Sunday, August 17, 2008

புத்தக வாசிப்பும் மென்பொருள் விளையாட்டுக்களும்(TV GAME)

"ஓடி விளையாடு பாப்பா ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று பாரதி குழந்தைகளை கொஞ்சுகின்றான். அந்தக் குழந்தைகள் வளமாக வளர்வது பெற்றார்கள், பள்ளி ஆசிரியர்களின் கைகளிலேயே உண்டு. ஒரு குழந்தைக்கு தாய்பால் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு நல்லபிள்ளையாக வளர்வதற்கு ஏற்ற சூழல் அமைவது அவசியமாகும்.அவற்றில் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை அறிமுகப்படுத்துவது பிரதானமானதாகும்.வாசிப்பு பழக்கம் என்பது சுய அறிவு வளர்சிக்கு அடிப்படையானது. ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பர். அதற்கு இன்றியமையாதது வாசிப்பு பழக்கம். கணனியில் விளையாட்டு மென்பொருட்களை ஏற்றி குழந்தைகளை விளையாடத்தூண்டும் இன்றைய சூழலில் வாசிப்பு பழக்கத்தால் வரும் நன்மைகளை அறியவைத்தல் பொருத்தம் என்று உணருகின்றேன்.குழந்தை வயிற்றில் இருக்கும்போதே குழந்தை வெளியுலகை உணரும் திறன் பெற்றுவிடுகின்றது. மருத்துவவிஞ்ஞானம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை நமது பண்டைய சில புராணக்கதைகள் கூட தெளிவுபடுத்தியுள்ளது. கர்ப்ப பருவத்தில் பிரகலாதன் இருக்கும்போது நாரதரின்மூலம் நாராயண திருநாம மகிமையை அறிந்துகொள்கிறான். அதன் பலனாக பிறந்தபின் நாராயணன் பக்தனாக மிளிர்கின்றான்.அதாவது குழந்தைப் பருவம் எதனையும் இலகுவில் கிரகித்து உள்மனதில் பதிவுசெய்யும் பருவமாகும். அந்தப் பருவம் தாத்தா பாட்டி சொல்லும் கதைகளில் கதாநாயகனாக வரும் பாத்திரத்தை உள்ளத்தில் இருத்தி அதுபோல் தாமும் வரவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும். எனவே அந்தப் பருவத்தில் நல்ல நல்நெறிக்கதைகளை ஊட்டவேண்டியது அவசியமானதாகும்.இன்று T.V GAME பிரபல்யமாகிவிட்டது. சிலர் இது பிள்ளைகளில் புத்திசாலித்தனத்தை கூட்டுகின்றதென்று வாதாடுகின்றனர். சில பெற்றோர் பிள்ளை ஆசைப்பட்டு கேட்டுவிட்டதென்று வாங்கி கொடுத்து அந்த ஆசையை நிறைவேற்றிவிட்டதாக அகம்பூரிக்கின்றனர். ஆனால் உண்மையில் நடப்பது T.V GAME இல் வரும் வன்முறைகளை ஆழ்மனதில் பதித்துக் கொள்கின்றனர். இன்று விரசமான T.V GAMEமும் வந்துவிட்டது.அரைகுறையாய் நிற்கும் பெண்ணின் மேனியில் சில பகுதிகளில் சுடப்படவேண்டிய குறி வந்துநிற்கும். உடனே குறிதவறாது சுட்டுவிட்டால் புள்ளிகள் கூடும். இப்படி பல வகைகளில் இவை வந்துவிட்டன.இவற்றை விளையாடும் பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி வளருவார்கள் என்று நீங்களே சிந்தியுங்கள்.என்னுடைய ஆய்வில்( ஆய்வில் என்றவுடன் நான் ஆயிரம்பேரை இதற்காக தெரிவு செய்து வளர்த்து பெற்ற அவதானிப்புக்களின் பேறு என்று முடிவுகொள்ளவேண்டாம். என்னோடு படித்த மாணவர்களை அவதானித்து பெற்றமுடிவு) நல்ல புத்தகங்களை சிறுவயதில் இருந்து வாசிப்போர் தவறானவழியில் போவது இல்லை என்றே சொல்லலாம். புத்தகத்தினை தொட்டே பார்க்காதவர்கள் தெரு தாதாக்களாய் உருவாகின்றனர்.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன? அறநெறி நூல்களை..........அறநெறிக்கதைகளை வாசிக்கும் குழந்தைகள் அறநெறி வழுவ வாய்ப்பு சொற்பமே.வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்கும் என்பர். சிறுவயதில் அறநெறிகதை படிக்கும் குழந்தைகள் வளரும்போது வாசிப்பதை விருப்பாக பொழுதுபோக்காக கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு பள்ளிப்புத்தகம் திறந்துபடிப்பது பஞ்சிபடும் விடயமாக இருக்காது. வளரும்போது இலக்கியப் புத்தகங்கள்........வரலாற்றுப்புத்தகங்கள்...........பத்திரிகைகள்.........நாட்டுநடப்புக்கள் என்று அவர்கள் தங்கள் அறிவை தாமே வளர்த்துக் கொள்வார்கள். நாட்டுக்கேற்ற நற்பிரசைகளாய் மலருவார்கள்.நாட்டின் தலைவர்கள்...........அறிஞர்கள்.........ஒழுக்கமுள்ளவர்கள்.......சமுகப் பிரதிநிதிகள்..............என்று எவர் வாழ்க்கையேனும் எடுத்து ஆராய்ந்திருந்தீர்களே ஆனால் அவர்கள் வாழ்க்கையோடு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உறவாடியிருப்பதை நன்குணரலாம். "என் புள்ள பொண்டாட்டி பேச்சைக்கேட்டு கைவிட்டுட்டான் பாரு" என்று கண்ணீர் வடிக்கும் பெற்றோரிடம் நான் கேட்கும் கேள்வி உங்கள் பிள்ளைக்கு நன்னெறி கதைகள் வாசிக்கும் பழக்கத்தை தூண்டினீர்களா சிறுவயதில் அவனிருக்கும் போது என்பதேயாகும். இன்று முதியோர் இல்லங்கள் பூக்கக் காரணம் இதுதான்.சிறுவயதில் புத்தகங்களின் பெறுமதியை பிள்ளைகளுக்கு அறியப்படுத்தாமல் இருந்துவிட்டு வந்த மருமகள் மீது குற்றம் காண்பதில் நியாயமில்லை. நல்ல பிரசைகளை உருவாக்க புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை பிள்ளைகளிடம் உருவாக்குங்கள். அதற்காக ராணி கமிக்ஸ் வாங்கி கொடுக்கச் சொல்லவில்லை. அதை மறந்திடாதீர்கள். வாங்கி கொடுக்கச் சொல்வது அறநெறி....நன்னெறி........புத்தகங்களையே. குழந்தை நடைபயிலும்போது நல்ல அறநெறிப் படங்கள் உள்ள புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். பிள்ளை அங்கு எதையும் வாசிக்கப்போவதுயில்லை. ஆனால் குழந்தைக்கு புத்தகத்தோடு ஒரு உறவை ஏற்படுத்த அப்புத்தகத்திலுள்ள படங்கள் ஏதுவாக அமையும். அது நாளை புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்கும்.அதுதான் தேவை! "குழந்தைகள் நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்பினிலே"

0 comments: