Saturday, October 18, 2008

இலங்கைத் தமிழரின் துன்ப வாழ்வியலை தீட்டிய ஓவியன் என் நண்பன் பாரதி

நான் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் செட்டம்பர் விடுமுறைக்கு தமிழகத்திற்கு என் அன்னையிடம் சென்றிருந்தவேளை என்னோடு ஒன்றாக கல்லூரியில் கல்விபயின்ற ஆருயிர்த் தோழன் காந்தரூபனூடாக பழக்கமான முகம்-பாரதி.
நண்பனின் நண்பன் நண்பனாகும் மேன்மை நட்பின் அழகுகளில் ஒன்றாகும். எனக்கும் பாரதிக்கும் இப்படி காந்தன்(காந்தரூபனை இப்படித்தான் அழைப்பது என் வழமை) நட்பெனும் பாலத்தை வரைந்தான். இலங்கைக்கும் தமிழகதிற்கும் வரையப்பட்ட சேதுபாலம்(இராமபாலந்தானப்பா?) போல் எமக்கு காந்தன் இட்டபாலம் நட்பை சுவைக்க வழிசமைத்தது.

நண்பன் பாரதிக்கு இலங்கைத் தமிழர்பால் தணியாத பாசம்.தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பர். அதை பாரதி எனக்கு ஓவியமாய் செதுக்கிகாட்டினான்.

அவன் அன்று எனக்கு தான் எழுதியதாகக்காட்டிய கவிதைகள் என்னை பிரமிக்கவைத்தது. சும்மா, நேரம்கிடைக்கும்போது கிறுக்கும் எனக்கு அவனின் கவிதைகள் காவியமாய்த் தெரிந்தன.

பாரதி தமிழால் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஓவியம். எட்டயபுர பாரதியாக அவனைத் தமிழ் தீட்டிமுடிக்க வாழ்த்தும் அவனது நலன்விரும்பிகளில் நானும் ஒருவன் என்று இங்கே செதுக்க விரும்புகின்றேன்.

அதுசரி இப்போது ஏன் நண்பன் புராணம் என்று தோன்றுதா?
நண்பன் சாதித்தான் என்றால் பெருமைதானே சொல்லுங்கள்? அதுதான் இந்தப் பதிவு!

கவிஞனாகவும் குறும்பட இயக்குனராகவும் நடிகனாகவும் என்று பல்வேறு முகங்களை பூண்டு சாதித்து நிற்கிறான் என் நண்பன் பாரதி.

செந்தணலும் சிறுதூறலும் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளான்.அதுவும் ஈழத்தமிழரின் துயரவாழ்வை தனது கவித்தமிழில் தீட்டியுள்ளான் எனும்போது எப்படி பெருமைப்படாமல் இருக்கமுடியும் சொல்லுங்கள்? இக்கவிதைத் தொகுப்பை அவன் இலங்கைத் தமிழருக்கு சமர்ப்பணமாக்கியுள்ளமை இத்தொகுப்பில் இலங்கைத் தமிழரின் துயரை எவ்வளவு அனுபவித்து எழுதியிருப்பான் என்பதை உணரமுடிகிறது.




செந்தணல் எனும் உபதலைப்பில் இலங்கைத் தமிழரின் இன்னல்களைத் தீட்டவே அவனது எழுதுகோலின் மையைப் பயன்படுத்தியுள்ளான்.

"மார்தட்டி இறப்போம்
தமிழ்குடிகள் நாங்களென்று"

என்ற பாரதியின் கவிவரிகளை திரு பழநெடுமாறன் ஐயா தனது நூல் அறிமுக உரையில் சுட்டிக்காட்டி பூரிக்கின்றார். உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் ஐயா அணித்துரையில்,


எங்கள் வறுமைதான்
உங்கள் செழுமைக்கு ஆகாரம்!
எங்கள் எளிமைதான்
உங்கள் வலிமைக்கு ஆகாரம்!!

என்ற பாரதியிம் கவிவரிகளை அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழைகளின் குமுறலாக் காண்கின்றார்.



பழநெடுமாறன் ஐயாவும் காசி ஆனந்தன் ஐயாவும் பாரதியின் செந்தணலை உரசிப் பார்த்து சுத்தத் தங்கம் என்று அணித்துரை எழுதி குறிப்பால் அறிவித்தபின் அங்கு எனக்கென்ன வேலை? ஆதலால் நான் சிறுதூறல் எனும் உபதலைப்பில் பாரதி படைத்த கவிகளை நூல் ஆய்வென்று தம்பட்டந்தட்டிக் கொண்டு என் நண்பனின் சிறுதூறலில் நனைந்து பெற்ற கவியின்பத்தை பகிருகிறேன்.

