கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை என்னும் பொழுது தேன் வந்து பாயுது எம் காதினிலே என்று பாடினால் அது மிகையில்லை.சைவ சாம்ராச்சியமாய் இரத்மலானை மண்ணில் வீற்றிருக்கும் எங்கள் கல்லூரியை நினைத்த பொழுதில் இன்பத் தேன் ஒழுகி உடம்பெல்லாம் புல்லரிக்கும்.
இராவண மன்னன் சிவப்பு மலர்கள் கொண்டு சிவபெருமானை பூசித்த பயனால் இன்றும் செந்தமிழ்ச் சைவ வாசம் இரத்மலானை மண்ணில் வீசும் அருமை நிலவுகின்றது. இராவணன் பூசித்த பயனால் திருநந்தீஸ்வரமாகவும் கொழும்பு இந்துக் கல்லூரியாகவும் கற்பக விநாயகர் ஆலயமாகவும் இரத்மலானை மண்ணில் சைவநெறியும் தமிழர் பண்பாடும் இன்றும் பேணப்படுவது கண்கூடு.
சைவநெறிக் கொடியாக நந்திக் கொடி விடைக்கொடிச் செல்வர் தனபாலா ஐயாவால் மீள அறிமுகப்படுத்தப்பட்டு (ஏலவே நந்திக் கொடி சைவக் கொடியாக இருந்து கால ஓட்டத்தில் பயன்பாட்டில் இல்லாது மறைந்து இருந்தது. எனினும் கொடிவாரம் என்றெல்லாம் நந்திக் கொடிபற்றி விழிப்புணர்வை யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்புகள் ஏற்படுத்தி வந்தனர்.) முதன்முதலில் எமது கல்லூரி வளாகத்திலேயே ஏற்றிவைக்கப்பட்ட பெருமையை உடையது எமது கல்லூரி.
நந்திக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட அருமையால் நந்தி(சிவன்) மகனுக்கு ஆலயம் உருவாயிற்று.கற்பக விநாயகர் என்ற திருப்பெயருடன் மாண்வர்களுக்கு அருள்பாலிக்கும் பிள்ளையாரின் பெருமையை எழுத இக்கட்டுரை போதாது.
கற்பக விநாயகர் குடிகொண்ட அருமையால் காலந்தால் முந்திய சிதிலமடைந்து கிடந்த திருநந்தீஸ்வரம் மெல்ல மெல்ல எழுச்சி கண்டு இன்று சைவமக்களின் பயன்பாட்டிற்கு உகந்தவகையில் உருவாகியுள்ளது.
இலங்கையிலேயே, நந்திக் கொடி பறந்து கொண்டிருக்கும் பெருமை எமது கல்லூரிக்கே உரித்தானது. வானத்திலே பறந்து கொண்டிருக்கும் நந்திக் கொடியால் சிவானந்தக் காற்று மாணவர்களின் உள்ளத்துக்குள் பெருக்கெடுத்து வளமான மாணவர் சந்ததி கல்லூரியில் இருந்து உருவாகுவது கண்கூடு.
முதியோர் இல்லம்,சக்தி இல்லம், மாணவர் விடுதி என பலநல்ல சமூகசேவைகளில் இலங்கை இந்து மாமன்றத்துடன் இணைந்து கல்லூரி ஆற்றும் பணி சைவ சமூகத்தின் குணத்தை குறிக்கும் குறீயீடு என்க.
இத்தகு பெருமைகளை கல்லூரி சூடிக் கொள்ள எமது கல்லூரியின் முதல்வர், ஆசிரியர் குழாம், பெற்றோர் குழாம், பழைய மாணவர் குழாம்,மாணவர் குழாம், சமூக ஆர்வலர் குழாம் எனப் பலதரப்பட்டவர்களின் உழைப்பே காரணம். பிரதானமாக கல்லூரி முதல்வரின் ஆளுமையை சுட்டியே ஆகவேண்டும்.
இவ்வண்ணம் பெருமையுடைய கல்லூரியில் ஒருசில குறைபாடுகள் இருப்பது வருந்தத்துக்கு உரியதே! அதை அகற்ற வேண்டியதும் நாம்தானே???
