தமிழகத்தில் சென்னையிலுள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, சுவாமி வீதிவலம் வந்து கொண்டிருந்தார். சுவாமியை பிராமணர் மட்டுமே மாறிமாறி தூக்கினர். மெதுவாக அங்கிருந்த ஒருவரை சாதரண பக்தர்கள் தூக்கக்கூடாதா என்று கேட்டேன். பிராமணர் சுத்தமானவ்ர்....எனவே தீட்டுப்படாது! ஆனால் ஏனையவர் எப்படி என்று தெரியாதே என்றார். காஞ்சியில் கருவறையில் செய்யாத அசுத்தத்தையா சாதரண பக்தர் செய்துவிடுவர் என்று கேட்க என்னுடைய நாக்கு துடித்தது.ஆனால் அடக்கி அமைதியாகி வீடு திரும்பினேன்!
பிரதோசவிரதம் அன்று இப்படித்தான் சென்றிருந்தபோது உட்பிரகாரத்துக்கு நுழைவதற்கு பணம் அறவிட்டனர்! மசூதியிலும் தேவாலயத்திலும் நடைபெறாதது...எமது கோயில்களில் மட்டுமே நடைபெறுவது......பணம் அறவிடுவது! என்ன கொடுமை சரவணா?
சண்டேசுவரர் பிரகாரம் இருக்குமிடம் தெரிந்தால்த்தானே பிரதோச சுற்றுமுறைபடி கோயிலை வலம்வர முடியும்? எனவே; அங்கு பற்றுச்சீட்டு விற்பவரிடமும் பின்னர் நிர்வாகத்துறையினரிடமும் கடிந்து கொண்டேன்! ஏழைகள் விரதமிருந்தால் அவர்கள் எப்படி இப்போது கோயில் பிரகாரத்தை விரதவிதிப்படி சுற்றமுடியும் என்று நான் கேட்டகேள்விக்கு கடவுள் வந்துதான் விடைசொல்ல வேண்டுமென்று அங்கிருந்த பெண்மணி ஒருவர் என்னோடு சேர்ந்து தன்குறையை கூறி அமைதியானார்.
நாயன்மார்களை சாதரண பக்தர்கள் தூக்க அனுமதிக்கப்பட்டிருந்ததையும் நாயன்மார்களை தூக்கி வலம்வந்தபோது பூசகர் எவரும் நாயன்மார்களுடன் செல்லாமல் இருந்தமையையும் மீண்டும் நாயன்மார் ஆலயத்துக்கு வந்ததபோது ஆலயவாசலில் பூசகர்களுக்காய் நாயன்மாரை காக்கவைத்து இருந்தமையையும் கண்டு மனம் வெந்துபோனேன்! அப்போதுதான் விளங்கியது நாயன்மார் என்றால் பூசகர்களைப் பொறுத்தவரை சாதரணமானவரே என்பது! இதில் என்ன வேடிக்கை என்றால் சிவன் பார்வதியைத் தூக்குவதற்கு முண்டியடித்த பிராமணர் எவரையுமே காணவில்லை நாயன்மாரின் வீதிவலம் நடந்தபோது!
நாயன்மார்களின் பெயரை தமது பெயர்களாகவோ அல்லது தமது பிள்ளைகளின் பெயர்களாகவோ கொண்ட பிராமணரைக் காட்டுவீரா என்று ஒரு திராவிடக்கட்சி நண்பன் என்னிடம் கேட்டிருந்தான்! அந்தக்கேள்வியை ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ படித்த நினைவு வந்தது. அப்போதும் சரி; அவன் கேட்டபோதும் சரி அதற்கு விடைசொல்ல முடியவில்லை! எனக்குத் தெரிந்த பிராமணர் பலரை நினைவு படுத்தினேன். எவரின் பெயரும் நாயன்மாரின் பெயரைக் கொண்டிருக்கவில்லை! ஆனால் நாயன்மாரை தூக்குவதற்கு எந்தவொரு பிராமணரும் முனைப்புக்காட்டாமையை கண்டபோது அறுபத்திமூன்று நாயன்மார்களையும் தமிழகத்து பிராமணர் எவ்வளவு மதிக்கின்றனர் என்று முழுமையாகப் புரிந்தது! சமயகுரவர் நால்வருக்குமே இந்தநிலை என்றால் ஏனையவரைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா? திருஞானசம்பந்தர் என்ற பிராமண ஞானக்குழந்தையின் பெயரைக்கூட தமது பிள்ளைகளுக்கு வைக்கவிரும்பாத இவர்களை என்னவென்று சொல்வது? இவர்களுக்கு கைலாயம் கடைசிவரை கிடைக்காது என்பது திண்ணம்! ஆனால் அதை பூலோகத்தில் என்று இவர்கள் உணர்வர்! அன்றுதான் பூலோகத்தில் சைவசமய மறுமலர்ச்சி ஏற்படும்! அதுவரை எல்லாம் பூச்சியமே!
