Thursday, December 18, 2008

தமிழ் திரைப்படங்களும் சமூகமும்-என் பார்வையில்

இலக்கியத்தின் ஒரு முகம்தான் திரைப்படங்கள். திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் ஆழமானது. இன்றைய ஊடகங்களில் மக்களுக்கு இலகுவாக செய்தியைக் காவக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகமாக திரைப்படங்கள் விளங்குகின்றன. மக்கள் திலகம் எம்ஜியாரை முதலமைச்சராக வந்து அசைக்க முடியாத ஆட்சியின் மூலம் தமிழகத்தை அழகுபடுத்த வைத்ததும் திரைப்பட ஊடகம்தான் என்பது வெள்ளிடைமலை. தமிழ்ப் பற்று இல்லாத ஜெயலலிதாவிடம் அவர் கட்சியினரும் அவரை முதலமைச்சராக்கி அழகுபார்த்த மக்களையும் சரணடையச் செய்திருப்பதும் திரைப்பட ஊடகம் செய்த மாயையே. ஏன் தமிழக முதலமைச்சராக இன்றுள்ள பலதடவைகள் முதலமைச்சர் பதவியை நுகர்ந்த திரு.மு.கருணாநிதியும் அழகான ஆட்சியை அமைத்த அண்ணாவும் திரைப்பட கதாசிரியர்களாக இருந்துள்ளமையை நினைவுபடுத்துவது சாலப்பொருத்தமாகும். எனவே திரைப்படங்கள் மக்களை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்த நாட்டின் ஆட்சியையே தீர்மானிக்கும் வலிமையுடைய ஊடகம் என்றால் மிகையாகாது.சமூகத்தோடு ஒன்றிவிட்ட திரைப்படங்கள் பற்றி எழுதவேண்டும் என்ற நான் பலநாளாக சிந்தித்த வண்ணமேயிருந்தேன். இன்று நாளும் கோளும் அதற்கு வழிசமைத்த்விட்டது.ஆதலால் திரைப்படங்கள் எனக்குள் வரைந்துள்ள சித்திரங்களை பகிரவிளைகின்றேன்.

நான் முதன்முதலில் பார்த்த திரைப்படம் முத்து. அன்று தொட்டு ரஜனி படங்களில் ஒருவித ஆதீதபற்று. தாயைப் போற்றும் வசனங்கள், கருத்துகள் என்பன ரஜனி படங்கள் கவரக் காரணமாயின. ஆனால் திரைப்படங்கள் என்றால் என்ன? அதன் தாக்கம் என்ன? திரையுலக வாழ்கை எப்படிப்பட்டது? எனபன விளங்கத்தொடங்க, சிறுவட்டத்துக்குள் திரைப்படங்களை இரசித்த நான், சமூகப் பார்வையோடு திரைப்படங்களை நோக்கமும் பக்குவத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.

திரைப்பட வரலாற்றின் ஆரம்ப காலகட்டத்தில் கர்ணன், இராஜ இராஜ சோழன், வீரபாண்டிய கட்டப் பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கந்தன் கருணை, திருவிளையாடல், திருமால் பெருமை போன்ற சமூகத்தலைவர்கள், பண்டைய மன்னர்கள், புராண இதிகாச நாயகர்கள்,தமிழுணர்வாளர்கள் ஆகியோரின் வாழ்கையையும் வரலாறுகளையும் படமாக்கிய தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் பாராட்டவேண்டியது சமூகத்தின் கடமை.

சமூக நோக்கத்தோடு திரையை அளக்கத்தொடங்கிய நாள் தொட்டு, தமிழ் திரைவரலாற்றின் ஆரம்ப காலப்பகுதியில் உருவான சமூக விழிப்புணர்ச்சிப் படங்கள், சமூக நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட படங்கள் போன்று இன்றைய காலத்திலும் வரமாட்டாதா என்ற ஆதங்கத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கினேன். பாரதி என் காத்திருந்த தாகத்துக்கு கிடைத்த ஓர் நல்ல விருந்து. பாளையத்து அம்மன் பட வெற்றியால் பல அம்மன் கதைப்படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் பாளையத்து அம்மன் படமாயினும் சரி, ஏனைய அதனைத் தழுவி உருவாகிய சமயக் கதைப்படங்களாயினும் சரி வியாபாரமாக்கப்பட்ட ஆன்மீக அறியாமையையே எனக்கு சுட்டிக்காட்டியது.