ஒரு கல்லூரியின் முதுகெலும்பாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தையே சுட்டுவர். ஆனால் எமது கல்லூரிக்கு காலத்துக்கு காலம் ஒரு இரு வருட இடைவெளிகளில் புதுப்புது பழைய மாணவர் சங்கங்கள் தோன்றுவதும், பின்னர் அச்சங்கங்கள் தானாகவே மறைந்துவிடுவதும் பலரை சலிப்படையச் செய்ய விடயமாகும். இதுவரை தோன்றி மறைந்துபோன பழைய மாணவர் சங்கங்கள் விட்ட குறைகள் என்ன? அச்சங்கங்கள் மறைந்துபோகக் காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து கொள்வது தற்போது வீரியமாக எழுந்துவருகிற பழைய மாணவர் சங்கத்துக்கு உரமளிக்கும் என நம்புகிறேன்.
பழைய மாணவர் என்பவர் கல்லூரியால் உருவாக்கப்பட்ட சமூகத்துக்குரிய வளங்கள் எனலாம். சமூகத்தின் வளங்களைக் கொண்டு எழுப்பப்பட்ட கல்லூரி எப்பகை வரினும் அப்பகை வெல்லும் என்பது திண்ணம்! எனவே முதல்வரின் ஆளுமையில் பெருவளர்ச்சி காணும் எமது கல்லூரியிற்கு தற்போது அவசியமானது உறுதியான அத்திவாரம் கொண்ட பழைய மாணவர் சங்கம்.முதல்வரின் சுமையை குறைக்க பழைய மாணவர் சங்கத்தின் எழுச்சி அவசியம்.
இதுவரை பூத்து வாடிய பழைய மாணவர் சங்கங்களையும் தற்போது நறுமணத்துடன் பூத்து செழிப்புறுகின்ற பழைய மாணவர் சங்கத்தையும் ஒப்பிடும்போது தற்போது வீறுகொண்டு எழுந்துவருகிற பழைய மாணவர் சங்கம் வாடமலராக விளங்கும் என்பது திண்ணம். எனவேதான் ஒரு எழுத்தாளனாக மட்டுமல்லாது, கல்லூரியை நேசிக்கும் கல்லூரியின் மைந்தனாக இக்கட்டுரையை எழுதவிளைகிறேன்.
ஒரு சங்கம் அல்லது கழகம் காலத்தால் அழியாது வாழவேண்டுமாயின் முதலில் யாப்பு உருவாக்கப்படுதல் அவசியம். யாப்பு என்பது எவர் விருப்பத்துக்கும் உருவாக்கப்படல் தவிர்க்கப்படல் வேண்டும். சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் ஏனைய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கங்களின் யாப்பை ஒத்த ஒரு யாப்பை உருவாக்குதல் தலையாய கடமையாகும். இதற்கு வெளிநாடுகளில் உள்ள எமது பழைய மாணவர் சங்கங்களின் உதவியை நாடுதல் எமது தேவையை இலகுவாக்கும். அவுஸ்ரேலியாவில் எமது கல்லூரிக்கும் எமது சகோதரக் கல்லூரியான பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் பொதுவான பழைய மாணவர் சங்கம் உள்ளதை இணையம் மூலம் அறிந்துகொண்டேன். இலண்டனில் கூட எமது பழைய மாணவர் சங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். எனவே இவர்களின் உதவியை நாடுதல் முதன்மையானது. யாப்பையும் இவர்களிடம் இருந்தே கேட்டு பெறலாம். இல்லாவிட்டால் யாப்பு உருவாக்கத்தில் பெரும்பிழைகள் உருவாகவாய்ப்புண்டு. ஏனெனில் தற்சமயம் பழைய மாணவர் சங்கத்தை வழிநடத்தும் தோழர்களாகிய நாமனைவரும் கழகங்களின் அமைப்புகள் பற்றிய கற்கையை முடித்தவர்கள் அல்ல. பெரும் நிதி வளத்துடன் இருப்பர்களும் அல்ல.
யாப்பு உருவாக்கத்துக்குப் பின்னர்,
பொருளாளரின் கட்டுப்பாட்டில், தலைவரின் மேற்பார்வையில் ஒரு கழக நியதிக்கு உட்பட்ட வகையில் யாப்பு அமைப்புக்கு ஏற்ப வங்கியில் கணக்கு சங்கத்தின் பெயரின் உருவாக்கப்படல் வேண்டும். இது வெளிநாட்டில் உள்ள எமது பழைய மாணவர் சங்கத்தின் பணவுதவிகளைப் பெற வழிவகுக்கும். கழக பொருளாளர் மற்றும் தலைவர், செயலாளரின் மேற்பார்வையைவிட ஏனையவர்களின் தலையீட்டுக்கு இடமில்லாத வகையில் கணக்கை பேணுதல் அவசியம். மாதாந்தக் கூட்டத்திலும், ஆண்டுக் கூட்டத்திலும் வரவு-செலவை பொருளாளர் அறியப்படுத்தல் வேண்டும். இவையாவும் சங்கத்தின்மேலான நம்பிக்கையை சமூகத்தில் வளர்க்கும்.
நான் கல்விகற்ற காலத்திலேயே பலமுறை, கல்லூரியின் இந்து மாணவர் சங்கம், தமிழ்ச் சங்கம், விஞ்ஞானபீட மாணவர் மன்றம், வர்த்தபீட மாணவர் மன்றம் போன்ற பல மாணவர் மன்றங்கள் வருடத்துக்கு வருடம் மன்றச் சின்னங்களை மாற்றுவதும், மன்றத்தின் உத்தியோகபூர்வ வாசகங்களை மாற்றுவதும் இயல்பான தொன்றாக இருந்தது. காரணம் பொறுப்பாசிரியர்கள் மாணவர்கள் உருவாக்கும் சின்னங்களைத் தவரவிடுவதே காரணமாகும். கடந்தமுறை கல்லூரிக்கு சென்றிருந்தபோது ஒரு ஆசிரியர் இப்படி இதைக் குறிப்பிட்டார். "2003இல் வழங்கிய சான்றிதழில் இச்சங்க சின்னமாக இதுவுள்ளது.இந்தமுறை வழங்கியுள்ள சான்றிதழ்களில் இந்தப் புதுச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த இரு வெவ்வேறான சின்னங்களையுடைய சான்றிதழ்களுடன் ஒருவேலைத்தளதின் நேர்முகப் பரீட்சைக்கு இரு மாணவர்கள் பங்குபற்றின் வேலைத்தள நிர்வாகம் "ஒரே கல்லூரியின் ஒரே சங்கத்துக்கு எங்கனம் இரண்டு சின்னங்கள்?" என்று ஐயம் கொண்டு ஏமாற்று சான்றிதழ் என கருத இடமுண்டு" என்றார். உண்மைதான்!!!!
ஒரு கழகம்/சங்கத்தின் சின்னம் பொருள் பொதிந்ததாக உருவாக்கப்படல் அவசியம். கல்லூரியின் பண்பாட்டை எடுத்தியம்பும் வகையில் இருத்தல் அவசியம். அறிவுடையார் எல்லாம் உடையார் என்ற அற்புத வாசகத்துடன் சைவப் பண்பாட்டை சொல்லும் கோபுரச் சின்னத்துடன் எமது கல்லூரி விளங்குகின்றது. கோபுரச் சின்னத்துள் உள்ள தாமரைக்கு கலைவாணி வீற்றிருக்கும் இடமெனவும், ஏடுகளுக்கு கல்வி போதிக்கும் இடமெனவும், குத்துவிளக்குக்கு மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றும் இடமெனவும் பொருள் உரைக்கலாம். கல்லூரியின் கோப்புகளில் சரியான பொருள் இருக்க வாய்ப்புண்டு.(சிலசமயங்களில் 83கலவரத்தில் எரியூட்டப்பட்ட போது அழிந்துபோன நூலகம் மற்றும் கல்லூரி உடமைகளுள் சின்னத்துக்குரிய விளக்கக் கோப்பும் அழிந்துபோயிருக்கலாம்.) நான் கல்லூரியில் உள்ளபோது சரியான விளக்கத்தை தமிழாசிரியர் உட்பட எவரும் வழங்கிலர். தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி,கொக்குவில் இந்துக் கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி, சைவ மங்கையர் கழக கல்லூரி என பலதரப்பட்ட கல்லூரிகளின் சின்னங்களைப் பார்த்தபோது சைவ மணத்துடன் கூடிய தமிழ்ப் பண்பாடு கல்லூரிச் சின்னங்களிலும் சரி, அக்கல்லூரிகளின் கழகச் சின்னங்களிலும் சரி காணக்கூடியதாக இருக்கும். ஆங்கிலமோகத்தை எந்தவொரு தமிழ்க் கல்லூரிச் சின்னங்களிலும் நான் இதுவரை கண்டதில்லை. மேலைத்தேயத்தவர் உருவாக்கிய கல்லூரிகளில் ஆங்கிலச் சாயல் அப்பட்டமாய் இருப்பது இயல்பு. ஆனால் அவர்களிடம் இருந்து எமது பண்பாட்டைக் காக்க எமது முன்னோர்கள் கட்டிய எந்தக் கல்லூரியின் சின்னங்களிலும் ஆங்கிலச் சாயல் இருந்ததில்லை.அதேநேரத்தில் ஆங்கில அறிவில் அவர்கள் பின் தங்கியிருந்ததும் இல்லை.
