Tuesday, April 14, 2015

யுத்தத்தின் வடுக்கள்......!

எல்லோரும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியாயிற்று. நான்மட்டும் இன்னும் சொல்லவில்லையே......அதுதான் புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் உலகம் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கும் தமிழ்க்குடியிடம்  மட்டக்களப்பில் என் அனுபவம் சிலவற்றை பகிர்ந்துகொண்டு புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.ஒருசமயம் ஒரு 60 வயது நோயாளி என்னிடம் வந்தார். அவரது நோயை அறியும் நாட்டத்தில் நான் அவரைக்  கேள்விகள் கேட்டவண்ணம்  இருந்தேன். அப்போது அவர்எங்க ஊருக்கு ஆமிக்காரங்க வந்து  எல்லோரையும் பிடித்திட்டுப்போய் அடியோ அடியென்று அடித்தார்கள் என்று கூறினார்.
பிறகு என்ன நடந்ததென்று கேட்டேன்.
 “என்னை மட்டும் விட்டுவிட்டார்கள். ஏனையவர்களை விடவில்லைஎன்றார்.
அது எப்படி  நீங்கள் மட்டும் தப்பினீர்கள் என்று கேட்டேன்
எனக்கு சிங்களம் கொஞ்சம் தெரியும். அதனால் ஆமிக்கார முகாமில் இருந்தபோது ஆமிக்காரரோடு கதைப்பேன். அப்போது அந்த முகாமின் ஆமிகளின் அதிகாரி என்னிடம் 15வயது பெண் ஒன்றை தமக்குக் கொடுத்தால்  விட்டுவிடுவதாகச் சொன்னார். நான் சம்மதம் சொன்னதும் முகாமிலிருந்து விட்டுவிட்டார். எனக்குத் தெரிந்த பெண்ணொருவரை அந்த ஆமிக்கார அதிகாரியிடம் கூட்டிக்கொண்டுபோய் விட்டுவிட்டேன். அதனால்த்தான் தப்பித்தேன்” என்றார்.
என்ன காரியம் செய்துள்ளீர்களென்று என்று கடிந்துகொண்டேன்.
மௌனமாக இருந்தவர் ஒருசில நிமிட த்திற்குப் பிறகு  மௌனத்தைக் கலைத்து " அவர் தனது வீட்டுவேலைக்குத்தான் என்றார்.அதுதான் கொண்டுபோய்க் கொடுத்தேன் " என்றார்.
எனக்கு  ஆரம்பத்தில் கோபம்தான் வந்தது!!!ஆனால் கொஞ்சநேரத்துக்கு அவரது இடத்தில் இருந்து யோசித்துப் பார்த்தேன்!!!!!!! மௌனியாகிவிட்டேன்!!! அவர் முகமும் இருண்டுபோய் மௌனத்தில் ஆழ்ந்தது!

கொழும்பில் சௌகரியமான சூழலில் வளர்ந்த என்னால், அவருக்கு நீதிபதியாக இருந்து அவரின் செயலை "நீதி"க்கு உட்படுத்தி கேள்விகளை என்னுள் உருவாக்க முடியவில்லை!!!

இன்னொரு சமயம், ஒரு அம்மா(32வயதுடைய) ஒருவரை சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவருடைய சமூகச்சூழல் தொடர்பான கேள்விகளைக்  கேட்டேன்அப்போது அவர் கணவரை இழந்தவர் என்பதையும் மூன்று பிள்ளைகளின் தாய் என்பதையும் அறிந்துகொண்டேன். மூத்த பிள்ளையும்  இரண்டாவது பிள்ளையும் பெண்பிள்ளைகள்கடைசி பிள்ளை பையன்அந்த அம்மா 16 வயதில் திருமணம் செய்திருந்துள்ளார். கடைசிப் பிள்ளை கைக்குழந்தையாக இருந்தசமயமே கணவரை இழந்திருந்தார். கணவரை இழந்தபோது அந்தம்மாவுக்கு 21 வயது. “கணவருக்கு என்ன நடந்தது” என்று கேட்டேன். “இயக்கம் சுட்டுவிட்டது” என்றார்.

ஏனம்மா என்று கேட்டேன்.

