மருத்துவர் திரு.ரவிராஜ் ஐயாவின் சத்திரசிகிச்சை நோயாளர் படுக்கைத்தொகுதி ஓரளவுக்கு சிறப்பாகப் பேணப்படுகின்றது.புதிதாக கட்டி,திருத்தி அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி என்பதை பார்க்கும்போது புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.ஆனால் ஏனைய சத்திரசிகிச்சைக்குரிய பிரிவு நோயாளர் படுக்கைத் தொகுதிகள் தரத்தில் "சாதரணம்" என்றுகூட முத்திரை குத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஒருசில படுக்கைத்தொகுதிகள் புதிதாக நுழைபவர்களை மயக்கிவிடும் துர்மணத்துடன் விளங்குகின்றன! இவற்றின் மணங்குணங்களுக்கு இசைவாக்கமடைய இருநாட்கள் பிடித்துவிட்டது எனக்கு! ஒருசில நோயாளர் படுக்கைத்தொகுதிகள் நோயளர்களின் மலசலகழிவு கூடத்துடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. அவை உரியமுறையில் கழுவப்படுகின்றன என்றால் சரியான விடையில்லை!
சிஸ்டோஸ்கோப்பி(cystoscopy) என்ற மூத்திரப்பையை ஒளியியற்கருவி கொண்டு காணொளியில் அவதானிக்கும் மருத்துவப்பரிசோதனையை பொதுவாக அதில் நிபுணத்துவமுடைய மருத்துவரே பார்ப்பது முறை! இதில் நிபுணத்துவமுள்ள மருத்துவரை யூரோலோஜிஸ்ட்(urologist) எனப்படுவர். ஆனால் அங்கு பொதுசத்திரசிகிச்சை மருத்துவரே இந்தமருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுகின்றார். காரணம் வினாவியபோது யூரோலோஜிஸ்ட் இல்லையாம்! ஒரு பேச்சுவாக்கில் செவிவழியாகப் பெற்றுக் கொண்ட செய்தி மருத்துவர்களுக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றதாம்! ஆனால் பாராட்டப்பட வேண்டிய விடயம் யாதெனில் குறைந்த வளங்களைக் கொண்டு சிறந்தமுறையில் உச்ச பயனை நோயாளர்களுக்கு வழங்கும் வைத்தியசாலை நிர்வாகத்தைத்தான்! தற்போது பணியாற்றும் சத்திரசிகிச்சை மருத்துவர்களை பார்த்தபோது அவர்கள் படுகின்ற வேலைப்பளுவையும் அதற்கு மத்தியில் சேவைநோக்கில் செயற்படும் அவர்களின் உழைப்பையும் யாழ்சமூகம் மெய்ச்சிப் பாராட்ட வேண்டும்.
மருத்துவ மாணவர்களுக்கு போதிக்கவேண்டிய கடமையுணர்வையும் பெரும்பாலும் அனைத்து வைத்தியர்களிடமும் காணக்கூடியதாக இருந்தது. யாழ் மண்ணில் கல்வியின் வளம் மங்காமைக்கு இந்த சேவைநோக்கம் எல்லா ஆசிரியரிடமும் பொதுவாக இயல்பில் குடிகொண்டிருப்பதால் என்றே எண்ணத்தோன்றியது! உண்மையும் தான்!
காட்டுபிராண்டித்தனமாக வெறிபிடித்து கைகளில் இருந்த துப்பாக்கிகள் கொண்டு மருத்துவனை வைத்தியர்களையும் தாதியர்களையும் சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவத்தினரின் பாவத்தைப் போக்குவதற்கு காசியில் போய் மூழ்காது இந்திய அரசு CT SCAN இயந்திரத்தை நன்கொடையாக அளித்துள்ளது. காசியில் போய் மூழ்கினாலும் போகமுடியாத பாவம் என்பதை உணர்ந்ததால்த்தானோ இந்த நன்கொடை என்ற எண்ணத்தை ஊட்டுகின்றது CT SCAN அறைக்கு அருகாமையிலிருக்கும் கொல்லப்பட்ட மருத்துவப் பணியாளர்களின் உருவப்படங்கள்! சரி இந்தப் பாவத்துக்கு பரிகாரம் தேடியாயிற்று! சில ஆண்டுகளுக்கு முன் செய்த பாவங்களுக்கு...........உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
நான் யாழ் போதனா வைத்தியசாலை மட்டுமல்ல,சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை,களுபோவில வைத்தியசாலை என்பவற்றையும் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஏனைய இரு வைத்தியசாலைகளையும் வைத்தியசாலைகள் என்றே அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கு சிறப்பான கட்டிடத்தொகுதி, நோயாளர் படுக்கைத்தொகுதிகள்,மருத்துகள் என்று சிறப்பாகப் பேணப்படுகின்றன!
ஆனால் யாழ்.போதனா வைத்தியசாலையின் தொண்ணூறு வீதமான பகுதிகள் பாழடைந்த வீட்டையே நினைவுபடுத்துகின்றன! ஒரு கட்டிடத்தொகுதி இப்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. மருந்துகளுக்குப் பெருந்தட்டுப்பாடு! வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைதருகின்ற நோயாளர்களுக்கு "வெளியில் வாங்குங்கள்" என்பது மருத்துவர்கள் மனமில்லாது சொல்லுகின்ற வார்த்தை! பல நோயாளிகள் படுத்திருப்பதற்கு கட்டில்கள் பற்றாக்குறையால் நடைபாதையில் பாய்விரித்துவிட்டு படுக்கவைக்கப்பட்டுள்ளனர்!
ஒரு மருத்துவர் மருந்தொன்றை எழுதி வைத்தியசாலை மருந்தகத்தில் வாங்குப்படி பணித்தார். பதினைந்து நிமிடங்கள் கழித்து அதே நோயாளி மீட்டும் வந்து "ஐயா இந்த மருந்து வைத்தியசாலை மருந்தகத்தில் இல்லையாம்" என்றார். மருந்துவருக்கு வந்தது கோபம்! "இந்த மருந்துகூட இல்லாவிட்டால் பிறகு எதுக்கு வைத்தியசாலையை நடத்த வேண்டும்" என்று சினந்து கொண்டார். வெளியில் வாங்கும்படி பணித்தார். இதுதான் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருந்தகத்தின் நிலை!
*மருந்துகள் பற்றாக்குறை!
*நோயாளர் படுக்கைத்தொகுதிகளில் உள்ள கட்டில்கள் பற்றாக்குறை!
*மருத்துவர் பற்றாக்குறை!
*கட்டிடத்தொகுதிகள் பாழடைந்த வீடுகள்போல் உள்ளன
இதுதான் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நிலை!
என்னோடு பயிற்சிகளில் ஈடுபட்ட மாணவர் "தான் சிறுவயதில் இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது.இப்போதும் இப்படித்தான் உள்ளது" என்று என்னிடம் கூறினார் நான் மனம் வெந்தபோது!
இது இப்படியிருக்க நல்லூர் கோயில்,இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம் உட்பட ஒருசில ஆலயங்களுக்கு செல்லும் பேறுகிட்டியது. நல்லூர் ஆலயத்தில் ஒருபக்கம் கோபுரம் கட்டி திருத்த வேலைகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. இணுவில் பரராசசேகரப்பிள்ளையாருக்கு சென்றபோது பணவளமுள்ள ஆலயம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.நான் சென்ற ஏனைய ஆலயங்களில் பெரும்பாலானவை புதிய கோபுரங்கள் எழுப்பப்பட்டவையாகவோ அல்லது இடித்துக் கட்டப்பட்டவையாகவோ அல்லது புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டவையாகவோ காணப்பட்டன! எல்லாம் வெளிநாட்டுப் பணம் என்பதை விசாரித்தபோது விளங்கியது! அந்த வெளிநாட்டுப் பணத்தில் ஒருசிறு பங்கையேனும் யாழ்.போதனா வைத்தியசாலையை வளப்படுத்த செலவழித்தால் எவ்வளவு நன்மை பயற்கும்! ஏழைகள் தமக்குரிய மருத்துகளை வைத்தியசாலையிலையே பெற்றுக் கொள்வர். வைத்தியசாலையும் சிறந்தமுறையில் தனது பணியை சமூகத்துக்கு செய்யக்கூடியதாக இருக்கும்!
அரசாங்கம் செய்யவேண்டியது என்று ஒருசிலர் சொல்வர்! இப்போது கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள ஒருசில கட்டிடத்தொகுதிகள் நெதர்லாந்து நாட்டு அரசாங்கக்கொடையால் விளைந்தவை! எனவே நெதலாந்து நாடே உதவிக்கரம் நீட்டியுள்ளபோது........எம்மவர்கள் ஏன் உதவக்கூடாது? அரசாங்கம் உதவ வேண்டுமென்று யாழில் உள்ள எம்முறவுகளை கவனிப்பாரற்று கைவிடுவது முறையா? இந்து கலாச்சாரத் திணைக்களம் / அமைச்சு ( சைவப் பண்பாட்டு அமைச்சு / திணைக்களம் என்பதே சரியான பெயரீடு) பார்க்கவேண்டிய வேலையை வெளிநாட்டில் இருந்து நம்மவர்கள் பணம் அனுப்பி பார்க்கும்போது சுகாதார அமைச்சு பார்க்கவேண்டிய வேலையை ஏன் பார்க்கக்கூடாது?
பயனடையப்போவது யாழில் உள்ள ஏழைமக்களே!தமிழ் அரசியல்வாதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையை வளப்படுத்த உரியமுறையில் செயற்படுவார்கள் என்றால் ஏழை நோயாளர்கள் செய்த புண்ணியம் என்றே சொல்லலாம்!
யாழில் உள்ள பணங்கொழுத்துப் போயுள்ள ஆலயங்கள்கூட இந்தப் பணியில் ஈடுபடலாம்! இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் பணத்தில் வளர அருகில் உள்ள செகராசசேகரப் பிள்ளையார் ஏழ்மையில் வாடுகிறார். செகராசசேகருக்கு பண உதவிசெய்து வளர்த்துவிட்டால் பிறகு பரராசசேகரப் பிள்ளையாருக்கு மதிப்புக் குறைந்துவிடுமே என்ற ஏக்கவுணர்வில் அவரை ஏழையாகவே கைவிட்டுள்ளனர் பரராசசேகரரின் பக்தர்கள்! இது இப்படியிருக்கையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உதவமுன் வாருங்கள் என்று கேட்பது கொஞ்சம் "தினாவெட்டாகத்தான்" உள்ளது!!!!
தெகிவளை ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு பரல் பலராலாக ஊற்றிய பாலால் தெகிவளை கழிவுநீர் வெண்ணிறமாய் காட்சியளித்தது என்று அன்பர்கள் சிலர் நவின்றனர். வெளிநாடுகளில் இருந்து பரல் பரலாக நேர்த்திக்கடனைத் தீர்க்க பால் ஊற்றும்படி கட்டளையாம்! உள்ளூர்வாசிகளும் தாம் சளைத்தவர்களில்லை என்பதை இந்தப்பால் ஊற்றலில் காட்டுவார்களாம்! நான் இறைவனுக்கு பால் ஊற்றி அபிடேகம் செய்வதை எதிர்க்கும் அறிவற்ற நாத்தீகவாதியல்ல! பகுத்தறிவுள்ள இறைநம்பிக்கையாளன். இறைவனுக்கு அபிடேகத்தின்போது ஒருகுடமோ அன்றி மூன்று குடமோ அல்லது ஒன்பது குடமோ பால் ஊற்றுவதில் தவறில்லை! ஆனால் "பரல் பரலாக" பால் ஊற்றி ஒரு பிரதேசத்தின் கழிவுநீரையே வெண்ணிறமாக்கும் விசயத்தில் உடன்பாடில்லை! ஏழைச் சைவர்களுக்கு உதவ முன்வந்தால் அதுவே மிகச்சிறந்த சைவப்பணி! இறைவனை மகிழ்விக்கும் பணி!
சிவபூமி அறக்கட்டளை நிதியம் புற்றுநோயளர் பிரிவில் பூங்கா அமைத்து கொடுத்துள்ளது. அந்தப் பூங்கா புற்றுநோயாளர்களுக்கு மட்டுமன்றி வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளில் உள்ள நோயாளர்களும் பயன்படுத்தும் இடமாக திகழ்கின்றது. சிவபூமி அறக்கட்டளை நிதியம் தன்னால் இயன்றுள்ள அளவுக்கு உதவியிருக்கையில்.....வெளிநாட்டில் இருந்து குடும்ப பணபலத்தை நிறுபிக்க பெருவிழா ஆலயங்களில் எடுக்கும் செல்வந்தர்கள் சிந்தித்தால்.......தமிழுணர்வுள்ளோர் முயன்றால் யாழ்.போதனா வைத்தியசாலையை மருத்துவமனைகளுக்கு முன்னுதாரணமான மருத்துவமனையாக மாற்றியமைக்க முடியது. அதுமட்டுமல்ல ஏனைய தமிழ் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளையும் வளப்படுத்த புலம்பெயர்ந்தோர் முன்வருவார்களா?
யாழ் போதனா வைத்தியசாலையின் தரத்தைவிட தாழ்வான தரத்திலேயே ஏனைய தமிழ் மாவட்ட பொது மருத்துவமனைகள் இருக்கும் என்பதை எவரும் உய்த்துணரலாம். எனவே தமிழ் மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை உரியமுறையில் வளப்படுத்த தமிழ்ச் சமூகம் முன்வருமா?தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழியுண்டு! MRI போன்ற நவீனவசதிகள் கொண்ட பொது மருத்துவமனைகளை எமது மாவட்டங்களில் எம்மவர்கள் ஏற்படுத்துவார்களா?இதற்கென ஒரு நிதியத்தை தமிழுணர்வாளர்கள் செயற்படுத்துவார்களா? மருத்துவப் பணி இறைபணிகளில் சிறந்த பணி என்பதை அன்பர்கள் உணர்ந்து கொள்வார்களா?
3 comments:
அண்மையில் இதே வைத்தியசாலைக்குப் போய் வந்த உறவினர் ஒருவரும் வைத்தியசாலையின் நிலை பற்றிக் குறைப்பட்டுக் கொண்டார். உங்களின் இந்தப் பதிவு விளக்கமாக இருக்கின்றது. இதை நானும் என்னால் இயன்றவரை பிறருடன் பகிர்வது கொள்ளுக்கின்ரேன்
திவ்வியரஞ்சினியன்..
கோவில்களை விஸ்தீரணப்படுத்துவதில் இருக்கிற ஆர்வம் என்றைக்குமே இப்படியான சாலைகள் (வைத்திய, கல்வி) செய்வதில் எங்களிடம் இருந்ததில்லை என்கிற உண்மையை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். இதனால்தான் உருவ வழிபாட்டை முற்றுமுழுதாக நிராகரிக்கவேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. ஒவ்வொரு கோவில் திருவிழாக்களுக்கும் கொட்டப்படும் லட்சோப லட்சங்களை எல்லாம் இப்படி நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்.
///நான் இறைவனுக்கு பால் ஊற்றி அபிடேகம் செய்வதை எதிர்க்கும் அறிவற்ற நாத்தீகவாதியல்ல/// இதுதான் கொஞ்சம் உதைக்கிறது.
தேவையான பதிவு.
// எனவே நெதலாந்து நாடே உதவிக்கரம் நீட்டியுள்ளபோது........எம்மவர்கள் ஏன் உதவக்கூடாது? //
அதே...
பதிவில் நாத்திகம் சம்பந்தமான கருத்தோடு உடன்பாடில்லை என்றாலும் தேவையான பதிவு.
நிச்சயமாகத் தேவையானது.
Post a Comment