வீட்டிற்கு வந்து இதுபற்றி பெரியப்பாவுடன் கடிந்து கொண்டேன். பலவிடையங்கள் இப்படி சமயக்கருத்துக்களில் முரண்பட்டு வாதிடுவதுண்டு.சமயவிடயங்களில் அவரோடு கலந்துரையாடுவதில் எனக்கு அலாதிப்பிரியம்! அவர் சொன்னார் "கோயிலுக்கு எதற்குப் போனாய்? கடவுளைக் கும்பிடத்தானே? நீ கடவுளைப் பார்.... கடவுளை இவற்றைப் பார்த்துக்கொள்வார்' என்று என்னை அமைதிப்படுத்தினார். நான் மட்டும் கும்பிட்டால் போதுமா? ஏனையவரும் கும்பிட வேண்டாமா? கடவுள் பார்ப்பார் என்று அநீதியை சும்மாவிட்டுவிட முடியுமா? அது எமது இயலாமைக்கு நாம் சொல்லிக்கொள்ளும் சமாதானம் தானே? பாவத்தைக் கண்டும் காணாது இருப்பது பாவத்துக்கு துணைபோகும் செயலல்லவா? இப்படியான வினாக்கள் என்னுள் எழுந்தன! என் உணர்வுகளை ஆமோதித்தன!
பிராமணத்துவ சாதித்துவத்தை காசியில் கொண்டுபோய் கரைக்கும்வரை நாத்தீகவாதம் தமிழகத்தில் செழித்தபடிதான் இருக்கும்! ஆயிரம் ஆயிரம் பெரியார்கள் பிறந்தபடிதான் இருப்பர்! மதமாற்றம் பெருத்தவண்ணமே இருக்கும்! உலகமெல்லாம் பரவியிருந்த சிவவழிபாடு......தெற்காசியா என்று சுருங்கி இன்று இந்தியா என்று ஒடுங்கிவிட்டது! அதுவும் சைவசித்தாந்தம் ஆதீனங்களுக்குள் முடங்கிவருகின்றது! இந்த நிலை எமது சமயத்துக்கு ஏன் வந்தது?
யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் திருவிழா காணொளி இணைக்கப்பட்டுள்ளது. பார்க்க!
பிராமணர் அல்லாதவர்களே சுவாமி தூக்குகின்றனர்! இப்படித்தான் இலங்கை கோயில்கள் எல்லாவற்றிலும்! இதனால்த்தான் எத்தனை துன்பம் வந்தபோதும் போர்த்துக்கேயர் தொட்டு துன்பவரலாற்றையே சைவசமூகம் கண்டபோதும் சைவநெறி இலங்கையில் தமிழர் பகுதிகளில் செழிப்புற்று இருக்கின்றது! இளைஞர் ஊர் கோயில்களோடு ஐக்கியமானவர்களாகவே இருப்பர்! சுவாமி தூக்குவது தொட்டு ஆலயத்தின் பெருப்பாலான பணிகளை பிராமணர் அல்லாதவரே செய்வர். அதாவது பிராமணத்துவ சாதித்துவத்துக்கு உரம் இல்லாமையினாலேயே ஆகும்!
இலங்கை பிராமணருக்கு தமிழுணர்வு திராவிடர் கழகத்தலைவர் வீரமணியைவிட அதிகம் உண்டு! தமிழ்ப்பற்றில் கலைஞருடன் இலங்கை சைவப்பிராமணரை ஒப்பீடு செய்வதே குற்றம்!
தமிழகத்தில் பிராமணத்துவ சாதித்துவத்துக்குள்ள உரத்தை அகற்ற வேண்டும்! சங்கரமடத்து சொந்தங்களை சைவாலயங்களிலிருந்து ஒதுக்கிவைக்க வேண்டும்! ஆதிசைவ சிவாச்சாரியர்களையே சைவாலயங்களில் பணிக்கு அமர்த்த வேண்டும்! தமிழ் திருமுறைகளை கற்றவர்களாகவும் ஆகமசாத்திரங்கள் தெரிந்தவர்களாகவும் உள்ளவர்களை பரீட்சைத்தேர்வுகள் மூலம் தெரிவுசெய்து பணிக்கு அமர்த்த வேண்டும். பூணூல் இருக்கும் ஒரேகாரணத்துக்காக சைவாலயப் பூசகராக நியமிக்கும் போக்கை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்! இவையாவும் நடைபெறுமென்றால் திராவிடர் கழகத்துக்கு அரசியல் ஓட்ட விசயமில்லாமல் போய்விடும்!
குறிப்பு:- இலங்கையில் கொழும்பில் சங்கரமடத்து தரகர்கள் ஊடுருவி இலங்கையெங்கும் மெதுவாக பரவி வருகின்றனர்! சங்கரமடத்து துறவிகளின் நிழற்படங்களை அச்சடித்து கையடக்க நாள்காட்டிகளாக வழங்கிவருகின்றனர்! சிவாச்சாரியார் குருகுலப்படிப்புக்கு தற்போது சங்கரமடத்துக்கே பெருமளவில் அனுப்பப்படுகின்றனர்! என்ன கொடுமையடா இது!
சுமார்த்தசமய மடம் சைவசமய சிவாச்சாரியார்களை உருவாக்க இவ்வளவு காசு செலவழிக்கின்றது! எல்லாம் காரணம் இல்லாமலா? மெதுவாக சுமார்த்த பிராமணத்துவத்தை ஊட்டி அனுப்பிவிடத்தான்!எல்லாம் இந்துமதம் என்ற போர்வைக்குள் நடக்கின்றது! சிவசிவ!
தமிழக சைவத்தலைவர்கள்,பிரதிநிதிகள்,ஆதீனத்து முதல்வர்கள் இதுபற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவார்களா?
படங்கள் மற்றும் காணொளி newjaffna.com இணையத்திலிருந்து பெறப்பட்டவையாகும். நன்றி
0 comments:
Post a Comment