ஆங்கிலம் என்பது அறிவு.மேலைத்தேயப் பண்பாடென்பது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றே! ஆனால் மேலைத்தேய மோகத்துள் வீழ்ந்து எமது பண்பாட்டைத் தொலைப்பதாக இருக்கும்போது "நாம் வீழ்கின்றோம்" என்ற செய்தி பொறிக்கப்பட்டுவிட்டதென்க!
எனவே, எமது பழைய மாணவர் சங்கச் சின்னம்;
தமிழில் வாசகத்தை கொண்டிருத்தல் அவசியம். சின்ன உருவாக்கத்தில் உள்ள ஒவ்வொரு அம்சத்திற்கும் ( கல்லூரிச் சின்னத்துக்கு யான் அறிந்த வகையில் விளக்கியுள்ளவாறு) எமது பண்பாட்டுடன் இணைத்து விளக்கம் கூறக்கூடிய சின்னமாக அது இருத்தல் அவசியம். தற்போது பேஸ்புக் குழுமத்தில் இணைக்கப்பட்டுள்ள சின்னத்தில் உள்ள பிரித்தானிய இராணியின் முடி-கிஞ்சித்தும் ஏற்க முடியாதவொன்று.
கோபுரத்தைவிட உயரமாக எதையும் கட்டக்கூடாது என்ற பண்பாடு எமது சமூகத்தில் இருந்த மரபு. கால ஓட்டத்தில் அதுமறைந்துவிட்டது. (தூர உள்ளபோதுகூட கோபுரம் காணின் ஆன்மீக உள்ளம் ஏற்படும்.எனவே கடவுள் உள்ளார் என்ற சிந்தையில் தவறுசெய்ய மக்கள் முற்படமாட்டார்கள் என்பதன் நிமித்தமே!) ஆனால் எமது கல்லூரியின் கோபுரச் சின்னத்திற்குமேல் பிரித்தானிய இராணியின் முடியைச் சூட்டியிருப்பது நாம் அவர்களின் அடிமை என்ற பொருளையே கொடுக்கும். ஏன் நமது மன்னர்களின் முடிகூட உகந்ததில்லை. காரணம் 'நாமார்க்கும் குடி அல்லோம்' என்று வாழ்ந்த நாயன்மார்கள் ஒழுகிய சைவநெறியின் இறைவன் எந்த மன்னனுக்கும் குடியாக மாட்டான்.அவனுக்குத்தான் நாம் குடி. எனவே இறைதத்துவத்தை உணர்த்தும் கோபுரத்துக்கு மன்னரின் முடியைச் சுட்டுவது எமது சமயத்தை நாமே இழிவுபடுத்தும் ஒன்றாகிவிடும்!
மேலும் ஐ.நா போன்ற அமைப்புகளில் பயன்படுத்தும் ஒலீவ் இலை எமது பண்பாட்டுக்கு எந்தவகையில் பொருந்தும் என்று புரியவில்லை.
சின்னமானது கவர்ச்சியாக இருக்க வேண்டிய அதேசமயம் அர்த்தம் பொதிந்ததாக பண்பாட்டை சொல்வதாக இருத்தல் வேண்டும். ஏதேனும் ஆங்கிலேயர் உருவாக்கிய கல்லூரிக்கு ஒலீவ் இலையைப் பயன்படுத்துவது தவறில்லை. எமது தமிழ்ப் பண்பாட்டு கல்லூரிக்கு ஒலீவ் இலை உகந்ததில்லை.
பொறுப்பில் உள்ளவர்கள் இணைய உலகம், மேலைத்தேயப் பாலம் என்று சொல்லி தமிங்கிலத்தையோ அல்லது ஆங்கிலப் பண்பாட்டு மோகத்தையோ எமது சமூகத்துக்கு ஊட்டக்கூடாது. ஆங்கில அறிவு மட்டுமல்லாது, பிரான்ஸ், டொச் எனப் பலதரப்பட்ட மொழிகளில் எம்மவர்கள் ஆளுமைபெற்றவர்களாக வளர்க்கப்பட வேண்டுமே ஒழிய ஆங்கிலேயர்களாகவோ அன்றி டொச்காரர்களாகவோ வளர்க்கப்படக்கூடாது.
