Monday, January 26, 2009

என்னுணர்வோடு கலந்த கொழும்பு சைவ சாம்ராச்சியம்

தாயில் உள்ள பற்று இயல்பாக தாய்மண்ணிலும் மலரும் என்பது யதார்த்தமானது. அதுபோல் கல்வி புகட்டிய கல்லூரியில் பற்று இருப்பதும் தாய்க்கு நிகராய் போற்றுவதும் மாணக்கர் உள்ளங்களில் கல்லூரியானது கோயிலாய்க் காட்சியளிப்பதும் யதார்த்தமானதே.

இவ்வகையில் நோக்கின் எனது பாலர் பாடசாலையின் பெயர்கூட எனக்கு நினைவுக்கு மீட்டமுடியவில்லை. நினைவில் பசுமையாக இன்றும் எனது வாழ்வியலில் தீட்டப்பட்ட அழகான கோலங்களாக எனது பாலர் பாடசாலை காட்சியளித்தாலும் நாட்டில் நிலவுகின்ற யுத்தசூழலில் 1995களில் எனது அழகிய கிராமத்தைவிட்டு நீங்கிய காரணத்தால் பாலர் பாடசாலை எங்கு இருந்தது எப்படி இருந்தது என்ற எனது கேள்விகளுக்கு எனதுள்ளம் விடையளிக்க முடியாது மௌனியாகி நிற்கின்றது.

பாலர் பாடசாலையை முடித்து விக்னேசுவரா வித்தியாலயத்தில் ஒரு சில வருடங்கள் படித்து பின்னர் "யாழ்ற்றன்" கல்லூரியில் ஒருசில வருடங்கள் என; எனது மூன்றாம் ஆண்டின் இடைநிலைப் பருவம் வரை யாழ் கல்வியைச் சுவாசித்த எனக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குகான புலம்பெயர்வுடன் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை கல்விப் புகலிடத்தை அளிக்கின்றது.


பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் ஏதும் இல்லாது கற்க கல்விக்கூடம் செல்லமுடியாத துர்ச்சூழலில் கொழும்பில் தவித்தவேளை அன்றைய சமூகப் பிரச்சினையை உணர்ந்திருந்த அதிபர் சான்றிதழ்கள் ஏதுமில்லாது இருந்தபோதும் கற்க அனுமதியளித்தார்.

கொழும்பின் பம்பலப்பிட்டியில் பிரசித்தமாய் விளங்குகின்ற இந்துக் கல்லூரியில் மாணவர் தொகை அதிகமாய் இருந்தமை, அங்கு அனுமதி பெறுவதற்கு சான்றிதழ் அவசியம் எனும் மந்திரத்தை உருவாக்கியதால் பம்பலப்பிட்டிக்கு அருகில் வெள்ளவத்தையில் வதிவிடத்தைக் கொண்டிருந்தும் அனுமதியைப் அங்கு பெறமுடியாதுபோகவே, இரத்மலானையில் உள்ள இந்துக் கல்லூரியில் மாணவர் தொகை சொற்பமாய் இருந்த தன்மை சான்றிதழ் அவசியம் எனும் மந்திரத்தை புறக்கணித்து அனுமதியளித்து கல்விச் சுடரை என்னுள் மீண்டும் ஏற்றியது.
மாணவர் தொகை சொற்பமாய் இருந்த தன்மையே சான்றிதழ் அவசியம் எனும் மந்திரத்தை புறக்கணித்தது என்று கருதுவது சாலப் பொருந்தாது என்பது அதிபருடன் உறவாடும் மாணக்கருக்கு தெரியும். அதிபரின் இளகிய உள்ளத்தில் சான்றிதழ் இன்றி அனுமதி வழங்கும் கல்விப்பணிக்கு மாணவர் தொகை சொற்பமாய் இருந்தது தூண்டற்காரணியாய் அமைந்தது என்பதே பொருத்தம் என்பேன். ஒருசில வருடங்களின் பின்னரே சான்றிதழ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்து அதிபரிடம் கையளிக்கப்பட்டது.அதுவரை சான்றிதழ்கள் இல்லை என்ற வசனம் அதிபரிடம் இருந்து வந்ததே இல்லை என்பதை இங்கு நினைவுகூர விரும்புகின்றேன்.

தரம் பத்துவரை கல்லூரியில் இனப்புரியாத ஒரு பற்று மலர்வதை உணரவேயில்லை. பத்தாம் ஆண்டின் பிற்பகுதியில் கல்லூரியில் தாய்மீது கொண்டுள்ள பற்று மலர்ந்திருப்பதை மெல்ல மெல்ல உணர தொடங்கினேன். கல்லூரியின் பொன்விழா மலருக்கு கல்லூரி வரலாற்றை வரைய முயன்றவேளை, கல்லூரியின் வெள்ளிவிழா நூலைப் புரட்டவேண்டிய தேவை ஏற்பட்டது.அப்போதுதான் இலங்கையில் கொழும்பு மாநகரில் புகழ்பூத்த கல்லூரியாய், இலங்கையிலேயே தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாய், கொழும்புத் தமிழ்ச் சமூதாயத்தின் சைவச் சொத்தாய் விளங்கிய வரலாறு புலனாகியது. திரைப்படங்களில் கதாநாயகனுக்கு ஒரு இறந்தகாலம் மிகச்சிறப்பாக இருந்ததாகக் காட்டுவர்.அவ்வாறுதான் இரத்மலானையில் கொழும்பு இந்துக் கல்லூரி எனும் பெயரில் கொழும்பு சைவ சாம்ராச்சியமாக இன்று மீண்டும் புகழ் பூத்து எழுச்சி கண்டு வருகின்ற என் கல்லூரிக்கும் வரலாற்றால் அழிக்கமுடியாத சோகத்தில் நிறைவுற்ற இறந்த காலம் உண்டு.

இலங்கை சுதந்திரம் அடையமுன்னர் இரத்மலானையில் இந்திய வம்சாவளி தமிழ்மக்கள் செறிவாகவும் இலங்கைத் தமிழர் ஓரளவாகவும் இருந்த காரணத்தால் இரத்மலானையின் தமிழ்மணம் கொழும்பையே தமிழ்சுகந்தத்தால் ஆட்கொண்டிருந்தது. அன்றைய காலத்தில் விளங்கிய ஆங்கிலேயக் கல்லூரிகள்( ஏன் இன்றும் கூட) திருநீறு தொட்டு சைவசின்னங்களுடம் மாணவர் வருவது தடைசெய்திருந்த காரணத்தால் தமிழர் பண்பாட்டை கொழும்புத் தமிழர் சந்ததிக்கு அழியாது காத்து வழங்க ஓர் கல்லூரி வேண்டும் என்பதை தமிழ்த் தலைவர்கள் தூரநோக்கு சிந்தையோடு கருதி "இந்து சதுக்கம்" எனும் பெயரில் பாரிய நிலப்பரப்பை இரத்மலானையில் வாங்கி கல்லூரி அமைக்க கால்கோள் இட்டனர்.

இங்கு தமிழருக்கு தமிழரின் கல்லூரியே அவசியம் என்பதை ஆழமாக பதிய ஓர் செய்தியை பகிர விரும்புகிறேன்.
திராவிட பண்பாடு,சைவ சித்தாந்தம்,திருக்குறள்,ஆத்திசூடி என்பனவெல்லாம் கிருத்தவ சமயத்தின் நூல்கள் எனவும் தமிழர் பண்பாடு கிருத்தவப் பண்பாடு எனவும் தோமா(சேன்.தோமஸ்) நிறுவிய பண்பாடே தமிழர் பண்பாடு எனவும் மூடத்தனமாக இயற்றிய பொய்யான வரலாற்றை உத்தியோகபூர்வமற்றமுறையில் தமிழகத்தின் சில ஆங்கிலேய கிருத்தவக் கல்லூரிகளில் புகட்டப்படுவது பலர் அறியாத ஒன்றாகும். சென்.தோமஸ் தமிழகம் வந்ததாக திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட இருப்பதாக கிருத்தவ அமைப்புகள் கூறியிருந்தன. கலைஞர் கருணாநிதிகூட தோமாவின் விழாவில் பங்குபற்றி வாக்குக்காக தமிழர் வரலாற்றையே திரித்துக்கூறும் சதிக்கு சால்வையைப் போட்டுவிட்டு வந்தார்.இவர்களின் மூடத்தனமான பிரச்சாரத்தை வரலாற்று அறிஞரும், செல்வி ஜெயலலிதா கொண்டுவந்த கட்டாய மதமாற்றுத் தடைச்சட்டத்தை வலுவாக எதிர்த்தவருமான தமிழறிஞர் ஒருவர், தோமா வந்ததென்பது வெறும் மதநம்பிக்கை என (மூட நம்பிக்கையை எதிர்க்கும் கருணாநிதி வெறும் தமிழ்ப்பித்தலாட்டக்காரர் என உணர்க) விளக்கியிருந்தமையையும் சைவசித்தாந்தம் தொட்டு ஆத்திசூடிவரை கிருத்தவ மதநூல்கள் என புகட்டுவது கேலிக்குரியது என பொருள்பட விளக்கியிருந்ததும்
படித்தபோது தமிழருக்கு தமிழரின் கல்லூரிகளே அவசியமானது என உறைத்தது.

இந்துவித்தியாவிருத்தி சங்கத்தை தோற்றுவித்த தமிழ்ச் சான்றோர்கள், அச்சங்கத்தின் குழந்தைகளாக பம்பலப்பிட்டியில் பிள்ளையார் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பநிலைப் பாடசாலையையும் பின்னர் இரத்மலானையில் உயர்நிலைக் கல்லூரியாக கொழும்பு இந்துக் கல்லூரி எனும் பெயரில் சைவ சாம்ராச்சியத்தையும் நிறுவினர்.
மிகப் பெரிய நிலப்பரப்புடன் மிகப்பெரிய கல்லூரியாகக் கட்டும் திட்டத்துடன் மலர்ந்த கல்லூரி சைவ சாம்ராச்சியத்தின் கட்டிட நிர்மாண வளர்ச்சியை அரசியற் காரண்ங்களுக்காக கைவிடவேண்டிய சூழல் உருவாகியது. மொறட்டுவவில் பல்கலைக்கழகம் கட்ட இடம்தேடிய அரசுக்கு சைவ சாம்ராச்சிய கட்டிட வரைபடமும் பாரிய நிலப்பரப்பும் கண்ணை உருத்தத்தொடங்கியது புலப்படவே, தமிழ்த் தலைவர்கள் கட்டிட நிர்மாண வளர்ச்சியை அரசியற் தந்திரோபாயத்திற்காய் கைவிடவேண்டியதாயிற்று.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் உருவாகிய பிரசாவுரிமைச் சட்டத்தின் கோரத்தாண்டவத்தால் இலங்கைப் பிரசைகள் எனும் முகவரியிழந்து தமிழகத்திற்கு இந்தியத் தமிழர்கள் திருப்பியனுப்பப்பட்டதனால் தமிழர் செறிவு குறைவாகவே, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் இலங்கைத் தமிழரும் இரத்மலானையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத்தொடங்கினர். எழுபதுகளில் உருவாகிய கல்விச்சட்டங்களின் நிமித்தம் கல்லூரி அரசுடமையானபோது இந்துவித்தியாவிருத்திச் சங்கத்திடம் இருந்து பிரியவேண்டிய சூழல் உருவாகியது.இதன்போது ஆரம்பநிலைக் கல்லூரியாக விளங்கிய பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரியும் தனியான ஒருகல்லூரியாக உருவாக வேண்டியதாயிற்று.

83களில் தமிழர் வாழ்வில் கரியநாட்கள் வந்துசூழ்ந்தபோது சைவசாம்ராச்சியமாக இரத்மலானையில் பூத்திருந்த சைவச் சொத்தும் தீயுள் கருகி தனது சொத்துக்களை இழந்து, சோபை இழந்து இராணுவ முகாமாக உருமாறியது. கல்லூரியின் நூலகம்,ஆவணக் காப்பகம் யாவும் தீக்கிரையானதால் கல்லூரியில் படித்த மாணவர்கள், பல்கலைக்கழகம் சென்ற மாணவர் விபரங்கள்,கல்லூரிச் சொத்துவிபரங்கள் என யாவும் இழந்து வாடி நின்ற கல்லூரி, அன்றைய மாணவர்களில் ஒருவரான இன்றைய அதிபருமாகிய திரு.ந.மன்மதராஜன் உட்பட பல சைவச் சான்றோர்களின் அயராத உழைப்பால் மீண்டும் 90களின் பின்னர் மலரத் தொடங்கியது.

கொழும்பின் சைவச் சாம்ராச்சியமாக விளங்கிய எமது கல்லூரி 83களின் கோரத்தாண்டவத்தின் தீயில் வீழ்ந்து கார்புகையாய் மாறிய பின்னர், சைவ சாம்ராச்சியத்தின் ஆரம்ப நிலைப் பள்ளிக்கூடமாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கல்லூரிகள் அரசாங்க உடமையாக்கப்பட்டபோது தனிக்கல்லூரியாக மலர்ந்த பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கொழும்பின் சைவ சாம்ராச்சியம் எனும் உயர்பதவியை.......உயர்சேவையை தனதாக்கியது எனலாம்.

ஏலவே 1990களின் பின்னர் கொழும்பின் சைவ சாம்ராச்சியமாக மலர்ந்திருந்த பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஆதீத வளர்ச்சி, மீண்டும் பூத்த இரத்மலானை இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கு கொழும்புத் தமிழ்ப் பெற்றோரிடம் வரவேற்பை வழங்க மறுத்திருந்த காலகட்டத்தில்த்தான் யாழில் இருந்து பெருமளவு தமிழர்கள் கொழும்புக்கு புலம்பெயர்ந்தபோது எமது கல்லூரி தன்னை ஒரு கல்விப்புகலிடமாக மாற்றி மாணவர் தொகை பெருக சூழலை ஏற்படுத்தியது.

சொய்சாப்புர தொடர்மாடிகளில் குடிகொண்ட தமிழ்ப் பெற்றோர் சமுதாயத்திடமும் கல்கீசை, தெகிவளை தமிழ்ப் பெற்றோர் சமுதாயத்திடமும் அதிக வரவேற்பை அமைவிடம் காரணமாக பெற்ற அதேவேளை, வெள்ளவத்தை சமூகத்திடம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியே முதல்த்தெரிவாக இருந்தது.
சொய்சாப்புர தமிழ்ப் பெற்றோரும் தரம் ஐந்துவரை தமது பிள்ளைக்ளுக்கு கல்விபுகட்டும் தெரிவாகவே இரத்மலானை இந்துக் கல்லூரியைப் பயன்படுத்தும் வழக்கத்தால் சைவ சாம்ராச்சிய வளர்ச்சி அதிக சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தரம் ஐந்தில் சிறப்பு சித்தியை தமது பிள்ளைகள் பெற்றதும் வேறு கல்லூரிகளுக்கு மாற்றும் நன்றியற்ற சமூக அக்கறையற்ற சுயநலப் போக்கு தமிழர் சொத்தான சைவ சாம்ராச்சிய வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கியது எனலாம்.
இங்கு எனது கருத்தாக ஒருசில உண்மைகளைப் பதியவிரும்புகின்றேன். என்னோடு படித்து அதிசிறந்த புள்ளிகளைப் பெற்று வேறு பிரபல கல்லூரிகளுக்கு இடம்மாறிச் சென்ற சக மாணவ்ர்களை உயர்தரத்தில் சந்தித்தவேளை சாதரணதரப் பரீட்சையில் சாதரண புள்ளிகளை பெற்றிருந்த தன்மையை அறியக்கண்டேன். ஏன் அன்று என்னைவிட கல்வியில் மேம்பட்டிருந்த அம்மாணவ சொத்துக்களை பெற்றோர் சுயநலபோக்கினால் வேறு பள்ளிக்கூடங்களில் சேர்க்கவே, அங்கு ஐயாயிரம் மாணவ்ர்களில் ஐயாயிரத்தியொன்றாய் கவனிப்பாரன்றி கைவிடப்பட்ட நிலையினால் சாதாரண தரப்பரீட்சையிலும் பிரகாசிக்காது உயர்தரப் பரீட்சைவிலும் பிரகாசிக்காது போகும் துர்ச்சூழல் உருவானது.