படகிலிருந்து "சாமான்களை" இறக்கிய இயக்கம், அவற்றை கொண்டுபோவதற்கு ஆட்களைக் கூப்பிட்டார்கள்.ஆட்கள் காணாது என்றும் அதனாலேயே ஆட்கள் தேவையென்றும் கூறி, மூன்று நாளில் திருப்பிக் கொண்டுவந்து விடுவோம் என்றும் கூறினர். ஆனால் எங்கே விடமாட்டார்களோ என்று பயந்து நான் என் கணவரை போகவிடவில்லை. ஆத்திரமடைந்த இயக்கம் என் கணவரை  என் கண்முன்னாலேயே சுட்டுப்போட்டுது!!! “என்று அழுது மௌனியானார். நான் என்னை பட்டமரம்போல் உணர்ந்தேன்.

கொஞ்சநேரம் அவர் அழுகைக்கு அனுமதியளித்துவிட்டு,
"உங்கள் குடும்பத்தை யாரம்மா பார்ப்பது?" என்று கேட்டேன். கண்டியில் "மசாச் சென்றரில்" வேலை செய்துதான் உழைத்தேன் என்றார்.ஆனால் இப்போது மரக்கட்டைகள்(சுள்ளிகள்) விற்பதுதான் வேலை என்றார்ஏன் கண்டியில் வேலையை விட்டீர்கள் என்றதும் மௌனியாகி அழத்தொடங்கினார்...............ஏன் இப்படியொரு கேள்விகேட்டேன் என்று என்னையே நொந்துகொண்டு அன்று முழுவதும்  தூக்கமின்றி என்னாளைக் கழித்தேன்.

இந்த இருவருக்கும் மன அழுத்தம் தான் பெரும் பிரச்சினைஅதுதான் நோய்!!! மட்டக்களப்புக்கு வருகின்றோம்!!! பாசிக்குடாவில் குளிக்கின்றோம்!! சிங்கிங் விஷ்சில் குதுகலிக்கின்றோம்! ஈஸ் லகூனில் கொண்டாடுகின்றோம்!!!! ஆனால் நம்மில் எத்தனைபேர் மட்டக்களப்பு மக்களின் யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட வாழ்க்கையை  தரிசிக்கின்றோம்???? இங்கு ஆமிக்காரர்களாலும் இயக்கத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். (அப்பாடியோ..... ஒருமாதிரி நான் நடுநிலையாளன் என்பதை உறுதிப்படுத்தியாச்சு!) இவர்கள் நித்திரையில் அழுகின்றார்கள்!!!! கொழும்பிலிருந்து திடிரென வந்திறங்கும் தமிழர்களுக்கு இவர்கள் நித்திரை கொள்வதாய்த்தான் தோன்றும்!!! ஏனையோருக்கு இவர்கள் அனந்தசயனம் செய்வதாய்த்தான் தோன்றும்!!!!



அண்மையில் ஆத்திராவில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கூலித்தொழிலாளிகள் பெரிய அதிர்வலையையே தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்க, ஒருசிலர் "இது அவர்கள் செய்த குற்றத்திற்குத் தண்டனை" என்று எழுதி இராமன் புகழைப் பாடிக்கொண்டிருந்தார்கள்!!!!  சிலர் பகவத்கீதையின் கர்மயோகத்தைக் கதைத்தார்கள். குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டு ஐபோன்,ஐபாட்,கலக்சி டப்,போன் என்று கணினி வகைகளில் ஒன்றைப் பயன்படுத்தி கருத்துரைப்பவர்கள் கர்மயோகத்தைத்தான் ஓதுவிப்பார்கள்!!! வேறு என்னைத்தைச் சொல்ல என்று அமைதியாக அவர்களின் கருத்துக்களைப் படித்து  "இராமனுக்கு இப்படிப்பட்ட தொண்டர்கள் அமைந்தமைக்கு இராமன் செய்த பாவம் என்னவோ?” என்று நொந்துகொண்டேன். நான் சந்தித்த அந்த 60 வயது ஐயாவும் 32 வயது அம்மாவும்  என்னுள் அந்த மனப்பக்குவத்தை விதைத்திருந்தனர்! அவர்கள் முகங்கள் எனக்குள் விதைத்துள்ள செய்திகள் பல!!!!




தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்த்தான் தெரியும்!!!!!!!!!!!!!!!!
சரி, எல்லோருக்கும் என்னுடைய  புத்தாண்டு வாழ்த்துக்கள்