எனவே, தாழ்மையுடன் வேண்டுவது யாதாயின்; உருவாக்கப்பட்ட சின்னத்தை மீளாய்வு செய்க.
அடுத்த பிரதானமான விடயம்; சங்கத்துக்கென தனியான கோப்புகளை பேணுதல் வேண்டும். பற்றுச்சீட்டு உருவாக்குதல் வேண்டும். கல்லூரி நிர்வாகத்துக்கு பணமளிக்கும் போது பற்றுச்சீட்டைப் பெறவேண்டும். கல்லூரியில் பணம் பயன்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்தல் வேண்டும்.
அடுத்த பிரதானமான சங்கத்துக்கு வலுவூட்டும் அம்சம் யாதாயின்; இன்று பொறுப்புள்ள பதவிகளிலும், வர்த்தகர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக,சட்டத்தரணிகளாக,பொறியியலாளர்களாக,தொழிலதிபர்களாக இலங்கையில் வாழும் எமது பழைய மாணவர்களை காப்பாளர்களாக இணைத்தல் வேண்டும். தற்போது உள்ள சங்கப் பொறுப்புகளில் இளைஞர்களே இருப்பதால்; அவர்களது தலைமையில் சமூகத்தின் பிரதிநிதிகளை அடக்குதல் நாகரீகம் அன்று. எனவே அவர்களை கௌரவிக்கும் காப்பாளர்களாக நியமித்தல் நல்லது.
இவையாவும் எமது கல்லூரியின் எழுச்சிபெறும் பழைய மாணவர் சங்கத்தின் ஆணிவேரைப் பலப்படுத்த உதவும் விடயங்களாகும். எனவே இவற்றை கருத்தில் எடுத்து செயற்படுத்த தாழ்மையுடன் வேண்டுகிறேன். தற்சமயம் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவமுடியாது கல்விக்காய் புலம்பெயர்ந்து உதவும் பேறை இழந்து தவிக்கிறேன். ஆதலாலேயே இத்தக்கட்டுரையை பாலம் சமைக்க இராமனுக்கு உதவிய அணில்போல் கல்லூரி வளாகத்துள் நின்று சங்கத்துக்காய் உழைக்கும் தோழர்களுக்கு உதவும்பொருட்டு இக்கட்டுரையை எழுதி பிரசுரிக்கிறேன்.
எமது கல்லூரியின் தற்போதைய முதல்வரின் காலத்தில் நாம் உறுதியான பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கும் பேறை தற்போது பெற்றிருக்கின்றோம். முதல்வருக்கு தோள் கொடுக்க பழைய மாணவர் சங்கம் உதவ வேண்டுமாயின் வலுவுடைய சங்கம் உருவாதல் வேண்டும். எனவே தனிப்பட்ட நன்மை தீமைகளை கருத்தில் எடுக்காது; சமூகத்தின் நன்மையை கருத்தில் எடுத்து பழைய மாணவர் சங்கத்தை செயற்படுத்த வேண்டுகிறேன்.பல ஒதுங்கியுள்ள பழைய மாணவர்கள் மேலே யான் சுட்டியுள்ள கருத்துகளை செயற்படுத்தும்போது தாமாகவே முன்வந்து இணைவர். ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு? எனவே ஒன்றுபடுத்துவோம்!!!கல்லூரி மைந்தர்களின் வரவேற்கப்படுகின்றன.
எம் கல்லூரியின் வளர்ச்சிக்காய் வீறுகொண்டு எழுவோம்.
நன்றி
3 comments:
I accept ur views.
என்னுணர்வோடு கலந்த கொழும்பு சைவ சாம்ராச்சியம்
http://thiviyaranchiniyan.blogspot.com/2009/01/blog-post_26.html
இரத்மலானையில் ஓர் சைவச் சொத்து
http://thiviyaranchiniyan.blogspot.com/2008/11/blog-post.html
என்னுணர்வோடு கலந்த கொழும்பு சைவ சாம்ராச்சியம்
http://thiviyaranchiniyan.blogspot.com/2009/01/blog-post_26.html
இரத்மலானையில் ஓர் சைவச் சொத்து
http://thiviyaranchiniyan.blogspot.com/2008/11/blog-post.html
Post a Comment