சமூக நோக்கத்தோடு திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருந்தபோதும் நல்ல கதையம்சத்தோடு உருவாகும் திரைப்படங்களையும் இரசிக்கும் ஆர்வம் இன்றும் என்னுள் உண்டு.அப்படி நான் இரசித்த திரைப்படங்களை பட்டியல் இட்டால் அது பொதுவாக எல்லோராலும் இரசிக்கப்பட்ட திரைப்படங்களாகவே இருக்கும்.

தம்பி நான் காலம் தாழ்த்தி பார்த்த படம். என் நெஞ்சுக்குள் ஆழமாக தாக்கத்தை உண்டுபண்ணிய படம். பிரசாந்தின் ஏதோ ஒரு படத்தைப் பார்த்து காதலர்களான நண்பர்களை திருமணம் செய்து வைக்கும் பிரசாந்தின் நிழற்படத்தை ஞாயிறு வீரகேசரியின் சினிமாப் பக்கத்தில் பார்த்த ஞாபகம் இன்றும் உண்டு. தம்பி படம் பார்த்து திருந்திய அடாவடிக்காரர்கள் பற்றிய செய்தியை நான் பார்க்கவேயில்லை. அல்லது ஒருவேளை தம்பி படத்தை பார்க்காமல் விட்டதுபோல் தம்பி படம் பார்த்து திருந்தியவர்கள் பற்றிய செய்தியையும் பார்க்கத் தவறிவிட்டேனோ தெரியவில்லை. தம்பி படத்தின் அருமையை உணராது தவறவிட்ட என்னைப் போல் பலர் இருக்கலாம். அவர்களிடம் நான் வேண்டுவது ஒரு முறையேனும் பாருங்கள் என்பதைத்தான். இதே பொருளை மையமாக வைத்து பிரகாஷ்ராஜ் நாயகனாக நடித்த தாயா திரைப்படம் என் நெஞ்சை பார்த்தபோது ஈரமாக்கியது.

தூய தமிழில் உருவாக்கப்பட்ட வாழ்த்துகள் படம் நன்றாக ஓடவில்லை என்று அறிந்ததுமே ஒரு இனம்புரியாத வேதனை என்னை சூழ்ந்து கொண்டது.சீமானின் தமிழ்பற்றுக்கு தலைவணங்காமல் இருக்கமுடியவில்லை. சீமானைப் போன்ற தமிழ் உணர்வாளர்கள் திரையுலகத்திற்கு இன்னும் அதிக எண்ணிக்கையில் ஊடுருவ வேண்டும்.
தமிழ் M.A படம் சிறந்த படம் என்று நான் சான்றிதழ் வழங்கவேண்டியதில்லை. ஆனால் தமிழ் படிக்க ஆசை கொள்ளும் மாணவர்களிடம் பயத்தை உருவாக்கிவிட்டதோ என்ற ஐயம் எழமாலும் இல்லை.