தரம் ஐந்தில் சிறந்த புள்ளிகள் பெறக்காரணமாய் விளங்கிய கல்லூரியால் சாதரண தரத்திலும் உயர்தரத்திலும் சிறந்த புள்ளிகளை பெறச் செய்யமுடியாது என்ற மூடத்தனமான முடிவு பெரிய பிரசித்தமான ஆங்கிலப் பெயருடன் விளங்கும் கல்லூரிகளில் கொண்டிருந்த மோகத்தால் பெற்றோருக்குள் உருவாகியது துரதிட்டமே.

இதுமட்டுமல்லாது, பல அரசியற் பிரச்சினைகளும் கல்லூரிக்கு அடிக்கடி வந்து இடைஞ்சல் செய்வது நான் கண்ணால் கண்டு உணர்ந்ததே. எனினும் அதிபரின் திடமான தளராத உறுதி அவற்றையும் தவிடுபொடியாக்கி சைவ சாம்ராச்சியமாக மீளப்பிரதிட்டை பண்ண ஏதுவானது.
கல்லூரி கட்டிடத்தைச் சூழ உள்ள காடுகள் வெட்டப்பட்டு மைதானங்கள் பூத்தன. தமிழ் ஏழைக் குழந்தைகளுக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் அகில இலங்கை இந்துமாமன்றத்தால் விடுதிகள் உருவாக்கப்பட்டு அம்மாணவர்களின் கல்விச் சொத்தாக கல்லூரி புதியவடிவம் பூண்டது. மாணவ்ர் தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது.

இப்படி வளர்ந்து வந்த எமது கல்லூரி சைவ சாம்ராச்சியமாய் கொழும்பில் மிளிர ஏதுவாய் அமைந்தது கற்பக விநாயக ஆலய தோற்றமாகும். 1998களில் சைவக் கொடியாக நத்திக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டு முதன்முதல் "விடைக்கொடிச் செல்வர்" தனபாலா ஐயாவினால் கல்லூரியில் ஏற்றுவிக்கப்பட்டதனால் உருவாகிய சிவஞானப்பெருக்கின் விளைவால் அதிபரின் அயராத முயற்சியினால் கற்பகவிநாயகர் ஆலயம் 1999களில் இரத்மலானையை அலங்கரித்தது.

"ஒருக்காலும் திருக்கோயில் சூழாராகில்
அவை எல்லாம் ஊரல்ல அடவி காடே" என்றார் அப்பர் சுவாமிகள்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கலாகாது என்பதும் இதனாலேயே. தெகிவளை,கல்கீசை,இரத்மலானை,சொய்சாப்புர,மொறட்டுவ,பாணந்துறை சைவத்தமிழ்ச் சமுதாயம் ஆலயம் இன்றி தவித்த சூழலை அதிபர் நன்கு உணர்ந்து பாடசாலையில் ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உணர்விக்கும் ஞானமுதல்வனாகிய பிள்ளையாருக்கு ஆலயம் அமைக்கவேண்டும் எனும் சித்தம்பூண்டு 1999களில் செயல்வடிவாக்கி கொழும்புத் தமிழர் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிக்கவேண்டிய ஆலய கும்பாவிடேகத்தை நிறைவேற்றி தமிழ்கூறும் நல்லுலகத்தை சிவஞானத் திருவருளால் குதுகலத்தில் ஆழ்த்தினார். மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,சைவ நலன்விரும்பிகள்,சைவச் சான்றோர்கள்,தமிழ்த் தலைவர்களின் உதவியோடு அதிபர் அன்று எழுப்பிய ஆலயம் இன்று இரத்மலானை மக்களுக்கும் அதனைச் சூழ உள்ள மக்களுக்கும் கொடையாய் விளங்குவது கண்கூடு.

உலக இந்து மாநாட்டுச் செயற்பாடுகளிலும் சேக்கிழார் மாநாட்டுச் செயற்பாடுகளிலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தோடு நின்று உதவியதோடு, பொன் விழா,முத்தமிழ் விழா ஆகியவற்றை கொழும்பு மாநகரே வியப்பில் மூழ்கும்வண்ணம் அரங்கேற்றி இலக்கிய வளமுடைய கல்லூரி என்பதை நிறுவனம் செய்து சைவ சாம்ராச்சியமாக தன்னை அறிவித்தது என்றால் மிகையில்லை.

1995களின் இறுதிப்பகுதியில் இருந்து 2006இன் ஆகஸ்ட் மாதம்வரையுமான எனது கொழும்பு வாழ்வியற்காலப்பகுதியில் சாம்ராச்சிய வளர்ச்சியை நேரடியாகக் கண்ணால் கண்டு உணரக் கூடியதாக இருந்தது.இவ்வளர்ச்சி மெல்ல மெல்ல செதுக்கப்பட்ட ஓர் சிற்பத்தை ஒத்தது எனலாம். ஒப்பீட்டளவில் வளர்ச்சிவீதம் குறைவானதாகத் தோன்றினாலும் சுற்றுச்சூழல்,அகப் புறக்காரணிகளைக் கருதும்போது இவ்வளர்ச்சிவீதமானது வியப்புக்குரியதே!

ஒருகல்லூரி எத்தனை மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது என்பது கல்லூரியின் கல்விபுகட்டும் தகமையை காட்டும் என்பர் ஒருசிலர். ஆனால் இவ் அளவுகோல் நம்பகத்தன்மையற்றது என்பதை கல்லூரியில் வாழ்ந்து உணர்ந்தவன் நான் என்பதை ஆழமாகப் பதிய விரும்புகின்றேன்.
தரம் ஐந்தில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்றதும் புத்துசாலிகளாக கல்லூரியால் செதுக்கப்பட்ட அரைவாசி மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு பெற்றோரின் பிற்போக்குத்தனத்தால் மாற்றப்படுகின்றனர். சாதரணதரப் பரீட்சையில் சிறந்தபுள்ளிகளைப் பெற்றதும் அடுத்த கால்பங்கு புத்திசாலிகளாக கல்லூரியால் செதுக்கப்பட்ட மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாறுகின்றனர். எஞ்சிய கால்ப்பங்கு புத்திசாலி மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவானது. அவர்களில் ஒருசிலர்
துரதிட்டத்தால் பல்கலைக்கழக வாய்ப்புக்களை இழக்க,ஏனைய ஒருசிலர் பல்கலைக்கழகம் செல்லுகின்றனர்.இங்கு பல்கலைக்கழகம் செல்வோரின் எண்ணிக்கை ஐந்து ,ஆறு என்று வரையறுக்கப்படுகின்றது. ஐயாயிரம் மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் ஐந்நூறு மாணவர் பரீட்சை எழுதி, இருபது மாணவர் பல்கலைக்கழகம் செல்வதும் அறுபது என்ற எண்ணைத் தாண்டாத உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவ்ர்களில் ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதும் ஒன்றுதானே? சிந்தியுங்கள் பெற்றோர் குழாமே!

இங்கு இன்னொரு விடயத்தை ஆழமாகப் பதியவேண்டும்.ஏனைய கல்லூரிகளில் சாதரணதரப் பரீட்சையில் கணிதத்தில் சித்தியடையாக் காரணத்தால் படிக்கும் தகுதியை இழந்த மாணவர்களுக்கு உயர்தர அனுமதி வழங்கி,அவர்களுக்கு கணிதபாடத்தை மேலதிகமாகப் புகட்டி, அடுத்த வருட சாதரணதரப் பரீட்சையில் சித்தியடையச் செய்து கல்லூரியில் தொடர்ந்து படிக்க வழிசமைத்து, கல்வித் சுடரை மாணவர்களின் உள்ளங்களில் இருந்து அணையவிடாது பேணுவதில் பெருமளவு வெற்றிகண்ட கல்லூரி எமது சைவ சாம்ராச்சியம் என்பது தமிழ் சமூகம் நன்றியோடு நினைவுபடுத்த வேண்டியதொன்றாகும்.
இவை கல்லூரியின் கல்வி புகட்டும் உன்னதத்தன்மைக்கு தக்க சான்று என்பதை யாவரும் மனதில் உணர்த்தின் நலமாகும்.


இன்று எமது கல்லூரி சைவ சாம்ராச்சியம் அதிபர்,ஆசிரியர்,பெற்றோர்,மாணவர்,பழைய மாணவர், சைவச் சான்றோர்கள்,தமிழ் சமூக நலன்விரும்பிகளாகியோரின் உழைப்பின் பலனாக மீண்டும் கட்டிட புனர்நிர்மாணம் செய்யப்பட்ட ஆலயம் கும்பாவிடேகம் காண உள்ளமையும் கல்லூரியில் புதிய கட்டிடத்தொகுதி மலர்ந்து வருவதும், ஏலவே ஓர் சாம்ராச்சியத் தோற்றத்தைத் தருகின்ற கட்டிடத் தொகுதி பூச்சு,புத்தாக்கத்திற்கு உள்ளாக இருப்பதும் கண்டு கொழும்புத் தமிழர் சமூகம் மட்டுமல்லாது, தமிழர் சமுதாயமே மகிழ்வடையும் செய்தியாய் உள்ளது.

இன்று கொழும்பு மாநகரை இரண்டு சைவசாம்ராச்சியங்கள் பம்பலப்பிட்டி, இரத்மலானையாகிய பிரதேசங்களில் அமைவிடமாய் கொண்டு ஆளுகின்றன என்றால் மிகையில்லை.


"சிவனெனும் ஓசையல்ல தறையோ உலகில்
திருநின்ற செம்மை உளதே" என்கின்றது அப்பர் திருத்தமிழ்.
அதாவது சிவன் எனும் ஓசையோடு கூடிய தவிர்ந்த ஏனையவற்றுக்கு செம்மை இல்லை.சபதம் பிடிக்கத்தயார் என்கின்றார்.
சைவம் சிவனோடு சம்பந்தம் ஆனது என்கின்றது திருமந்திரம். சிவம் எனும் ஓசையோடுகூடியது என்பது வெள்ளிடைமலை.

சுவாமி விவேகானந்தரினது அமெரிக்கா சொற்பொழிவின் புகழின் நிமித்தம் இந்து எனும் சொல்லை சைவத்தைக் குறிக்க அன்று பிரபல்யமாகப் பயன்படுத்தியிருந்த அன்றைய சைவத் தலைவர்கள் சிவாகமத்துடனேயே சைவக்குழந்தைகளை வளரும்வகையில் சூழலை அமைத்திருந்தனர். ஆனால் இன்று, தமிழர்தேசியத்தை சிதைக்கும் வடக்கின் பண்பாட்டுப் படையெடுப்பு இந்து எனும் சொல்லினூடாக நமது நாட்டில் ஊடுருவியிருப்பதனால்,இன்றைய தமிழ் ஆர்வலர்கள்,தமிழறிஞர்கள்,சைவத் தலைவர்கள் ஒன்றுகூடி ஒருமித்தமாய் கொழும்பு சைவக் கல்லூரி,இரத்மலானை எனப் பெயர்மாற்றம் செய்து சைவ விழிப்புணர்வுக்கு வழிசமைக்க வேண்டும் என்பது எளியேனின் அவா.
சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் ஏலவே யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்திற்கு எடுத்துவிளக்கி சைவ வாலிபர் சங்கமாகப் பெயர்மாற்றம் செய்தார் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் வேறு ஏதோ காரணத்திற்காக மலையகப் பாடசாலை ஒன்று பெயர்மாற்றம் செய்த செய்தி பத்திரிக்கையில் படித்த நினைவுண்டு. எனவே முடியாதது ஒன்றும் இல்லை. தமிழ்ப் பண்பாடு பேணவே கல்லூரி உருவாக்கப்பட்டது என்பதை கருத்திற் கொண்டு, சைவக் கல்லூரியாக திருப்பெயர் சூட்டப்படவேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

"தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில்"
என்கின்றது திருமந்திரம்.

உயர்தரத்தில் யான் கல்விபயின்றபோது தமிழர் பண்பாட்டை சிதைக்கும் வடநாட்டின் மறைமுக யுத்தத்தை பெரிதும் உணராத காலத்திலேயே ஆலயத்தில் வடநாட்டின் சைவத்திற்கு தொடர்பில்லா பூசை முறைகள் சில இடையிடையே அரங்கேறியதை இன்று நினைவில் மீட்டும்போது உணரக் கூடியதாகவுள்ளது. எனவே, குறித்த தவறுகளை இனங்கண்டு தவிர்க்க வேண்டியது அதிபரின் தலையாய கடமையாய் விளங்குகின்றது.

எனக்கு தமிழை உணர்வித்த எல்லாம் வல்ல சிவனருள், கற்பக விநாயகன் மூலமே கல்லூரி சைவ சாம்ராச்சியத்திற்கு அறியப்படுத்தியது என்பதை நன்றியோடு இங்கு பகிரவிளைகின்றேன்.உயர்தரம்வரை எனக்குள்ளே இருந்த தமிழை நானே உணராது இருந்தபோது, சிவஞானத் திருவருள் தமிழை எனக்கு உணர்வித்தது. எனினும் கல்லூரியில் சிவகாமி அரங்கில் ஏறமுடியாது...ஏறும்வழி தெரியாது நின்ற எளியேனுக்கு கற்பக விநாயகன் மூலம் திருவருட் சம்மதம் களம் அமைத்து, எளியேன் தமிழை செப்பனிட்டது.
கல்லூரியில் கற்பக விநாயகர் சன்னதியில் எளியேனை மாணிக்கவாசகரின் குருபூசையை முன்னிட்டு மாணவர் உரைக்கு இந்து மன்ற ஆசிரியர்கள் தூண்டவே, யானும் உரையாற்றினேன். சிவன் அவன் அருளாலே சிவன் தாள் வணங்கி மாணிக்கவாசகப் பெருமானுக்கு எளியேன் கோர்த்த தமிழுரையாலாகிய மாலையே, சிவகாமி அரங்கிற்கு ஏறும் பாதையை ஏற்படுத்தித்தந்து என்னை பேச்சாளனாக மலரும் அடிப்படைத் தகுதிகளை எனக்குள் உருவாக்கியது.
பிள்ளையாரிடம் "சங்கத் தமிழ் மூன்றும் தா"
என ஔவையார் வேண்டியது எமக்காகவும் தானே!


என் உணர்வுகளுடன் கலந்துள்ள, இரத்மலானை பதியில் அரண்மனை கொண்டு விளங்கும் கொழும்பு சைவ சாம்ராச்சியம் இன்று புதுப்பொலிவுடன் புதுவடிவம் பெற்றுவருவது மனமகிழ்வை ஊட்டுகின்றது.

வாழ்க என் இனிய
சைவ சாம்ராச்சியமே!
சிவபூமி தமிழரசு
இராவணன் செந்நிறமலர்களால்
சிவ வழிபாடியற்றிய
திருமண்ணில் எழுந்து
தமிழ்மணம் பரப்பும்
இணையில்லா கல்லூரி
சாம்ராச்சியமே,
நீ வாழ்க!
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாயிரமாண்டு
வாழ்கவே!

இங்கு இணைக்கப்பட்டுள்ள படங்கள் சிலவற்றை நண்பன் கஜந்தனிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். நன்றி நண்பன் கஜந்தனுக்கு.ஏனைய சிலவற்றை சில இணையத்தளங்களில் இருந்து பெற்றுக் கொண்டேன். உரியவர்களுக்கு நன்றிகள்.

எல்லாம் திருவருட் சம்மதம்.

3 comments:

http://thiviyaranchiniyan.blogspot.com/2008/11/blog-post.html

ஏலவே கற்பக விநாயகன் ஆலயம் பற்றி இங்கு பதிவு வெளிவிட்டுள்ளேன்.குறித்த பதிவுக்குரிய விலாசமே மேலே வழங்கப்பட்டுள்ளதாகும். பெரிய பாரதம் போன்ற பதிவை வாசித்து சலிப்படைந்தவர்கள் பயப்படத் தேவையில்லை. சுருக்கமாக எழுதிய பதிவே அது.

ஒரு சாம்ராச்சியத்துடனான எனது பிணைப்பை எழுதவேண்டியதால் பாரதம்போல் நீளவேண்டியதாயிற்று.வாசித்து சலித்தவர்களிடம் "மன்னிச்சுடுங்கோ" என்றுதான் கேட்கமுடியும்....

நீளமாக‌ இருந்தாலும் சுவையாக‌ இருந்த‌து.. அறியாத‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை அறிய‌த்த‌ந்த‌மைக்கு ந‌ன்றி...

அன்புட‌ன்
தீப‌ன்.

நன்றி தங்களின் வருகைக்கும் பெறுமதியான பின்னூட்டத்திற்கும்.