கவிஞன் ஆனபின் அவனுக்கு எல்லைகள் கிடையாது.அவனது எழுதுகோலுக்கு கறுப்பு மையை விட்டாலும் சரி,நீல மையை விட்டாலும் சரி அவன் விரும்பியதை எழுதியே தீரும்.காதல், சமூகம் என்று என் நண்பனின் பார்வைகள் பரவத்தவறவில்லை. காதலை எழுதி கவிஞர் என்று முத்திரை குத்தும் இன்றைய கவியுலகில், சமூகம் பற்றிய பார்வை, தான் வாழும் காலத்தை பதிவு செய்யவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் போன்ற பல்வேறு உயர்ந்த சிந்தனைகளோடு காதலை ஒரு உணவுக்கு சேர்க்கும் உப்புபோல் தனது தொகுப்பில் கையாண்டுள்ளான் என்பதே சாலச் சரியானது.


கம்பன் கவியெழுத காதல் ஒரு பொருள். ஆனால் கம்பனின் கவிதை காதலில் தங்கியில்லை. அவனின் தமிழில்த்தான் தங்கியுள்ளது.அகநானூறு எழுதிய அன்றைய புலவர்கள் புறநானூறு எழுதத் தவறவில்லை.

புறநானூறு எழுதவேண்டிய சூழலில் அகநானூறு எழுதிக் கவிஞர் என்று மார்தட்டுவோர் தவிச்சவன் வாய்க்கு கிட்டிய கடல்நீர் போன்றவர்கள்.

"உன்னுடல் நிறத்திடம்
தோல்வியுற்ற செந்தணலிடமே
உனதுடலைப் பரிசளித்துவிடு" என்று காதல் எனும் பெயரில் அரங்கேறும் காமப்பசிக்கு சாட்டையடிக்கும் பாரதி,


"கால்கொலுசின் ஓசைதனைக்
காணாமல் சிதறடிக்க
முத்துச்சிரிப்பைச் சொத்தாக்கியிருப்பாள்"

என்று தன் கவிக்கு உருவகித்த காதலியை கொஞ்சவும் செய்கின்றான்.
"இவர்களின் காதல்
முகமூடிகள் ஒட்டுமொத்தமாய்
சுக்குநூறாகக் கிழியச்
சபிக்கிறேன் நான்!"

என்று போலிக்காதல்களை சபிக்கும் என் பாரதி,

"மாதவிலக்குக் காலமும்
விலக்கில்லை
மாதக்கடைசி என்பதால்!"
என்று வயிற்றுப் பசிதீர்க்க காமப்பசி தீர்த்துவிடும் தாசிகளின் வலிநிறைந்த இருண்டுபோன வாழ்க்கையை தீட்டியுள்ளான்.

மாப்பிள்ளை சம்பாத்தியம்
பதினைந்து மட்டும்
அவை குறிப்பிலேறியது!
பெண் சம்பாத்தியம்
கிடப்பில் போடப்பட்டு!!

என்று வரதட்சணைக் கொடுமையை தீட்டியுள்ளான். இப்படி சிறுதூறல் எனும் உபதலைப்பில் பொதுவாக சமூகம் சார்ந்த கவிதைகளைக் காணமுடிகின்றது. சமூகத்திடம் இருந்து பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து அவனது எழுத்து தீப்பொறிகளாக மலர்ந்துள்ளதென்பதை உணரமுடிகிறது.

அழுகுரல் எனும் குறுந்திரைப்பட இயக்குனராகவும் தனது திறனை சமூகத்தில் ஓவியமாக்கியுள்ளான் பாரதி. தனது திறமையை ஓவியமாகத் தீட்டும் போது தமிழ் சமூகத்தின் துன்பத்தை வர்ணமாகக் பயன்படுத்தியுள்ளது இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்னும் தத்துவத்தை உணர்ந்த படைப்பாளி பாரதி என்பதை பறைசாற்றுகின்றது.



தவிப்பு எனும் வீ.மு.தமிழ்வேந்தன் என்பவரின் இயக்கத்தில் மலர்ந்த குறுந்திரைப்படத்தில் கதாநாயகனாக தனது முகத்தை பதிவு செய்த பாரதி நடிப்புத் திறனும் தன்னிடம் உண்டென்பதை அழுத்தமாக பதிவுசெய்துள்ளான். இலங்கைத் தமிழர் அகதிகளாக தமிழகத்திற்கு கடலில் பயணிக்கையில் எதிர்கொள்ளும் கொடுந்துன்பங்களை இக்காவியம் பதிவுசெய்துள்ளது.


தவிப்பில் வருகின்ற காவல்த்துறை அதிகாரியும் பாரதியின் அம்மாவாக நடிக்கும் நடிகையும் நடிக்கின்றனர் என்பது சற்று புலப்படுவதை தவிர்த்திருக்கலாம். எனினும் இயக்குனர் தமிழ்வேந்தனின் திறமையின் மீது கேள்விக்குறி எதனையும் இவை தோற்றுவிக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டியவிடயமாகும். பாரதி கதையோடு ஒன்றியிருப்பது நண்பனாய் நின்று நான் அவனை நினைத்து பெருமைகொள்ளும் விடயமாகும்.தமிழ்வேந்தனின் ஆளுமை ஓங்கி நிற்குமிடம் ஏன் பாரதி குற்றவாளி ஆக்கப்பட்டான் என்ற வினாவை பார்த்துக் கொண்டிருப்போர் மத்தியில் குறுப்படம் முடியும் தருவாய்வரைக்கும் ஏற்படுத்தி கதையோடு பார்ப்பவர்களை ஒன்றச் செய்துள்ளதன்மையாகும்.அதுதான் திரைக்கதை!பாரதியின் சோகம் நிறைந்த முகம் தமிழ்வேந்தனால் தவிப்பில் செதுக்கப்பட்ட மிகச்சிறந்த சிற்பம் எனலாம். சிற்பியும் செதுக்கப்படும் கல்லும் தரமானதாய் அமைந்தால்த்தான் சிற்பம் உயிர்பெறும் என்பர்.

பாரதியின் இயக்கத்தில் மலர்ந்த அழுகுரலில் எந்தவொருவரின் முகமும் காட்டாது அக்குறும்படம் பூத்திருப்பது வியப்புக்குரியதாகவுள்ளது. இயக்குனர் சீமானும் வெளியீட்டு விழாவில் இவ் வித்தியாசமான புத்தாக்க சிந்தனையை பாராட்டியுள்ளர். கதை தொடங்கியதில் இருந்து கதை முடியும் வரை அழுகுரல் ஓயாது கேட்டுக் கொண்டேயிருப்பது அழுகுரல் எனும் தலைப்பை இக்கதை ஏற்க ஏதுவாயிற்று. திருகோணமலை (சம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற திருக்கோணேசுவரம் இங்கே தான்னுண்டு. )எனும் இடப்பெயரை திரிகோணமலை என்று அருள்சீலன் வரையும் மடலில் தவறுதலாக எழுதியிருப்பது சற்று சங்கடமாக இருந்தது. எனினும் இத்தவறு இங்கு புறக்கணிக்கக் கூடியதே. இது ஒரு குறையல்ல.சிறு தவறு.

எனக்கும் பாரதிக்கும் பாலமாக இருந்த ஆருயிர் நண்பன் காந்தரூபன் பாரதியின் உழைப்பில் தோள் கொடுத்து நின்றதைக் காணும்போது மெய் சிலிர்க்கின்றது. எனது ஆருயிர் சகோதரி சியாமலாகௌரி பாரதிக்கு தோள் கொடுத்து நின்ற காந்தனுக்கு தோள் கொடுத்து உதவியமை அறிந்து மகிழ்வுற்றேன்.அழுகுரலில் அருள்சீலன் எனும் கதாப்பாத்திரத்தின் குரல் நண்பன் காந்தனின் குரல் எனும்போது மீண்டும் மீண்டும் அவன் குரலைக் கேட்க ஆசையாகவுள்ளது. (ஏறத்தாழ ஒரு வருடம் தாண்டிவிட்டது நண்பன காந்தனையும் பாரதியையும் பார்த்து. இனி எப்போது நேரில் பார்ப்பேன் என்று இறைவனுக்குத்தான் தெரியும்) செந்தணலும் சிறுதூறலும் புத்தகத்தின் அட்டைப்பட வடிவமைப்பில் காந்தரூபன் கைகள் விளையாடியுள்ளது பெருமைப்பட வைக்கின்றது.

இப்படி என் நண்பன் ஒரு கவிஞனாய்,இயக்குனராய்,நடிகனாய், இன்னும் திரைப்படத்துறையில் காணப்படும் பல்வேறுபட்ட துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவனாய் விளங்குகிறான் எனும்போது ஒரு கம்பீரங்கலந்த................ ஆணவம் கலந்த மகிழ்வு பூப்பது இயல்புதானே!