தசாவதாரம் எல்லோராலும் மெச்சப்பட்ட படம். ஆனால் கமலின் திறமைதான் அங்கு உண்டேயொழிய வேறு எதுவுமேயில்லை.தசாவதாரத்தில் கமலுக்கு ஏன் தான் தேவையில்லாத சைவ-வைணவ பிரச்சினைகளை எழுப்பும் கதை தேவைப்பட்டதோ தெரியவில்லை. அவரால் கிருத்தவ-இசுலாமிய சண்டைகளை படமாக்க முடியுமா?
கிருத்தவ இசுலாமிய மதமாற்றத்திற்காய் அரங்கேற்றப்பட்ட சைவ வைணவ ஆலயங்களை அழித்த வரலாறுகளை திரைக்கு கொண்டுவரும் திறன் உண்டா? இவை நான் அவரிடம் தொடுக்கின்ற கேள்விகள். அவ்வாறு அரங்கேற்றின் அது சமூகப்பிரச்சினைகளை உருவாக்கும் என்பது யதார்த்தமானது. சிலவேளைகளில் வேத நெறி பண்பாட்டு மக்களிடம் அதிக சகிப்புத்தன்மை இருப்பது அவருக்கு சாதகத்தை உண்டுபண்ணிவிட்டதோ தெரியவில்லை. மற்றம்படி நான் அவரின் திறன்களை இரசிக்கத் தவறியதில்லை. அன்பே சிவம் அழகான தமிழ்ப் படங்களில் அழியா அழகுடையது என்றால் மாற்றுக் கருத்து இருக்குமா என்ன சொல்லுங்கோ?

நல்ல கதையம்சத்தோடு கூடிய காதல்ப் படங்கள், குடும்பப் படங்கள் என்று ஏராளம் என் நெஞ்சைத் தொட்டபடங்கள் உண்டு. வாரணம் ஆயிரம் அப்படியான ஒரு படம். சூரியாவின் திறமையோடு நல்ல கதையும் கூடி பொழுதுபோக்குக்கு பார்க்கக் கூடிய நல்லதரமான படமாக செதுக்கப்பட்டுள்ள படமே வாரணம் ஆயிரம். அடிதடி வெட்டுக் குத்து என்று தெரு தாதாக்களை உருவாக்கும் விஜய், அஜித்,சிம்பு,தனுஸ், இவர்கள் எல்லாம் திருந்தவேண்டும் இந்தப்படத்தில் சூரியாவின் உழைப்பைக் பார்த்தேனும். விஜயின் திருப்பாச்சி பார்ப்பவனாயினும் சரி, குருவி பார்ப்பவனாயினும் சரி அடிதடியில் பற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாக வாய்ப்புண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

பெற்றாரிடம் அன்போடு நான் வினாவுவது உங்கள் பிள்ளைகளின் சிறுபிராயத்தில் நல்ல சமூகப் படங்களை, பண்பாட்டுப் படங்களை, சமயக் கருத்துப் படங்களை பார்க்க வழிசமையுங்கள். நடப்படும் நல்ல பயிர்களால் விளைச்சலும் நல்ல விளைவையே கொடுக்கும். சிறு பிராயத்தில் முத்து படம் திரைப்படத்தை அறிமுகப்படுத்தியிருந்தாலும் எனக்கு, என் தாயாரும் பாட்டனாரும் சிவாஜியின் மன்னர் வரலாற்றுப் படங்களையும் கடவுள் படங்களையும் பார்க்கவே அதிக சூழலை ஏற்படுத்தினர். திரைப்படம் பார்க்காதே என்று தடுப்பது கடினமோ கடினம். சாத்தியம் அற்றது. ஆனால் நல்ல படங்களை அறிமுகம் செய்வது இலகுவானது. அதைத்தான் என் தாயார் செய்தார்.
அறிமுகம் நல்ல படங்களாக இருந்துவிட்டால் "குருவி" அருவியில் கொட்டப்பட்ட ஒருதுளி மையைப்போலாகிவிடும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

இங்கு என் அறிவுக்கு எட்டிய திரைப்படங்களை என் உணர்வுகளோடு உறவாடிய படங்களை கருத்தில்கொண்டு சமூகத்திற்கும் குறிப்பாக பெற்றோர்களுக்கு ஒரு செய்தியை வழங்க எண்ணி தீட்டியதே இவ்வாக்கம். எனவே நல்ல தரமான பல படங்களை நான் தவறவிட்டிருக்க நிறையவே வாய்ப்பு உண்டு. கடலளவு விரிந்து கிடக்கும் திரைப்படங்களில் நான் கிணறளவு பரப்பை ஆராய்ந்து முத்துகள் எடுத்து கோர்த்த ஆக்கமே இது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

ஐந்தில் வளையதாது ஐம்பதில் வளையுமா......... என்ன சொல்லுங்கோ?