
குற்றம் ஆனால் குற்றமில்லை என்ற தலைப்பில் தமிழ்முரசு இணையவலைப்பூவில் தமிழறிஞர் அ.முத்துலிங்கம் இந்நிகழ்வை பதிவுசெய்துள்ளார்.
"அவர் அப்படி என்ன புத்தகத்தில் எழுதியிருந்தார். மகாவம்சம் சொன்னதைத்தான் அவரும் சொல்லியிருந்தார். வனத்தில் வாழ்ந்த ஒரு சிங்கத்தின் வழித்தோன்றலாகிய விஜயன் 700 பேருடன் கப்பலில் வந்து இலங்கையில் இறங்கியபோது அங்கே யட்சர்களும் யட்சணிகளும் இருந்தார்கள். விஜயன் குவேனி என்ற யட்சணியை மணமுடித்து அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். சிறிது காலத்தில் அவன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் காட்டுக்கு துரத்திவிட்டு இந்தியாவிலிருந்து வருவித்த பாண்டிய ராசகுமாரியை மணமுடித்தான். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. 38 ஆண்டுகள் ராச்சியத்தை ஆண்டபின் இறந்துபோனான். அவனுடைய சகோதரன் இந்தியாவிலிருந்து வந்து ராச்சியத்தை தன் சொந்தமாக்கி ஆண்டான். அவன் மூலம் சந்ததி உண்டாகியது. இலங்கையின் ஆதிபிதா விஜயன் அல்ல; அவன் வரும்போது ஏற்கனவே அங்கே இருந்த யட்சர்கள்தான் ஆதிகுடிகள். அவர்கள் நாகரிகமானவர்கள். விஜயன் குவேனியை சந்தித்தபோது அவள் தாமரைத் தண்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். அவர்கள்தான் நாட்டுக்கு உண்மையான சொந்தக்காரர்கள்.
ஈழத்துப் பூராடனார் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கு மூன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அவருடைய வழக்கறிஞர் சுந்தரலிங்கம் இடது கையில் மகாவம்சத்தையும், வலது கையில் பூராடனார் எழுதிய 'யாரிந்த வேடர்' புத்தகத்தையும் வைத்துக்கொண்டு வாதாடினார். 'கனம் நீதிபதி அவர்களே, மகாவம்சம் சொன்னதையே என் கட்சிக்காரரும் சொன்னார். அவர் தேசத்துரோகி என்றால் மகாவம்சத்தை எழுதிய வண. மகாநாம மஹாதேரோவும் ஒரு தேசத்துரோகியே.' நீதிபதிகள் ஆசிரியரில் குற்றமில்லை என்று தீர்ப்புக்கூறி அவரை விடுதலை செய்தார்கள். ஆனால் அவர் எழுதிய நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் குற்றம் செய்யவில்லை என்றால் அவர் எழுதிய புத்தகங்களை ஏன் பறித்தார்கள். 'குற்றம், ஆனால் குற்றமில்லை."
முதல் கணினித் தமிழுருவை உருவாக்கி அதில் அச்சடித்து கணினி அச்சுருவில் முதன்முதலில் நூலை வெளியிட்டவர் இவராவர். இலக்கியமணியுடைய இத்தகு அருமையை அ.முத்துலிங்கம் தமிழறிஞரின் எழுத்து பூரிக்கவைக்கின்றது.
"தமிழில் கணினியில் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் 'பெத்தலேகம் கலம்பகம்'. அது வெளிவந்த வருடம் 1986. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை உருவாக்கியது கூட அவர் முயற்சியில்தான் நடந்தது. இதுதவிர முதன்முதல் மின்கணினி அமைப்பில் 'நிழல்' என்ற மாதப் பத்திரிகையை 1987ல் இருந்து தொடர்ந்து வெளியிட்டதும் அவர்தான். இன்று நூற்றுக்கணக்கான புது எழுத்துருக்கள் தமிழில் தோன்றிவிட்டாலும் அவர் தான் உருவாக்கிய எழுத்துருவையே இன்றைக்கும் பயன்படுத்துகிறார். அந்த எழுத்துருவிலேயே அவர் புத்தகங்கள் அச்சாகின்றன. அவருடைய எழுத்துருவுக்கு என்ன பெயர் என்று கேட்டேன். அவர் பெயர் வைக்கவில்லை என்றார். பத்தாவதாகவோ, இருபதாவதாகவோ அவருடைய எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு பெயர் வைத்திருப்பார். அது முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டது அதனால் ஒரு பெயரும் சூட்டவில்லை. உலகத்தில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட கணினி தமிழ் எழுத்துருவை இன்று பயன்படுத்துவது ஒரேயொருவர். அது அவர்தான்"
க.தா.செல்வராசகோபால் என்னும் இயற்பெயருடைய ஐயாவின் பெயர் மங்காப் புகழுடன் தமிழுலகால் என்றுமே போற்றப்படும் என்பது திண்ணம்.
ஐயாவின் இழப்பு தமிழ்த்தாய்க்கு பேரிழப்பு என்பதை அவருடைய பணிகளை அறிவோர் உணர்ந்ததொன்று. ஐயாவுக்கு எளியேனின் மரியாதையை வழங்கும்பொருட்டு இப்பதிவை சமர்ப்பணம் செய்கின்றேன்.

















மருத்துவர் திரு.ரவிராஜ் ஐயாவின் சத்திரசிகிச்சை நோயாளர் படுக்கைத்தொகுதி ஓரளவுக்கு சிறப்பாகப் பேணப்படுகின்றது.புதிதாக கட்டி,திருத்தி அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி என்பதை பார்க்கும்போது புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.ஆனால் ஏனைய சத்திரசிகிச்சைக்குரிய பிரிவு நோயாளர் படுக்கைத் தொகுதிகள் தரத்தில் "சாதரணம்" என்றுகூட முத்திரை குத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஒருசில படுக்கைத்தொகுதிகள் புதிதாக நுழைபவர்களை மயக்கிவிடும் துர்மணத்துடன் விளங்குகின்றன! இவற்றின் மணங்குணங்களுக்கு இசைவாக்கமடைய இருநாட்கள் பிடித்துவிட்டது எனக்கு! ஒருசில நோயாளர் படுக்கைத்தொகுதிகள் நோயளர்களின் மலசலகழிவு கூடத்துடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. அவை உரியமுறையில் கழுவப்படுகின்றன என்றால் சரியான விடையில்லை!
காட்டுபிராண்டித்தனமாக வெறிபிடித்து கைகளில் இருந்த துப்பாக்கிகள் கொண்டு மருத்துவனை வைத்தியர்களையும் தாதியர்களையும் சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவத்தினரின் பாவத்தைப் போக்குவதற்கு காசியில் போய் மூழ்காது இந்திய அரசு CT SCAN இயந்திரத்தை நன்கொடையாக அளித்துள்ளது. காசியில் போய் மூழ்கினாலும் போகமுடியாத பாவம் என்பதை உணர்ந்ததால்த்தானோ இந்த நன்கொடை என்ற எண்ணத்தை ஊட்டுகின்றது CT SCAN அறைக்கு அருகாமையிலிருக்கும் கொல்லப்பட்ட மருத்துவப் பணியாளர்களின் உருவப்படங்கள்! சரி இந்தப் பாவத்துக்கு பரிகாரம் தேடியாயிற்று! சில ஆண்டுகளுக்கு முன் செய்த பாவங்களுக்கு...........உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!







