Tuesday, August 17, 2010

அறிஞர் அண்ணா கொல்லப்பட்டாரா?

பயப்படாதீர்கள்.....அறிஞர் அண்ணா இயற்கை எய்தியது இயற்கையாகத்தான். ஆனால் அவரது கொள்கைகள் உயிரோடுள்ளவரை அவரும் உயிரோடு இருப்பார் என்பது பொதுசனங்களின் நம்பிக்கை. ஆனால் பொதுசனங்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார்கள் அண்ணாவின் வாரிசுகளே! அது அண்ணாவைக் கொன்றதுபோல்தானே?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதுபோல் அண்ணாவின் கொள்கைகளை கொன்றமைக்கு ஒரு எளிய உதாரணத்தை இங்கு பார்ப்போம்!

அறிஞர் அண்ணா, ஒருமுறை பழைய மன்னர்கட்டிய கோயிலை பார்க்க வேண்டியிருந்தது. அப்போது தன்னுடன் உடனிருந்தவரிடம் "இந்தக் கோயிலைக் கட்டிய மன்னன் யார்?" என்று வினாவினார். விழிபிதுங்கிப் போய்விட்டார் உடனிருந்தவர்! "தெரியவில்லை.......இங்கு எங்கையும் கட்டிய மன்னரின் பெயரை எழுதிவைக்கவில்லை...எழுதியிருந்தால் பார்த்துச் சொல்லலாம்" என்றார் உடனிருந்தவர்.
பலமாக சிரித்த அறிஞர் அண்ணா; "இத்துணூண்டு டியூப் லைட்டை (புளோர் ஒளிர்வுக்குழாய்) கொடுத்தவன் தனது பெயரை கொட்டை எழுத்தில் எழுதியுள்ளான் பாரு! இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டிய மன்னன் தனது பெயரை பதிவுசெய்ய தவறியுள்ளபோது, இவனோ கொட்டை எழுத்தில் தனது பெயரை ஒராண்டுக்கும் தாக்குப்பிடிக்காத இந்த டியூப்லைட்டில் எழுதியுள்ளானே...!" என்று சிரித்துவிட்டுச் சென்றார்.

சென்னைப் புறநகர் வளாக அமைப்புக்கு அடிக்கல் நாட்டியது.....துவக்கப்பட்டது என்று போட்டிபோட்டு கல்வெட்டு தீட்டியுள்ளன அண்ணாவின் வாரிசுகளைப் பாருங்களேன்...!!! ஒன்று அண்ணாவின் அருமை கருணாநிதியரின் விளையாட்டு...மற்றையது அண்ணா என்ற பெயரைச் சுமந்த கட்சியின் தலைவியின் விளையாட்டு!!!




டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிய தாம்பரம் பேருந்து நிலையத்தில் அவரது கூத்தைப் பாருங்களேன்.....! ஏதோ அவர் சொந்தப்பணத்தில் கட்டியதுபோல் தனது பெயரை விளப்பரப்படுத்தியுள்ளார்.



அரசு பணம் என்பது மக்கள் பணமே ஒழிய முதலமைச்சரினதோ அன்றி அமைச்சர்களினுடையதோ அன்றி சட்டசபை உறுப்பினர்களுடையதோ அல்ல!!! எனவே அரசு பணத்தில் கட்டிய கட்டிடங்களுக்கு கட்டியவர்கள் வைக்கும் தமது பெயர் பலகைகள்,கல்வெட்டுகளைப் பார்க்கும்போது கடவுளே......மன்னராட்சியா நடைபெறுகின்றது என்று எண்ணத் தோன்றியுள்ளது!!!
கல்வெட்டுகளை செதுக்கி இவ்வளவு மிரமாண்டமாக நிறுவுவதற்கு செலவாகும் மக்கள் பணத்துக்கு நீதி கேட்டு எங்குபோய் போராடுவது?

புளோர் ஒளிர்வுக் குழாயை தனது சொந்தப்பணத்தில் ஆலயத்துக்கு கொடுத்தவன் தனது பெயரை கொட்டெழுத்தில் எழுதியிருந்ததைப் பார்த்து சிரித்த அண்ணா, மக்கள் பணத்தில் அரசுப் பணியில் அமைக்கப்படும் கட்டிடத்தொகுதிகளுக்கு தமது பெயரை "பெரும் செலவீனத்தில்" பொறிக்கும் அண்ணாவின் வாரிசுக்களை, அண்ணா "மேலுலகில் இருந்து" காண்பாராயின் எவ்வளவு வேதனைப்படுவார் ஐயகோ!!!


தமிழகத்தில் ஓடுகின்ற பேருந்துக்களில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் படத்தைப் பாருங்களேன், இதில் "நீ நான் என்றால் உதடு ஒட்டாது என்றும் நாம் என்றாலேயே உதடுகள் ஒட்டுகின்றன " என்று தத்துவம் பேசியுள்ளார். காலங்காலமாக தமிழில் புழக்கத்தில் உள்ள இந்த தத்துவவரிக்கு "கலைஞர்" என்று பெயர்கொடுத்து மெதுவாக அவரையும் திருவள்ளுவர் தானத்துக்கு உயர்த்திவிட்டுள்ளார்கள் திருத்த முடியாத கழுதையர்கள்.ஈழநாட்டுத் தமிழர் வேறு நான் வேறு என்று வெட்டிவிட்டவரின் தத்துவப்பேச்சைப் பாருங்களேன்!!!

கடவுளே, எல்லாம் தமிழினம் செய்த ஊழ்வினையோ? உன்னைத்தவிர வேறுயாராலும் தமிழரைக் காப்பாற்றமுடியாது!!!

2 comments:

arumaiyana pathivu.
valthukal.
www.thambi.tk

இவர்கள் எல்லாரும் அண்ணாவின் வாரிசுகள் என்று இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்.. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற உயரிய கோட்பாடை அளித்த ஒப்பற்ற தலைவனின் பெயரை உச்சரிக்கக் கூட தகுதி அற்றவர்கள்..