சைத் தொட்டபடங்கள் உண்டு. வாரணம் ஆயிரம் அப்படியான ஒரு படம். சூரியாவின் திறமையோடு நல்ல கதையும் கூடி பொழுதுபோக்குக்கு பார்க்கக் கூடிய நல்லதரமான படமாக செதுக்கப்பட்டுள்ள படமே வாரணம் ஆயிரம். அடிதடி வெட்டுக் குத்து என்று தெரு தாதாக்களை உருவாக்கும் விஜய், அஜித்,சிம்பு,தனுஸ், இவர்கள் எல்லாம் திருந்தவேண்டும் இந்தப்படத்தில் சூரியாவின் உழைப்பைக் பார்த்தேனும். விஜயின் திருப்பாச்சி பார்ப்பவனாயினும் சரி, குருவி பார்ப்பவனாயினும் சரி அடிதடியில் பற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாக வாய்ப்புண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

பெற்றாரிடம் அன்போடு நான் வினாவுவது உங்கள் பிள்ளைகளின் சிறுபிராயத்தில் நல்ல சமூகப் படங்களை, பண்பாட்டுப் படங்களை, சமயக் கருத்துப் படங்களை பார்க்க வழிசமையுங்கள். நடப்படும் நல்ல பயிர்களால் விளைச்சலும் நல்ல விளைவையே கொடுக்கும். சிறு பிராயத்தில் முத்து படம் திரைப்படத்தை அறிமுகப்படுத்தியிருந்தாலும் எனக்கு, என் தாயாரும் பாட்டனாரும் சிவாஜியின் மன்னர் வரலாற்றுப் படங்களையும் கடவுள் படங்களையும் பார்க்கவே அதிக சூழலை ஏற்படுத்தினர். திரைப்படம் பார்க்காதே என்று தடுப்பது கடினமோ கடினம். சாத்தியம் அற்றது. ஆனால் நல்ல படங்களை அறிமுகம் செய்வது இலகுவானது. அதைத்தான் என் தாயார் செய்தார்.
அறிமுகம் நல்ல படங்களாக இருந்துவிட்டால் "குருவி" அருவியில் கொட்டப்பட்ட ஒருதுளி மையைப்போலாகிவிடும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

இங்கு என் அறிவுக்கு எட்டிய திரைப்படங்களை என் உணர்வுகளோடு உறவாடிய படங்களை கருத்தில்கொண்டு சமூகத்திற்கும் குறிப்பாக பெற்றோர்களுக்கு ஒரு செய்தியை வழங்க எண்ணி தீட்டியதே இவ்வாக்கம். எனவே நல்ல தரமான பல படங்களை நான் தவறவிட்டிருக்க நிறையவே வாய்ப்பு உண்டு. கடலளவு விரிந்து கிடக்கும் திரைப்படங்களில் நான் கிணறளவு பரப்பை ஆராய்ந்து முத்துகள் எடுத்து கோர்த்த ஆக்கமே இது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

ஐந்தில் வளையதாது ஐம்பதில் வளையுமா......... என்ன சொல்லுங்கோ?

Sunday, November 2, 2008

இரத்மலானையில் ஓர் சைவச் சொத்து

பிள்ளையாரிடம் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று தொடங்கி சங்கத் தமிழ் மூன்றும் தா என்று வேண்டுகிறார் ஔவையார் . ஆம்; நான் கல்லூரிக்குள் நுழையும்போது கல்லூரியில் வீற்றிருக்கும் கற்பக விநாயகப் பெருமானின் திருவருளை வணங்காது உள் நுழைவதில்லை. கல்லூரிக் காலத்தில் நாள்தோறும் கற்பக விநாயகனின் நல்லருளாட்சியை நுகர்ந்த அவன் அடியார்களில் நானொருவன் என்பதில் மகிழ்வோடு கூடிய பக்தி எனக்கு.கல்லூரியில் உயர்தரம் படிக்கும் காலகட்டங்களில் சில துர்சூழல்களால் நான் எதிர்கொண்ட துயர்களையெல்லாம் தூர ஓடச் செய்தவன் கற்பக விநாயகன். நான் தவறு விட்டபோதெல்லாம் என் காதுக்குள் வந்து சொல்வது அவன் வழமை. என்மீது பழிசுமத்தியவர்களை வெட்கித் தலைகுனிய வைக்கவும் அவன் பின்னின்றதில்லை.என் கல்லூரி வாழ்வியலோடு அவனது அருளாட்சி கமழ்வது இன்றுகூட என் அகத்தினில் அது தொடர்வது எல்லாம் எம்பெருமான் சிவன் செயல்தான்.
கற்பக விநாயகன் எங்கள் கல்லூரியில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொதுவானவன். எல்லோருக்கும் எல்லோரும் சொல்வது இந்தக் கோயிலில் சக்தியுண்டு என்ற வாசகத்தையே!


இரத்மல்லானை என்றால் இரத்-மல் என்று சிங்களத்தில் பிரித்து சிவப்பு-மலர் என பொருள் கொள்ளலாம். இராவணன் சிவப்பு மலர்களால் சிவபெருமானை வழிபட்ட இடம் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது எனபர். குறித்த இரத்மல்லானையில் கோட்டை இராச்சிய காலத்தில் சிங்கள மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயத்தினை போர்த்துக்கேயர் இடித்தழித்தபின்னர் கோயில் இல்லாக்குறையுடன் இவ்வூர் விளங்கியது. இந்திய வம்சாவளித் தமிழர் பிரசாவுரிமை சட்டத்தின் அடிப்படையில் இலங்கை பிரசைகள் அல்ல என்று இலங்கையரசால் திருப்பியனுப்பப்பட முன்னர் இங்கு இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழ்ந்தனர். எனவே இங்கு இந்துக் கல்லூரி எனும் பெயரில் சைவக் கல்லூரியை நிறுவிய தமிழ்த் தலைவர்கள் சைவப் பாராம்பரீயத்துடன் தமிழ் மாணவர்கள் படிப்பதற்கு வழிசமைத்தனர். எனினும் கோயில் இல்லாக்குறை காணப்பட்டது. குறித்த குறையை 1995களின் பின்னர் அதிபர் திரு.ந.மன்மதராஜன் அவர்களின் அயராத முயற்சியால் பல சைவத் தலைவர்கள், ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் யாவரும் ஒன்றுகூடி கற்பக விநாயகர் எனும் திருப்பெயருடன் பிள்ளையார் ஆலயம் அமைத்து அங்கு சைவ மறுமலர்ச்சிக்கு அத்திவாரம் இட்டனர்.( குறித்த சிதைவுகளுடன் கூடிய சிவாலயமும் இன்று பராமரிக்கப்படுகின்றது)

தற்போது அதிபர் திரு.ந.மன்மதராஜன் அவருடைய அரும் முயற்சியாலும் ஆசிரியர்களின் பங்களிப்பினாலும் மாணவர்களின் உதவியினாலும் குறித்த கற்பக விநாயகர் ஆலயம் பெருப்பிக்கப்பட்டு மீள்பிரதிட்டை பண்ணப்பட்டுள்ளது.பெருப்பிக்கப்பட்டு மீள் பிரதிட்டை செய்யப்பட்டு விளங்கும் கற்பக விநாயகர் ஆலயத்தின் ஒளிப்பதிவை என் உற்றதோழன் கஜந்தன் youtubeஇல் இனைத்து எனக்கு youtubeஇன் url ஐஅனுப்பிவைத்தார்.யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு இணங்க இங்கு அந்த youtubeஇல் உள்ள ஒளிப்பதிவை இணைத்துள்ளேன். அத்தோடு ஆலய ஆரம்பத் தோற்றத்துக்குரிய புகைப்படங்களையும் இங்கு இணைந்துள்ளேன்.எங்கள் கல்லூரியில் எழுந்தருளி நல்லாட்சிபுரியும் கற்பக விநாயகனின் திருவருள் தங்களையும் ஆள எல்லாம் வல்ல அவனது திருவடிகளை தொழுகின்றேன்.

Saturday, October 18, 2008

இலங்கைத் தமிழரின் துன்ப வாழ்வியலை தீட்டிய ஓவியன் என் நண்பன் பாரதி

நான் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் செட்டம்பர் விடுமுறைக்கு தமிழகத்திற்கு என் அன்னையிடம் சென்றிருந்தவேளை என்னோடு ஒன்றாக கல்லூரியில் கல்விபயின்ற ஆருயிர்த் தோழன் காந்தரூபனூடாக பழக்கமான முகம்-பாரதி.
நண்பனின் நண்பன் நண்பனாகும் மேன்மை நட்பின் அழகுகளில் ஒன்றாகும். எனக்கும் பாரதிக்கும் இப்படி காந்தன்(காந்தரூபனை இப்படித்தான் அழைப்பது என் வழமை) நட்பெனும் பாலத்தை வரைந்தான். இலங்கைக்கும் தமிழகதிற்கும் வரையப்பட்ட சேதுபாலம்(இராமபாலந்தானப்பா?) போல் எமக்கு காந்தன் இட்டபாலம் நட்பை சுவைக்க வழிசமைத்தது.

நண்பன் பாரதிக்கு இலங்கைத் தமிழர்பால் தணியாத பாசம்.தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பர். அதை பாரதி எனக்கு ஓவியமாய் செதுக்கிகாட்டினான்.

அவன் அன்று எனக்கு தான் எழுதியதாகக்காட்டிய கவிதைகள் என்னை பிரமிக்கவைத்தது. சும்மா, நேரம்கிடைக்கும்போது கிறுக்கும் எனக்கு அவனின் கவிதைகள் காவியமாய்த் தெரிந்தன.

பாரதி தமிழால் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஓவியம். எட்டயபுர பாரதியாக அவனைத் தமிழ் தீட்டிமுடிக்க வாழ்த்தும் அவனது நலன்விரும்பிகளில் நானும் ஒருவன் என்று இங்கே செதுக்க விரும்புகின்றேன்.

அதுசரி இப்போது ஏன் நண்பன் புராணம் என்று தோன்றுதா?
நண்பன் சாதித்தான் என்றால் பெருமைதானே சொல்லுங்கள்? அதுதான் இந்தப் பதிவு!

கவிஞனாகவும் குறும்பட இயக்குனராகவும் நடிகனாகவும் என்று பல்வேறு முகங்களை பூண்டு சாதித்து நிற்கிறான் என் நண்பன் பாரதி.

செந்தணலும் சிறுதூறலும் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளான்.அதுவும் ஈழத்தமிழரின் துயரவாழ்வை தனது கவித்தமிழில் தீட்டியுள்ளான் எனும்போது எப்படி பெருமைப்படாமல் இருக்கமுடியும் சொல்லுங்கள்? இக்கவிதைத் தொகுப்பை அவன் இலங்கைத் தமிழருக்கு சமர்ப்பணமாக்கியுள்ளமை இத்தொகுப்பில் இலங்கைத் தமிழரின் துயரை எவ்வளவு அனுபவித்து எழுதியிருப்பான் என்பதை உணரமுடிகிறது.
செந்தணல் எனும் உபதலைப்பில் இலங்கைத் தமிழரின் இன்னல்களைத் தீட்டவே அவனது எழுதுகோலின் மையைப் பயன்படுத்தியுள்ளான்.

"மார்தட்டி இறப்போம்
தமிழ்குடிகள் நாங்களென்று"

என்ற பாரதியின் கவிவரிகளை திரு பழநெடுமாறன் ஐயா தனது நூல் அறிமுக உரையில் சுட்டிக்காட்டி பூரிக்கின்றார். உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் ஐயா அணித்துரையில்,


எங்கள் வறுமைதான்
உங்கள் செழுமைக்கு ஆகாரம்!
எங்கள் எளிமைதான்
உங்கள் வலிமைக்கு ஆகாரம்!!

என்ற பாரதியிம் கவிவரிகளை அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழைகளின் குமுறலாக் காண்கின்றார்.பழநெடுமாறன் ஐயாவும் காசி ஆனந்தன் ஐயாவும் பாரதியின் செந்தணலை உரசிப் பார்த்து சுத்தத் தங்கம் என்று அணித்துரை எழுதி குறிப்பால் அறிவித்தபின் அங்கு எனக்கென்ன வேலை? ஆதலால் நான் சிறுதூறல் எனும் உபதலைப்பில் பாரதி படைத்த கவிகளை நூல் ஆய்வென்று தம்பட்டந்தட்டிக் கொண்டு என் நண்பனின் சிறுதூறலில் நனைந்து பெற்ற கவியின்பத்தை பகிருகிறேன்.

கவிஞன் ஆனபின் அவனுக்கு எல்லைகள் கிடையாது.அவனது எழுதுகோலுக்கு கறுப்பு மையை விட்டாலும் சரி,நீல மையை விட்டாலும் சரி அவன் விரும்பியதை எழுதியே தீரும்.காதல், சமூகம் என்று என் நண்பனின் பார்வைகள் பரவத்தவறவில்லை. காதலை எழுதி கவிஞர் என்று முத்திரை குத்தும் இன்றைய கவியுலகில், சமூகம் பற்றிய பார்வை, தான் வாழும் காலத்தை பதிவு செய்யவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் போன்ற பல்வேறு உயர்ந்த சிந்தனைகளோடு காதலை ஒரு உணவுக்கு சேர்க்கும் உப்புபோல் தனது தொகுப்பில் கையாண்டுள்ளான் என்பதே சாலச் சரியானது.


கம்பன் கவியெழுத காதல் ஒரு பொருள். ஆனால் கம்பனின் கவிதை காதலில் தங்கியில்லை. அவனின் தமிழில்த்தான் தங்கியுள்ளது.அகநானூறு எழுதிய அன்றைய புலவர்கள் புறநானூறு எழுதத் தவறவில்லை.

புறநானூறு எழுதவேண்டிய சூழலில் அகநானூறு எழுதிக் கவிஞர் என்று மார்தட்டுவோர் தவிச்சவன் வாய்க்கு கிட்டிய கடல்நீர் போன்றவர்கள்.

"உன்னுடல் நிறத்திடம்
தோல்வியுற்ற செந்தணலிடமே
உனதுடலைப் பரிசளித்துவிடு" என்று காதல் எனும் பெயரில் அரங்கேறும் காமப்பசிக்கு சாட்டையடிக்கும் பாரதி,


"கால்கொலுசின் ஓசைதனைக்
காணாமல் சிதறடிக்க
முத்துச்சிரிப்பைச் சொத்தாக்கியிருப்பாள்"

என்று தன் கவிக்கு உருவகித்த காதலியை கொஞ்சவும் செய்கின்றான்.
"இவர்களின் காதல்
முகமூடிகள் ஒட்டுமொத்தமாய்
சுக்குநூறாகக் கிழியச்
சபிக்கிறேன் நான்!"

என்று போலிக்காதல்களை சபிக்கும் என் பாரதி,

"மாதவிலக்குக் காலமும்
விலக்கில்லை
மாதக்கடைசி என்பதால்!"
என்று வயிற்றுப் பசிதீர்க்க காமப்பசி தீர்த்துவிடும் தாசிகளின் வலிநிறைந்த இருண்டுபோன வாழ்க்கையை தீட்டியுள்ளான்.

மாப்பிள்ளை சம்பாத்தியம்
பதினைந்து மட்டும்
அவை குறிப்பிலேறியது!
பெண் சம்பாத்தியம்
கிடப்பில் போடப்பட்டு!!

என்று வரதட்சணைக் கொடுமையை தீட்டியுள்ளான். இப்படி சிறுதூறல் எனும் உபதலைப்பில் பொதுவாக சமூகம் சார்ந்த கவிதைகளைக் காணமுடிகின்றது. சமூகத்திடம் இருந்து பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து அவனது எழுத்து தீப்பொறிகளாக மலர்ந்துள்ளதென்பதை உணரமுடிகிறது.

அழுகுரல் எனும் குறுந்திரைப்பட இயக்குனராகவும் தனது திறனை சமூகத்தில் ஓவியமாக்கியுள்ளான் பாரதி. தனது திறமையை ஓவியமாகத் தீட்டும் போது தமிழ் சமூகத்தின் துன்பத்தை வர்ணமாகக் பயன்படுத்தியுள்ளது இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்னும் தத்துவத்தை உணர்ந்த படைப்பாளி பாரதி என்பதை பறைசாற்றுகின்றது.தவிப்பு எனும் வீ.மு.தமிழ்வேந்தன் என்பவரின் இயக்கத்தில் மலர்ந்த குறுந்திரைப்படத்தில் கதாநாயகனாக தனது முகத்தை பதிவு செய்த பாரதி நடிப்புத் திறனும் தன்னிடம் உண்டென்பதை அழுத்தமாக பதிவுசெய்துள்ளான். இலங்கைத் தமிழர் அகதிகளாக தமிழகத்திற்கு கடலில் பயணிக்கையில் எதிர்கொள்ளும் கொடுந்துன்பங்களை இக்காவியம் பதிவுசெய்துள்ளது.


தவிப்பில் வருகின்ற காவல்த்துறை அதிகாரியும் பாரதியின் அம்மாவாக நடிக்கும் நடிகையும் நடிக்கின்றனர் என்பது சற்று புலப்படுவதை தவிர்த்திருக்கலாம். எனினும் இயக்குனர் தமிழ்வேந்தனின் திறமையின் மீது கேள்விக்குறி எதனையும் இவை தோற்றுவிக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டியவிடயமாகும். பாரதி கதையோடு ஒன்றியிருப்பது நண்பனாய் நின்று நான் அவனை நினைத்து பெருமைகொள்ளும் விடயமாகும்.தமிழ்வேந்தனின் ஆளுமை ஓங்கி நிற்குமிடம் ஏன் பாரதி குற்றவாளி ஆக்கப்பட்டான் என்ற வினாவை பார்த்துக் கொண்டிருப்போர் மத்தியில் குறுப்படம் முடியும் தருவாய்வரைக்கும் ஏற்படுத்தி கதையோடு பார்ப்பவர்களை ஒன்றச் செய்துள்ளதன்மையாகும்.அதுதான் திரைக்கதை!பாரதியின் சோகம் நிறைந்த முகம் தமிழ்வேந்தனால் தவிப்பில் செதுக்கப்பட்ட மிகச்சிறந்த சிற்பம் எனலாம். சிற்பியும் செதுக்கப்படும் கல்லும் தரமானதாய் அமைந்தால்த்தான் சிற்பம் உயிர்பெறும் என்பர்.

பாரதியின் இயக்கத்தில் மலர்ந்த அழுகுரலில் எந்தவொருவரின் முகமும் காட்டாது அக்குறும்படம் பூத்திருப்பது வியப்புக்குரியதாகவுள்ளது. இயக்குனர் சீமானும் வெளியீட்டு விழாவில் இவ் வித்தியாசமான புத்தாக்க சிந்தனையை பாராட்டியுள்ளர். கதை தொடங்கியதில் இருந்து கதை முடியும் வரை அழுகுரல் ஓயாது கேட்டுக் கொண்டேயிருப்பது அழுகுரல் எனும் தலைப்பை இக்கதை ஏற்க ஏதுவாயிற்று. திருகோணமலை (சம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற திருக்கோணேசுவரம் இங்கே தான்னுண்டு. )எனும் இடப்பெயரை திரிகோணமலை என்று அருள்சீலன் வரையும் மடலில் தவறுதலாக எழுதியிருப்பது சற்று சங்கடமாக இருந்தது. எனினும் இத்தவறு இங்கு புறக்கணிக்கக் கூடியதே. இது ஒரு குறையல்ல.சிறு தவறு.

எனக்கும் பாரதிக்கும் பாலமாக இருந்த ஆருயிர் நண்பன் காந்தரூபன் பாரதியின் உழைப்பில் தோள் கொடுத்து நின்றதைக் காணும்போது மெய் சிலிர்க்கின்றது. எனது ஆருயிர் சகோதரி சியாமலாகௌரி பாரதிக்கு தோள் கொடுத்து நின்ற காந்தனுக்கு தோள் கொடுத்து உதவியமை அறிந்து மகிழ்வுற்றேன்.அழுகுரலில் அருள்சீலன் எனும் கதாப்பாத்திரத்தின் குரல் நண்பன் காந்தனின் குரல் எனும்போது மீண்டும் மீண்டும் அவன் குரலைக் கேட்க ஆசையாகவுள்ளது. (ஏறத்தாழ ஒரு வருடம் தாண்டிவிட்டது நண்பன காந்தனையும் பாரதியையும் பார்த்து. இனி எப்போது நேரில் பார்ப்பேன் என்று இறைவனுக்குத்தான் தெரியும்) செந்தணலும் சிறுதூறலும் புத்தகத்தின் அட்டைப்பட வடிவமைப்பில் காந்தரூபன் கைகள் விளையாடியுள்ளது பெருமைப்பட வைக்கின்றது.

இப்படி என் நண்பன் ஒரு கவிஞனாய்,இயக்குனராய்,நடிகனாய், இன்னும் திரைப்படத்துறையில் காணப்படும் பல்வேறுபட்ட துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவனாய் விளங்குகிறான் எனும்போது ஒரு கம்பீரங்கலந்த................ ஆணவம் கலந்த மகிழ்வு பூப்பது இயல்புதானே!

இந்த குறுந்திரைப்படங்களினதும் கவிதைப் புத்தகத்தினதும் வெளியீட்டு விழாவில் பழநெடுமாறன் ஐயா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குனர் சீமான்,உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மற்றும் பல தலைவர்கள்,அறிஞர்கள் விருந்தினர்களாக வருகைதந்து சிறப்புரைகள் ஆற்றியது என் நண்பனுக்கும் அவன் சக கலைஞர்களுக்கும் வழங்கப்பட்ட கேடயமே என்றால் அது மிகையல்ல.

நண்பனே நீ வாழ்க. உன் எழுத்து வாழ்க. உன் நடிப்புத் திறன் ஓங்குக. இயங்குனராக அவதரித்துள்ள உன் முகம் மேலும் மேலும் செழிக்கட்டும்.

உன் சமூகப் பொறுப்புள்ள சிந்தனை ஆயிரம் ஆயிரம் சமூகப் பொறுப்புள்ள சிந்தனையாளர்களை மலரச் செய்யட்டும்.

நண்பா, தோழனாய் என்றும் உனக்கு என் தோள்கள் துணையிருக்கும்.
உன் வளர்ச்சி என் எழுத்துக்கு எழுச்சியைக் கொடுக்கட்டும்.

குறித்த செந்தணலும் சிறுதூறலும் கவிதைத் தொகுப்பை நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்க்ள்-

கானல் பதிப்பகம்
எண்:3,ருக்மணி நிலையம்
ஞானமணி தெரு, ஜாபர்கான்பேட்டை
சென்னை- 83


பாவேந்தர் மக்கள் மன்றம்
2877. நாணயக்கார செட்டித்தெரு
தெற்கு வீதி
தஞ்சாவூர்- 613 001


தமிழம்மா பதிப்பகம்
59,விநாயகபுரம்
அரும்பாக்கம்
சென்னை- 600 106


பாபு அச்சகம்
நகராட்சி அலுவலகம் எதிரில்,
விழுப்புரம்

(வெளியீடு நடைபெற்று சில மாதங்கள் கடந்துவிட்டபோதினிலும் அண்மையில்த்தான் என் கைகளுக்கு குறித்த குறுந்தகடுகளும் நூலும் எட்டியது. ஆதலாலேயே தாமதமாகப் பதிவு எழுதவேண்டியதாயிற்று. )

Wednesday, October 8, 2008

சரத்குமார் மெல்லத் திருந்துகிறாரா அன்றி நன்றாய் நடிக்கிறாரா?

அண்மையில் நடிகர் சரத்குமார் இலங்கைத் தமிழர் விடயத்தில் வாய்திறக்காது கர்நாடகத்தில் அடிவாங்கிய தமிழ் சினிமாவுக்காக போராட்டம் அறிவித்தபோது ஏற்பட்ட ஆதங்க கவலையில் அவரைப்பற்றி ஒர் கட்டுரை எழுதியிருந்தேன். மாற்றுக் கருத்து இன்றுவரையில்லை. அவரது கட்சி சார்பாக, அண்மையில் வெளியிட்ட அறிக்கை சற்று ஆறுதலாக இருந்தது. எனினும் கலைஞரிடம் எதையும் எதிர்பார்க்காது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் நடிகர் சங்கம் மூலம் ஓர் ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தினால் அது போற்றக் கூடியது. தமிழ் சினிமா கர்நாடகத்தில் அடிவாங்கியபோது வெகுண்டெழுந்தவருக்கு நிச்சயமாக இலங்கைத் தமிழருக்காக வெகுண்டெழ பஞ்சியிருக்காது என்று நம்புகின்றேன்.


எங்கள் பணமும்தானே இன்று பலகோடியில் முதலீடு செய்து திரைப்படங்கள் மலரக் காரணமாகவுள்ளது. எனவே நாங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்,இயக்குனர் சங்கம் என்பவற்றிடம் இவற்றை எதிர்பார்பது தவறாகா.

எனக்கு அரசியல் தெரியாது. இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் கண்ணீரும் கம்பலையாகவுமே நிம்மதியற்று வாழ்கின்றோம் என்பது மட்டும் நன்றாகத் தெரியும். சத்தியமாகச் சொல்லுகின்றேன் வேறு எதுவும் தெரியாது.


சரத்குமாரின் அறிக்கை

Thursday, October 2, 2008

தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளவேண்டிய கலை சொத்தாகும். வலைத் தளமொன்றில் தஞ்சைப் பெரிய கோவிலின் புகழ் தீட்டப்பட்டிருப்பது கண்டு அகம் குளிர்ந்தேன். நீங்களும் அகம் குளிர அவா கொண்டு இங்கு இணைந்துள்ளேன்.


பெரிய கோவில் பற்றி பிரசுரமான கட்டுரையை படிப்பதற்கு இங்கே அழுத்தவும்Wednesday, August 20, 2008

சரத்குமாருக்கு தமிழை உச்சரிக்கும் தகுதியில்லை.

என் தமிழக உறவுகளே,

நான் தமிழன் என்னும் உரிமையோடு உங்களுக்கு சில உண்மைகளைப் பரிமாறும் நோக்கில் எழுதுகின்றேன். நடிகர் சரத்குமார் என்று ஈழத்தமிழர் அவரை ரசிப்பர். ஆனால்? நடிகர் சரத்குமார் இலங்கைக்கு உலக இந்துமாநாடு நடந்தவேளை வந்திருந்தபோது முதல்முறை நான் நேரில் கண்டேன். அவரது திருமதியுடன் வந்திருந்தார்.
இலங்கையில் சக்தி தொலைக்காட்சி அலைவரிசையில் மின்னல் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி வருகை தந்திருந்தார்.அப்படி ஒருமுறை வந்திருந்தபோது சக்தி தொலைக்காட்சி நிலையத்தில் நேரிலே சந்தித்தேன் இரண்டாம் தடவையாக. நான் அன்று அங்கு வேறு ஒருதேவை காரணமாக சென்றிருந்தேன். அவரிடம் கையொப்பம் வாங்கவும் தவறைல்லை அம்முறை.
இலங்கைக்கு வந்தவர்.........இலங்கைத்தமிழரின் துன்பத்தை நேரில் கண்டவர்...............ஆனால் ஒருவார்த்தை தமிழகத்தில் ஈழத்தமிழர் பற்றி பேசினார் இல்லை. ஏன்?
இலங்கையில் அவரது திருமதியாரின் ராடன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் அரங்கேறவேண்டும்.சக்தி தொலைக்காட்சி இலங்கையின் சிங்கள பின்புலத்தையுடையது.எனவே அவரின் இலங்கை வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரே ஒரு நோக்கம்தான்.

இன்று இவர் நடிகர் சங்கத்தலைவர். கர்நாடகத்திற்கு எதிராக பெரிய அளவில் அமைதிப்போராட்டத்தை நடத்தியவர். உடனே எல்லோரும் இவர் தமிழ் உணர்வாளர் என்று முத்திரை குத்திவிட்டனர்.அதை பயன்படுத்தி நடிகர் ரஜனி கர்நாடகத்தில் மன்னிப்பு கேட்டதற்கு கண்டன அறிக்கைவேறு இவரிடமிருந்து.
அரசியல் கட்சிவேறு தொடங்கி உண்மையாகவே நடிக்கும் நடிகர் இவர்.
கர்நாடகத்தில் தமிழன் அடிக்கப்பட்டான் என்று கொதித்தெழுந்தவருக்கு ஈழத்தில் தமிழன் கொல்லப்படுவது கண்ணாலே கண்டும் தெரியவில்லை. கண்ணிருந்தும் குருடர்களாக!
ஒருவன் இல்லை இருவர் இல்லை............ஒரு இலட்சம் பேர் இறந்துவிட்டனர் யுத்தத்தால். பல இலட்சம் பேர் உயிர்காக்க நாடு விட்டு நாடு சென்று அகதியாய் வாழ்கின்றனர்.
உலக செய்தியாய் வந்துவிட்ட ஈழச்செய்தியை ஈழம் சென்றும் தெரியாத இவர் எப்படி தமிழ்பற்றுப்பற்றி பேசும் உரிமைபெற்றார்? கன்னட ரஜனியிடம் தமிழ்பற்றை அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கும் உரிமையை இந்த தமிழ் வேடதாரி எங்கனம் பெற்றார்?
கன்னடத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய துணிந்தவர் ஈழத்தமிழருக்காய் போராட்டம் செய்ய வேண்டி நாம் நிற்கவில்லை தமிழன் எனும் அடைமொழியைக் காட்டி அவரிடம்.
இலங்கை கடலோரத்தில் இறக்கும் தமிழக மீனவருக்காய் ஒரு ஆர்ப்பாட்டம்? இலங்கை அரசை இவருக்கு பகைக்கதுணிவு வராது. ஏனெனில் இலங்கையில் இவரின் மறைமுக வர்த்தகத்திற்கு ஆபத்துவந்துவிடக்கூடாதல்லவா! கர்நாடகத்தில் ரஜனி சொத்து வைத்துள்ளதாக கொக்கரித்த இவரிடம் கொக்கரித்தது நியாயமா என்று கேட்கும் உரிமை சாதரண ஒவ்வொருவருக்கும் உண்டே!
வேண்டுமென்றால் தமிழக உறவுகளே ஒரு விண்ணப்பம் உங்களிடம். இலங்கை அரசால் கொல்லப்பட்ட மீனவருக்கு ஆதரவாய் ஒரு உண்ணாவிரதபோராட்டத்தை நடத்தக்கோருங்கள்.
நடத்தினால் "தமிழக"உணர்வு உண்டு. இல்லாவிட்டால் வெறும் திரையரங்கு தாக்கியதால் ஏற்பட்டவிளைவுதான் தமிழ் திரையுலகின் போராட்டம் என்க.
நடிகர் சரத்குமார் தமிழராய் நடிக்கும் நல்ல நடிகர் என்க.அவ்வளவே. ( இவர்களுக்கு தமிழ்பற்றை காட்ட ரஜனி எனும் தனிமனிதன். அவ்வளவே இவர்கள் பற்று என்று உணர்க.)

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

ஈழத்தமிழர் வாழ்வியலை தலைப்பின் கருப்பொருளாய் கொண்டு கட்டுரை எழுத்தினால் அரசியல்வாடை அடிப்பதை தவிர்க்கமுடியாது.அதுதவிர்க்கமுடியாதது. தவிர்த்தால் பார்ப்பனீய ஊடகங்களைப்போல் என் எழுத்தும் தமிழால் சபிக்கப்பட்டுவிடும்.எனினும் அரசியல் வாடையைக்குறைக்க இந்த கட்டுரையில் விரும்புகின்றேன். எல்லாம் நல்லதற்கே!

நரகம் உண்டா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் இருக்கட்டும் ஒருபக்கம். நரகத்தைக் பார்க்கவிரும்பினால் வாருங்கள் இலங்கைக்கு. இங்கு தமிழர் நரகத்தில் வாழுகின்றனர் சொர்க்கத்தை உருவாக்கும் கனவில். உளியை எந்தி சிலர் சொர்க்கத்தை செதுக்கும் சிற்பிகளாய் நிற்கின்றனர்.
இதுதான் இலங்கையில் தமிழர் எனும் என் விளக்கம். பொருள் புரிந்தால் அப்பாடா என்று ஒரு பெருமூச்சு!

அதுசரி எங்கள் புலம்பெயர்ந்தோர்? அதுதானே என் எழுத்தின் நோக்கம் இப்போது.
ஆண்ட இனம் அடிமையாய் எங்கும். புலம்பெயர்ந்தவன் அகதி எனும் அடைமொழியில் அல்லல்படும் அவதி தனிக்கதை. தமிழன் மீது பாய்கின்ற பொருளாதார ஆயுதங்களை பொடிப்பொடியாக்க இவன் இரத்தத்தை பணமாக்கி உறவுகளுக்கு அனுப்பும் ஒருசாரார். குடும்பமாய் குடியேறி நிம்மதி தொலைத்து தென்னைமரத்தடியில் நுங்கு குடித்து நல்லூர் திருவிழாவில் பிரதிட்டை அடித்த அந்த பழைய நினைவுகளுடன் ஒருசாரார். இப்படி இப்படி பல வகைப்படுத்தலுள் ஈழத்தமிழினம் வாடுது புலம்பெயர்ந்து.
இவர்கள் சந்ததி? ஒரு மயூரன் இரண்டு மயூரன் இப்போது இருக்கிறான் அடுத்த சந்ததி எனும் அடைமொழிக்குள் தமிழ்மானத்துடன்.
கேட்கும்போது ஆனந்தமாயுள்ளது. (இதுயாரடா அந்த மயூரன் என்று என்னைக் கேட்காதீர்கள்............இறுதி உலகக்கிண்ண துடுப்பாட்டத்தை பார்த்தவர்களைக் கேளுங்கள்)

ஆனால் அதற்கடுத்த சந்ததி? எனக்கு தெரிந்ததற்கு புலம்பெயர்ந்துவாழும் அடுத்தசந்ததியை சேர்ந்தோரில் பலருக்கு தமிழ்மொழியில் எழுதத்தெரியாது.சிலருக்கு தமிழ் கதைத்தால் விளங்கும்.ஆனால் கதைக்கத்தெரியாது. அப்படியானால் எங்கே போகப்போகின்றது எங்கள் நாளைய சந்ததி?
உண்மையைச் சொன்னால் எனக்கு புலம்பெயர்நாடுகளில் தமிழ்கல்விப் கற்பித்தல் எவ்வளவுதூரம் வரவேற்கப்பட்டுள்ளதென்று தெரியாது.ஆனால் தமிழ் பயிலுவோர் சொற்பம் என்பது புரிகின்றது.

உலகில் ஒரே ஒரு இனந்தான் உள்ளது தன் இனத்தை இனப் பண்பாட்டைப்பற்றி அக்கறையற்றதாய். அது எங்கள் தமிழினந்தான். இன உணர்வாளர்கள் என்னை மன்னிக்கவேண்டும்.
ஆனால் உண்மையிதுதான். இன உணர்வாளர்கள் எனும் அடைமொழி உருவானது எதனால்? ஆயிரம்பேரில் ஒருவன் விசித்திரமானவன் விநோதமானவன் எனின் அவனுக்கு இயல்பாக அடைமொழி அவனுடைய இயல்போடு இணைந்து உருவாவது இயல்புதானே! ஐந்து நண்பர்களில் ஒருவர் சற்று பருமனாக இருந்தால் "குண்டா" என்று செல்லமாக மற்றைய நண்பர்களால் அழைக்கப்படுவதுயில்லையா? அதுபோல்த்தான் இதுவும். ஆறரைக்கோடி( இப்போது எவ்வளவு என்று தெரியாது) தமிழகத் தமிழர்களில் குறிப்பிட்ட சிலரையே இன உணர்வாளர்கள் எனும்போது எங்கள் தமிழினத்தின் தமிழ்ப்பற்றை இன்னும் சொல்வதற்கில்லை.அதிலும் சிலரின் தமிழ்வேடம் மாநிலத்திற்குள் மட்டும் தான். ரஜனிரை எதிர்க்கமட்டும்தான் தமிழ் உணர்வுவரும்.( சரத்குமாரைத்தான் சொல்லுகின்றேன்...........என்னடா புது வில்லங்கம் என்று தோன்றுதா? அவர் பெயரில் தலைப்பிட்டு புது கட்டுரையில் சந்திகின்றேன்.அதுவரை மண்டையைப்போட்டு குழப்பாமல் சிந்திக்கவும்.)

சரி......சரி........புலம்பெயர்தமிழரிடமே வருகின்றேன். தமிழ் உணர்வு உள்ளத்தோடு உறவாடவேண்டும். ஆனால் எனக்குத்தெரிந்த இரண்டு பாட்டிமார் தாம் சந்திக்கும் போது தமிழை மறந்துவிடுவது அவர்களது நோய். ஆங்கிலத்தில்தான் கதைப்பர். நான் நினைத்துக் கொள்வது ஓகோ இவர்கள் "ஸ்போக்கின் பிரக்ட்டிஸ்" பண்ணுகிறார்கள் என்று. இதே நோய்தான் புலம்பெயர்ந்த குடும்பங்களில் உள்ள பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது. "எங்கட புள்ள இங்கிலிசுல படிக்குதுல்லே" என்று நினைப்பதில் பெருமை. சரி ஆங்கிலத்தில் படிப்பது பெருமையாகவே இருக்கட்டும்.தமிழில் வீட்டிலே கதைத்தால்தான் என்ன? தமிழில் வீட்டில் கதைப்பதுமட்டும் போதாது. தமிழை படிக்கவைக்கவேண்டும். தமிழ் வரலாற்றை தெரியவைக்கவேண்டும். இலக்கணம், இலக்கியம் முறையாக படிப்பித்தல் வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்கும் உங்கள் பிள்ளைக்கு தமிழில் தேர்ச்சியிருந்தால் எத்தனை எத்தனை சேர்.பொன்.இராமநாதன்கள் உருவாக வாய்ப்புண்டு. இதுபோல் டோச்சு,பிரான்சு என்று தமிழும் பல மொழிகளில் வளருமே!

பெற்றோரே, தமிழை அறியாத பிள்ளைகள் தாய்ப்பாசத்தை உணர்வார்கள் என்று கனவு காணாதீர்கள்."மொழியபிமானம் சமய அபிமானம் இல்லாதவர் வாழ்வும் ஒரு வாழ்வா" தாமோதரம்பிள்ளையார் சாடுவது உரைத்தால் தமிழினம் மோட்சம் பெறும். அதுவரை தமிழின உணர்வாளர் எனும் அடைமொழி ஒருசிலரை அலங்கரிக்கத்தான் செய்யும். ஆனால் நான் கெஞ்சுவது அந்த அடைமொழியை வேடதாரிகளுக்கு வழங்கிவிடவேண்டாம் என்பதே.

Monday, August 18, 2008

அம்மா

அம்மா............
சைவமும் தமிழும்
தமிழ் மண்
நினைவும்
தந்தை தமையன்
தம்பி மீதுள்ள
பாசமும்
குருமாரிடம் கொண்ட
பக்தியும்
கந்த புராணம்
பெரிய புராணம்
கற்றுப் பெற்றதல்ல!
அம்மா நீ-தந்த
பாலாலே என்னுள்
வந்ததம்மா!

மறு பிறவி
நீ பெற்றால்
பத்துத் திங்கள்
ஒதுக்கிவிடு எனக்காய்-உன்
கருவறையை!
சிவ லோகம்
வைகுண்டம் சொர்கலோகம்
எதுவரினும் அது
துறந்து ஓடோடி
வந்திடுவேன் பாரிற்கு!
உன் ஓராட்டு
ஒக்க தமிழ்
மறை திரு
முறை திருமந்திரம்
ஏதேனும் வந்திடுமா?

இரசியா நங்கை

அழகான நங்கையரின்
தேசமிது!

அன்ன நடை
மின்னல் இடை
கொடி ஒக்க
மேனி
தசும்பொக்க தனங்கள்
பிரம்மன் செதுக்கிய
வதனம்
வாழைத் தண்டின்
வளத்தைப் பெற்ற
தங்கக் குறங்கு
பெண்ணழகுக் களஞ்சியம்
இந் நாடே!

இரசியா அழகு
மாந்தரின் அந்தப்புரம்

அரை குறை
அத்தவானம்
கிளுடையே கீழாடை
படத்திற்கு பஞ்சம்
அம்பலமாகும் அழகுகள்

அகத்திணை கண்டதெல்லாம்
கனவு
இங்கு அதெல்லாம்
நனவு

பாரிலே அழகு
வல்லியரின் வீடு
இரசியா தானாம்!

ஆயினும்
பூ இல்லை
பொட்டில்லை
கொழுநனை பூசிக்கும்
புனிதமான அகமில்லை

முழுமதி அழகுதான்
வாழின் தெரியும்-வாழ
இயலா இடம்
அது என்று!

மதியில் வாழின்
புரியும் பாரின்
இலாவணியம்!
இரசியா இளங்கொடியை
இல்லக் கிழத்தியாக்கின்
தமிழ் காரிகையின்
பேரழகு தானே
புரியும்!

Sunday, August 17, 2008

புத்தக வாசிப்பும் மென்பொருள் விளையாட்டுக்களும்(TV GAME)

"ஓடி விளையாடு பாப்பா ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று பாரதி குழந்தைகளை கொஞ்சுகின்றான். அந்தக் குழந்தைகள் வளமாக வளர்வது பெற்றார்கள், பள்ளி ஆசிரியர்களின் கைகளிலேயே உண்டு. ஒரு குழந்தைக்கு தாய்பால் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு நல்லபிள்ளையாக வளர்வதற்கு ஏற்ற சூழல் அமைவது அவசியமாகும்.அவற்றில் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை அறிமுகப்படுத்துவது பிரதானமானதாகும்.வாசிப்பு பழக்கம் என்பது சுய அறிவு வளர்சிக்கு அடிப்படையானது. ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பர். அதற்கு இன்றியமையாதது வாசிப்பு பழக்கம். கணனியில் விளையாட்டு மென்பொருட்களை ஏற்றி குழந்தைகளை விளையாடத்தூண்டும் இன்றைய சூழலில் வாசிப்பு பழக்கத்தால் வரும் நன்மைகளை அறியவைத்தல் பொருத்தம் என்று உணருகின்றேன்.குழந்தை வயிற்றில் இருக்கும்போதே குழந்தை வெளியுலகை உணரும் திறன் பெற்றுவிடுகின்றது. மருத்துவவிஞ்ஞானம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை நமது பண்டைய சில புராணக்கதைகள் கூட தெளிவுபடுத்தியுள்ளது. கர்ப்ப பருவத்தில் பிரகலாதன் இருக்கும்போது நாரதரின்மூலம் நாராயண திருநாம மகிமையை அறிந்துகொள்கிறான். அதன் பலனாக பிறந்தபின் நாராயணன் பக்தனாக மிளிர்கின்றான்.அதாவது குழந்தைப் பருவம் எதனையும் இலகுவில் கிரகித்து உள்மனதில் பதிவுசெய்யும் பருவமாகும். அந்தப் பருவம் தாத்தா பாட்டி சொல்லும் கதைகளில் கதாநாயகனாக வரும் பாத்திரத்தை உள்ளத்தில் இருத்தி அதுபோல் தாமும் வரவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும். எனவே அந்தப் பருவத்தில் நல்ல நல்நெறிக்கதைகளை ஊட்டவேண்டியது அவசியமானதாகும்.இன்று T.V GAME பிரபல்யமாகிவிட்டது. சிலர் இது பிள்ளைகளில் புத்திசாலித்தனத்தை கூட்டுகின்றதென்று வாதாடுகின்றனர். சில பெற்றோர் பிள்ளை ஆசைப்பட்டு கேட்டுவிட்டதென்று வாங்கி கொடுத்து அந்த ஆசையை நிறைவேற்றிவிட்டதாக அகம்பூரிக்கின்றனர். ஆனால் உண்மையில் நடப்பது T.V GAME இல் வரும் வன்முறைகளை ஆழ்மனதில் பதித்துக் கொள்கின்றனர். இன்று விரசமான T.V GAMEமும் வந்துவிட்டது.அரைகுறையாய் நிற்கும் பெண்ணின் மேனியில் சில பகுதிகளில் சுடப்படவேண்டிய குறி வந்துநிற்கும். உடனே குறிதவறாது சுட்டுவிட்டால் புள்ளிகள் கூடும். இப்படி பல வகைகளில் இவை வந்துவிட்டன.இவற்றை விளையாடும் பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி வளருவார்கள் என்று நீங்களே சிந்தியுங்கள்.என்னுடைய ஆய்வில்( ஆய்வில் என்றவுடன் நான் ஆயிரம்பேரை இதற்காக தெரிவு செய்து வளர்த்து பெற்ற அவதானிப்புக்களின் பேறு என்று முடிவுகொள்ளவேண்டாம். என்னோடு படித்த மாணவர்களை அவதானித்து பெற்றமுடிவு) நல்ல புத்தகங்களை சிறுவயதில் இருந்து வாசிப்போர் தவறானவழியில் போவது இல்லை என்றே சொல்லலாம். புத்தகத்தினை தொட்டே பார்க்காதவர்கள் தெரு தாதாக்களாய் உருவாகின்றனர்.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன? அறநெறி நூல்களை..........அறநெறிக்கதைகளை வாசிக்கும் குழந்தைகள் அறநெறி வழுவ வாய்ப்பு சொற்பமே.வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்கும் என்பர். சிறுவயதில் அறநெறிகதை படிக்கும் குழந்தைகள் வளரும்போது வாசிப்பதை விருப்பாக பொழுதுபோக்காக கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு பள்ளிப்புத்தகம் திறந்துபடிப்பது பஞ்சிபடும் விடயமாக இருக்காது. வளரும்போது இலக்கியப் புத்தகங்கள்........வரலாற்றுப்புத்தகங்கள்...........பத்திரிகைகள்.........நாட்டுநடப்புக்கள் என்று அவர்கள் தங்கள் அறிவை தாமே வளர்த்துக் கொள்வார்கள். நாட்டுக்கேற்ற நற்பிரசைகளாய் மலருவார்கள்.நாட்டின் தலைவர்கள்...........அறிஞர்கள்.........ஒழுக்கமுள்ளவர்கள்.......சமுகப் பிரதிநிதிகள்..............என்று எவர் வாழ்க்கையேனும் எடுத்து ஆராய்ந்திருந்தீர்களே ஆனால் அவர்கள் வாழ்க்கையோடு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உறவாடியிருப்பதை நன்குணரலாம். "என் புள்ள பொண்டாட்டி பேச்சைக்கேட்டு கைவிட்டுட்டான் பாரு" என்று கண்ணீர் வடிக்கும் பெற்றோரிடம் நான் கேட்கும் கேள்வி உங்கள் பிள்ளைக்கு நன்னெறி கதைகள் வாசிக்கும் பழக்கத்தை தூண்டினீர்களா சிறுவயதில் அவனிருக்கும் போது என்பதேயாகும். இன்று முதியோர் இல்லங்கள் பூக்கக் காரணம் இதுதான்.சிறுவயதில் புத்தகங்களின் பெறுமதியை பிள்ளைகளுக்கு அறியப்படுத்தாமல் இருந்துவிட்டு வந்த மருமகள் மீது குற்றம் காண்பதில் நியாயமில்லை. நல்ல பிரசைகளை உருவாக்க புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை பிள்ளைகளிடம் உருவாக்குங்கள். அதற்காக ராணி கமிக்ஸ் வாங்கி கொடுக்கச் சொல்லவில்லை. அதை மறந்திடாதீர்கள். வாங்கி கொடுக்கச் சொல்வது அறநெறி....நன்னெறி........புத்தகங்களையே. குழந்தை நடைபயிலும்போது நல்ல அறநெறிப் படங்கள் உள்ள புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். பிள்ளை அங்கு எதையும் வாசிக்கப்போவதுயில்லை. ஆனால் குழந்தைக்கு புத்தகத்தோடு ஒரு உறவை ஏற்படுத்த அப்புத்தகத்திலுள்ள படங்கள் ஏதுவாக அமையும். அது நாளை புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்கும்.அதுதான் தேவை! "குழந்தைகள் நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்பினிலே"

தமிழும் துரோகமும்

அப்படியாம் இப்படியாம்
உப்படியாம் என்று
ஆயிரம் சேதிகள்
பழந்தமிழ் நிலம்
பற்றி!

பெருமை.........!
பெருமை.........!
பெருமை.........!

வேங்கடமும் இன்றில்லை!
கதிர்காமத்தில் ஓமுக்கே
இடமில்லை!
புத்தளமும் இழந்த
மாதிரித்தான்!
சென்னை தமிங்கில
நாடாகும் புதினம்
பக்கத்தில்த் தான்னுள்ளது!
போகப் போகப் தமிழ்நிலம்
கரைந்து போகுது!

சுனாமியோ கடலரிப்போ
அல்ல!
கயவர்கள் விட்ட
விடுகின்ற தவறுகளால்!
தமிழா நீ
திருந்தவே மாட்டாயா..........? ************************************************************************************** துரோகத் தமிழா........!
உன் கொப்பனின்
குருதி தமிழின்
வம்சமா?
அன்றி உன்
கோத்தையின் முந்தாணை
தமிழிடம் இல்லையா?

தரணியில் எத்தனை
இனமுண்டு!
இந்த தமிழினம்
ஒக்க ஓரினம்
இல்லை!

பத்துப்பேரில் ஒருவன்
துரோகி!
எப்படி இந்த
மலிவு?

விபூடணன்...........
எட்டப்பன்............
காக்கைவன்னியன்..........
அப்பப்பா...........!

நேற்றும் இருந்தது
இன்றும் உண்டு
நாளையும் இருக்கும்!
மலிவோ மலிவு
பத்தில் ஒன்றென்ற
மலிவு!

தமிழ் தாயின்
கரு வறையில்
என்னதான் குறை.....?

மறவர்கள் பூக்கும்
கருவறையில் புழுக்களின்
பிறப்பு எப்படி?
ஐயகோ!
என் தாயின்
கருவறையில்
என்னதான் குறை.........?! ************************************************************************************

Friday, August 15, 2008

என் வாழ்வியலில் பெண்

கருவறை
குருதி
போசணை
தந்தவள்.................
தந்தையை காட்டியவள்
சுற்றத்தை தெரியவைத்தவள்
தமிழோடு சைவத்தை
பாலிலே ஊட்டியவள்
தாய் எனும்
பெண்!
அவள் என்
தெய்வத்திற்கு
சமன்!

செவிலித் தாயாய்
ஓவியம் தீட்டிப்பட்ட
ஆசான்கள் பல!
என்னை மகவாய்
ஏற்ற ஆசான்கள்
சில!

அக்கையராய் என்னை
ஆண்ட உறவுகள்
பல!
தம்பியராய் என்னை
ஏற்ற உறவுகள்
சில!

நட்பெனும் முகவரியில்
நான் கண்ட
பெண்கள் பல!
தோழியெனும் உறவை
ஊட்டியவை சில!
தங்கையாய் மிளிர்ந்தவை
சில!
தங்கையாய் வாழ்ந்தவை
சில!
வாழ்பவை சில!
அண்ணராய் ஏற்ற
அழகுகள் சில!

காதல்

நோக்கையில் மின்னல்
பாயும்

அகத்தில் மீட்டுகையில்
இறக்கை பூக்கும்

சின்ன சின்ன
பரிசங்களில் இதய
சுருதி தடுமாறும்

காமம் கொஞ்சம்
விளையாடும்

உயிர் நன்றாய்
உருகும்

வெய்யவுயிர்க்கும் நோய்
பற்றிக் கொள்ளும்

அகம் தன்
நூலகளை பரிமாறிப்
படித்திட துடிக்கும்

கூடிக் குலாவி
வாழ உள்ளம்
தூண்டும்

இது தான்
காதலின் ஓவியம்!

காதல் காமத்தின்
அழகு படுத்திய
முகம்
கல்யாணம் அதன்
அனுமதிப் பத்திரம்
நாலுபேர் நவிலக்
கேட்ட துண்டு!

எண்பதில் தம்பதிகள்
பரிமாறும் கொஞ்சு
தமிழ்.......

என்னங்க இந்த
மாத்திரை...........
நீ போய்த்
தூங்கு முதல்ல.........

இதன் வடிவம்
காமமாயின் காதல்
காமமாகவே இருக்கட்டும்!

தடை

என் பேச்சுக்கு.............
என் எழுத்துக்கு..........
என் செயலாக்கத்திற்கு.............
தடைகள் பூக்களாம்!
கனவுலகில் நான்
மிதப்பதை ?

படைத்த பரமனுக்கும்
உரிமை யில்லை-கனவு
காணாதே என்று
என்னை கட்டிவைக்க!

ஆதலால் கனவுகள்
காணுவேன்................
கனவுகள் காணுவேன்..............
கனவுகள் காணுவேன்..............!!!

Thursday, August 14, 2008

தமிழ்

***********************************************************************************
அந்த சிவனின்
மகளே
என்னை யாளும்
தமிழே

தமிழகம் உன்
மாராப்பு!
ஈழம் உன்
பாவாடை!
இல்லை இருக்கு
சர்ச்சைக்கு இடமளிக்கும்
இடை-இராமன்
இட்ட பாலமோ!

***********************************************************************************

யாழ் என்று
பறைகையிலே தேன்
பாயுது நாடி
நாள மெங்கும்!

மட்டு நகர்
என்றதுமே மறம்
மெய்யில் ஊறுது!

திரு கோண
மலை சிவனருளை
என்னுள் கூட்டுது!

வன்னி என்றதுமே
தமிழ் காப்பகமாய்
மலர்ந்துள்ள நிதர்சனம்
என்னைத் தலைநிமிர
செய்யுது!

புத்தளம் என்றதுமே
தமிழ் முத்துகள்
தோன்றுது!

ஈழத்தின் வடகிழக்கு
என்றதுமே என்
அணுவெல்லாம் புல்லரிக்குது!

*************************************************************************************

Tuesday, August 12, 2008

வணக்கம்

என் நெஞ்சில் பூக்கும் பூக்களின் வாசத்தை தமிழ் பாரோடு பகிரும் உவகையில்................."பறைவேன்"

நன்றியுடன் திவியரஞ்சினியன்