Wednesday, August 20, 2008

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

ஈழத்தமிழர் வாழ்வியலை தலைப்பின் கருப்பொருளாய் கொண்டு கட்டுரை எழுத்தினால் அரசியல்வாடை அடிப்பதை தவிர்க்கமுடியாது.அதுதவிர்க்கமுடியாதது. தவிர்த்தால் பார்ப்பனீய ஊடகங்களைப்போல் என் எழுத்தும் தமிழால் சபிக்கப்பட்டுவிடும்.எனினும் அரசியல் வாடையைக்குறைக்க இந்த கட்டுரையில் விரும்புகின்றேன். எல்லாம் நல்லதற்கே!

நரகம் உண்டா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் இருக்கட்டும் ஒருபக்கம். நரகத்தைக் பார்க்கவிரும்பினால் வாருங்கள் இலங்கைக்கு. இங்கு தமிழர் நரகத்தில் வாழுகின்றனர் சொர்க்கத்தை உருவாக்கும் கனவில். உளியை எந்தி சிலர் சொர்க்கத்தை செதுக்கும் சிற்பிகளாய் நிற்கின்றனர்.
இதுதான் இலங்கையில் தமிழர் எனும் என் விளக்கம். பொருள் புரிந்தால் அப்பாடா என்று ஒரு பெருமூச்சு!

அதுசரி எங்கள் புலம்பெயர்ந்தோர்? அதுதானே என் எழுத்தின் நோக்கம் இப்போது.
ஆண்ட இனம் அடிமையாய் எங்கும். புலம்பெயர்ந்தவன் அகதி எனும் அடைமொழியில் அல்லல்படும் அவதி தனிக்கதை. தமிழன் மீது பாய்கின்ற பொருளாதார ஆயுதங்களை பொடிப்பொடியாக்க இவன் இரத்தத்தை பணமாக்கி உறவுகளுக்கு அனுப்பும் ஒருசாரார். குடும்பமாய் குடியேறி நிம்மதி தொலைத்து தென்னைமரத்தடியில் நுங்கு குடித்து நல்லூர் திருவிழாவில் பிரதிட்டை அடித்த அந்த பழைய நினைவுகளுடன் ஒருசாரார். இப்படி இப்படி பல வகைப்படுத்தலுள் ஈழத்தமிழினம் வாடுது புலம்பெயர்ந்து.
இவர்கள் சந்ததி? ஒரு மயூரன் இரண்டு மயூரன் இப்போது இருக்கிறான் அடுத்த சந்ததி எனும் அடைமொழிக்குள் தமிழ்மானத்துடன்.
கேட்கும்போது ஆனந்தமாயுள்ளது. (இதுயாரடா அந்த மயூரன் என்று என்னைக் கேட்காதீர்கள்............இறுதி உலகக்கிண்ண துடுப்பாட்டத்தை பார்த்தவர்களைக் கேளுங்கள்)

ஆனால் அதற்கடுத்த சந்ததி? எனக்கு தெரிந்ததற்கு புலம்பெயர்ந்துவாழும் அடுத்தசந்ததியை சேர்ந்தோரில் பலருக்கு தமிழ்மொழியில் எழுதத்தெரியாது.சிலருக்கு தமிழ் கதைத்தால் விளங்கும்.ஆனால் கதைக்கத்தெரியாது. அப்படியானால் எங்கே போகப்போகின்றது எங்கள் நாளைய சந்ததி?
உண்மையைச் சொன்னால் எனக்கு புலம்பெயர்நாடுகளில் தமிழ்கல்விப் கற்பித்தல் எவ்வளவுதூரம் வரவேற்கப்பட்டுள்ளதென்று தெரியாது.ஆனால் தமிழ் பயிலுவோர் சொற்பம் என்பது புரிகின்றது.

உலகில் ஒரே ஒரு இனந்தான் உள்ளது தன் இனத்தை இனப் பண்பாட்டைப்பற்றி அக்கறையற்றதாய். அது எங்கள் தமிழினந்தான். இன உணர்வாளர்கள் என்னை மன்னிக்கவேண்டும்.
ஆனால் உண்மையிதுதான். இன உணர்வாளர்கள் எனும் அடைமொழி உருவானது எதனால்? ஆயிரம்பேரில் ஒருவன் விசித்திரமானவன் விநோதமானவன் எனின் அவனுக்கு இயல்பாக அடைமொழி அவனுடைய இயல்போடு இணைந்து உருவாவது இயல்புதானே! ஐந்து நண்பர்களில் ஒருவர் சற்று பருமனாக இருந்தால் "குண்டா" என்று செல்லமாக மற்றைய நண்பர்களால் அழைக்கப்படுவதுயில்லையா? அதுபோல்த்தான் இதுவும். ஆறரைக்கோடி( இப்போது எவ்வளவு என்று தெரியாது) தமிழகத் தமிழர்களில் குறிப்பிட்ட சிலரையே இன உணர்வாளர்கள் எனும்போது எங்கள் தமிழினத்தின் தமிழ்ப்பற்றை இன்னும் சொல்வதற்கில்லை.அதிலும் சிலரின் தமிழ்வேடம் மாநிலத்திற்குள் மட்டும் தான். ரஜனிரை எதிர்க்கமட்டும்தான் தமிழ் உணர்வுவரும்.( சரத்குமாரைத்தான் சொல்லுகின்றேன்...........என்னடா புது வில்லங்கம் என்று தோன்றுதா? அவர் பெயரில் தலைப்பிட்டு புது கட்டுரையில் சந்திகின்றேன்.அதுவரை மண்டையைப்போட்டு குழப்பாமல் சிந்திக்கவும்.)

சரி......சரி........புலம்பெயர்தமிழரிடமே வருகின்றேன். தமிழ் உணர்வு உள்ளத்தோடு உறவாடவேண்டும். ஆனால் எனக்குத்தெரிந்த இரண்டு பாட்டிமார் தாம் சந்திக்கும் போது தமிழை மறந்துவிடுவது அவர்களது நோய். ஆங்கிலத்தில்தான் கதைப்பர். நான் நினைத்துக் கொள்வது ஓகோ இவர்கள் "ஸ்போக்கின் பிரக்ட்டிஸ்" பண்ணுகிறார்கள் என்று. இதே நோய்தான் புலம்பெயர்ந்த குடும்பங்களில் உள்ள பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது. "எங்கட புள்ள இங்கிலிசுல படிக்குதுல்லே" என்று நினைப்பதில் பெருமை. சரி ஆங்கிலத்தில் படிப்பது பெருமையாகவே இருக்கட்டும்.தமிழில் வீட்டிலே கதைத்தால்தான் என்ன? தமிழில் வீட்டில் கதைப்பதுமட்டும் போதாது. தமிழை படிக்கவைக்கவேண்டும். தமிழ் வரலாற்றை தெரியவைக்கவேண்டும். இலக்கணம், இலக்கியம் முறையாக படிப்பித்தல் வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்கும் உங்கள் பிள்ளைக்கு தமிழில் தேர்ச்சியிருந்தால் எத்தனை எத்தனை சேர்.பொன்.இராமநாதன்கள் உருவாக வாய்ப்புண்டு. இதுபோல் டோச்சு,பிரான்சு என்று தமிழும் பல மொழிகளில் வளருமே!

பெற்றோரே, தமிழை அறியாத பிள்ளைகள் தாய்ப்பாசத்தை உணர்வார்கள் என்று கனவு காணாதீர்கள்."மொழியபிமானம் சமய அபிமானம் இல்லாதவர் வாழ்வும் ஒரு வாழ்வா" தாமோதரம்பிள்ளையார் சாடுவது உரைத்தால் தமிழினம் மோட்சம் பெறும். அதுவரை தமிழின உணர்வாளர் எனும் அடைமொழி ஒருசிலரை அலங்கரிக்கத்தான் செய்யும். ஆனால் நான் கெஞ்சுவது அந்த அடைமொழியை வேடதாரிகளுக்கு வழங்கிவிடவேண்டாம் என்பதே.

2 comments:

என் பெற்றோர் என்னை தமிழ் பாடசாலைக்கு சனிக்கிழமைகளில் அனுப்பியதன் பலனே இன்று நான் உங்கள் பதிவை படித்து பதில் எழுத காரணம்.
தமிழை இழப்பது உயிரை இழப்பது போன்றது..

தங்களின் பின்னூட்டத்தினால் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினேன். தங்கள் பெற்றோர் மரியாதைக்கு உரியோர். உயர்ந்தோர். ஒவ்வோரு பெற்றோரும் புலம்பெயர்நாடுகளில் உயர்ந்தோராய் மலர வேண்டுமென்பதே என் வேண்டுதல்.

தமிழாய் மலர்ந்ததையிட்டு ஆணவம் கூட வருகிறது எனக்கு. தங்களின் பின்னூட்டத்தால் பூரிப்பில் உள்ளேன்.

இங்கே என் பெற்றோரை இந்தப் பதிவில் பகிரத் தவறிவிட்டாள் தமிழ் மன்னிக்காது என்றே தோன்றுகிறது
என் தாய் என் விருப்பங்களை நிறைவேற்றுவதில் மகிழ்வடையும் சீவன்.தந்தை புலம்பெயர்ந்து இரத்தத்தை பணமாக்கி என்னை படிக்க வைத்த, வைக்கின்ற சீவன். நான் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத்தை பயின்ற சமயம் தமிழ் புத்தகங்கள் சமய புத்தகங்கள் ஆகியவற்றுடன் திரிந்தபோது சமய, தமிழ் மன்றங்களில் என் நேரத்தை செலவளித்தபோது என்னை கண்டித்ததுயில்லை.


சுற்றம் புண்சொல் உரைத்த வேளைகளில் கலங்கியது இல்லை. பல்கலைக்கழக வாய்ப்பை தவறவிட்டபோது உளம்வாடும் வகையில் ஒரு தமிழ் மலர்ந்ததில்லை என் தாயிடமிருந்து. இன்று மருத்துவக் கல்விக்காய் புலம்பெய்ர்ந்தபோது பெற்றோரின் துணை என்னை தலைநிமிரச் செய்தது. திவியரஞ்சினி என்பது என் தாயின் திருப்பெயர். தமிழும் தமிழ்நெறி சைவமும் என் தாய்தந்த பாலில் இருந்ததால் அவளுக்கு பெருமை சேர்க்க நான் பூண்ட புனைப்பெயர்களில் ஒன்று திவியரஞ்சினியன். அந்த திவியரஞ்சினியனாய் பறைகின்றேன் இங்கு!

நன்றி