இந்த குறுந்திரைப்படங்களினதும் கவிதைப் புத்தகத்தினதும் வெளியீட்டு விழாவில் பழநெடுமாறன் ஐயா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குனர் சீமான்,உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மற்றும் பல தலைவர்கள்,அறிஞர்கள் விருந்தினர்களாக வருகைதந்து சிறப்புரைகள் ஆற்றியது என் நண்பனுக்கும் அவன் சக கலைஞர்களுக்கும் வழங்கப்பட்ட கேடயமே என்றால் அது மிகையல்ல.

நண்பனே நீ வாழ்க. உன் எழுத்து வாழ்க. உன் நடிப்புத் திறன் ஓங்குக. இயங்குனராக அவதரித்துள்ள உன் முகம் மேலும் மேலும் செழிக்கட்டும்.

உன் சமூகப் பொறுப்புள்ள சிந்தனை ஆயிரம் ஆயிரம் சமூகப் பொறுப்புள்ள சிந்தனையாளர்களை மலரச் செய்யட்டும்.

நண்பா, தோழனாய் என்றும் உனக்கு என் தோள்கள் துணையிருக்கும்.
உன் வளர்ச்சி என் எழுத்துக்கு எழுச்சியைக் கொடுக்கட்டும்.

குறித்த செந்தணலும் சிறுதூறலும் கவிதைத் தொகுப்பை நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்க்ள்-

கானல் பதிப்பகம்
எண்:3,ருக்மணி நிலையம்
ஞானமணி தெரு, ஜாபர்கான்பேட்டை
சென்னை- 83


பாவேந்தர் மக்கள் மன்றம்
2877. நாணயக்கார செட்டித்தெரு
தெற்கு வீதி
தஞ்சாவூர்- 613 001


தமிழம்மா பதிப்பகம்
59,விநாயகபுரம்
அரும்பாக்கம்
சென்னை- 600 106


பாபு அச்சகம்
நகராட்சி அலுவலகம் எதிரில்,
விழுப்புரம்

(வெளியீடு நடைபெற்று சில மாதங்கள் கடந்துவிட்டபோதினிலும் அண்மையில்த்தான் என் கைகளுக்கு குறித்த குறுந்தகடுகளும் நூலும் எட்டியது. ஆதலாலேயே தாமதமாகப் பதிவு எழுதவேண்டியதாயிற்று. )

6 comments:

அன்பு நண்பனே! உனது எழுதுகோலில் நானும் தலைப்பானது மட்டற்ற மகிழ்வை தருகிறது.பனிக்குடம் உடைத்த எனது கருக்களுக்கு உனது கருத்துக்கள் ஊட்டச்சத்தாகி என் கண்களை குளமாக்கின.கருப்பொருளான ஈழத்தின் நிலையை கருதுகையில்தான் ஈட்டிகள் நூறு என் இதயத்தை குத்திக் கிழிக்கிறது.கூடவே தமிழக பூசாரிகளின் வேடமும்.தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதில் எனக்கும் பெருமை, என் இனத்திற்கும் பெருமை.தேர்தலை குறிவைத்தே எம் தேசத்தில் குரல் ஓங்குகிறது என்கையில் மன வருத்தமே...உன்னோடு பகிற ஆயிரம் உள்ளது என்றபோதும் விடை பெறுகிறேன்... மீண்டுமொருமுறை நன்றி உனது கருத்துகளுக்கு

நண்பா,

நன்றியும் மன்னிப்பும் நட்புக்கு அழகல்ல என்பதை நான் நவிலத்தான் வேண்டுமா?

தமிழ்போல் உன் திறன் வாழ்க. உன் எழுத்து வாழ்க. உன் சிந்தனை ஊற்று வாழ்க.

உன்னை எண்ணி ஆணவம் கொள்ளும் நண்பனாய் என் தோள்கள் உன்னைத் தொடரும்.

திவியரஞ்சினியன்
இயக்குநர் பாரதி ... உங்கள் இருவரின் நட்பும், ஒருவரை ஒருவர் பாராட்டும் விதமும் பொறாமைப் பட வைகின்றது..

http://puthiyamalayagam.blogspot.com/2008/10/blog-post_30.html

//திவியரஞ்சினியன்
இயக்குநர் பாரதி ... உங்கள் இருவரின் நட்பும், ஒருவரை ஒருவர் பாராட்டும் விதமும் பொறாமைப் பட வைகின்றது..//


தங்களின் பின்னூட்டத்திற்கும் எங்கள் நட்புக்கு சூட்டிய மகுடத்திற்கும் நன்றிகள் பல கோடி.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் யென கேட்டதாய்
-நண்பர் பாரதி திறமைகள் உலகிற்கு வெளிப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை