Wednesday, January 13, 2010

குறள்கொண்டு விதி எழுது

தை பிறந்தால்
வழி பிறக்கும்;
தைதோறும் நம்பிக்கைக்கு
குறைவில்லை இவ்வண்ணம்!
ஆனால்;
இனிய தமிழே,
நம்பிக்கையை தளரவிடாதே!

ஊக்கம் முடியெனின்
வெற்றி குடியாகும்!
இனிய தமிழே,
வெற்றி குடியாகும்!
ஆக்கம் அதர்வினாய்ச்
செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
என்னும் வள்ளுவன்
குறளை மனதில்
பேணு!

இனிய தமிழே,
ஆக்கத்தை இழந்தது
ஒரு விசயமே
இல்லை ஊக்கம்
உள்ளவரை!
ஆக்கம் இழந்தேமென்று
அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
என்னும் வள்ளுவன்
மறையை மறந்திடாதே!

இனிய தமிழே,
நன்மையே அறுவடையாயின்
எத்துன்பம் வரினும்
வாடாது நட்ட
நாற்றை அறுவடை
செய்வாய்!
துன்பம் உறவரினும்
செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும்
வினை என்னும்
பொய்யா மொழியை
உரமாக்கிக் கொள்கவே!

தமிழே,
ஆருயிரே,
தெய்வப் புலவரின்
குறளை வைத்து
மதிகொண்டு நல்ல
விதி எழுது!



உறவுகளே,
பொங்கல் பொங்கட்டும்!
எங்கள் மங்காத
தமிழுக்கு சூழ்ந்தகலி
நீங்கட்டும்!
எங்கள் மொழி
ஓங்கட்டும்!
வையகம் எங்கும்
செழிக்கட்டும்!

வாழ்க வாழ்க
எம் இனிய
தமிழ் வாழ்க

வாழ்க வாழ்க
மூவேந்தர் மண்
வாழ்க

வாழ்க வாழ்க
வளமுற்ற வையகம்
வாழ்க

0 comments: